Wednesday, December 11, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?

நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?

-

கவனம்: சற்றே மங்கலாக்கப்பட்டிருந்தாலும் மனதை நொறுங்கச் செய்யும் படங்கள் கட்டுரையில் இடம் பெற்றிருக்கின்றன.

தென்று அறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் நெருப்பில் வெந்து கரிகட்டைகளாய்க் கிடக்கும் அந்தக் காட்சி நெஞ்சைப் பிசைகின்றது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு நாளன்று ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த இசக்கி முத்துவும் (28) அவரது மனைவி சுப்புலட்சுமி (25) மற்றும் இந்த தம்பதியினரின் மகள்கள் மதி காருண்யா (5) மற்றும் அட்சயா பரணிகா (1) ஆகியோரது வாழ்க்கையும் உடல்களும் கருகிப் பொசுங்கி விட்டன. இசக்கிமுத்து 70 சதவீத தீக்காயங்களோடு உயிருக்குப் போராடி வருகிறார்; மற்றவர்கள் இறந்து விட்டனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மறவர் சாதியைச் சேர்ந்தவர். தனது பக்கத்து வீட்டுக்காரரும் உறவினருமான முத்துலட்சுமியிடம் 1.45 லட்சம் கடன் வாங்கியுள்ளார் இசக்கிமுத்து. கடந்த எட்டு மாதங்களில் 2.34 லட்ச ரூபாயைத் திரும்பக் கட்டிய பின்னும், அசல் இன்னும் அடையவில்லை எனக் கேட்டு முத்துலட்சுமி இக்குடும்பத்துக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இசக்கிமுத்துவின் வீட்டின் முன் அடிக்கடி வந்து அசிங்கமாகத் திட்டித் தீர்ப்பதை வழக்கமாகச் செய்த முத்துலட்சுமி, அச்சம்புதூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு முப்பதாயிரம் வரை லஞ்சம் கொடுத்து அவர்களைக் கொண்டும் இக்குடும்பத்தை மிரட்டி வந்தார் என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூரில் வருமானமில்லாத நிலையில், தீராத கடன் தொல்லையும் சேர்ந்து கொள்ள, பிழைக்க வழிதேடி திருப்பூருக்குச் சென்றுள்ளார் இசக்கிமுத்து. இந்நிலையில் தீபாவளி பண்டிகையைக் குடும்பத்தோடு கொண்டாட இசக்கிமுத்து வீட்டுக்கு வந்ததை அறிந்த முத்துலட்சுமி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஏற்கனவே வாங்கிய கடனுக்கும் மேலாக வட்டியுடன் சேர்த்துக் கட்டியுள்ள இசக்கிமுத்து, முத்துலட்சுமியின் தொல்லை தாளாமல் ஆறு முறை ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் அச்சம்புதூர் காவல் நிலையத்திலும் கந்து வட்டிக் கொடுமையை எதிர்த்து புகார் அளித்துள்ளார் இசக்கிமுத்து. காவல்துறையோ முத்துலட்சுமியிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரிடமிருந்தும் எதிர்மனு ஒன்றைப் பதிவு செய்து கொண்டு இசக்கிமுத்துவை மிரட்டி வந்துள்ளது.

ஆட்சியர் அலுவலத்தில் கொடுத்த புகார் மனுவும் மாவட்ட எஸ்.பி அலுவலத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் அச்சம்புதூர் காவல் நிலையத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது. கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லாத நிலையில் நேற்று (23, அக்டோபர் 2017) நெல்லை ஆட்சியர் அலுவலத்தில் நடக்கும் மனு வாங்கும் (சடங்கு) நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு வந்த இசக்கிமுத்து கையோடு மண்ணென்னைக் கேன் ஒன்றையும் கொண்டு வந்துள்ளார். குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்த இசக்கிமுத்து, அவர்கள் அதைத் தின்று கொண்டிருந்த போதே எல்லோரின் தலையிலும் மண்ணென்னையை ஊற்றிக் கொளுத்தியுள்ளார். அனைத்தும் முடிந்து போன நிலையில் இப்போது கடன் கொடுத்த முத்துலட்சுமி, அவரது கணவர் மற்றும் இன்னொருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை.

இச்சம்பவத்தை அடுத்து ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் ஏற்படுத்தும் திகைப்பும் அச்சமும் சமூக வலைத்தள பச்சாதாப இடுகைகளில் எதிரொலிக்கின்றன. இசக்கிமுத்துவின் மரணத்திற்கு நெல்லை மாவட்ட ஆட்சியரே காராணம் என்பதைப் பலரும் சொல்கின்றனர். அவர் மட்டும் தான் காரணமா?

