தனக்கு பிறக்கப் போகும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருந்தார், 24 வயதான சாமிரான். அச்சமயத்தில் தான் மியான்மர் இராணுவம் அவரது கிராமத்துக்குள் புகுந்து மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்துக் கொண்டிருந்தது.
கொடுமைக்குள்ளாக்கப்படும் ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த சாமிரானும், அவரது கணவர் அன்வர் மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையான சபிகாவும், மியான்மரின் ராக்கைன் மாநிலத்தின் ராஜர்பில்லில் உள்ள தங்களது வீட்டை விட்டு கடந்த ஆகஸ்ட் 25 அன்று தப்பித்து வெளியேறினர்.
நிறைமாத கற்பிணியான சாமிரான், தன் குடும்பத்தாருடன் இரவு முழுக்க உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினார்.
”காலையில் நாங்கள் இட்டெல்லா எனும் கிராமத்தை அடைந்தோம். அந்த கிராமம் மியான்மர் படைகளால் தாக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டிருந்தது” என நினைவுகூர்கிறார் சாமிரான்.
பிறகு அவர்கள் கைவிடப்பட்ட ஒரு வீட்டை காண்கிறார்கள். அதில் ஐந்து நாட்கள் அவர்களுக்குப் போதுமான உணவு பொருட்கள் கிடைக்கிறது. ஆனால், இராணுவம் மீண்டும் அக்கிராமத்தினுள் நுழைந்தது,
”நாங்கள் அங்கிருந்து தப்பிவிட்டோம்” என்கிறார் சாமிரா.
அவர்களது அடுத்தகட்ட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. உணவு, தண்ணீர் கூட இல்லாமல் ஒரு நாள் பகல், இரவு முழுக்க அக்குடும்பம் நடந்தது.
“அந்த வலியைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை. எனக்கு வயிற்றில் தொடர்ச்சியான வலி இருந்தது. மிகவும் மோசமான உடல்நிலையை உணர்ந்தேன். தாங்க முடியாத வலி என் வயிற்றில் வரும் போதெல்லாம், அதனைச் சிறிது குறைக்க சிறிது நேரம் உட்கார்ந்து, குனிந்து ஆசுவாசப்படுத்துவேன்” எனக் கண்ணீரோடு நினைவுகூர்கிறார் சாமிரான்.
”அது எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டமாகும். நான் மூச்சுவாங்கிக் கொண்டு நடையைத் தொடர்ந்தேன். என்னையும் எனது மகளையும் மாறி மாறி எனது கணவர் சுமந்து நடந்தார். என் மகளாலும் நடக்க முடியவில்லை. ஓய்வில்லா பயணத்தின் வலியால் அவள் அழத் தொடங்கினாள். வலியாலும், பசியாலும், விரக்தியாலும் நாங்கள் அனைவரும் அழுதோம். ” என சாமிரான் கூறினார்.
சமீரானின் குடும்பம் ஒருவழியாக மோங்கினி பாராவை அடைந்தது. அங்கு அப்போதும் சில குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. சாமிரான் குழந்தையைப் பெற்றெடுக்க அங்குள்ள வயது முதிர்ந்த பெண்கள் சிலர் உதவினர்.
“5 நாட்களுக்குப் பிறகு நாங்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியது இருந்தது. நான் நடக்க கூடிய நிலைமையில் இல்லை. எனினும், ஒரு வழியாக நடந்து ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குதான் நாஃப் நதியைக் கடந்து வங்காளதேசத்தை அடைய ஒரு படகு கிடைத்தது. படகு சவாரிக்கு 650,000 கியாட்(31,022 ரூபாய்) தேவைப்பட்டது. எங்களிடம் போதிய பணமில்லாததால் படகில் ஏற்ற மறுத்தார்கள். ஆனால் மக்களில் சிலர் உதவியதன் காரணமாகப் படகில் ஏறி வந்தேன்” என்கிறார் வங்க தேசத்தின் துறைமுக நகரான காக்ஸ் பசாரில், ஒரு மசூதிக்கு வெளியே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவமனையில் உதவிகளுக்காக வரிசையில் தனது கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சாமிரான்.
அவரது அயராத பயணத்தாலும், நலிந்த உடல்நிலையாலும், அவரால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. “பலநாட்கள் உணவின்றி பயணம் செய்து வந்த நிலையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க எப்படி பால் சுரக்கும் ?” எனக் கேட்கிறார் சாமிரான்.
