Thursday, March 23, 2023
முகப்புகட்சிகள்காங்கிரஸ்புதுச்சேரி - பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் !

புதுச்சேரி – பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் !

-

பேருந்து கட்டண உயர்வு : மக்களை அழிக்கின்ற நாசவேலையில் பேடியும் – ‘சாமி’ களும் ஒண்ணு!

ந்த ஆண்டு தீபாவளி புதுச்சேரி மக்களுக்கு இரட்டைக் கசப்பை அளித்திருக்கிறது. தீபாவளி வெடிகளின் சத்தத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி திருட்டுத்தனமாக பேருந்து கட்டணத்தை 100% அளவிற்கு உயர்த்தியிருக்கிறது நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரசு அரசு. தீபாவளி செலவுகளின் கலக்கத்திலும், பண்டிகையின் இறுக்கத்திலும் இருந்த மக்கள், அடுத்த நாள் தங்களது அன்றாட வேலைக்காக பேருந்தில் ஏறிய பின்னர் தான் கட்டணக் கொள்ளை இடியாய் இறங்கியது.

புதுச்சேரியின் கவர்னராக ஆர்.எஸ்.எஸ் -ன் அடியாள் கிரண்பேடி கவர்னராக பதவியேற்ற போது அவருக்கு ஒளிவட்டம் போட்ட ஊடகங்களும், கட்சிகளும் இன்று அதிகாரத்துக்கான நாய்ச் சண்டையைப் பற்றித்தான் பக்கம் பக்கமாகப் பேசி வருகிறார்கள். இந்த அதிகாரச் சண்டையில் மக்களின் பிரச்சினைகளை பற்றிப் பேசுவதற்கு கவர்னருக்கும், முதல்வருக்கும் நேரமில்லை.

கோப்புகளில் கையொப்பமிடாமல் தேக்கி வைத்திருக்கிறார் என்று அமைச்சர் கந்தசாமியும், முதல்வர் நாராயணசாமியும் சொல்வதும், எவ்வித கோப்புகளும் வரவில்லை என்று கிரண்பேடி சொல்வதும் என சிறுபிள்ளை விளையாட்டாய் மாறிப் போயுள்ளது புதுச்சேரி அரசு. ஆனால் இப்படி மக்கள் பிரச்சினைகளை வைத்து விளையாடும் இவர்கள், தனியார் பஸ் முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, மக்களைக் கொள்ளையடிக்க ஓரணியில் நின்று அனுமதி அளித்துள்ளனர்.

இந்த தீவட்டிக் கொள்ளையை எதிர்த்து அனைத்து ஓட்டுக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. ஆளும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான  திமுக, தங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்தது தவறு எனவும், அதைத் திரும்பப் பெற்று, தங்களுடன் கலந்தாலோசித்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என  மனு கொடுத்து ‘கூட்டணி தர்மத்தை’ நிலை நாட்டிக் கொண்டது.

மக்களின் எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணியில் பிளவு ஏற்படுவது போன்ற சலசலப்புக்கள் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், கூட்டணிக் கட்சியையும், பிற கட்சிகளையும் சமாளிக்கும் வகையில் ஒரு குழு அமைத்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுத்து கட்டண உயர்வை அறிவிப்பது என அறிவித்துள்ளது காங்கிரசு அரசு.

எனவே, காங்கிரசு அரசு அறிவித்த பஸ் கட்டண உயர்வு ரத்து என்பது தற்காலிகமே! நிரந்தர ரத்து செய்ய வீதியில் இறங்குவோம்! என்ற முழக்கத்தின் கீழ் 25.10.2017 அன்று மாலை 06.00 மணிக்கு புதுச்சேரியின் மையப் பகுதியான சுதேசி காட்டன் மில் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி புஜதொமு தலைவர் தோழர். சரவணன், தலைமை தாங்கினார். புஜதொமு பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு கண்டன உரையாற்றினார்.

தலைமையுரையில், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அதிகாரச் சண்டையிடும் முதல்வரும், கவர்னரும் மக்களைச் சுரண்டுவதிலும், முதலாளிகளுக்குச் சேவை செய்வதிலும் ஒரே அணியாக செயல்படுவதை அம்பலப்படுத்திப் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் சொம்பாக செயல்படும் கிரண்பேடி, மக்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்துவது, இரவில் வாகனத்தில் சுற்றுவது போன்ற சில்லரை நடவடிக்கைகளையே சாதனைகளாக மார்தட்டிக் கொள்கிறார். அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியமின்றி இருப்பதைப் பற்றியோ, டெங்குவால் கொத்து கொத்தாக மக்கள் சாவதைப் பற்றியோ பேச மறுக்கிறார்.

மோடியோ, புல்லட் ரயில் மக்களுக்கான திட்டம் என சரடு விடுகிறார். அவரைப் பொறுத்தவரை விமானத்தில் பயணிப்பவர்கள் தான்  மக்கள். ஏனெனில் புல்லட் ரயில் கட்டணம் என்பது விமானக் கட்டணத்திற்கு நிகரான கட்டணம். இதைத்தான், இங்கு கிரண்பேடியும் செய்ய நினைக்கிறார் என தோழர் செல்லக்கண்ணு தனது கண்டன உரையில் அம்பலப்படுத்தினார்.

போலீசு உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்ட பின் ஆர்ப்பாட்டம் எதற்கு என்று கேள்வி எழுப்பிய நேரத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கட்டண உயர்வு ரத்து தற்காலிகம் தான் என்பதையும், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் வாழ்வை சீர்குலைப்பதாக உள்ளது எனவே, அந்தப் பிரச்சினைகளுடன் பஸ் கட்டண உயர்வையும் இணைத்து வீதியில் இறங்கிப் போராடும் போது மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்ற வகையில் நடந்த ஆர்ப்பாட்டம் அங்கு நின்றிருந்த மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 9597789801

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க