உள்ளூரில் கம்பி கட்டும் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார் இசக்கிமுத்து. போதிய வருமானம் இல்லை. கடன் வாங்கித் தான் வாழ்க்கையை ஓட்டியாக வேண்டும் என்கிற நிலை, அவரை வாழ்க்கையைத் தேடி திருப்பூருக்கு விரட்டுகிறது. ஒரு மனிதனை அவன் பிறந்த ஊரில் நிம்மதியாகப் பிழைக்க விடாது, கந்து வட்டிக்குக் கடன் வாங்கவும் ஊரை விட்டு அத்துக்கூலியாய் இதயமற்ற நகரங்களுக்கு விரட்டியவர்களுக்கு இந்தக் குற்றத்தில் பங்கில்லையா? தான் பிரதமராக பதவியேற்ற பின் பொருளாதாரத்தை தட்டி நிமிர்த்தி விடுவதாக பொய் சொல்லி ஏமாற்றிய மோடி, பொருளாதாரத்தின் மேல் – குறிப்பாக கிராமப் பொருளாதார அமைப்பின் மேல் ஒரு போரையே தொடுத்துள்ளார். பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்த பொருளாதாரத்தை மொத்தமாக கொன்றொழித்து விட்டது.

கிராமப் பொருளாதாரத்தின் முக்கியமான இயக்கு விசைகளான விவசாயமும், கால்நடைப் பொருளாதாரமும், சிறுதொழில்களும் சிதைக்கப்பட்டு மக்கள் வாழவழியற்ற ஏதிலிகளாக மாற்றப்படுவதன் விளைவு தான் இசக்கிமுத்துவின் கையில் மண்ணெண்ணைக் கேனை எடுத்துக் கொடுத்த சமூகச் சூழல்.

இசக்கிமுத்து ஆறுமுறை மனு கொடுத்துள்ளார். காவல்நிலையத்தை நாடியுள்ளார். எனினும், அதிகார வர்க்கம் முத்துலட்சுமியின் பக்கமே நின்றுள்ளது. சட்டத்துறை, காவல்துறை, அதிகார வர்க்கம் என மக்களைக் காப்பாற்றுவதே தமது கடமை என அறிவித்துக் கொண்டுள்ள அரசின் ஒட்டுமொத்த அலகுகளும் உண்மையில் குற்றவாளிகளுக்கும், கந்து வட்டி ரவுடிகளுக்குமே சேவை செய்யும் ஒட்டுண்ணி கும்பல் என்பதைத் தான் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் முன் கருகிப் போய்க் கிடந்த அந்த உடல்கள் உரத்து அறிவிக்கின்றன.

தான் வாங்கிய கடனை வட்டியோடு அடைத்து விட்ட இசக்கிமுத்து மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் அவமானம் தாளாமல் தன்னையும் தன் குடும்பத்தையும் கொளுத்திக் கொண்டார். இசக்கிமுத்துவின் கடன் 1.45லட்சம் தான்; எட்டாயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கிக் கொண்டு பொதுத்துறை வங்கிகளின் நெற்றியில் பட்டை நாமத்தைச் சாற்றிய விஜய்மல்லையா பாதுகாப்பாக இந்தியாவை விட்டு வெளியேறுவதை மத்திய அரசே முன்னின்று உறுதிப்படுத்துகிறது. இந்திய பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் என சுமார் மூன்று லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை கழித்துக் கட்டியுள்ளது – அத்தனையும் தனியார் முதலாளிகள் வாங்கிய கடன்கள்.

இத்தனைக்கும் கந்துவட்டிக் கொடுமைகளைத் தடுப்பதற்காகவே ஒரு 2003 -ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு அதுவும் அமலில் உள்ளது. இந்தச் சட்டங்களும், நீதிமுறையும், அதிகார வர்க்கமும் இனிமேலும் தாம் மக்களுக்காகச் செயல் புரியவே இருப்பதாக நடிக்க முடியாது என்பதையே கருகிப் போன அந்த உடல்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன.

அந்தக் குடும்பம் அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டது. பாரதிய ஜனதாவின் தேசியப் பொதுச் செயலாளர் ஹெச். ராஜாவோ தமிழகத்தில் ஆன்மீக சிந்தனைகள் குறைந்து போனதால் தான் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்கிறார். ஆன்மீக சிந்தனைகள் அதிகரித்துள்ள பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் மாட்டுக்காக மனிதர்களே அடித்துக் கொள்ளப்படுவது ஒருபுறம் இருக்கட்டும் – இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஹெச். ராஜாவே சீட்டுக் கம்பெனி நடத்தி ஏழை மக்களின் சேமிப்பை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்தானே? பார்ப்பனிய இந்துமதத்தில் ஊறிப் போனவர்களுக்கு இசக்கிமுத்துவின் முடிவு ஒரு செய்தி மட்டுமே!

