Tuesday, August 16, 2022
முகப்பு செய்தி கொசுக்களை ஏவும் இலுமினாட்டிகள் - நக்கலைட்ஸ் வீடியோ !

கொசுக்களை ஏவும் இலுமினாட்டிகள் – நக்கலைட்ஸ் வீடியோ !

-

ரு இடைவெளிக்குப் பின் “முன்னோர்கள் முட்டாளில்லை” எனும் நையாண்டி வீடியோவுடன் வந்துள்ளனர் நக்கலைட்ஸ் குழுவினர். இது வாட்சப் வதந்திகளின் காலம். திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலைக் கடந்து செல்லும் நாசாவின் விண்கலமே குழம்புவதில் துவங்கி, கோலம் போடுவதில் உள்ள பிரபஞ்சத் தத்துவம் வரை அனைத்திலும் நம் முன்னோர்களின் அறிவுக் கூர்மையை விதந்தோதும் வாட்சப் மற்றும் முகநூல் வதந்திகளுக்கு பஞ்சமே இல்லை.

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு ஒரு ரகமென்றால் இது போன்ற தளங்களில் பரவும் முன்னோர்களின் வைத்திய முறைகளோ “வேற லெவல்” ஐட்டங்கள். “பழைய கஞ்சி குடித்தால் கான்சரைக் குணப்படுத்த முடியும் – மீந்து போன தீபாவளிப் பட்சனங்களைக் கொண்டு எயிட்சை குணப்படுத்தி விட முடியும்” வரை தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ ஞானம் மண்டையைக் கிறுகிறுக்க வைக்கும் ரகங்கள்.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே வாட்சப் மூலமும் முகநூல் மூலமும் நமது “வரலாற்றை” கற்று வருகின்றது. வதந்திகளின் தாக்கம் அரசியலிலும் இல்லாமலில்லை. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக புழங்கும் சுவையான வதந்திகளின் ஒட்டுமொத்தம் தான் சீமான் போன்ற நாம் தமிழர் பாணி கிருபானந்த பாகவதர்களின் மேடைப் பேச்சுக்கான கச்சாப் பொருட்கள். நடைமுறை வாழ்வின் அத்தனை பிரச்சினைகளுக்கும், கேள்விகளுக்கும் சீமானிடம் ஏதாவது ஒரு பதில் இருந்தே தீரும் – அந்த பதிலின் நதிமூலமும் ஏதாவது ஒரு வாட்சப் வதந்தியாகத் தான் இருக்கும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் மேடைகளில் அவ்வாறே பேசினார்கள். உடையைக் கண்டுபிடித்தது தமிழன், உணவைக் கண்டு பிடித்தவன் தமிழன் என்று அந்த பட்டியலுக்கு முடிவே இல்லை.

இதை எங்கோ கேட்டாற் போல் இருக்கிறதல்லவா? அதே தான். விமானமும், பிளாஸ்டிக் சர்ஜரியும் சமஸ்கிருத வேதங்களிலேயே சொல்லப்பட்டு விட்டதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் டவுசர்களின் அதே பழைமை பீற்றல்களின் தமிழ் வடிவம் தான் இது.

நக்கலைட்ஸ் குழுவினரின் இந்த வீடியோ வாட்சப் வதந்தியாளர்களை பொருத்தமாக பகடி செய்கிறது. நவீன வாழ்க்கையும், அறிவியலும் அளித்துள்ள அனைத்து வசதிகளையும் துய்த்துக் கொண்டே பழங்காலப் பெருமையில் மனம் லயிப்பதற்கான ஒரு புறச்சூழல் இருப்பதென்னவோ உண்மை தான். ஒன்று நவீன வாழ்க்கையையும், அறிவியலையும் கட்டுப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் அதை பணம் சார்ந்து  கட்டமைத்திருக்கிறது. இலட்சக் கணக்கில் மருத்துவத்திற்கு ஒதுக்க முடியாத போது இயல்பாகவே மனம் ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுகிறது.

