privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விசெங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

-

செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

முன்னுரை:

ரசிய சோசலிசப் புரட்சியின் நேரடி சாட்சியாக இருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீடு எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலில், புரட்சியின் வெற்றி தோற்றுவித்த மகிழ்ச்சிக்கிடையே, உயிர் துறந்த தொழிலாளர்கள், படைவீரர்களின் உடல்களைச் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்த நிகழ்வினை விவரிக்கிறது இப்பகுதி. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதற்காகத் தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாசகர்களை அழைக்கிறார் ஜான் ரீடு.

***

ரவு நெடுநேரம் கழித்து நாங்கள் காலியான சாலைகளில் நடந்தோம். இவேர்ஸ்கி வளைவுக்குள் நுழைந்து கிரெம்ளினுக்கு முன்னால் மாபெரும் செஞ்சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தோம். வசீலி பிளழேன்னி தேவாலயத்தின் நெடிதுயர்ந்த விசித்திர உருவம் தெரிந்தது. பளிச்சிடும் வண்ணங்களில் முறுக்கி விடப்பட்ட அலை வரிகளுடன் கூடிய புகழ் மண்டிய குவி மாடங்கள் இருட்டிலே மங்கலான உருவரை காட்டி நின்றன. அவற்றுக்கு எந்தச் சேதமும் ஏற்பட்டுவிடவில்லை.

சதுக்கத்தின் ஒரு பக்கத்தில் கிரெம்ளினின் கரிய கோபுரங்களும் சுவர்களும் தெரிந்தன. மறைந்திருந்த கணப்புத் தீக்கொழுந்துகளின் செவ்வொளி அந்த உயரமான சுவர்களில் படபடத்து ஆடிற்று. சுவரின் ஒரத்திலிருந்து பேச்சுக் குரல்களும் மண்வெட்டிகள், குத்துக்கோடரிகளின் ஓசையும் அந்தப் பெரும் பரப்பைக் கடந்து வந்து எங்கள் காதில் விழுந்தன. நாங்கள் அவற்றை நோக்கிச் சதுக்கத்தின் குறுக்கே நடந்தோம்.

சுவரடிக்கு அருகே மலைமலையாய் மண்ணும் கற்களும் குவிந்திருந்தன. இவற்றின் மீது ஏறி கீழே இருபெரும் குழிகளுக்குள் பார்த்தோம். பத்து, பதினைந்து அடி ஆழமும் ஐம்பது கஜம் நீளமுள்ள இந்தக் குழிகளுக்குள் பெரிய சொக்கப்பனைகளை எரிய விட்டு, அவற்றின் வெளிச்சத்தில் நூற்றுக்கணக்கான படையாட்களும் தொழிலாளர்களும் நின்று தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

ஜான் ரீடு

இளம் மாணவர் ஒருவர் ஜெர்மன் மொழியில் எங்களுடன் பேசினார். சகோதரத்துவச் சமாதி இது என்று அவர் விளக்கிக் கூறினார். புரட்சிக்காக உயிரைத் தியாகம் புரிந்த ஐந்நூறு பாட்டாளிகளை நாளைக்கு இங்கே அடக்கம் செய்யப் போகிறோம் என்றார். எங்களைக் குழிக்குள் அழைத்துச் சென்றார் அவர். குத்துக் கோடரிகளும் மண்வெட்டிகளும் வேகம் வேகமாய் வேலை செய்தன, மண் மலைகள் உயர்ந்து சென்றன. யாரும் பேசவில்லை. தலைக்கு மேலே இரவு வானத்தில் வீண்மீன்கள் அடர்ந்திருந்தன. பழம் பெரும் கிரெம்ளின் சுவர் வானைத் தொடும்படி உயர்ந்து சென்றது.