பலரும் இதே நிலைமையில் தான் இருந்தார்கள்.
யூனிசெஃப்-ஐச் சேர்ந்த மாயங்க் சாரி எனும் ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், “இளம் தாய்மார்களும் குழந்தைகளும்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மிகக் கடுமையான மனஅழுத்தமும், மோசமான நிலைமைகளும் தாய்மார்களையும் அவர்களது குழந்தைகளையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதுவே அவர்களுக்குத், தங்களது குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறலாம்” என்று கூறுகிறார்.
காலிதா(20) தனது ஒரு வயது மகளான சஹானாவுடன் இருக்கிறார். “எங்களது ஊரில் இராணுவம் புகுந்து, வீடுகளுக்கு தீவைத்து மக்களைக் கொன்று குவித்தது. எங்கள் உயிரைப் பாதுகாக்க நாங்களும் ஓடி, படகில் வங்கதேசத்திற்கு எல்லை கடந்து வந்தோம். படகில் இங்கு தப்பித்து வர ஐந்து நாட்கள் ஆனது. நான் என்னை அதிர்ஸ்டசாலி என்றே கருதுகிறேன். காரணம், எனது மொத்தக் குடும்பமும் இன்று என்னுடன் உள்ளது. எனது கணவர் உணவு வாங்க சென்றுள்ளார், எனக்கும் அவரோடு சென்று உணவு வாங்கி வரவேண்டும் என்று ஆசை ஆனால் கைக்குழந்தையுடன் உணவுக்காக நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருப்பதும், உணவுக்காகப் போராடுவதும் இயலாத காரியம்.” என்று கூறுகிறார் காலிதா
சோனா மெஹர்(45), தனது மூன்று மாத குழந்தையான மிரனா பேகத்தோடு இருக்கிறார். ”எனது ஏழு குழந்தைகளையும் நானே தனியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு தோள்பட்டையில் குண்டடி பட்டுவிட்டது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். உணவு பெறுவதற்காக, இந்த கைக்குழந்தையுடன் நான் ஒரு நாள் முழுக்க வரிசையில் நிற்கிறேன்.” எனக் கூறுகிறார் சோனா மெஹர்.
ஹசீனா(25), தனது 18 மாத குழந்தை முனீராவோடு இருக்கிறார். ”எனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நான் இங்கு வந்தேன். இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை மட்டுமே எங்களால் எடுத்துக் கொள்ளமுடிந்தது. மீத நாட்களில் நாங்கள் பட்டினியோடே நடந்தோம். எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் சூழலில் எனது பசுவை அங்கேயே விட்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. அதையும் என்னோடு கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்” என்கிறார் ஹசீனா.
33 வயதான ஹமீதா தனது 4 மாத மருமகன் யூசஃபுடன். ”இவனது பெற்றோர்கள் ராணுவத்திரனால் கொல்லப்பட்டனர். இவனை நான் காப்பாற்றி என்னோடு கொண்டு வந்துவிட்டேன். இல்லாவிட்டால் இவன் அங்கேயே இறந்திருப்பான். எனக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள், அதில் ஒரு குழந்தை பிறந்து ஆறு மாதகாலமே ஆகிறது. இவர்கள் இருவருக்கும் இந்த உணவை வழங்க முடியாது என்பதால், இருவருக்கும் நான் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது இருக்கிறது. எனக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே அரிதானதாக இருக்கும் சூழலில் இது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது” என்கிறார் ஹமீதா .
16 வயதான புஷ்ரா பேகம் தனது 3 மாத மகன் முகமது கைசருடன் இருகிறார். ”நாங்கள் வங்கதேசத்துக்கு நடந்தே வந்து சேர்ந்தோம். குடுபலாங்கில் உள்ள இந்த அகதி முகாமிற்கு வந்து சேர்வதற்கு எங்களுக்கு 10 நாட்கள் ஆகிவிட்டது. நான் எனது மகனைக் குறித்தே முகவும் கவலையுறுகிறேன். இந்த நெடும்பயணத்தால் அவனை மிரளச் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய நாளிலிருந்து அவன் மிகவும் குறைந்த அளவிலேயே பால் குடித்தான். பயணம் மிகவும் கடுமையானதாக இருந்தது. போதிய உணவில்லாமல் பல நாட்கள் கடந்தன. இதுவும் அவனது உடல்நிலையை பாதித்திருக்கிறது” என்கிறார் புஷ்ரா.
