Friday, December 6, 2024
முகப்புசெய்திமீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும் ! தர்மபுரி, விழுப்புரம், கோவை ஆர்ப்பாட்டங்கள்

மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும் ! தர்மபுரி, விழுப்புரம், கோவை ஆர்ப்பாட்டங்கள்

-

“மீனவர்கள்  துயரத்திற்கு  நீதி  வேண்டும்!” என்கிற  முழக்கத்தின் கீழ்  தமிழகம்  முழுவதும்  மக்கள் அதிகாரம்  அமைப்பு  ஆர்ப்பாட்டம், போராட்டங்களை  நடத்தி வருகிறது. அதனுடைய ஒரு பகுதியாக 11.12.2017 அன்று  தருமபுரி  தந்தி அலுவலகம்  அருகில் கண்டன  ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தினை மக்கள்  அதிகாரம்  பென்னாகரம் பகுதி  ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா  தலைமை தாங்கி நடத்தினார். அவர் பேசுகையில், “ஆர்.கே நகர்  தொகுதியில்  தேர்தலுக்காக  இராணுவ வீரர்களை கொண்டு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, தத்தளிக்கும் மீனவர்களுக்கு  முக்கியத்துவம்  கொடுக்கவில்லை, முன்கூட்டியே தகவல்  கொடுத்து இருந்தால், அதற்கான  சாதனங்களை  அவர்களுக்கு  வழங்கியிருந்தால்,  இத்தனை உயிர்பலி  நடந்திருக்காது. எனவே மக்களின் உயிரை துச்சமாக மதித்து மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த அரசை நம்பாமல் மீனவர்களை காக்க  அனைவரும்  போராட வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம் பாலக்கோடு பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜானகிராமன்  பேசுகையில், “பி.ஜே.பி அமைச்சர் பொன்ராதாகிருஷணன்  என்ன சொல்கிறார்.  ஒரு அமைச்சர் போய் எல்லா மக்களையும் பார்க்க முடியுமா? என்கிறார். ஆனால் ஓட்டுவாங்க மட்டும் எல்லா மக்களையும் சந்திக்க முடிகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் -ம்  ஆர்.கே நகரில் ஓட்டுவாங்க  தெருத்தெருவாக செல்ல நேரம்  இருக்கிறது.  ஆனால் மீனவ  மக்களை  பார்க்க  நேரமில்லை, துப்பில்லை. அவர்களுடைய ஆட்சிக்கு பிரச்சினை என்றால்  உயிராக பார்ப்பது. மீனவ மக்கள்  பிரச்சினை என்றால் மயிருக்கு சமமாக  பார்க்கும்  ஆட்சியாளர்களை  நம்பி பயனில்லை, எனவே மீனவர்களின்  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன்  பேசுகையில், “கன்னியாகுமரி  மண்டைக்காடு பகுதியில்  மக்கள்  அதிகாரம் தோழர்கள்  அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை  சேகரித்துக்கொண்டிருக்கும் போது, 7 தோழர்களை  கைது செய்கிறார்கள். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட  மீனவர்களுக்கு பாதுகாப்புகொடுங்கள்,  குடும்ப உறுப்பினர்களை மீட்டுதாருங்கள்  என்று போராடிய மீனவர்கள் 10,000 பேர் மீது  வழக்கு பதிவு செய்கிறார்கள்  என்றால்  இதைவிட  கேவலம்  ஏதாவது  இருக்க முடியுமா?

நடுக்கடலில்  செல்லும் போது மீனவர்களை  பாதுகாக்க  தகவல்  பரிமாற்ற  கருவிகள் வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடுகிறார்கள். இதற்கு எந்த வித  நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. மீனவ கிராமங்களை  படுகொலை செய்து விட்டது. இந்த  அரசு என்கிறார்கள்  மீனவ மக்கள்.

ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் போண்டா, மிக்ஸர்  சாப்பிட்டுக்கொண்டு  எல்லோரையும்  மீட்டுவிட்டோம் என்கிறார்கள். ஒரு தொகுதிக்கு  தேர்தல்  நடத்த  15 பட்டாலியன் படை வீரர்கள்   குவித்து  இத்துபோன ஜனநாயகத்தை  காக்க முயலும் இவர்கள், ஆயிரக்கணக்கான மீனவர்கள் இறப்பதை மீட்க துப்பில்லை. 400 விவசாயிகள் இறந்து இருக்கிறார்கள் , விளைவித்த  பொருளுக்கு  விலை இல்லை என்று  போராடுகிறார்கள்.  அந்த நேரத்தில் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து சிறு, குறு தொழில்களை  அழித்ததோடு, ஜிஎஸ்டி கொண்டு வந்து  வரி கட்டவே கந்துவட்டிக்கு கடன்வாங்கி பொருள்  ஏற்றுமதி செய்ய வேண்டியிருக்கிறது. இதை தான் ஜனநாயகம்  என்கிறார்கள். இப்படி  மக்களை  நடைபிணமாக  ஆக்கும் இந்த துரோகிகளை,  அமைச்சர்களை, அதிகாரிகளை  நடுகடலில்  இழுத்து வந்து சிறைவைக்க வேண்டும். அப்போது தான்  முப்படையும்  வரும் அதுதான் தீர்வு. எனவே  மீனவர்கள்  போராட்டத்திற்கு  ஆதரவாக  கரம் கோர்ப்போம். நீதியை  நிலைநாட்டுவோம்”  என்றார்.

மக்கள்  அதிகாரம்  தோழர் கோபிநாத் பேசுகையில், “மீனவர் பிரச்சினைக்கு மக்கள்  அதிகாரம் போராடுகிறது. ஆனால் மக்கள் பிரச்சினைக்கு நாங்கள்  இருக்கிறோம் என்று கூறும்  அரசமைப்பு வேடிக்கை பார்க்கிறது.

ஆயிரக்கணக்கான மீனவர்களை காணவில்லை, இறந்து கொண்டுயிருக்கிறார்கள், சொல்ல முடியாத துயரத்தில் இருக்கும் போது தமிழக ஆளுநர்  விவேகானந்தர்  சிலைக்குமுன் நின்று செல்ஃபி  எடுக்கிறார். மீனவர்களை  மீட்க அதிகாரிகள் வரவில்லை, என்கிறார்கள்  மீனவ மக்கள். இப்படிப்பட்ட துரோகிகள்தான்  நம்மை  ஆளுகிறார்கள்.

படை, இராணுவம், செயற்கைகோள்  என மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் இவைகள் யாருக்காக இருக்கிறது. அமெரிக்காவுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை  செய்கிறது. “இயற்கை பேரிடர் நாங்கள் என்ன செய்ய முடியும்..?”  என்கிறார் நிர்மலா சீதாராமன். பிறகு எதற்கு அமைச்சர் பதவி என்று  நாம் யோசிக்கவேண்டும்.  அந்நிய செலாவணியை  ஈட்டிதர மட்டும் மீனவர்கள் வேண்டும். மீனவர்கள் பாதிக்கும் போது பாதுகாக்க துப்பில்லை. மக்கள் பிரச்சினை, உரிமை, ஜனநாயகம் பற்றி ஒன்றும்  தெரியாத  கோமாளிகள்தான்  அரசமைப்பு முழுவதும்  இருக்கிறார்கள். எனவே  குறுக்கு வழி ஏதுமில்லை, கன்னியாகுமரி  மீனவர்கள்  தெருவுக்கு வந்து விட்டார்கள் அவர்களுக்கு ஆதரவாக  வீதிக்கு வருவோம். அதிகாரத்தை கையிலெடுப்போம்  அதுதான் ஒரே மாற்று.” என்று அறைகூவல் விடுத்தார்.

பொது மக்கள்  மற்றும்  மாற்றுக்கட்சியினர் என பலரும் நின்று கவனித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி, தொடர்புக்கு : 81485 73417.

***

மீனவ மக்களின் துயர் துடைக்க, தோள் கொடுப்போம்! துணை நிற்போம்! விழுப்புரம் ஆர்ப்பாட்டம்.

க்கி புயலில் சிக்கி காணாமல் போன இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட  தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க கோரியும்! மோடி- எடப்பாடி கும்பலை கண்டித்தும்!  விழுப்புரம் பகுதியில் 11-12-2௦17 திங்கள் கிழமை மாலை 5:௦௦ மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு ௦8-12-17 அன்று விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் முறையாக அனுமதி கேட்டிருந்தோம்.

