Tuesday, September 28, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க நாகை - 9 பேருந்து தொழிலாளிகளைக் கொன்றது யார் ?

நாகை – 9 பேருந்து தொழிலாளிகளைக் கொன்றது யார் ?

-

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பத்திரிகை செய்தி

20.10.2017 அதிகாலை 4 மணியளவில் நாகை மாவட்டத்தில் உள்ள பொறையார் பேருந்து பணிமனை ஓய்வறையின் மேற்கூரை இடிந்து விழுந்து உறங்கிக் கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 9 பேர் கோர மரணமடைந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தீபாவளிக்கு சிறப்புப் பேருந்து இயக்குவதற்காக பகல் இரவு பார்க்காமல் மக்களின் நலனிற்காக அயாரது உழைத்த தொழிலாளர்களின் இந்த மரணம் என்பது நம்மை எல்லோரையும் வேதனையும் அளிக்கும் துயரமிக்கதாக உள்ளது. மரணமடைந்தத் தொழிலாளர்களது குடும்பத்தினருக்கு புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பேருந்து பணிமனை என்பது 1943 – ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்றைக்கு தனியார் முதலாளிகள் போக்குவரத்துத் துறையை தங்கள் வசம் வைத்திருந்த போது கட்டப்பட்டது. இன்று வரை இது புதுப்பிக்கப்படாமல் பழுதடைந்த நிலையிலேயே இருந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகளின் அலட்சியத்தையும், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் இறந்துவிட்டதை நாம் மேலோட்டமாகப் பார்க்க முடியாது. இது ஏதோ ஒரு பேருந்து பணிமனையில் இருக்கும் ஒரு விசயம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கின்ற பெரும்பாலான அனைத்து பேருந்து பணிமனைகளும் இந்த நிலையில்தான் இருக்கின்றன.

பேருந்து பணிமனையில் தொழிற்சாலை ஆய்வாளர்கள் நேரில் சென்று பார்வையிடுவதில்லை. தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருகின்ற போக்குவரத்துத் துறை போன்ற இடங்களில் எக்காரணம் கொண்டும் இந்த அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. அமைச்சர்கள் சொல்லுவதையே அறிக்கையாக தருகின்றனர். பேருந்து பணிமனைகளில் இந்த அவலக் கதைகளை போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் விசாரித்தால் சொல்வார்கள். பேருந்தையே ஒழுங்காகப் பராமரிப்பதை சோதிக்காத அதிகாரிகள், பணிமனையின் நிலைமையை சோதிக்கவா போகிறார்கள் என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமல்ல, இலாப நோக்கத்தையே குறியாகக் கொண்டுள்ளனர். தொழிலாளர் நலன் குறித்து பேசவே முடியாது. தீபாவளிக்கு பல பேருந்துகள் மோசமான நிலையிலும் இயக்குவதற்கே சிரமமான நிலையிலும் இருந்தாலும் தொழிலாளர்கள் ஓட்டுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இரண்டு சிப்ட் ஓட்டகட்டாயப்படுத்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிய வண்டியை ஓட்ட கூடாது என்ற விதியை அரசே மதிப்பது கிடையாது. இப்படி கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்கள் பல இடங்களில் கொசுக்கடியிலும் குளிரிலும்தான் உறங்குகின்றனர். இப்படி தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி பிழிந்தெடுக்கும் டிப்போ மேனேஜர்கள் பணிமனையில் அவலநிலை குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை. இது தொழிலாளர்கள் தங்கியிருக்கும் நவீன அடிமைக் கூடங்களாகத் திகழ்கின்றன என்றால் மிகையல்ல.

போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் இந்த அலட்சியத்திற்கு முக்கியக் காரணம், இந்தத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழலும், இந்தத் துறையை மொத்தமாக தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் சதித்திட்டமும்தான்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒய்வறையின் மேற்கூரை இடிந்துவிழுந்த இந்த விபத்து மட்டுமல்ல, நடப்பில் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளும் இதே போல குத்துயிரும் கொலையுயிருமான நிலையிலேயே ஒடிக்கொண்டிருக்கின்றன. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளில் 50% மேலானவை காலவதியானவை. காலாவதியான பேருந்துகள் மாற்றாமல் ஒட்டுவதால் விபத்துகள் அதிகரித்துள்ளன; பொதுமக்கள் இறப்பது என்பது அன்றாட கதையாகிவிட்டது. ஒருகால் உங்கள் பகுதியில் சில விபத்துகள் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது அல்லது நடக்காமல் இருக்கிறது எனில் அதற்கு முக்கியக் காரணம் நீண்ட அனுபவம் மிக்க போக்குவரத்துத் தொழிலாளர்களின் தியாகமும் அற்பணிப்பும்தான். பல தொழிலாளர்கள் தங்களது சொந்த செலவில் பேருந்துகளை சரி செய்து ஒட்டி வருகின்றனர். இதனால்தான் அரசுப் பேருந்துகள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பேருந்துகளில் அவலநிலை மட்டுமல்ல, சென்ற மாதம் 7 -ம் தேதியன்று கோவை மாவட்டத்தில் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 7 பேர் ஒரு பெண்மணி மரணமடைந்ததைப் பலரும் அறிவோம். இந்த அவலத்திற்கும் இந்த அரசின் அலட்சியம்தான் முதன்மையான காரணமாக உள்ளது.

தீபாவளிக்குக் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்குவதற்குப் பதிலாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளையும் நகரப் பேருந்துகளையும் தான் தடம் மாற்றி இயக்குகிறது. இவையெல்லாம் தனியார்மயமாக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளன; மக்களை அரசு கைகழுவிவிட்டதைக் குறிக்கின்றன.

மொத்தமாக, போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரசின் சதித்திட்டத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் பேருந்து பணிமனை, பேருந்துகள், பேருந்து நிலையங்களில் நிலவும் அவலநிலைக்கு முக்கியக் காரணமாக உள்ளன. இரண்டாவது, இதில் நடக்கும் பெரிய அளவிலான ஊழல் முக்கியப் பங்காற்றுகிறது.

எனவே, பணிமனையை பராமரிக்காத அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

சுப. தங்கராசு,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

_____________

தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ஜெயா எப்படி”செத்தார்” என்று நமக்கு தெரியாது. ரத்தமும், உயிரும், நரம்பின் நாளங்களும் ஒருங்கே உழைத்த மக்கள் பணியாளர்களின் மரணத்திற்கு இந்த செத்துப்போன காவிகளின் எடுபிடி அரசுதான் காரணம்.”செத்ததை”புதைக்காமல் விட்டால் நாறத்தொடங்கி விடும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க