privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்பயிர் இன்ஸ்யூரன்ஸ் பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை !

பயிர் இன்ஸ்யூரன்ஸ் பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை !

-

பயிர் இன்ஸ்யூரன்ஸ் : பாதுகாப்பல்ல, பகல் கொள்ளை !

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : டிசம்பர் 08 2017,  வெள்ளிக் கிழமை,
நேரம் : காலை 10 மணி, 
இடம் : பனகல் கட்டிடம், தஞ்சை.

பங்கேற்போர் : மக்கள் அதிகாரம், விவசாய சங்கத் தலைவர்கள்.

அனைவரும் பங்கேற்பீர் !!

ன்பார்ந்த விவசாயிகளே!

விவசாயம் லாபமீட்டும் தொழிலல்ல, மனித சமூகம் உயிர் வாழ்வதற்கான ஆதாரம் என்பதை உலகம் அறியும் இந்த ஆதாரத்தை அளிக்கும் விவசாயிகள் வறட்சி, வெள்ளம், விளைச்சல் வீழ்ச்சி, விலை வீழ்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, கடன் தொல்லை என சொல்ல முடியா தொல்லைகளால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் தற்கொலையை நாடுகின்றனர். வாயாலே வடை சுட்டு, ஆட்சியைப் பிடித்த மோடி “விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம், நட்டத்தை ஈடுகட்ட புதிய பயிர்காப்பீட்டுத் திட்டம்” என வாய்சவடாலடித்தார்.

ஆனால், கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்தும், மத்திய மாநில அரசுகளின் கஜானாவிலிருந்தும், பல்லாயிரம் கோடி பணத்தைப் பிரிமியத் தொகையாகச் சுருட்டிக்கொண்ட பயிர் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யாமல் இழுத்தடிப்பது, நிராகரிப்பது என மோசடி செய்கின்றன.

மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளைக் கைகழுவி விடுகின்றன. நாடு முழுவதும் தமிழகம் முதல் குஜராத் வரை விவசாயிகள் போராடுகின்றனர். தமிழக டெல்டா விவசாயிகள் தலைமடை திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் தொடங்கி, கடைமடை வேதாரண்யம், நாகை வரை அன்றாடம் போராடுகின்றனர்.

இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு சில இடங்களில், ஒரு சிலருக்கு இழப்பீடு வழங்கிவிட்டு சாக்கு போக்கு காட்டி ஏமாற்றுகின்றன. நட்டமடைந்த எல்லா விவசாயிகளும் இன்ஸ்யூரன்ஸ் மூலம் பயன்பெறுவதில்லை என்பதே நடைமுறை உண்மை.

பயிர் இன்ஸ்யூரன்ஸ் யாருக்குலாபம்?

வட்டிக்கு விடுவது, சீட்டு பிடிப்பது, லாட்டரி சீட்டு நடத்துவது போல் இன்ஸ்யூரன்ஸ், லாபம் சம்பாதிக்க முதலாளிகள் நடத்தும் தொழில். பயிர் இன்ஸ்யூரன்ஸ் தொழிலில் இந்தியாவின் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் ஒன்பது நிறுவனங்கள் டாடா, அம்பானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்.

மோட்டார் – வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு இவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரும் தொழிலாக பயிர் இன்ஸ்யூரன்ஸ் வளர்ந்துள்ளது. தனியார் முதலாளிகள் தங்கள் லாபத்தை அதிகரிக்க எல்லாவிதமான தில்லு முல்லு, பித்தலாட்டம் மோசடிகளில் ஈடுபடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை. அத்தகைய முதலாளிகளிடம் (அரசு உட்பட) விவசாயிகளின் பாதுகாப்பை ஒப்படைத்தால் என்ன நடக்கும்? அதுதான் இப்போது நடக்கிறது.

இந்தியாவில் தனியார்மயம் வேகமாகப் புகுத்தப்பட்ட பிறகு இன்ஸ்யூரன்ஸ் துறையில் தங்களை அனுமதிக்குமாறு பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன் விளைவாக அரசின் ஏகபோகமாக இருந்த இன்ஸ்யூரன்ஸ் துறை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது.

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய மருத்துவ சேவையை தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளிலும் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இன்று பல்லாயிரம் கோடி வரிப்பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். ஏழை எளிய மக்களே சரியான மருத்துவம் கிட்டாமல் சாகின்றனர்.