35 வயதான ஹமீதா தனது ஒரு வயது மகன் முகமது ஆலமுடன் இருக்கிறார். ”அவர்கள் என் கணவரை கொன்று விட்டார்கள். எனது 5 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற நான் ஓடவேண்டியது இருந்தது. உதவியையும், நிவாரணப் பொருட்களையும் பெற எனக்கு உதவ இங்கு யாரும் கிடையாது. எனது குழந்தைகளுக்கு உணவளிக்க எனக்கு உணவுப் பொட்டலங்கள் அவசியமாகத் தேவை. கடந்த 3 மணிநேரமாக வரிசையில் நின்றும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆண்கள் அரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பதால் எங்களை நோக்கித் தூக்கி வீசப்படும் உணவுப் பொட்டலங்களை எளிதில் அவர்களால் குதித்துப் பெற்றுக் கொள்ள முடிகிறது. என்னைப் போன்ற பெண்கள் காத்துக் கிடக்க வேண்டியதுள்ளது” என்று கூறுகிறார்.
24 வயதான தாகிரா தனது ஏழு மாத மகள் ருஷ்மா அக்தருடன் இருக்கிறார். ”நாங்கள் எங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வெளியில் அலறல் சத்தம் கேட்டது. வெளியே எங்கும் தீப் பற்றி எரிவதையும் மக்கள் ஓடுவதையும் தான் கண்டோம். எனது கணவர் எனது மகளைப் பற்றிக் கொள்ள, நாங்கள் மற்றவர்களோடு வெளியேறினோம். எங்களது உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும். சுவற்றிலிருந்த எங்களது குடும்பத்தின் பெரிய புகைப்படத்தை எப்படியாவது பெறவேண்டும் என விரும்புகிறேன்” எனக் கூறுகிறார் தாகிரா.
ஷாம்ஸ் உன் நெகார் (35) தனது இரண்டு மாத இரட்டைக் குழந்தைகளுடன்(ஈசா, முசல்) இருக்கிறார். ”எனக்கு இவர்களைத் தவிர மேலும் 10 குழந்தைகள் உள்ளனர்.நாங்கள் மூன்று நாட்கள் நடந்து வங்க எல்லையை அடைந்தோம். இந்த மூன்று நாட்களில் ஒரு கவள உணவு கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாக என்னால் இந்தக் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியவில்லை. தாகத்தாலும் பசியாலும் அவர்கள் அழுது கொண்டே இருந்தனர். என் கண்முன்னேயே எனது குழந்தைகள் இது போன்று பட்டினியாக இருந்தது, மிகவும் அச்சுறுத்துவதாகவும் வலிமிகுந்ததாகவும் இருந்தது” என்று கூறுகிறார்..
யேமீனா அரா, (30) தனது ஆறு மாத மகள் ரோஹனாவுடன் இருக்கிறார். ”எங்களது கிராமம் பக்ரீத் அன்று தாக்கப்பட்டது. அன்று நாங்கள் தப்பித்து விட்டோம். இங்கு வந்து சேர 5 பகல்களும், இரவுகளும் எடுத்துக்கொண்டன. குழந்தைகளால் வெகுதூரம் நடக்க முடியாத காரணத்தால், வங்கதேச எல்லைக்குள் வருவதற்கு, நானும் எனது கணவரும் குழந்தைகளைக் கைகளிலும், தோள்பட்டையிலும் தூக்கிச் சுமந்து வந்தோம்” என்கிறார்.
நன்றி : அல்ஜசீரா
_____________
இந்த படக்கட்டுரை பிடித்திருக்கிறதா? இனவெறி மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும் வினவு தளம் வலுப்பெற உதவுங்கள்! சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
இதை வெறுமனே மியன்மார் பவுத்த பேரின வாதிகளின் செய்கையாக பார்க்க முடியவில்லை. இஸ்லாமியர்களை ஏதேனும் ஒரு வழியில் துன்புறுத்த முயலும் வேறு சில சக்திகளின் தூண்டுதலும் இதில் உண்டு.