“புனிதமான இடம் இது. அனைத்து ருஷ்யாவிலும் மிகப் புனிதமான இவ்விடத்தில் எமது மிகப்பெரும் புனிதர்களை அடக்கம் செய்யப் போகிறோம்” என்றார் அம்மாணவர். ஜார்களுடைய சமாதிகள் இருக்கும் இவ்விடத்தில் எங்களது ஜாராகிய மக்கள் இங்கே துஞ்சப் போகிறார்கள்…. அம்மாணவரின் கை கவணக் கட்டுக்குள் இருந்தது, போரில் குண்டடிபட்டிருந்தது. அவர் அதைப் பார்த்துக் கொண்டார். மத்திய காலத்திய முடியாட்சியினை நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோமென்று வெளிநாட்டவர்களாகிய நீங்கள் எங்களை இளக்காரமாய்ப் பார்க்கிறீர்கள் என்றார். ஆனால், உலகிலுள்ள கொடுங்கோலன் ஜார் மட்டுமல்ல, முதலாளித்துவம் இன்னுங்கூட மோசமானது, உலகின் எல்லா நாடுகளிலும் முதலாளித்துவமே பேரரசன் என்பதை நாங்கள் கண்டு கொண்டு செயல்பட்டோம்… ருஷ்யப் புரட்சியின் போர்த்தந்திரம் மிகச் சிறந்தது…

நாங்கள் அவ்விடத்தை விட்டு நகர்கையில், குழியிலிருந்த தொழிலாளர்கள் அந்தக் குளிரிலும் வியர்த்து வழிய ஓய்ந்து போய் மேலே ஏறத் தொடங்கினர். செஞ்சதுக்கத்தின் குறுக்கே கரிய வரிசையில் ஆட்கள் வேகமாக நடந்து வந்தார்கள். அவர்கள் மளமளவென்று குழிக்குள் இறங்கி மண்வெட்டிகளையும் குத்துக்கோடரிகளையும் எடுத்துக் கொண்டு வாய் பேசாமல் தோண்ட ஆரம்பித்தார்கள்…

இவ்விதம் அன்று இரவு முழுதும் மக்களின் தொண்டர்கள் ஒருவரையொருவர் விடுவித்துக் கொண்டு ஓயாமல் முழு வேகத்தில் வேலை செய்தார்கள்; உதயத்தின் குளிர் ஒளி வெண்பனி மூடிய அந்தப் பெரும் சதுக்கத்தின் முழுப் பரப்பையும் தெரியச் செய்தது. சகோதரத்துவச் சமாதியின் பழுப்பு நிறக் குழிகள் தோண்டி முடிக்கப்பட்டுவிட்டன.

விடியும் முன்பே நாங்கள் விழித்தெழுந்து இருண்ட சாலைகளின் வழியே ஸ்கோபெலெவ் சதுக்கத்துக்கு விரைந்தோம். மாபெரும் நகரில் யாரும் கண்ணில்படவில்லை; கடுங்காற்று மூண்டெழப் போவது போல தொலைவிலும்  அருகாமையிலும் ஒருவித சலசலப்பு கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் சோவியத்தின் தலைமையகத்துக்கு எதிரே ஆடவரும் பெண்டிருமான ஒரு சிறு திரள் பொன்னிற எழுத்துகள் பொறிக்கப்பட்ட செம்பதாகைகளை வைத்து கொண்டு நின்றது தெரிந்தது. மாஸ்கோ சோவியத்துகளின் மத்தியச் செயற்கமிட்டியின் பதாகைகள் அவை. வெளிச்சம் அதிகமாயிற்று. தொலைவிலே சலசலப்பு சப்தம் ஆழமாகி, இடையறாத பேரிரைச்சலாகப் பெருகிற்று. நகரம் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. தலைக்கு மேலே பதாகைகள் படபடக்க நாங்கள் புறப்பட்டு திவெர் ஸ்காயா சாலை வழியே சென்றோம்.

