privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமீனவர்கள் துயரம் : எழவு வீட்டில் பிரியாணி சாப்பிடும் எடப்பாடி அரசு ! திருச்சி ஆர்ப்பாட்டம்...

மீனவர்கள் துயரம் : எழவு வீட்டில் பிரியாணி சாப்பிடும் எடப்பாடி அரசு ! திருச்சி ஆர்ப்பாட்டம் !

-

கரை சேராத மீனவர்கள்! கரை ஒதுங்கும் மீனவர்கள்! கும்மாளம் போடுது எடப்பாடி அரசு ! – திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக 08.12.2017 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் பறையிசையுடன் துவங்கியது. மீனவர்களின் துயரத்தையும், அவர்களின் போர்க்குணத்தையும் விளக்கும் வகையில் ம.க.இ.க கலைக்குழுத் தோழர்கள் பாடல்கள் பாடி உணர்வூட்டினர்.

தலைமையுரை பேசிய மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், “ஒக்கி புயல் பாதிப்புக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததை சுட்டிக்காட்டி, மக்களை பாதுகாக்க வக்கற்ற அரசு வல்லரசு என பீற்றிக்கொள்வதை சாடினார். மக்கள் கொத்துகொத்தாக சாகும் போது இன்று R.K நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலில் விசாலின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதே மிகப்பெரிய பிரச்சினையாக ஊதிப்பெருக்கப் படுவதையும் விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரையும் பாதிப்புக்குள்ளாக்கி தோற்றுப் போய் நிற்கிறது அரசு” எனக்கூறி தலைமை உரையை முடித்தார்.

கண்டன உரை பேசிய பாய்லர் பிளாஃண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் (பு.ஜ.தொ.மு) தோழர் சுந்தரராஜன், “குமரியில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அழுகுரல்கள், கடற்கரையில் பிணங்கள் ஒதுங்குகின்றன என செய்திகள் வந்தவண்ணம் உள்ளது, என மீனவர்களின் துயரத்தை விவரித்தார். மக்கள் நலன் மீது அக்கறையற்ற அரசின் பெயர் மக்களாட்சியா?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் நடக்கும் கும்மாளத்துக்கு அனுமதியளிக்கும் போலீசு, மீனவர்களின் பிரச்சினையை பேசும் ஆர்ப்பாட்டத்தில் சாமியானா பந்தல் போட அனுமதிக்காததை சுட்டிக்காட்டி பேசினார். மோடி தனிவிமானத்தில் ஊர் சுற்றும் போது, மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதை சுட்டிக்காட்டி, அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும், வீதிக்கு வர வேண்டும்” எனக் கூறினார்.

ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா, “அதிமுக அரசு என அழைக்காமல் பிணந்திண்ணி அரசு என அழைக்க வேண்டும் என்றார். எழவு விழுந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் பிரியாணி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ…? அப்படி வக்கிரமாக செயல்படுகிறது எடப்பாடி அரசு என்றார். RK நகர் தொகுதியில் ஒரு MLA இல்லை. அவ்வளவு தானே, அதனால என்ன நடந்திருச்சு.

RK நகர் தேர்தலை நடத்திவிட்டால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்பது போல சித்தரிப்பதையும், ஓட்டுக்கு நவீன இயந்திரங்களை பயன்படுத்தும் அரசுக்கு மீனவர்களுக்கு ரேடார் கருவிகளை வழங்க வக்கில்லை என்பதையும், இந்திய ரேடார் கருவி உதவிகளுடன் இலங்கை அரசு ஈழத்தமிழர்களை கொன்றொழித்ததையும் நினைவுபடுத்தி, இப்படிப்பட்ட அரசு நீடிக்க விடக்கூடாது உடனே தூக்கியெறிய வேண்டும்” என்றார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், “ஒக்கி புயல் பாதிப்பால் மக்கள் சாகும் போது நூற்றாண்டு விழா கொண்டாடுவது, நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல உள்ளது என்றார். இயற்கை சீற்றம் என்றால் பாதிப்பு இருக்கத்தானே செய்யும். எல்லாத்துக்கும் அரசை விமர்சிப்பதா என கேட்கலாம். புயல் ஏற்படுத்திய பாதிப்பை விட, ஆளத்தகுதியற்ற இந்த அரசு ஏற்படுத்திய பாதிப்பு தான் அதிகம்.