பின் ஆர்ப்பாட்டத்திற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் எமது தோழர்கள் பேருந்திலே பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். மீனவர்கள் துயரத்திற்கு மத்திய மாநில அரசுகளான மோடியும்- எடப்பாடியுமே தான் குற்றவாளிகள் என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான “இந்து முன்னணி”யை சேர்ந்த ஒருவன் தோழரிடம் வம்புக்கு வந்து விட்டான். நீ எப்படி எங்க “56” இன்ச் மார்பு மோடியை தப்பா பேசுவ..? என்று தோழரை நெட்டித் தள்ளினான். தோழருக்கு வயது 55 வயதுக்கு மேல் இருக்கும். இதை பார்த்து பேருந்தில் இருந்த மக்கள் உடனே எழுந்து அந்த “இந்து முன்னணி” பொறுக்கியை  திட்டி அவர் சரியாத்தான் பேசுகிறார் உனக்கு பிடிக்கலனா கீழே இறங்கு என்று மக்கள் அவனை அதட்டி பேருந்திலிருந்து விரட்டி  விட்டனர். இப்படி “ நுணலும் தன் வாயால் கெடும்” என்பதை போல சும்மா இருக்காமல் வாயை கொடுத்து செருப்படி வாங்கிக் கொண்டான் அந்த “இந்து முன்னணி பொறுக்கி”.

இரண்டு நாள் பிரச்சாரம் முடித்து 11-12-17 திங்களன்று ஆர்ப்பாட்டத்திற்காக விழுப்புரம் வட்டம் முழுக்க சுவரொட்டிகள் ஓட்டினோம். ஆர்பாட்டத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தோம். மணி சுமார் மதியம் 1:௦௦ மணியளவில் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திலிருந்து போனில் தொடர்புக் கொண்டு உங்களுக்கு ஆர்ப்பாட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று விழுப்புரம் மண்டல ஒருங்கினைப்பாளார் தோழர் மோகன்ராஜ் அவர்களுக்கு தகவல் சொன்னார்கள். ஏன் அனுமதி இல்லை என்று தோழர் காரணம் கேட்டதற்கு மேலிட உத்தரவு சார். எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு சொன்னத உங்களுக்கு தெரிவிச்சோம் என்று முடித்துக் கொண்டனர்.

ஏற்கனவே “ அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவுக்கட்டும் போராட்டங்கள் தேவை” என்ற முழக்கத்தின் அடிப்படையில் உளுந்தூர்பேட்டையில் பொதுக்கூட்டத்திற்கு மூன்று முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இப்படி தமிழகம் முழுக்க பெரும்பாலான இடங்களில்   “மக்கள் அதிகாரம்” அமைப்பு கூட்டங்களுக்கு இந்த அரசாலும் காவல் துறையாலும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இப்படி இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக சொல்லலாம் என்று வேடமிட்டுக் கொண்ட இந்த அரசு இன்று அடிப்படை பேச்சுரிமை, கருத்துரிமையை கூட முறித்து தன்னுடைய “நரி வேடத்தை” காட்டுகிறது. அன்று “மூடு டாஸ்மாக்” பாடலுக்காக “ தோழர் கோவன்” கைது, இன்று குமரி மீனவ மக்களோடு அவர்களின் துன்பத்திலும், துயரத்திலும், கோவத்திலும், உரிமை போராட்டத்திலும் பங்கு கொண்டதற்காக குமரியில் “மக்கள் அதிகாரம் தோழர்கள் 7 பேர் கைது”, இதை வெளியே பிரச்சாரம் செய்ய தடை. தடையை மீறினால் “தேசத்துரோகி, தீவிரவாதி”.

