Sunday, March 26, 2023
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்டெங்கு மரணங்கள் : எடப்பாடி அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் !

டெங்கு மரணங்கள் : எடப்பாடி அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் !

-

“டெங்கு : தொடரும் மரணம் ! செயலிழந்த எடப்பாடி அரசும் – நகராட்சியுமே குற்றவாளிகள் !” என்ற முழக்கத்தை முன்வைத்து தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.10.2017 மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னதாக, டெங்கு மரணத்திற்கு அரசே காரணம் என்பதை அம்பலப்படுத்தி தூத்துக்குடி நகர் முழுவதும் 400 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், நீதிமன்றம் ஆகிய இடங்களில் 3,000 பிரசுரங்கள் காட்சி விளக்க அட்டைகளை தோழர்கள் பிடித்துக் கொண்டு பரவலாக மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பலரும் தொடர்பு கொண்டு ஆர்வத்தோடு பேசினர். குறிப்பாக, மக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் கத்தார் பாலு கலந்து கொண்டு பேசினார். அதிமுக அரசு, பிஜேபி க்கு அடிமையாக இருந்து கொண்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதை அம்பலப்படுத்திப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் தோழர் லயனர் அந்தோணிராஜ் அதிமுக அரசும் அதிகாரிகளும் எப்படி உண்மைக்குப் புறம்பாக பேசிக் கொண்டு ஏமாற்றுகின்றனர் என்பதை புள்ளிவிவர ஆதாரங்களோடு பேசினார். எப்படி அரசே டெங்கு கொசுவை ஒழிக்காமல், கார்ப்பரேட் மருந்து முதலாளிகளுக்காக கொசுவை வளர்க்கும் வேலையை செய்கிறது என்பதையும், டெங்குக்கு அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளுக்கு புரோக்கராக அரசு செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்துக்குள் அபார்ட்மெண்ட் கட்டி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை அம்பலப்படுத்தினார். தனியார் மருத்துவமனைகள் எப்படி வக்கிரமாக மக்களிடம் பணத்தைப் பிடுங்குகின்றனர்  என்பதையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் எப்படிக் கொள்ளையடிக்கின்றனர் என்பதையும் விளக்கிப் பேசினார்.

மக்கள் ஓட்டுப்போட மட்டும் உயிரோடு இருந்தால் போதும். மற்றபடி செத்துத் தொலையட்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்தோடு, இரக்கமே இல்லாத அரசை, அதிகார வர்க்கத்தை ஒழிக்காமல் டெங்குவை ஒழிக்க முடியாது. நம்முடைய எதிரிகள் நம்மை ஒழிப்பதற்கு முன் நாம் அவர்களை ஒழிக்க வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுப்பதே தீர்வு என்பதை கூறி முடித்தார்.

மக்கள் அதிகாரம் தோழர். மாரிமுத்து நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு வெளியில் நின்று கவனித்தவர்கள் பலரும் கடைசி வரை நின்று ஆர்வத்தோடு கவனித்து சென்றனர்.

நான்கு நாள் பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் தூத்துக்குடி வாழ் மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்தைப் பற்றிய பரவலான அறிமுகத்தையும், அரசியலையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துச் சென்றுள்ளது என்பதை உணர முடிந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க