மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும் ! – தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள்
சென்னையில்….
நாள் : 11.12.2017
நேரம் : காலை 11:00 மணி
இடம் : ஆர்மீனியன் தெரு, பாரிமுனை (சென்னை உயர்நீதிமன்றம் அருகில்)
***
விருத்தாச்சலத்தில்…
நாள் : 11.12.2017
நேரம் : காலை 11:00 மணி
இடம் : பாலக்கரை விருத்தாச்சலம்
***
கோவையில்…
நாள் : 11.12.2017
நேரம் : காலை 11:00 மணி
இடம் : டாடாபாத் பவர்ஹவுஸ்
***
அன்பார்ந்த உழைக்கும் மக்களே !
செயற்கைகோள், போர்க்கப்பல், விமானம், ஹெலிகாப்டர், பேரிடர் மீட்பு படை இவைகள் அனைத்தும், மீனவர்களின் பிணங்களைக்கூட மீட்க முடியவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காணவில்லை, நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் வரவில்லை என கதறுகிறார்கள் மீனவ மக்கள்.
குழித்துறை ரயில் நிலையம், குளச்சல் பேருந்து நிலையம் மீனவ மக்களின் போராட்டத்தால் நிலைகுலைந்தது. சென்னை மீனவ குப்பங்கள் தலைநகரை அச்சுறுத்துகிறது. மீனவர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வுகாண முடியாமல் அதிகாரிகள், அதிமுக அமைச்சர்கள் எப்படி சமாளித்து தப்பிக்கலாம் என நிற்கிறது.
ஒக்கிப்புயல் பாதிப்பு, நிவாரணம் பற்றி அதிகாரிகளும் அமைச்சர்களும் பொய் சொல்கிறார்கள், கடலோர மீனவ மக்களை அலைகழிக்கிறார்கள். புயலால் நாகர்கோவில் நாசமடைந்தது. மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, போக்குவரத்து இல்லை, கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் திருவண்ணாமலை தீபத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எடப்பாடி அரசின் யோக்கியதை இதுதான்.
பேரிடர் மீட்பு என ஒத்திகை பார்க்கிறார்கள். ஏன் நடக்கவில்லை? தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, அடிப்படை கட்டுமானம் பெரும்பாண்மையான மக்கள் சார்ந்து இயங்கவில்லை. அதிலும் சென்னை போன்ற தலைநகரங்களில் வெள்ளம் பாதிப்பு என்றால் அரசு சில கண்துடைப்பு வேலையாவது செய்கிறது. கிராமம், கடலோர மீனவ மக்கள் என்றால் பாரபட்சமாக துச்சமாக செயல்படுகிறது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தான் அதிமுக எடப்பாடி அரசுக்கு முக்கியம். மீனவ குடும்பங்களின் இழவு பற்றி கவலை இல்லையா? என கேட்கிறார்கள் மீனவமக்கள்.
கடலூர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலரும் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்களின் நிலை பற்றி எந்த தகவலும் இல்லை. அப்பா எங்கே? என கேட்கும் குழந்தைகளோடு தாய்மார்கள் கண்ணீரில் கதறுகிறார்கள். பிற மக்களின் மீன் தேவைகளை கடலோர கிராம மீனவ மக்கள் தான் நிறைவு செய்கிறார்கள். மீன்பிடித் தொழில் கம்பெனிகள் கையில் சென்றால் நமக்கு மீன் இல்லை. மீனவர்கள் துயரம் நமது துயரம். மீனவர்கள் தினமும் உயிரை பணயம் வைத்து மீன்பிடித்தொழிலுக்கு செல்கிறார்கள்.
ஆழ்கடல் மீன்பிடித் தொழில்தான் பல ஆயிரம் கோடிகள் அந்நிய செலாவணியை அள்ளித் தருகிறது. பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கு அரசு எதுவும் செய்யவில்லை. ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்கள் கரையில் உள்ளவர்களிடம் பேச முடியாது. தமிழக அரசு அதற்கான தகவல் தொழில்நுட்பத்தை தமிழக மீனவர்களுக்கு வழங்கவில்லை. ஆனால் சிங்கள மீனவர்கள் மற்றும் ஆந்திர மீனவர்களுக்கும் கரையில் தொடர்பு கொள்ளும் தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி குமரி மீனவர்களுக்கு இருந்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புச் சேதம் ஏற்பட்டிருக்காது.
உயிருக்கு அஞ்சாத மீனவர்கள் இணைந்த மீட்பு குழுதான் மீனவர்களை காப்பாற்றும். சம்பளத்திற்கும், கிம்பளத்திற்கும், பணிபுரியும் மேட்டுக்குடி சிந்தனை அதிகார வர்க்கம்தான் மீனவர்களை காவு கொடுத்துள்ளது.
செவிலியர்கள் போராட்டம், மதுரை மேலூர் விவசாயிகள் போராட்டம், மீனவர்கள் போராட்டம், நூறுநாள் சம்பளம் கேட்டு, கரும்புக்கு நிலுவைத்தொகை கேட்டு, பயிர் காப்பீடு பணம் கேட்டு, ஓய்வூதிய பணம் கேட்டு, அரசு மருத்துவர்கள் ஒதுக்கீடு கேட்டு , வெளி மாநில நீதிபதிகள் ஏன் என கேட்கும் வழக்கறிஞர்கள், மூடப்படும் ரேசன் கடை, மக்களின் அவலங்களாக தொடரும் அரசு மருத்துவ மனைகள், கல்வி உரிமைக்காக மாணவர்கள், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு என தொடரும் போராட்டங்கள் சீறும் கடல் அலைகளாக இந்த அரசை தொட்டு தொட்டு அச்சுறுத்துகிறது.
மொத்த அரசு நிர்வாகமும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் குற்றக் கும்பலாக ஈவு இரக்கமின்றி மக்கள் நலன்களுக்கு எதிராக மாறிவிட்டது. இந்த அரசு கட்டமைப்பிற்குள் நிரந்தர தீர்வு காண முடியாது என்பதை பொங்கிவரும் போராட்டங்கள் உணர்த்துகின்றன.
கோரிக்கைக்காக மட்டும் தனித்தனியாக போராடி வெல்ல முடியாது. அனைத்திற்கும் காரணமான இந்த அரசு கட்டமைப்பின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அதுதான் பெரும்பான்மையான மக்களுக்கு முழுமையான தீர்வை கொடுக்கும்.
மீனவ மக்களின் துயர்துடைக்க, தோள் கொடுப்போம் ! துணை நிற்போம் !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.