2004 சுனாமி ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வந்த மீனவர்களை மீண்டும் பாதித்துள்ளது இந்த பேரழிவு. இப்படிப்பட்ட பேரழிவிலிருந்து பாதுகாக்கத் தான் வானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது அரசு. புயல் இந்தியாவை தாக்கும் என்ற சர்வதேச நாடுகளிலிருந்து வரும் எச்சரிக்கையைக் கூட மீனவர்களுக்கு தெரிவிக்காதது குற்றம் என்றார். இதற்கு சட்டப்படி ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை தண்டிக்க முடியும்.

மக்கள் கையில் இருந்த வரை இயற்கை வளங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காடுகளை அழிப்பதை தடுக்கப் போவதாக கூறி உருவாக்கப்பட்ட வனத்துறை தான் காடுகளை அழிக்கிறது. பொதுப்பணித்துறை தான் ஆற்று மணல் கொள்ளைக்கு துணைபோகிறது என இந்த அரசு தான் இயற்றிய சட்டங்களை தானே மதிக்காமல் சீர்குலைந்து நிற்பதையும், சென்னை வெள்ளம் வந்த போது ஜெயாவின் கையெழுத்து வேண்டுமென உரிய நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடாமல் பேரழிவை ஏற்படுத்தியது போல, இன்று குமரியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் ஆறு, ஏரி, குளங்களை தூர்வாராமல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இரண்டு மணி நேரம் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கும் போலீசு 30 அடி ரோட்டை மறித்து 20 அடிக்கு பேனர் வைத்ததை கண்டுகொள்ளாததால் தான் கோவையில் ரகு என்ற இளைஞர் இறந்தார்.

இதை பற்றி வாய்திறக்காத நீதிமன்றம் தான் இன்று தங்களின் வாழ்வாதார பிரச்சினைக்காக போராடும் செவிலியர்களின் போராட்டத்தை முடக்குகிறது. இரண்டு வருடம் வேலை செய்தால் சம்பள உயர்வு என்று ஏற்கனவே அளித்த நீதிமன்ற உத்தரவை மீறுவதைப் பற்றி பேசாத தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 7700 ரூபாய்க்கு வேலை செய்ய முடியவில்லையென்றால் வேலையை விட்டு போக வேண்டியது தானே என்கிறார். “இத சொல்ல உனக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம். 250 ரூபாய்க்கு தீர்ப்பு சொல்ல ஆளிருக்கு நீ கிளம்பு” என்று அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வளைதளங்களில் இளைஞர்கள் போடும் மீம்ஸ் பரவுவதை கூறினார்.

இந்த அரசமைப்பில் தேர்தல் ஆணையம் தனித்து இயங்குவதாக கூறப்படுகிறது. RK நகர் போன்ற இடைத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் எவ்வாறு ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதை பார்க்க முடிகிறது. ஆளத்தகுதியற்ற இந்த அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிராக மாறிவிட்டது.

வைகை தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி 6000 விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தியவுடன் பேச்சுவார்த்தை என இழுத்தடிக்காமல் உடனடியாக திறந்துவிடப்படுகிறது. டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பின்பு கடைகள் மூடப்படுகிறது. இது தான் மக்கள் அதிகாரம் என்கிறோம். இப்படி அரசை பணிய வைக்கக்கூடிய போராட்டங்கள் மூலம் ஆளத்தகுதியற்ற இந்த அரசை அகற்ற வேண்டும்” எனக்கூறி சிறப்புரையை நிறைவு செய்தார்.

இறுதியாக, மக்கள் அதிகாரம் தோழர் நிர்மலா நன்றியுரை கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் போடப்பட்டிருந்த சாமியானா பந்தலை பார்த்தவுடன் அதை அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டது காவல்துறை. குழந்தைகள், பெண்கள் வருவதால் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த சில ஆர்ப்பாட்டங்களிலும் சாமியானா பந்தல் போடப்பட்டது எனக்கூறினோம்.

நேர்மையாக பதிலளிக்காமல் இது மேலிடத்து உத்தரவு, சாமியானா பந்தலை கழற்றிவிட்டு தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனக்கூறி சாமியானா பந்தலை பிரித்து அடாவடித்தனமாக ‘சட்டம் ஒழுங்கை’ நிலைநாட்டியது காவல்துறை.

பெருங்கடலின் சீற்றத்திற்கு அஞ்சாத போர்க்குணமான மீனவர்களுக்கு துணை நிற்பதும், செயலிழந்து தோற்றுப்போய் நிற்கும் அரசை அப்புறப்படுத்துவமே நம் முன் உள்ள கடமை!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி – 94454 75157.