நவம்பர் -7 ரஷ்ய சோசலிச புரட்சியின் 100-ம் ஆண்டு, பாட்டாளி வர்க்க ஆசான் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150-ம் ஆண்டை முன்னிட்டு திருச்சி காந்திபுரம் பகுதியில் ம.க.இ.க சார்பில் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
ரஷ்ய புரட்சி தினத்தை பறைசாற்றும் வகையில் முதல் நாள் இரவே சிவப்பு தோரணங்களாலும், வண்ண விளக்குகளாலும் தெருக்கள் அலங்கரிக்கப்பட்டன. காலை 9 மணிக்கு கொடியேற்றும் விழாவிற்கு தோழர் சரவணன் தலைமை தாங்கினார். செயலர் தோழர் ஜீவா கொடியேற்றினார். கொடியேற்றும்போதும், பேசும்போதும் மக்கள் நின்று கவனித்துவிட்டு சென்றனர்.
காந்திபுரம் பகுதியில் உள்ள மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது. இன்றைக்கு நடக்கின்ற அரசியல் சூழ்நிலைகளை பார்ப்பதிலிருந்து நிச்சயமாக மாற்றம் நடக்கும் என்பதை ஆமோதித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டது.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக காலை 11 மணியளவில் குறத்தெரு பகுதியில் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்யப்பட்டது. சாலைகள் சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டன. மாமேதை லெனினின் உருவப்படம் 10 அடி உயரத்தில் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ம.க.இ.க-வின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு தோழர் சுந்தரராஜ் வாழ்த்துரை வழங்கினார். பு.மா.இ.மு தோழர் பிரித்திவ் இன்றுள்ள கல்வியின் அவலத்தை பற்றி பேசினார். சுமைப்பணி சிறப்பு தலைவர் தோழர் ராஜா சோவியத் அரசின் சாதனைகள் குறித்தும், இன்று ஊடகங்கள் தவிக்க முடியாமல் ரஷிய புரட்சி குறித்து எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளதையும் விளக்கி பேசினார்.
தோழர் கோவன் மூலதனத்தின் அழிவு அதற்குள்ளேயே உள்ளது. அது அழிந்தே தீரும் என்றும், முதலாளித்துவ அராஜக உற்பத்தியால் தேக்கம், வீக்கம் அதிகரித்து அது தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொள்கிறது என்றும் விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டத்தில் ஆசான் மார்கஸ் உலகுக்கு விளக்கியுள்ளார். அன்று கம்யூனிசம் அழிந்துவிட்டது என்று ஊளையிட்ட முதலாளித்துவவாதிகள் இன்று தங்கள் எதிகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள மூலதனம் நூலையே புரட்டுகிறார்கள்.
இன்று வேலையிழப்பு, பட்டினிச் சாவுகள், கழுத்தருப்புகள், துரோகங்கள், இவையனைத்தும் தவிர்க்க முடியாமல் உள்ளன. இதற்கு ஒரே மாற்று புரட்சி! உலகில் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பை சோவியத் அரசு ஆண்டது. அதை இங்கும் நடத்துவோம் என்று பேசினார்.
ம.க.இ.க தோழர்கள் GST அம்பலப்படுத்தியும், மோடியின் ‘வளர்ச்சி’ குறித்தும், உலகத்திற்கு மாற்று கம்யூனிசமே என உணர்ச்சிப்பூர்வமாக பாடல்களை பாடினார்கள். வியபாரிகள், பொதுமக்கள் மக்கள் அனைவரையும், இக்கூட்டம் ஈர்த்தது. இறுதியில் நன்றியுரை தோழர் சரவணன் தெரிவத்தார். இனிப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.
***
“கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150 -ஆம் ஆண்டு! லெனின் தலைமையிலான ரசியப் புரட்சியின் 100 -ஆம் ஆண்டு நிறைவு!” இந்நாளில் உழைக்கும் வர்க்கம், தனது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட ஒன்றுபட்ட போராட்டங்களும் எழுச்சியும் தான் தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்தும் வகையில் புதுச்சேரியின் தொழிற்பேட்டை நகரமான திருபுவனையில் கொண்டாடப்பட்டது. நவம்பர் 07 -ம் தேதியன்று பகல் 01.00 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அலுவலக வாயிலில் புஜதொமு தலைவர் தோழர் சரவணன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு பிரசுரம் கொடுத்து விளக்கிப் பேசி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
“மார்க்ஸின் மூலதனம் எழுதப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பின்னரும், லெனினின் தலைமையிலான ரசியப் புரட்சியின் நூறாண்டுகளுக்குப் பின்னரும், இன்றும் அதன் தேவை உள்ளது. அதன் தேவைகளையும் அவசியத்தையும் இன்றைய தொழிலாளி வர்க்கம் உணர ஆரம்பித்திருக்கிறது.