எனவே விழுப்புரம் காவல் துறையின் தடையை மீறி “மீனவர்களின் துயரத்திற்கு நீதி கேட்டு” ஆர்ப்பாட்டத்தில் 1௦௦ தேசதுரோகிகள் கலந்து கொண்டோம். 2௦ நிமிடம் மீனவர்களை காக்க தவறிய இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியை அம்பலப்படுத்தியும், மக்கள் அதிகாரம் தோழர்களை கண்டு அஞ்சி நடுங்கும் “காவல் துறையை” கண்டித்தும் முழக்கமிட்டோம். பின் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். வெளியில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் மண்டபத்துக்குள்ளே நடந்தது. தோழர் சிவானந்தம் தலைமை தாங்கினார். தோழர் செலவக்குமார் தலைமையில் பாடல்கள் பாடப்பட்டது. தோழர்கள் ஸ்ரீராம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பின் தோழர்களை விடுவித்தது போலீசு.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

புயல் முன்னறிவிப்பு இல்லை! ஆழ்கடல் மீனவர்களுக்கு தகவல் இல்லை! புயலில் சிக்கிய மீனவர்களை உடனே காக்கவில்லை! இறந்த மீனவர்களின் உடலை மீட்கவில்லை! செயற்கைக்கோள், போர்க்கப்பல், விமானம், ஹெலிகாப்டர், பேரிடர் மீட்புப்படை, கடற்படை, கடலோர காவல் படை, விண்வெளித்துறை, ராணுவம் இத்தனையும் உள்ளன.

ஆனால் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற எங்க மீனவர்கள் எங்கே? அம்மா! அப்பா எப்ப வருவார் என்ற குழந்தையின் கேள்விக்கு யார் பதில் சொல்வது?  உங்க நிவாரணம் வேண்டாம்! என் கணவனை மீட்டுக் கொடுங்க என்று கதறும் தாய்மார்களின் கண்ணீருக்கு யார் பொறுப்பேற்பது?    இப்படி அனைத்திலும் இந்த அரசுகள் தோல்வி அடைந்து நிற்கிறது”.

விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், துப்புரவு தொழிலாளிகள், அரசு ஊழியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கான நிவாரணங்கள் கேட்டு, ஊதியம் கேட்டு, வேலை கேட்டு, கல்வி கேட்டு, கூலி கேட்டு, மானியம் கேட்டு, சாலை கேட்டு, கழிப்பறை கேட்டு, தண்ணீர் கேட்டு, ரேஷன் பொருள் கேட்டு, நூறு நாள் வேலை கேட்டு, ஓய்வூதியம் கேட்டு போராட்டங்கள் வெடிக்கின்றன. ஆனால் தனித்தனியான போராட்டங்கள் ஒவ்வொன்றும் கடல் அலையைப் போல இந்த அரசை தொட்டு தொட்டு செல்கின்றன. அதனால் தான்  இந்த அரசு மெத்தனமாக கும்மாளம் போட்டுக்கொண்டு இருக்கிறது. மக்களை மதிக்க மறுக்கிறது. உரிமைகளை பறித்து உள்நாட்டிலேயே மக்களை அகதிகளாக்குகிறது. போலீசு குண்டர்களைக் கொண்டு போராட்டங்களை ஒடுக்குகிறது. சிறை வைக்குது, குண்டாசு போடுது, சுட்டுத்தள்ளுகிறது.

இன்னமும் சில அறிவு ஜீவிகளும், ஜனநாயக சக்திகளும் தேர்தலை தீர்வாக முன்வைக்கின்றனர், இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வை தேடச்சொல்கிறார்கள். மக்களும் அவர்களின் நம்பிக்கையை ஏற்று மனுக்கொடுக்கிறார்கள், வழக்கு தொடுக்கிறார்கள், ஓட்டுப்போடுகிறார்கள், கோரிக்கைகளை முன்வைத்து சட்டத்துக்கு உட்பட்டு போராடுகிறார்கள். என்ன பயன்? தீர்வு கிடைத்ததா? மீத்தேனுக்கு எதிராக நெடுவாசல் நீள்கிறது, விவசாயிகளின் வாழ்க்கை மலடானது, மாணவர்களின் கல்வி காணலானது, தொழிலாளர்களின் உரிமைகள் இறந்து போயின.