நாங்கள் சென்ற வழியில் தெருக்களிலிருந்த சிறிய திருக்கோயில்கள் யாவும் இழுத்து மூடப்பட்டு இருட்டாய் இருந்தன. இவேர்ஸ்கயா தேவ அன்னையின் கோயிலுங்கூட மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு புதிய ஜாரும் கிரெம்ளினுக்குச்  சென்று முடி சூட்டிக் கொள்ளும் முன்பு இந்தக் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். இரவும் பகலுமாய் எந்நேரமும் இது திறந்தே இருக்கும்; எப்போதும் கூட்டமாகவே இருக்கும்; பக்தர்கள் ஏற்றி வைக்கும் மெழுகுத் திரிகளின் ஒளி தேவ உருவங்களின் தங்கத்திலும் வெள்ளியிலும் மணிக்கற்களிலும் பளிச்சிட்டுத் தகதகத்துக் கொண்டிருக்கும். நெப்போலியன் முன்பு மாஸ்கோ வந்தபோது அணைக்கப்பட்டதற்குப் பிற்பாடு, இப்போதுதான் இந்த மெழுகுத் திரிகள் முதன் முதலாக அணைக்கப்பட்டிருந்ததாய்க் கூறினார்கள்.

புனித சத்திய சமயச் சபை தனது கடாட்சத்தின் ஒளி மாஸ்கோவுக்குக் கிட்டாதபடிச் செய்தது; பீரங்கிக் குண்டுகள் கொண்டு கிரெம்ளினைத் தாக்கியவர்களின், பக்திநெறி அறியாத இந்த விரியன் பாம்புகளின் உறைவிடமாகிவிட்ட இந்த மாஸ்கோவுக்குக் கிட்டாதபடிச் செய்தது. திருக்கோயில்கள் இருண்டு, நிசப்தமும் குளிரும் குடி கொண்டனவாகிவிட்டன: பாதிரிமார்கள் மறைந்து விட்டார்கள். செஞ்சவ அடக்கத்தின் போது சமயச்சபைப் பெரியவர்கள் பிரார்த்தனை நடத்தவில்லை; நீத்தாருக்குச் சமயச் சடங்கு ஏதும் இல்லை; தேவநிந்தனையாளர்களது சமாதியின் முன்னால் பிரார்த்தனைகள் வேண்டியதில்லை. மாஸ்கோவின் தலைமை மேற்றிராணியார் தீஹன் விரைவில் சோவியத்துகளைச் சமய விலக்கம் செய்யவிருந்தார்…

கடைகளும் மூடப்பட்டுதான் இருந்தன, சொத்துடைத்த வர்க்கத்தார் வீட்டிலே இருந்தார்கள் – ஆனால், இதற்குக் காரணம் வேறொன்று. மக்களது தினமாகும் இது.  மக்கள் எல்லாரும் தெருக்களிலே பிரவாகமெடுக்கப் போகிறார்கள் என்னும் செய்தி கடல் அலையென எழுந்து இடி முழக்கமிட்டது…

இவேர்ஸ்கி வளைவு வழியே மக்கள் வெள்ளம் ஏற்கெனவே கரைபுரண்டு ஒட ஆரம்பித்துவிட்டது. ஆயிரம் ஆயிரமாய் மக்கள் திரள் செஞ்சதுக்கத்தின் பெரும் பரப்பெங்கும் குழுமி வந்தது, முன்பெல்லாம் இவேர்ஸ்கி திருக்கோயிலின் எதிரே செல்லும் போது எல்லாரும் சிலுவைக் குறியிட்டுக் கொள்வது வழக்கம். ஆனால், இப்போது கூட்டத்தினர் அதைக் கடந்து சென்றபோது அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை…

கிரெம்ளின் சுவர் அருகே நெருக்கமாய் நின்றிருந்த கூட்டத்துக்குள் புகுந்து நாங்கள் இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னே சென்று மண் மலைகளில் ஒன்றின் மீது ஏறி நின்றோம். ஏற்கெனவே அங்கே பலரும் இருந்தார்கள், அவர்களிடையே முராலவும் ஒருவர் – மாஸ்கோவின் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த படையாள் அவர்; தாடியுடைய இதமான முகமும் நெட்டையான எளிய தோற்றமும் கொண்டவர்.