ஏன் சாக வேண்டும்? ‘கடவுளின்’ சந்நிதானத்தையே கொலைக்களமாக மாற்றிய ஜெயேந்திரனுக்கு ஏற்பட்ட அவமானத்தை விட, ‘கடவுளின்’ கருவறையையே அந்தப்புரமாக மாற்றிய தேவநாதனுக்கு ஏற்பட்ட அவமானத்தை விட இசக்கிமுத்துவுக்கு ஏற்பட்ட அவமானம் பெரிதா என்றே ஹெச்.ராஜா சிந்தித்திருக்க கூடும். பல கோடிகளை சுருட்டிக் கொண்டு வலம் வரும் வானதி சிரீனிவாசன் மற்றும் பல பாஜக தலைவர்களோடு வெறும் ஒன்றரை லட்சம் கடன் வாங்கி ஏச்சுப் பேச்சுக்களுக்கு கூனிக் குறுகிப் போன இசக்கிமுத்துவின் நிலையை ஹெச்.ராஜா ஒப்பிட்டுப் பார்த்திக்க வேண்டும்.

ஏன் சாக வேண்டும்? கடனை வாங்கிக் கொண்டு திருப்பிக் கூட கட்டாமல் குடும்பத்தோடு எங்காவது தலைமறைவாக இசக்கிமுத்து போயிருக்கலாம். தன் குடும்பத்தோடு ஊரில் இருந்து கையில் மண்ணென்னைக் கேனுடன் கிளம்பிய இசக்கிமுத்துவின் மனம் என்ன நிலையில் இருந்திருக்கும்? தனது மடியில் அமர்ந்து விளையாடி வரும் அந்தப் பிஞ்சுக்கு கொள்ளி வைக்கும் முடிவை ஒரு தகப்பன் எடுத்திருக்கிறான். கருகிக் கிடக்கும் அந்தக் குழந்தை தன் கைகளில் இன்னும் தின்று தீராத திண்பண்டத்தை இறுக்கிப் பிடித்துக் கிடக்கிறது.

அந்தக் குழந்தையின் மேல் எண்ணை ஊற்றிக் கொளுத்த பெற்ற தகப்பனுக்கு எப்படி மனம் வந்தது? ஹெச்.ராஜாவுக்கு இது புரிய வாய்ப்பில்லை. அவரது உலகம் விஜய் மல்லையாவின் உலகம் – லலித் மோடியின் உலகம். இசக்கிமுத்துவின் அவமான உணர்ச்சிகளுக்கு மல்லையா – லலித் மோடிகளின் உலகத்தில் எந்த மதிப்பில்லை. தான் வளர்த்த பயிர்கள் கருகியதைக் கண்டு நெஞ்சு வெடித்து செத்த தஞ்சை விவசாயிகளாலும், பொறியியல் படித்த மகனுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவனது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தூக்கில் தொங்கிய தாய்மார்களாலும் தான் இசக்கிமுத்துவின் முடிவைப் புரிந்து கொள்ள முடியும்.

போராடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் கையறு நிலை இது. இதோ நம் கண்முன்னே கருகிக் கிடக்கிறது நமது கையாலாகாத்தனம். வெறும் பார்வையாளர்களாய் ஏதும் செய்ய முடியாத வீணர்களாய் அந்தக் குழந்தையின் கைகள் பற்றியிருக்கும் திண்பண்டத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறோம். இனி கண்ணீர் போதாது – நம் கண்கள் இது போன்ற அநீதிகளுக்கு எதிராய் அமிலத்தைச் சுரக்க வேண்டும். அந்தக் அமிலக் குளத்தில் இந்த அதிகார வர்க்கத்தையும் ஆளும் கும்பலையும் மூழ்கடிக்கும் நாளில் தான் அந்தக் குழந்தைகளின் ஆவி அடங்கும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. கொடும் துயரம் கண்டும் அஞ்சாத
    பா.ஜ.க ‘எச்ச’ ராசாவின் பார்ப்பன
    நெஞ்சம் ஆன்மீக எச்சிலை உமிழ்கிறது
    என்ன செய்ய?
    “எரிதழல்தால்” ஏந்த வேண்டும்
    பகைமுடிக்க…

