privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதிருப்பூர் : டாலர் சிட்டியை டல் சிட்டியாக்கிய மோடி அரசு !

திருப்பூர் : டாலர் சிட்டியை டல் சிட்டியாக்கிய மோடி அரசு !

-

திருப்பூர் : GST…. கதறும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் !!!  

ரு காலத்தில் தமிழகக் கிராமங்களில் வேலையிழந்து பிழைப்புத்தேடி நகரங்களை நோக்கி வருபவர்களின் முதல் தேர்வாக இருந்தது திருப்பூர் நகரம். தமிழகம் மட்டுமல்ல பல அண்டை மாநில மக்ககளையும் அரவணைத்து வாழ்வளித்து வந்த திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழிலானது, இன்று மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய நாசகாரக் கொள்கைகளால் ‘யானை புகுந்த வெண்கலக் கடையைப் போல’ சின்னா பின்னமாகிக்  கிடக்கிறது!

ஆயத்த ஆடை உற்பத்தி என்பது விவசாயி உற்பத்தி செய்யும்  பருத்தியில் தொடங்கி பஞ்சாலை, நூல்மில், பின்னலாடை, சலவை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங் ஆகியவற்றைக் கடந்து பின்; கட்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என்று பல கட்டங்களின் வழியாக முழுமையடைகிறது. இதன் ஒவ்வொரு தொழில் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்களும், சுமார் 6000 சிறு நிறுவனங்களும் திருப்பூரில் இயங்கி வருகின்றன.  இதுதவிர இவற்றின் துணைத் தொழில்களாக உள்ள போக்குவரத்து, மெக்கானிக், வயரிங், சில்லறை வர்த்தகம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் விளங்கி வருகிறது.

மேற்கண்ட தொழில் பிரிவுகள் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டுள்ளதோடு, நேரடியாக அந்நிய நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள், இதில் ஒரு சில தொழில் பிரிவுகளை மட்டுமே சொந்தமாகக் கொண்டு இயங்கும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள், மேற்கண்ட இருவகை நிறுவனங்களிடமும் மற்றும் அந்நிய நிறுவனங்களின் ஏஜென்டுகளிடமும் குறைந்த லாபத்திற்கு ஆர்டர் எடுத்து ஆடை உற்பத்தி செய்து கொடுக்கும் சிறு நிறுவனங்கள், 5, 10 மிசின்களை வைத்துக் கொண்டு தையல் வேலை மட்டுமே செய்பவர்கள் மற்றும் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தியாளர்கள் என மொத்தம் ஐந்து பிரிவுகளாக ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெற்று வருகிறது.

சிறு நிறுவனங்களின் அவல நிலைமை:

எண்ணிக்கை அளவிலும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் சிறு நிறுவனங்களே அதிக பங்கு வகிக்கின்றன. பெரு நிறுவனங்களிடம் ஆர்டர் பெறும் இந்நிறுவனங்கள் அதற்கான நூலை தனது சொந்தப் பொறுப்பில் வாங்கி, அதனை நிட்டிங், வாஷிங், சாயமேற்றுவது, பிரிண்டிங், பிளீச்சிங், ஆகியவற்றுக்காக தனிச் சிறப்பாக இயங்கும் சிறு நிறுவனங்களிடம் ஜாப் ஒர்க்காகக் கொடுத்து முடிக்கின்றனர். இதற்கான கட்டணத்தை ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் 30 நாள் கடனாக செய்து தருகின்றனர்.

பின்னர் கட்டிங், தையல், அயர்ன், பேக்கிங் வேலைகளை முடித்துக் கொடுக்கும் சிறு நிறுவனங்கள் இதற்கான கூலியைப் பெரு நிறுவனங்களிடமிருந்து வாங்கிய பிறகுதான் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு கடனை அடைக்கின்றனர். ஒரு வேளை இப்பணம் கிடைப்பதில் தாமதமானாலோ அல்லது வங்கியில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டாலோ வார வட்டிக்கு கடன் பெற்று இக்கடனை அடைத்தாக வேண்டும். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இவ்வாறுதான் பலநூறு சிறு நிறுவனங்கள் போண்டியாகிப் போனது!