செஞ்சதுக்கத்துக்கு வந்து சேரும் எல்லாத் தெருக்களிலும் மக்கள் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்தார்கள். ஆயிரம் ஆயிரமானோர், பஞ்சையருக்கும் உழைப்பாளருக்குமுரிய தோற்றமுடையோர் திரண்டெழுந்து வந்து கொண்டிருந்தார்கள். இராணுவ வாத்தியக் குழு சர்வதேசிய கீதம் இசைத்து நடைபோட்டு நெருங்கி வந்து கொண்டிருந்தது. தன்முனைப்பான முறையில் ஏனையோரும் சேர்ந்து கொண்டு இசைக்க அந்தக் கீதம் மக்கள் வெள்ளத்தின் மீது மெதுவாகவும் இதமான உருக்கத்தோடும் காற்றலைகள் போல் பரவிச் சென்றது. கிரெம்ளின் சுவரின் உச்சியிலிருந்து பிரம்மாண்டமான பதாகைகள் கீழே தரைக்கு விரித்து விடப்பட்டன. அந்தச் செம்பதாகைகளில் பொன்னிலும் வெள்ளையிலுமான எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன: “உலக சோசலிசப் புரட்சியின் முன்னணிப் படையைச் சேர்ந்த வீரத் தியாகிகள்,  உலகத் தொழிலாளர்களது சகோதரத்துவம் நீடுழி வாழ்க!”

சதுக்கத்துக்குள் வீசிய குளிர்காற்று பதாகைகளை விம்மிப் புடைத்தெழச் செய்தது. நகரின் தொலைப்பகுதிகளிலிருந்தும் பற்பல ஆலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் தமது வீரத் தியாகிகளைச் சுமந்து கொண்டு வந்தார்கள். வளைவின் வழியே அவர்கள் வந்து கொண்டிருந்ததை, அவர்களது பதாகைகள் பளிச்சிட்டதையும், அவர்கள் சுமந்து வந்த சவப்பெட்டிகளின் இரத்தச் சிவப்பையும் பார்க்க முடிந்தது. இந்தப் பெட்டிகள் மட்ட ரகமானவை, இழைக்கபடாத பலகை கொண்டு செய்யப்பட்டு, கருஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டவை. முரட்டு ஆட்கள் அவற்றை உயரத் தம் தோள் மீது தூக்கி வந்தனர்.

முகத்தில் கண்ணீர் வழிந்தோட அவர்கள் நடை போட்டனர், அவர்களுக்குப் பின்னால் வந்த பெண்கள் விம்மியழுது கொண்டும் அலறிக் கொண்டுமிருந்தார்கள் அல்லது உயிரற்று வெள்ளையாய் வெளுத்துப் போன முகங்களுடன் விரைப்பாய் நடந்தார்கள். சில சவப்பெட்டிகள் திறந்திருந்தன; அவற்றின் மூடிகளைப் பின்னால் வந்தவர்கள் எடுத்து வந்தார்கள். ஏனையவை பொன் அல்லது வெள்ளிச் சரிகைத் துணிகளால் மூடப்பட்டிருந்தன, அல்லது உச்சியில் படையாளின் தொப்பி வைத்து அடிக்கப்பட்டிருந்தது. பல பெட்டிகளின் மீது கோரமான செயற்கைப் பூ வளையங்கள் இருந்தன.