இதே போல்தான் பயிர் இன்ஸ்யூரன்ஸ் திட்டமும். ஒவ்வொருவரிடமும் பிரீமியம் தொகையை வசூலித்து கொண்டு “ஊர் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து விவசாயம் அழிந்தால்தான் நட்டஈடு தருவோம்” என்ற விதி எவ்வளவு பெரிய மோசடி என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

2016 – 17 ம் ஆண்டுக்கு இந்தியா முழுவதும் வசூலிக்கப்பட்ட பயிர் இன்ஸ்யூரன்ஸ் பிரிமியத்தொகை 22,437 கோடி ரூபாய். விவசாயிகளுக்கு வழங்க ஒத்துகொண்ட தொகை 8,087 கோடி வழங்கிய தொகையோ 714 கோடி. அதாவது 97 சதவீத மக்கள் பணத்தை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் ஏப்பம் விட்டு விட்டன. இதை விவசாயிகளுக்கு அரசே கொடுத்திருந்தால், 21,000 கோடி மிச்சம்.

எவ்வளவோ நலத்திட்டங்களுக்குச் செலவிடலாமே! குஜராத்தில் எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனங்கள் பயிர் காப்பீடு திட்டத்தில் மோசடி செய்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே, “பயிர் இன்ஸ்யூரன்ஸ்” முதலாளிகள் கொள்ளையடிக்கும் திட்டமேயன்றி விவசாயிகளை பாதுகாக்கும் திட்டம் அல்ல.

எதற்கு இந்த அரசாங்கம்?

கல்விக்குக்கடன், மருத்துவத்திற்கு விவசாயித்திற்கு இன்ஸ்யூரன்ஸ், காசு கொடுத்தால்தான் நல்ல குடிநீர்! குப்பை பொறுக்கி பிழைக்க முயன்றாலும் ஜி.எஸ்.டி வரி. அதாவது, அரசு மக்களுக்கு எதையும் செய்யாது. மக்கள் எதைச் செய்தாலும் அரசுக்குக் கப்பம் கட்ட வேண்டும் இதுதான் மோடி அரசின் கொள்கை. அரசுத்துறை வங்கிகளிலிருந்து பல இலட்சம் கோடி கடன் வாங்கி முதலாளிகள் ஏப்பம் விட்ட தொகையை வசூலிக்காமல் அந்த நட்டத்தை ஈடுகட்ட ஒன்றேகால் லட்சம் கோடி மக்கள் பணத்தை வங்கிகளுக்கு வழங்கி காப்பாற்றுகிறது மத்திய அரசு. இதுதான் மோடியின் திட்டம்.

இந்திய அரசியல் சட்டம் விவசாயத்தைக் காக்க வேண்டும் என ஆணையிடுகிறது. ஆனால், அரசு கைவிரிக்கிறது. எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் அகற்ற வேண்டும் என்கிறது சட்டம். அரசு, மக்களை மேலும் மேலும் போண்டியாக்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் உத்திரப் பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மடிந்தனர். கொலைகளும் தற்கொலைகளும் அன்றாடம் செய்தித்தாள்களை நிறைக்கின்றனர்.

மக்களிடம் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு இவற்றை அரசு செய்யாது, காப்பீடு செய்து கொள், காசு கொடுத்து வாங்கிக்கொள்! என்றால் இந்த அரசை ஏன் சுமக்க வேண்டும்? மக்களுக்கு எதிராகக் செயல்படும் இந்த அரசை நம்புவதால் என்ன பயன்?

விவசாயிகளே பயிர் இன்ஸ்யூரன்ஸ் என்பது ஒரு மாபெரும் மோசடி. எரியும் வீட்டில் இருப்பதையும் பிடுங்கும் அராஜகம், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் முதல் கடமை. (அதாவது அரசின் கடமை) மலிவான விலையில் இடுபொருள், கட்டுப்படியான விலையில் கொள்முதல், இயற்கை இடரால் ஏற்படும் இழப்பு அனைத்தையும் அரசே முழுமையாக ஈடு செய்தல். இதுதான் விவசாயிகளைப் பாதுகாக்கும் உண்மையான காப்பீடு. இந்தக் கோரிக்கைக்காக ஒன்றிணைவோம்! போராடுவோம்! வென்றிடுவோம்!

மத்திய மாநில அரசுகளே!

  • பயிர் காப்பீடு மோசடியை உடனே கைவிடு !
  • மலிவான இடுபொருள், கட்டுபடியான விலையில் அரசே கொள்முதல் செய் !
  • விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் அனைத்திற்கும் பொறுப்பாகு !
  • அனைத்து விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய் !
  • நட்டமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை கொடுக்க வேண்டிய பயிர் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்கு !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 94431 88285 – 96263 52829 – 89037 36020.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க