எனவே இந்த அரசுக் கட்டமைப்பில் கோரிக்கைகளை முன்வைத்து தனித்தனியாக போராடி தீர்வு கிடையாது, இந்த அமைப்புக்குள்ளாகவே தீர்க்கவும் முடியாது என்பது தான் நிரூபணம். இந்த அரசு தோற்றுப்போய் விட்டது, மக்களை ஆள தகுதி இழந்து விட்டது. மக்களுக்கு வேண்டாத சுமையாகி விட்டது. இந்த அரசு மக்களை கொல்லும் விசமாக மாறி விட்டது. எனவே இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதன் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். சாவல் விட வேண்டும். தனித்தனி போராட்டங்கள் ஒன்றிணைந்து இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்க வேண்டும்.

ஜனவரியில் மெரீனாவில் பற்றிய தீ! அன்று கன்னியாக்குமரி வரை கொழுந்து விட்டு எரிந்தது. தொடர்ந்து பல்வேறு வகைகளில் மக்கள் பிரச்சனைகளில் கனன்று கொண்டு இருந்த அந்த தீ!  இன்று மீண்டும் டிசம்பரில் குமரியில் பற்றி எரிகிறது. இனியும் அத்தீயை அணைய விடாமல் கையிலேந்தி இந்த அரசை தொட்டு தொட்டு செல்லும் கடலையை போல் அல்லாமல் மக்களுக்கு எதிரான இந்த அரசையே அடித்துச் செல்ல சுனாமியாக மாறி இந்த அரசை மூழ்கடிப்போம்.

 ( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
விழுப்புரம் மண்டலம், 99441 17320.

***

மீனவர்கள் துயரத்திற்கு  நீதி வேண்டும் ….

கோவை  டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் 11 .12 .2017   அன்று   காலை 11 .௦௦ மணிக்கு மோடி- ஈபிஎஸ் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது

தலைமை உரையாற்றிய கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி “கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவனுக்கு முன்கூட்டியே தகவல் கூறியிருந்தால் ஆயிரக்கணக்கான மீனவ மக்களை காப்பாற்றி இருக்கலாம். இருக்கும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த தெரியாத முட்டாள் மந்திரிகளால் இன்று மீனவ மக்கள் பெருந்துயரம் அடைந்து உள்ளனர் .

A1 குற்றவாளிக்கு நினைவு நாள் கொண்டாட்டம், MGR – விழா , RK NAGAR  தேர்தல் என OPS -EPS  கும்பல் கூத்தாடி வருவதையும் அம்பலப்படுத்தி அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு மக்கள் அதிகாரத்தை நிறுவுவதுதான். எனவே கடைசி மீனவன் மீட்கும் வரை மக்கள் அதிகாரம் போராடும்” என பேசி முடித்தார்.

அதன் பின் பேசிய நீலகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் “டிஜிட்டல் இந்தியா என கூறும் அரசு, மீனவ மக்களுக்கு நவீன கருவிகளை கொடுக்க  வக்கற்ற நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து கொலை செய்கிறது .

இந்திய  அரசு சிறுபான்மை  மக்களுக்கு எதிரானது  என்பதுடன் இத்தாலி ராணுவ வீரர்கள் இந்திய மீனவர்களை சுட்டு கொன்றபோதும், சொந்த நாட்டிற்கு விழா கொண்டாட அனுப்பியது. இப்போது தன் சொந்த நாட்டு மீனவ மக்கள் செத்து மடியும் போது குஜராத் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டுள்ளார் மோடி, ஆளும் அரசுகள் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் காவல்துறை மூலம் அடக்கி விடலாம் என மீரட்டிவருகிறது. இயற்கை முழுவதும் சூறையாடபடுவதால்  இந்த அரசு கட்டமைப்பை மாற்றாமல் நமக்கு தீர்வு இல்லை” என கூறி முடித்தார் .

திருப்பூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பாண்டியன் தனது கண்டன உரையில் “பல கோடி செலவு செய்து ஜெயா சுற்றிவர ஹெலிகாப்டர் தளம் அமைத்த தமிழக அரசு. மீனவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஹெலிகாப்டர் தளம் அமைக்காமல் RK நகர் பிரசாரத்தில் குத்தாட்டம் ஆடுகிறது , RK நகர் தேர்தலுக்கு ராணுவம் வருது… செத்து மிதக்கும் மீனவனை மீட்க வரவில்லை.