  2. நேற்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியின் விவாதத்தில், அதிமுக OPS-EPS அணியின் சார்பில் கௌரி ஷங்கர் என்று ஒருவர் பேசினார்.
    அவர் கேட்க்கும் கேள்வி, நெல்லையில் தீக்குளித்த இசக்கிமுத்து 1 லட்சத்து 35 ஆயிரம் ருபாய் எதற்கு கடன் வாங்க வேண்டும். இறந்து போன அந்த குழந்தைகள் ஒருவரின் காதணி விழாவுக்கு, ருபாய் 10000 கடன் எதற்கு வாங்க வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு நெறியாளர், ஏன் கடன் வாங்க கூடாதா என்று கேட்கிறார். அதற்கு அந்த கௌரி ஷங்கர் சொல்லும் காரணம், விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்க வேண்டுமாம். அந்த வார்த்தயை செயல் வடிவத்தில் விரலை காட்டி விளக்குகிறார்.
    இப்பொழுது நாம் கேட்க்கும் கேள்வி, அவர் வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கொடுத்துள்ளார். வட்டியே 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுக்க முடிந்த அவர் ஏன் கடன் வாங்க கூடாது.
    சரி ஒரு வேலை தனது மகள் காதணி விழாவுக்கு வாங்காமல், ஒரு விபத்து ஏற்பட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 1 லட்சம் ரூபாய் இருந்தால் தான் வைத்தியம் பார்க்க முடியும் என்றால், கௌரி ஷங்கர் சொல்வதை போல விரலை பார்த்து , இந்த அளவில் தான் வீங்க முடியும் என்று எண்ணணுவாரா அல்லது கந்து வட்டிகாவது கடன் வாங்கி வைத்தியம் பார்ப்பாரா?
    என்ன ஒரு வன்மம் இவர் பேச்சில்?
    அதே விவாதத்தில், கம்யூனிஸ்ட் தோழர் பால பாரதி கேட்டார், ஏன் கடன் வாங்க கூடாது. தமிழக அரசு கூட தான் 4 லட்சம் கோடி, கடன் வாங்கியுள்ளது, எந்த வீக்கத்தை கணக்கிட்டு வாங்கியது என்று கேட்டார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்று கௌரி ஷங்கர் மழுப்பினார்.
    மீண்டும் கேள்வி, நலத்திட்ட உதவிகள் என்ன. வீனப்போன மிக்ஸியும், கிரைண்டரோ.
    குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும்போது, அதிக விலை கொடுத்து அதானியிடம் ஒப்பந்த போட்டு எதற்கு இந்த அளவுக்கு கடன் கட்ட வேண்டும்.
    ஒரு வேலை மீண்டும் ஆட்சியில் அமராமல் இருந்தால், கடன் முழுவதையும் கட்டி விட்டா கோட்டையை விட்டு வெளியே செல்கிறீர்கள். அடுத்த ஆட்சி வந்து அந்த கடனை கட்டுகிறது அல்லது அதற்கான வட்டியை கட்டும். அந்த விதி அந்த இசக்கி முத்துவுக்கு பொருந்ததா?
    இசக்கி முத்துவுக்கு தன் மானம் இருக்க போய் தான், உயிர் விட துணிந்தார். தனக்கு பின் தனது மனைவியும், குழந்தைகளும் இந்த அதிகார மட்டத்தின் துணையோடு மிரட்டும் அந்த கந்து வட்டி கும்பலிடம் மாட்டி விட கூடாது என்று தான் அவர்களுடன் தீக்குளித்தார். 3 உயிர்கள் பிரிந்த நிலையில் உயிருக்கு போராடுகிறார்.
    ஆளும் அரசுக்கு தன்மானம் இல்லாததால் தான் மத்தியரசிடம், சிக்கி தவிக்கிறது. இதை கௌரி சங்கர் கணக்கில் கொள்ளவில்லை போலும்.
    நேற்று முன்தினம் சின்னம்மா, நேற்று தினகரன், இன்று காலை EPS, மாலையில் OPS-EPS. இது தான் உங்கள் மானம், தன்மானத்தின் அளவுகோல்.
    ஏழைகளின் தன்மானத்தை நீங்கள் அளக்க முடியாது.
    எங்களுக்கு எப்படி வாழவேண்டும், எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்று சொல்லும் அருகதை அல்லது தகுதி இருக்கிறதா உங்களுக்கு.

    உங்க அறிவுரை தேவை இல்லை. மேலும் உங்க ஆட்சியும் தேவயில்லை.

  3. இசக்கிமுத்துவை மிரட்டிய காவல்துறையினரை முதலில் தண்டிக்கவேண்டும். இனிமேல் வருபவர்களுக்கு அது ஒருபாடமாக இருக்கவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க