இரண்டவது விசயம், புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் கிராமப் புறங்களில் இருந்தும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிறு நகரங்களில் இருந்தும் முதன் முறையாக பொறியியலோ அல்லது அதைப் போன்ற படிப்பையோ முடித்து விட்டு ஒரு சிறு பிரிவினர் வேலைக்காக சென்னை பெங்களூரு, மும்பை, தில்லி போன்ற பெரு நகரங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று சேர்கின்றனர்.

பழைய நிலவுடைமைச் சமூகத்தின் பிற்போக்கு கலாச்சார சூழலில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு திடீரென அறிமுகமாகும் பெரு நகர வாழ்க்கைச் சூழல் ஏற்படுத்தும் கலாச்சார அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் நடுவில் பழம் பெருமையில் ஆறுதல் தேடுகின்றனர். தமது குழப்பங்களுக்கான விடை காண அன்றாடம் துரத்தும் அதிவேக வாழ்க்கை அனுமதிப்பதில்லை. எனும் போது, பிரச்சினைகளுக்கான மூலத்தை சதிக் கோட்பாடுகளாக முன்வைப்பவர்களிடம் பலியாகிறார்கள். அந்த வகையில் சமீப காலங்களில் அனைத்தையும் நாம் புரிந்து கொள்ளவியலாத மர்மமான சதிகளாக காணப் பயிற்றுவிக்கும் ‘இலுமினாட்டி’ உளறல் பிரபலமடைந்து வருகின்றது.

நக்கலைட்ஸ் குழுவினரின் இந்த வீடியோவில் இலுமினாட்டி முட்டாள்களின் கோமாளித்தனங்கள் பகடி செய்யப்படுகின்றது. நவீன காலத்தின் நாயகனாக வரும் பாஸ்கரும் சரி, கி.மு காலத்திய குருவும் சரி – சாதாரண கொசு பிரச்சினையையும், தடுப்பு மருந்து பிரச்சினையையும் இலுமினாட்டி சதியாகப் பார்க்கிறார்கள்.

இன்றைய உலகத்தை இயக்கும் அனைத்துமே இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பது நாம் தமிழர் சீமானின் தம்பியான பாரி சாலனின் கண்டுபிடிப்பு. பெரியார் இலுமினாட்டி, தமிழ்நாட்டில் சாதிகள் இருப்பதற்குக் காரணம் இலுமினாட்டி என்பன போன்ற உளறல்களைக் கூட சகித்துக் கொள்ளலாம்; ஆனால், மாமியார் மருமகள் சண்டைகளுக்கும் இலுமினாட்டிகளே காரணம் என பாரிசாலனின் “ஆய்”வு முன்வைக்கும் போது வரும் வாந்தியைக் கட்டுப்படுத்துவது கடினம்.

பத்து நொடி பேச்சில் பதினைந்து பொய்களை அடுக்குவது இத்தகைய தம்பிமார்களுக்கே உரிய சாமர்த்தியம். என்றாலும், பாரிசாலனின் சமீபத்திய இலுமினாட்டி பேட்டியில் இந்த உலகின் மையத்தில் இருப்பது தமிழகம் என்பதால் தமிழகத்தைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் உலக வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் இலுமினாட்டி சதியையும், இதன் காரணமாகவே ஈழ இனவழிப்பு நடந்தது என்கிற அவரது ஆய்வு முடிவையும் கேட்பவர் மயங்கித்தான் விழ முடியும்.

பாரிசாலன் சாமர்த்தியமாக ஈழ இனவழிப்புக் குற்றத்தில் இருந்து ராஜபக்சேவை விடுவித்து விட்டார் என்பது ஒருபக்கம் இருக்கட்டும் – உருண்டையாக உள்ள உலகத்தின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அது உலகத்தின் நடுவில் தான் இருந்தாக வேண்டும் என்கிற ஜியோமிட்ரி விதியை சகலகலா வல்லவர் சீமானாவது எடுத்துக் கூறி இருக்கலாம். இலுமினாட்டி உளறல்களைக் கேட்பது குப்பையை முகர்ந்து பார்ப்பதை விட கடினமானது. எனினும், மூக்கைப் பொத்திக் கொண்டு அந்த வீடியோக்களை கவனித்த வகையில், சாராம்சமாக இலுமினாட்டிகள் என்பவர்கள் தமது கார்ப்பரேட் வியாபார நலன்களுக்காக இரகசியக் குழுக்களாக இயங்கி மக்களிடமிருந்து உண்மைகளை மறைத்து அவர்களை அடிமைகளாக்கும் நோக்கம் கொண்டவர்கள் எனச் சொல்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