ஏற்கனவே 30% லாபத்தில் ஆர்டர் கொடுத்துவந்த பெரு நிறுவனங்கள் தற்போது தொழில் போட்டியின் காரணமாக தற்போது 20 சதமாக குறைத்து விட்டன. இந்நிலையில் கட்டிட வாடகை, மின்கட்டணம், வார இறுதியில் கொடுக்க வேண்டிய கூலியாள் சம்பளம் என எப்போதும் நெருப்பின் மீது நிற்கும் நிலையில்தான் சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு சாவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு விட்ட இச்சிறு நிறுவனங்களை, சவக்குழிக்குள் தள்ளி இறுதிச்சடங்கு நடத்துவதற்கு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ஜி.எஸ்.டி.!

என்ன சொல்கிறது ஜி.எஸ்.டி?

ஜி.எஸ்.டி. என்பது சரக்கு மற்றும் சேவை வரி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஒரு பொருளின் உற்பத்தி நிலையிலிருந்து இறுதியாக நுகர்வோரைச் சென்றடையும் வரையுள்ள வர்த்தக சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியிலும் வரி விதிப்பதுதான் ஜி.எஸ்.டி-யின் வரி விதிப்பு முறை!

ஒரு ஆயத்த ஆடை, பஞ்சு கொள்முதலில் தொடங்கி இறுதியாக பேக்கிங் செய்யப்படுவது வரை சுமார் 10 நிலைகளைக் கடந்து உருவாகிறது. இதன்படி ஒவ்வொரு நிலையிலும் 5, 12, 18, 24 சதவீத வரி விதிக்கிறது ஜி.எஸ்.டி. இதற்கு முன் ‘வாட்’ வரியின்போது விலக்களிக்கப்பட்ட நிட்டிங், வாஷிங், காம்பேக்டிங், துணி ஆகியவற்றுக்கும் கூட ஜி.எஸ்.டி.யில் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. தையல் நூல், அட்டைப்பெட்டி, கம்டேப், பட்டன், லேபில், ஹேங்கர் ஆகியவற்றுக்கு ‘வாட்’ வரியைவிட 3 மடங்கு அதிகமாக ஜி.எஸ்.டி.யில் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் வரிவிதிப்பினால் கச்சாப் பொருள்களின் விலை உயர்வு, அதற்கான கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நெருக்கடி என்பதைத் தாண்டி, இதன் வரி விதிப்பு நடைமுறைகளும் சிறு நிறுவனங்களை கடும் நெருக்கடிக்குத் தள்ளுவதாக உள்ளது.

ஜி.எஸ்.டி.யின் நடைமுறையும், சிறு நிறுவனங்களின் அழிவும்

மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கொள்முதல் விவரங்களையும், அடுத்த 10 நாட்களில் விற்பனை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 30-ம் தேதிக்குள் இவற்றுக்கான வரிகளையும் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகை ஏழு நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் (input tax recovery)  வரவு வைக்கப்படும் என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்! இதனால் உள்ளீட்டு வரி வரவு வைக்கப்படும் வரை கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகளை பாதுகாப்பதுடன், தன்னிடம் வர்த்தகம் செய்பவர் வரி செலுத்திவிட்டாரா என்பதையும்  கண்காணிக்க  வேண்டியதுள்ளது. மேலும் இதற்காகவே கூடுதல் பணியாளர்களை நியமிப்பது, ஆடிட்டருக்கு மாதக் கட்டணமும் செலுத்துவது ஆகிய செலவுகளும் சிறு நிறுவனங்களின் தலையில் கூடுதல் சுமையாக ஏற்றிவிடப்படுகிறது.

ஆண்டுக்கு 20 லட்சம் வரை வர்த்தகம் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஆனால் ஜி.எஸ்.டி. பதிவு எண் இல்லாதவர்களிடம் வர்த்தகம் செய்தால் உள்ளீட்டு வரியை திரும்ப பெற முடியாது என்பதால் இத்தகைய சிறு நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் புறக்கணித்து விடுகின்றன. எனவே வேறு வழியின்றி எல்லா சிறு நிறுவனங்களும் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால் தொழிலில் நீடிக்க முடியாது.

மேலும், உள்ளீட்டு வரியை 7 நாட்களுக்குள் வரவு வைத்து விடுவோம் என்ற தனது வாக்குறுதியை அரசே காற்றில் பறக்க விட்டுவிட்டது. ஜி.எஸ்.டி. அறிமுகமாகி  ஆறு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் முதல் மாதம் செலுத்திய உள்ளீட்டு வரியே இதுநாள் வரை வரவு வைக்கப்படவில்லை. எப்போது வரும் என்ற உத்தரவாதமும் இல்லை. இதனால் பொருளை விற்பவர்கள் முன்கூட்டியே உள்ளீட்டு வரியையும் பிடித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அடுக்கடுக்கான சிக்கல்களை உருவாக்குவதன் மூலம் “நீ பிழைத்திருக்க வேண்டுமானால் எனக்கு வரி கட்டு. இல்லாவிட்டால் ஒழிந்து போ” என்று சிறு நிறுவனங்களை மிரட்டுகிறது மத்திய அரசின் ஜி.எஸ்.டி!