முதலாளித்துவம் தீராத நெருக்கடியில் சிக்கி, அது தன்னைக் காப்பாற்றி கொள்ள வட்டி விகிதத்தை மாற்றுவது, வரி விதிப்பு, செலவு குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் உழைக்கும் மக்கள் மீது கொடுந்தாக்குதல்களை தொடுத்து வருகிறது. “எதைத் தின்றால் பித்தம் தீரும்” என்ற நிலையில் உள்ளது.
வெவ்வேறு பெயர்களில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நெருக்கடிகள் மேலும் முற்றுகிறதே ஒழிய தீரவில்லை. இதன் பின்னணியில் தான் மோடியின் கருப்புப் பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, முதலாளிகளின் கடன் தள்ளுபடி, ரேசன் கேஸ் மானிய வெட்டு, தொழிலாளர் சட்டத் திருத்தம் போன்றவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு புறம் ஊதிய வெட்டு, ஆட்குறைப்பு ஆகியவற்றால் வாழ்விழந்த மக்கள், மறுபுறம் முதலாளிகளின் எகிறும் லாபவிகிதங்கள் என்ற இடைவெளி பெருகிக் கொண்டே போகிறது. வீடில்லா மக்கள் ஒருபுறம், மக்களில்லா வீடுகள் ஒரு புறமும் காட்சி தருகின்றன.
இந்த முற்றி வரும் நெருக்கடிகளைத் தீர்க்க வழி தெரியாமல், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களே மார்க்ஸின் மூலதனத்தைத் தேடும் நிலைக்கு வந்து விட்டனர். இன்றைய இளம் தொழிலாளர்களால் அதிகம் தேடப்படும் நூலாக மாறி இருக்கிறது மூலதனம். உலகில் மிகவும் அறியப்படும் நபராக ஆசான் கார்ல் மார்க்ஸ் இருக்கிறார் என்பதை ஐரோப்பிய ஆய்வுகள் சொல்கின்றன.
சமூக மயமான உழைப்பு, தனிநபர் சுவீகரிப்பு என்பது தான் முதலாளித்துவப் பொருளாதாரம். அதாவது, பொருளுற்பத்திக்கான உழைப்பில் மக்கள் கூட்டாக ஈடுபடுகின்றனர். ஆனால், அதனால் வரும் பெரும் லாபம் முதலாளிகள் என்ற தனிநபர் அபகரித்துக் கொள்கின்றனர். இந்த லாபம் வளர்ந்து கொண்டே போகும் போது தான் முதலாளித்துவம் உயிரோடு இருக்கும்.
இந்த லாப வளர்ச்சிக்கு, உற்பத்திப் பெருக்கம், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு என்பது நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். உற்பத்தியில் நவீனமயம் புகுத்துவதன் மூலம், உற்பத்திப் பெருக்கமும், ஆட்குறைப்பும் நடைபெறுகிறது. விலையேற்றத்தாலும், உற்பத்திப் பெருக்கத்திற்கேற்ற ஊதிய உயர்வு தராமலும் ஊதிய வெட்டை மறைமுகமாக கைக்கொள்கின்றனர் முதலாளிகள்.
இதன் விளைவாக முதலாளிகளின் பெருகும் உற்பத்தியை, வேலை இழப்பு, ஊதிய வெட்டு போன்றவைகளின் காரணமாக மக்கள் வாங்கும் சக்தியற்றவர்களாக மாறுகின்றனர். இந்த இடைவெளி பெருகிக் கொண்டே போகிறது. அதனால், தான் செய்த உற்பத்தியை எப்படியாவது மக்கள் தலையில் கட்டி விட வேண்டும் என்பதற்காக கடன் வசதி, தவணை வசதி போன்ற முறைகளை கையாள்கிறது. ஆனால், அப்படி செய்த பிறகும், உற்பத்தியில் தேக்கம் நிலவி, முதலாளித்துவம் தீராத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. முதலாளித்துவம் உயிர் வாழ நெருக்கடிகளை அதிகமாக்கிக் கொண்டே செல்ல வேண்டும் என்பது தான் அதன் பொருளாதார விதியாக உள்ளது.
எனவே, முதலாளித்துவம் ஒழிய வேண்டும் என்பதோ, கம்யூனிசம் வர வேண்டும் என்பதோ, நமது சொந்த விருப்பம் அல்ல. அது காலத்தின் கட்டாயம். ஆனால், அது தானாகவே வந்து விடாது. மக்கள் அதை தங்களது சுய விருப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தீராத நெருக்கடியில் சிக்கி அழுகி நாறும் இந்த முதலாளித்துவ கட்டமைப்பை, ஒழிப்பதற்கும், கூலி அடிமைகளாக உழலும் மக்கள், அந்த கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுபடுவதற்கும் தனித்தனி போராட்டங்கள் பயன்தராது.”
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801