இதே தர்க்கத்தை பாரிசாலனின் மேல் பிரயோகித்துப் பார்ப்போம். கார்ப்பரேட் முதலாளித்துவ சுரண்டலை ஒரு மர்மமான இரகசிய கும்பலின் சதி என முன்வைப்பதன் மூலம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது, முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது என்கிற அவநம்பிக்கையை விதைப்பது உள்ளிட்ட முதலாளித்துவ நலன்களுக்கே இலுமினாட்டி லூசுகள் சேவை செய்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் “இலுமினாட்டிகளின்” பிரபலமான ஏஜெண்டு தம்பி பாரி சாலனாகத்தானே இருக்க முடியும்? பிறிதொரு சந்தர்ப்பத்தில் சீமானின் தமிழ் தோசை அரசியலையும் அதற்கு முட்டுக்கொடுக்கும் சதிக் கோட்பாடுகளின் அரசியலையும் விரிவாக அலசுவோம். இன்ஷா இலுமினாட்டி.

நாம் மீண்டும் நக்கலைட்ஸ் நண்பர்களிடம் வருவோம். வீடியோக் காட்சியில் வரும் கி.மு காலத்திய குருவின் சீடர்கள் காலையில் மலம் கழிக்க கையில் சொம்போடு செல்லும் காட்சியில் அவர்களைத் தடுக்கும் குரு, சீடர்களின் கையிலிருந்த சொம்பைப் பிடுங்கி தண்ணீரைக் கொட்டி விடுகிறார். ஜலம் கடவுளின் அம்சம் என்பதால், அதை வைத்து மலம் கழுவுவதை விட கல்லை வைத்துத் துடைத்துக் கொண்டால் குண்டலினி சக்தி பீறிட்டுக் கிளம்பும் என்கிறார். இதையெல்லாம் கற்றுக் கொடுத்த முன்னோர்கள் முட்டாளில்லை என்கிறார். முன்னோர்களின் பாரம்பரிய பெருமை பீற்றல்கள் எப்படி தவிர்க்கவியலாமல் மதவாத பைத்தியக்காரத்தனங்களோடு இணைந்தவொன்று என்பதை இந்தக்காட்சி சிறப்பாக அம்பலப்படுத்துகின்றது.

வீடியோவின் இறுதியில் வரும் டைட்டில் காட்சியில் படக்குழுவினரின் பெயர்கள் ஒவ்வொன்றின் முன்பும் “ஜேசஃப்” என்கிற முன்னொட்டு ஹெச்.ராஜாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு “மரியாதை”. நக்கலைட்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்த வீடியோவை பாருங்கள், பரப்புங்கள்!
_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. நல்ல அறிமுகம்..

  ஆனால், வினவுஜி… தம்பி பாரி சாலரின் இலுமினாட்டி பிதற்றல்கள் மனஅழுத்தத்திற்கு நல்ல மருந்து என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். வடிவேலு வீடியோக்கள் கூட காமெடியில் பாரிசாலரிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

  சாம்பிளுக்கு சில..

  இலங்கையில் தமிழர்களைக் கொன்றது தெலுங்கர்கள். ஏனெனில், சேனநாயகே, பண்டார நாயகே என்கிற பெயர்களில் உள்ள நாயகே.. அப்புறம் எப்படி செல்வநாயக தமிழர் தந்தையானார் என்பதற்கு விளக்கம் இல்லை.

  உலக இலுமினாட்டி கும்பல் மொத்தமும் தமிழ்நாட்டை உற்றுப் பார்க்கிறார்களாம்.. எதற்கு? விட்டால் உலகின் சூப்பர் பவராக தமிழ்நாடு ஆகிவிடும் என்பதாலாம்.

