Monday, January 17, 2022
முகப்பு கலை கவிதை இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்! கவிதை

இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்! கவிதை

-

ந்த விடியல்
எங்களுக்கும் அவ்வளவு
முக்கியமானது…ஆனால்
பொழுதுகள் மட்டும் நகராது…

இருப்பினும்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டே
கயிற்றுக்கட்டிலில்
கவிழ்ந்து விடுவோம்.

எங்கள் செவளை மாடும்
கருப்புக்காளையும் மட்டும்
வாயில் எதையோ அசைத்தபடி
மெல்லிய தாளமிட்டுக் கொண்டிருக்கும்.

அண்ணன்களோடு அதிகாலையிலேயே
ஆயத்தமாகிவிடுவோம்….
செவளையையும்; கருப்பனையும்
முல்லை பெரியாற்றில்; களம் இறக்க…

இரண்டு மாடுகளும் மூழ்கி குளிக்கும் அழகு
அவ்வளவு அலாதியானவை,
வேலியில் அமர்ந்திருக்கும்
வண்ணத்துபூச்சிகளும்
வேடிக்கை பார்த்து மகிழும்.

குளித்து முடித்த
அதன் கூரிய கொம்புகளில்
வர்ணம் பூசி,
குங்குமமும், சந்தனமும்
உடல் முழுவதும் தடவி…..

எங்கள் காளைகளின் நெற்றியில்,
மின்மினிபூச்சி பிடித்து பொட்டிட்டு…
அழகு பார்த்த தருணங்கள்
அவ்வளவு சுகமானவை.

மஞ்சள் கிழங்கு
கரும்பு… கருப்பட்டி….
கை முழுக்க திண்பண்டங்கள்….. என்று
கால்கள் முளைத்த திருவிழாவாய்
அப்பா வந்து நிற்பார்.

அம்மா வைத்திறக்கிய
பொங்கலை ஆவிபறக்க
வாழை இலையில் எடுத்து,
ஊதி…… ஊதி எங்கள் காளைகளுக்கு
ஊட்டி மகிழ்ந்த
அந்த டவுசர் காலங்கள்தான்
எவ்வளவு டக்கரானவை.

பருத்திப்பால்,
புண்ணாக்கு, தவிடு அத்தனையும்
கலந்து தயாராய்
தாழியில் வைத்திருப்போம்.
உழுது திரும்பும் – எங்கள்
காளைகளின் பசியமர்த்த,

கருப்பனும், செவளையும்
ஒரே தாழியில் உறிஞ்சிக் குடிக்கும்.
அந்த  ஒற்றுமை கண்டு
வீட்டிற்கு வரும் சுற்றத்தார்
‘கண்ணு’ வைத்து விடுவதாய்
அக்கா அடிக்கடி கூறுவாள்.

அந்த ஆசாரி திறமையானவர்தான்
இருப்பினும்
காளைகளின் கால்களில்
கயிறுகட்டி லாடம் போடும்போது,
குலதெய்வம் ஒன்று விடாமல்
வேண்டிக் கொள்வோம்…

காளைகளுக்கு சிறு சிராய்ப்பும்
ஏற்பட்டு விடக்கூடாதென்று.

இப்படியாக….
எங்கள் வாழ்வின் ‘செம்மை’
வறுமை என்று கோடிட்ட இடம்
அத்தனையும்
உழவாலும், மாடுகளாலும்,
நிரப்பப்பட்ட அடர்த்திகளே அதிகம்.

இங்கே…
எவ்விதத்திலும் மாட்டோடு
தொடர்பற்ற நீங்கள்
உங்களின் புராணக் குப்பைகளை
மூலதனமாக்கி எங்களுக்கு

மாடுகளின் ’புனிதம்’ குறித்தும்
மாடுகளின்  மகத்துவம் குறித்தும்
வகுப்பு எடுப்பதைத்தான்
வேடிக்கையுடனும்­
வெறுப்புடனும் கடக்க வேண்டியதாகிறது…

இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்
எங்கள் மீது கட்டவிழ்த்துவிடும்
உங்களின் மாட்டரசியலை..

நாங்கள் வகுப்பெடுத்தால் – நீங்கள்
உங்கள்  இரண்டு  செவிப்பறைகளையும்
இழக்க நேரிடும்..

ஏனெனில், எங்கள் கரங்கள் …
மாடுகள் பிடித்து இறுகிப்போனவை.

முகிலன்

  1. கவிதை அருமை. நேற்றைக்கு கூட ராஜஸ்தானில் ஒருவரை காவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பின்னங்கால் தெறிக்க காவி டவுசரகள் ஓடும் வரை நாம் தொடர்ந்து வினையாற்றுவோம்.

    ஓவியர் முகிலனுக்கு வாழ்த்துக்கள்.

  2. தூரிகையின் கரங்கள் கவிதையின் வழி மேலு ம் சிறக்கிறது.செவளையையும் கருப்பனையும் நினைத்து மனது வலிக்கிறது.இனி காவி ஓநாய்களுக்கு நாம் கருப்பனாய் மாறி “பூஜை” வைக்காமல் எதுவும் மாறாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க