மீனவ மக்களை பாதுகாக்க சென்ற மக்கள் அதிகார தோழர்கள் 7  பேரை   கைது செய்து சிறையில் அடைத்துள்ளது, இறந்து போன மீனவர்களின் எண்ணிக்கையை கூட குறைத்துக்கூறி ஏமாற்றிவருகிறது. இப்படி பட்ட அரசை மக்கள் படை கொண்டு மோதி வீழ்த்தவேண்டும்” என கூறிமுடித்தார்.

தோழர் ராஜன் பேசும்போது “பிழைப்புக்காக பிடிக்கும் மீன் சாகும்போது வருத்தப்படும் மீனவன் இன்று கடலில் செத்து மிதக்கிறான், பிணத்தை கூட கரை சேர்க்க முடியாமல், குமரி மாவட்டம் வந்து மக்களை சந்திக்காமல், சென்னையில் இருக்கிறார்கள் அமைச்சர்கள். இவர்களை  ஒழிக்காமல் மக்கள் பிரச்சனை ஒழியாது மீனவனை  காக்க மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் வேண்டும் , தாது மணல், கனிமவள கொள்ளை கூட்டத்தின் ஏவல் நாய்களாக அரசு செயல் படுகிறது.வாருங்கள் போராட்டத்திற்கு” என பேசி முடித்தார்.

இறுதியாக  கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா    பேசும்போது “பல கிலோமீட்டர் தூரம் 10 -15 மீனவர்கள்  சேர்த்து மீன் பிடித்து வந்து மக்களுக்கு உணவளிக்கும் மீனவன் இன்று கடலில் பிணமாக மிதக்கிறான். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் 30 நாட்டிக்கல்  மட்டும் தேடிவிட்டு ஹெலிகோபிட்டரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது   என பிணத்தையும் எடுக்காமல் திரும்பி வர்றான்.

மோடி – EPS உடல் அப்படி மிதந்தால்   தூக்காமல்  வருவார்களா? பக்கத்து மாநில அரசுகள்  மீனவர்கள் கரையில் இருப்பவர்களிடம் பேசும் வசதியுள்ள நவீன கருவிகள் கொடுத்துள்ளார்கள்.  நமது மீனவர்களை கொன்று குவிப்பதற்கு சகல வழிகளிலும் காரணமான கொலைக் குற்றவாளிகளான அரசா  மீனவ மக்களை  காப்பாத்தும்?

தனிநபர் கூட முன் எச்சரிக்கை கொடுக்கிறார் ஆனால் அரசுத்துறை அனைத்தும் ஆள தகுதி இழந்து விட்டது, மாணவி அனிதா, இசக்கிமுத்து மரணம், மருத்துவர்களின் – செவிலியர்களின் – மெரினா போராட்டம் இப்படி அனைத்து போராட்டத்தையும் தொகுத்து பார்த்தால் இனியும் இந்த அரசை  தூக்கி சுமக்காமல், நாமே கடலில் தூக்கியெறிய வேண்டும்! இந்த அரசு கட்டமைப்பை மக்கள் அதிகாரம் கொண்டு தகர்க்க வேண்டும்!

இனி தனித்தனி போராட்டங்கள் தீர்வல்ல என்பதை மக்கள் உணர்ந்து மக்கள் அதிகாரத்தில் இணைந்து போராட வாருங்கள் , மீனவர்களை மீட்க அணிதிரளுங்கள்” என்று முடித்தார்.

தோழர் மகேஷ் அவர்கள் மீனவர்களின் துயரில் பங்கு கொண்டு அவர்களின் துயரத்தை போக்க, இந்த கேடுகெட்ட அரசை மாற்ற களப்போராளிகளாக வந்த அனைவருக்கும் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

தகவல் :
மக்கள் அதிகாரம் – கோவை மண்டலம்.
தொடர்புக்கு : கோவை -95858  22157,  திருப்பூர் – 99658  86810,
உடுமலை – 97885  58526, நீலகிரி – 97875  56161.


 

  1. ஒருபோதும் மீனவார்களை மத்திய,மாநில அரசுகள் காப்பாற்றது .
    இனி தனித்தனி போராட்டங்கள் தீர்வல்ல என்பதை மக்கள் உணர்ந்து மக்கள் அதிகாரத்தில் இணைத்து போராட்ட வாருங்கள் , மீனவர்களை மீட்க அணிதிரளுக்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க