  கம்யூனிஸ்டுகளின் பொதுவுடைமை தவறாம்; தமிழர்களின் சமவுடைமை தான் பெஸ்ட்டாம். அது என்ன சமவுடைமைன்னு அவர் சொல்லலை.

  தமிழ் மரபில் சாதியே கிடையாதாம் – ஆனால் யார் தமிழர் என்பதை சாதியை வைத்துத் தான் கண்டுபிடிப்பார்களாம்.

  தமிழ் தேசிய அரசியல் – ஆனால் தமிழ் தேசம் கோராத தமிழ்தேச அரசியல்.

  அண்ணன் சீமான் தான் பச்சைத் தமிழர் – ஆனால் அவர் அடிக்கும் ஜானி வாக்கர் சரக்கு மட்டும் பாரின். ஏன், தமிழ் பாரம்பரியப்படி பட்டை சாராயம் அடிக்க வேண்டியது தானே?

  தெலுங்கர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது; ஆனால், தெலுங்கச்சி விஜயலட்சுமிக்கு கேக் ஊட்டுவது தான் தமிழ் தேசிய அரசியல்.

  ஈழ விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பேன் என மேடையில் சீறுவது தமிழ் தேசிய அரசியல் என்றால், பெருந்தமிழர் காளிமுத்துவின் மகளைக் கட்டிக் கொண்டு வைகுண்டா ராஜனின் காலில் விழுவதற்கு பெயர் என்ன சீமான் தேசியமா?

  அண்ணன் ஆட்சிக்கு வந்தால் சிங்களனை போட்டுத் தாக்குவாராம் – ஆனால், தனது படத்தில் மட்டும் சிங்களத்தியை ஈரோயின் ஆக்குவாராம்.

  அண்ணன் சீமானின் கார் இசுஸு – ஏன் தமிழனின் பாரம்பரிய மாட்டு வண்டியில் வர வேண்டியது தானே?

  அடிக்கும் செருப்பால் அடித்தால் தான் உறைக்கும் என்பார்கள்; சீமானின் முதுகுத் தோலை உரிக்க பொருத்தமானது கம்யூனிஸ்டுகளின் கைச் சாட்டை தான்.

  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

  இப்படிக்கு,

  சீமானின் மேல் சூரக்கடுப்பில் இருக்கும்

  திராவிடன் தமிழ்முருகு

  • நக்கலைட்ஸ் நண்பர்களுக்கு வினவு கொடுக்கும் ஆதரவும் ஊக்கமும் மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் கக்கூஸ் ஆவணப்படம் எடுத்த திவியா அவர்களுக்கு இதேபோல் ஆதரவு வழங்காததை புரிந்து கொள்ள முடியவில்லை.
   ஆனால் திவியா அவர்களுக்கு பிற்போக்குவாதிகளால் பிரச்சினை என்றவுடன் வினவு ‘உடுக்கை இழந்தவன் கை போல’ செயல்பட்டதையும் கவனித்தோம்.
   இதை வினவின் மீது விமர்சனமாக வைக்கவில்லை. புரிதலுக்குத்தான்.
   மற்றபடி வினவின் மேல் மலையளவு நம்பிக்கையும் அன்பும் உள்ளது.
   நன்றி.

 2. உலக மக்களின் சதி, இந்திய பெருங்கடலை தமிழக மக்களிடம் இருந்து கைப்பற்ற செய்யும் சதி, போன்றதொரு கட்டுரையை விகடனில் படித்ததாக நியாபகம்.

  இதை படிக்கும் பொழுது , அதை வெளியிட்ட பத்திரிக்கை , படிக்கும் மக்களின் ஐ க்யூ மீது நம்பிக்கை வைத்து செய்கிறது என கொண்டாள் , தமிழக மக்களின் சிந்தனை திறன் மிகவும் குறைந்து வருகிறது என்பதை அறிய முடிகிறது .

 3. // பிறிதொரு சந்தர்ப்பத்தில் சீமானின் தமிழ் தோசை அரசியலையும் அதற்கு முட்டுக்கொடுக்கும் சதிக் கோட்பாடுகளின் அரசியலையும் விரிவாக அலசுவோம். // I’m waiting..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க