கூட்டத்தினர் விலகி நின்று வழிவிட்டனர். இப்படித் தோன்றி பிற்பாடு மூடிக் கொண்டுவிட்ட வளைந்து நெளிந்து சென்ற சந்து வழியே இந்த ஊர்வலம் மெல்ல எங்களை நோக்கி நகர்ந்து வந்தது. வளைவு வழியே முடிவில்லாத நீள் வரிசையில் பதாகைகள் வந்து கொண்டிருந்தன. சிவப்பின் எல்லாவிதமான சாயல்களிலும் அமைந்த இந்தப் பதாகைகளில் வெள்ளியிலும் பொன்னிலுமான எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன, இவற்றின் உச்சியிலிருந்து தோரணங்கள் தொங்கின. கறுப்பில் வெள்ளை எழுத்துகளைக் கொண்ட அராஜகவாதிகளது கொடிகள் சிலவும் காணப்பட்டன. வாத்தியக் குழு புரட்சிகர சவ அடக்க ஊர்வல கீதத்தை இசைத்தது. நெரிசலாய் வெற்றுத் தலையுடன் நின்ற பெருங்கூட்டத்தினர் கனத்த பெருங்குரலில் பாட, ஊர்வலத்தினர் கரகரக்கும் குரலில் விம்மித் திணறியவாறு பாடினர்.

ஆலைத் தொழிலாளர்களது திரள்களுக்கு இடையிடையே படையாட்களது குழுக்கள் தமது சவப்பெட்டிகளைச் சுமந்து கொண்டு வந்தன. குதிரைப் படையினர் குதிரையில் மரியாதை அணி வகுத்து வந்தார்கள். பீரங்கிப் படையினரும் வந்தார்கள். அவர்களுடைய பீரங்கி சிவப்பு, கறுப்புத் துணிகளால் என்றென்றுக்குமாய் என்று நினைக்கும்படி – மூடப்பட்டிருந்தது. “மூன்றாவது அகிலம் நீடூழி வாழ்க!  நேர்மையான, ஜனநாயகமான, பொது சமாதானம் வேண்டும்” – கோஷங்களைக் கொண்ட பதாகைகளை இவர்கள் எடுத்து வந்தார்கள்.

சவப்பெட்டிகளைச் சுமந்து கொண்டு ஊர்வலத்தினர் மெதுவாக நகர்ந்து சமாதியின் ஓரத்தை வந்தடைந்தனர். பெட்டிகளைத் தூக்கி வந்தவர்கள் தமது சுமையுடன் மேட்டின் மீது ஏறிக் குழிக்குள் இறங்கினார்கள். தூக்கி வந்தவர்களில் பலரும் பெண்கள்-கட்டை குட்டையான, வலுமிக்க பாட்டாளி வர்க்கப் பெண்கள். மாண்டோரின் பின்னால் ஏனைய பெண்கள் வந்தார்கள் – உள்ளம் ஒடிந்து போன இளம் பெண்கள், அல்லது வயது முதிர்ந்து சுருக்கங்கள் விழுந்த தாய்மார்கள் இவர்கள்.  அடிபட்ட விலங்குகளைப் போல் இந்தத் தாய்மார்கள் முனகிச் சப்தம் எழுப்பியவாறு தமது புதல்வர்களையும் கணவன்மார்களையும் பின்தொடர்ந்து சகோதரத்துவச் சமாதிக்குள் இறங்கினார்கள். இரக்கங்கொண்ட கரங்கள் அவர்களை அணைத்துத் தடுத்த போது கதறிக் கூச்சலிட்டு அழுதார்கள். ஏழைகள் ஒருவரையொருவர் அப்படி உளமார நேசிப்பவர்கள்!

