Monday, January 17, 2022
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் கந்துவட்டிக் கொலை: கலெக்டரும், எஸ்.பி -யுமே குற்றவாளிகள் - சென்னை ஆர்ப்பாட்டம் !

கந்துவட்டிக் கொலை: கலெக்டரும், எஸ்.பி -யுமே குற்றவாளிகள் – சென்னை ஆர்ப்பாட்டம் !

-

“நெல்லையில் கந்து வட்டிக்கு குடும்பமே பலி!  போலீசும், அதிகாரிகளுமே  குற்றவாளிகள் !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பில் 25.10.2017 அன்று காலை 11 மணியளவில் எழும்பூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  காலையில் தோழர்கள் அனைவரும் திரண்டு முழக்கமிட ஆரம்பித்தவுடனே போலீசார் பாய்ந்து வந்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாதபடி தோழர்களை கைது செய்ய முயற்சித்தனர். ஆனாலும் அவற்றைத் தாண்டி மக்கள் மத்தியில் கருத்துக்கள் சேரும் வகையில் தோழர்கள் முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்ற மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்; “கந்துவட்டிக் கொடுமை குறித்து 6 முறை மனு கொடுத்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட எஸ்.பி. -யும் தான் கந்துவட்டிப் படுகொலைக்கு முதன்மைக் காரணமானவர்கள். எனவே அவர்களைக் கைது செய்யவேண்டும்; மேலும் மக்களைக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த அரசு தனது கடமையில் இருந்து விலகிக் கொண்டது மட்டுமல்லாது மக்களுக்கே எதிரான குற்றக்கும்பலாக மாறிப்போயுள்ளது;

இந்தக் குற்றக்கும்பலிடமே கெஞ்சிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. மாறாக மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள நகரம்தோறும், கிராமம்தோறும் மக்கள் கமிட்டிகளை அமைத்திடுவோம், நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம்!” எனக் கூறினார். இறுதியில்  போலீசு அனைவரையும் கைது செய்தது.  தோழர்கள் போலீசு வாகனத்திலும் தோற்றுப் போன இந்த அரசமைப்புக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆர்ப்பாத்தில் முழங்கப்பட்ட் முழக்கங்கள் :

கந்துவட்டி கொடுமைக்கு
தாயும் இரண்டு குழந்தைகளும்
தீயில் கருகிய கொடூரம்
கந்து வட்டியின் கூட்டாளிகளான
மாவட்ட ஆட்சியரும் போலிசுமே
கொலைக்குற்றவாளி கொலைக்குற்றவாளி!

மக்களிடம் மனுவை வாங்கி
துடைத்து போடும் அதிகாரிகளே
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு! சம்பளம் எதற்கு!!

கூட்டாளி கூட்டாளி
கந்துவட்டி கும்பலுக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்
காவல்துறை தான் கூட்டாளி!

பல கோடிகளை ஊழல் செய்தவன்
உல்லாசமாய் வாழ்கிறான்
கந்துவட்டிக்கு வாங்கியவன்
கரிக்கட்டையாய் சாகிறான்!

கந்துவட்டிக்கு குடும்பம் பலி!
டெங்குவிற்கு தமிழகம் பலி!
GST -க்கு நாடே பலி!

எதற்கு சட்டம்
எதற்கு போலீசு
எதற்கடா நீதிமன்றம்!

நகரம் தோறும் கிராமம் தோறும்
மக்கள் கமிட்டிகள் அமைத்திடுவோம்
மக்கள் அதிகாரம் கையிலெடுப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை – மண்டலம்,
தொடர்புக்கு :91768 01656.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. தோழர் கலெட்டர் போலீஸ் இந்த அமைப்பின் தூண்கள், அந்த இருவரையும் கைது செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? உண்மையான குற்றவாளிகளை தப்ப விடும் முயற்சியில்லையா? மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? இந்த அரசமைப்பை மாற்றாமல் என்ன அதிகாரம் எப்படி எடுப்பது? ஊர் கமிட்டி நகர கமிட்டிக்கு என்ன வரைமுறை? எந்த வர்க்க பிரதிநிதிகள் இதன் அங்கத்தினர்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க