அன்று பகல் முழுதும் சவ அடக்க ஊர்வலம் ஓயாமல் வந்து சென்றது. இவேர்ஸ்கி வளைவின் வழியே உள்ளே நுழைந்து நிக்கோல்ஸ்கயா வழியே போய்ச் சேர்ந்தது. ஆற்று வெள்ளம் போல் செம்பதாகைகள் சென்று கொண்டிருந்தன. ஐம்பதாயிரம் மக்கள் சதுக்கத்திலே குழுமி நிற்க, அவை நம்பிக்கையையும் சகோதரத்துவத்தையும் மகத்தான தொலைநோக்குடைத்த வாக்குகளையும் வலியுறுத்தும் சொற்களைத் தாங்கிச் சென்றன. உலகின் தொழிலாளர்களும் இனி வருங்காலத்தில் தோன்றப் போகும் அவர்களது சந்ததியினர் எல்லோரும் கண் கொண்டு இக்காட்சியைப் பார்த்திருக்க, சென்றது இந்த ஊர்வலம்….

ஒவ்வொன்றாக ஐந்நூறு சவப்பெட்டிகள் குழிகளினுள் வைக்கப்பட்டன. இருட்டாகி வந்தது, அப்போதும் தொடர்ந்து கொடிகளும் பதாகைகளும் தணிந்து தொங்கியும், படபடத்துப் புடைத்தெழுந்தும் வந்து கொண்டிருந்தன.  வாத்தியக் குழு சவ அடக்க ஊர்வல கீதமிசைத்தது. அம்மாபெரும் கூட்டம் அனைத்தும் சேர்ந்து இசைத்தது.  சமாதிக்கு மேல் இருந்த இலைகளில்லா மரக்கிளைகளில் விசித்திரமான பல்வண்ண மலர்க் கொத்துகள் போல் மலர் வளையங்கள் தொங்கவிடப்பட்டன. இரு நூறு ஆடவர்கள் மண்வெட்டியால் மண்ணைக் குழிகளுக்குள் தள்ள ஆரம்பித்தார்கள். சவப் பெட்டிகள் மீது விழுந்து அது எழுப்பிய ஆழமான தடதடப்பு, கூட்டத்தினர் இசைத்த கீதத்துடன் சேர்ந்து தணிவாய் ஒலித்தது….

விளக்குகள் ஏற்றப்பட்டன. கடைசிப் பதாகைகளும் கொடிகளும் கடந்து சென்றன. அழுது புலம்பிய கடைசிப் பெண்களும் மெல்ல விலகிச் சென்றார்கள். நெஞ்சு பொறுக்காத சோகத்துடன் திரும்பிப் பார்த்தவாறு நடந்தார்கள். பாட்டாளி வர்க்கப் பெருவெள்ளம் அந்தப் பெரிய சதுக்கத் திலிருந்து சிறிது சிறிதாக வடிந்து அடங்கிற்று…

பக்தி உணர்ச்சி வாய்ந்த ருஷ்ய மக்கள் விண்ணுலகை அடைய இனி பாதிரிமார்கள் வந்திருந்து பிரார்த்தனை நடத்தத் தேவையில்லை என்பதை நான் திடுமென உணர்ந்தேன். விண்ணுலகம் வழங்கக்கூடியதைக் காட்டிலும் ஒளி படைத்ததான ஒர் அருளாட்சியை இங்கே இம்மண்ணுலகில் அமைத்திடுகிறார்கள் இவர்கள், இதற்காக இன்னுயிரை அளிப்பது தனிப்பெரும் சிறப்பாகும் என்பது தெரிந்து….

-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

 

  1. //பக்தி உணர்ச்சி வாய்ந்த ருஷ்ய மக்கள் விண்ணுலகை அடைய இனி பாதிரிமார்கள் வந்திருந்து பிரார்த்தனை நடத்தத் தேவையில்லை என்பதை நான் திடுமென உணர்ந்தேன். விண்ணுலகம் வழங்கக்கூடியதைக் காட்டிலும் ஒளி படைத்ததான ஒர் அருளாட்சியை இங்கே இம்மண்ணுலகில் அமைத்திடுகிறார்கள் இவர்கள், இதற்காக இன்னுயிரை அளிப்பது தனிப்பெரும் சிறப்பாகும் என்பது தெரிந்து….//
    அற்புதமான வரிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க