ஜி.எஸ்.டி.யின் விளைவுகள்

மேற்கண்ட பல்வேறு நெருக்கடிகளால் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலே கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-க்கு முன்பு ஆர்டர் கொடுத்த பெரு நிறுவனங்களும், ஏஜென்டுகளும் புதிய வரிச்சுமையை ஏற்க மறுத்து பழைய விலையிலேயே உற்பத்தி செய்து தருமாறு கோருகின்றன. முடியாத நிலையில் ஆர்டரை ரத்துசெய்து விடுகின்றன. மறுபுறமோ புதிய ஆர்டர்களில் வழக்கமான அளவுக்கும் குறைவான லாபமே கிடைப்பதால் நடைமுறை செலவுகளுக்கே ஈடுகொடுக்க முடியாமல் தொழிலையே கைவிட்டு ஓடும் நிலைக்கு சிறு நிறுவனங்கள் ஆளாகியுள்ளன.

இதற்கு முன்பு தொழில் போட்டியின் காரணமாக லாபம் குறைவாக கிடைத்தாலும், மத்திய அரசு தரும் ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புத் தொகையால்(duty draw back) ஓரளவு இழப்பை ஈடுகட்ட முடிந்தது. முன்பு 7% ஆக இருந்த இத்தொகையையும் ஜி.எஸ்.டி-க்குப் பின் 2% ஆக குறைத்து விட்டது மோடி அரசு.

மாதத்தில் பாதிநாள் வேலை இல்லை. வேலை இருந்தாலும் உரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. இதனால் திருப்பூரில் 60%  சிறுதொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டது. ஜி.எஸ்.டி. -க்குப்பின் அக்டோபரில் மட்டும் 1400கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி சரிந்துவிட்டது.  திருப்பூரின் வர்த்தக நிறுவனங்களுக்காகவே காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கிவந்த வங்கிகள் எல்லாம் காலை 10  முதல் மாலை 4 மணி வரை என்ற வழக்கமான முறைக்குத் திரும்பி விட்டன. இவ்வாறு ‘டாலர் சிட்டி’யான திருப்பூர் இன்று ‘டல்’ சிட்டியாகி விட்டது! ஆனால் மோடி கும்பலோ, “ஜி.எஸ்.டி. -யால் விலைவாசி குறையும்” ‘ஏற்றுமதி பெருகும்” என்று மக்களை மோசடி செய்து வருகிறது!

கார்ப்பரேட் சேவைக்கே ஜி.எஸ்.டி!

1984 -க்கு முன்பு வெறும் 4 கோடியாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதியை இன்று 25,000 கோடியாக உயர்ந்து நிற்பதற்கு ஆணிவேராக செயல்பட்ட தொழிலாளர்களும், அவர்களுக்கு வேலைவாய்ப்பளித்த சிறு நிறுவனங்களும் இன்று நெருக்கடியில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருப்பது திடீரென ஜி.எஸ்.டி.யால் மட்டும் உருவானதல்ல. மத்திய ஆட்சியாளர்களின் தொடர் நடவடிக்கைகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை!

1984 வரை எளிய வரிவிதிப்பு, நேரடி பணப் பரிமாற்றம் என ஆயத்த ஆடை உற்பத்தி சுமூகமாகவே இருந்து வந்தது. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முக்கியத்துவம் என்று திசை மாற்றி இழுத்துச் சென்றது மத்திய அரசு. ஆலைகளை நவீனப்படுத்துவதற்கு கடனுதவி, இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கு வரிச்சலுகை கொடுத்து ஊக்கப்படுத்தியது மத்திய அரசு! இவ்வாறு உள்நாட்டு சந்தைக்கான உற்பத்தியில் இருந்தவர்களை, கார்ப்பரேட் திமிங்கலங்களின் பிடியிலுள்ள உலகச் சந்தையோடு திருப்பூர் ஆயத்த ஆடைத்தொழிலை கோர்த்துவிட்டது மத்திய அரசு.

இதன் பிறகு 2007 -ல் கொண்டுவரப்பட்ட ‘வாட்’ வரிவிதிப்பு மூலம் அதுவரை இருந்த நேரடிப் பணபரிமாற்றத்தை வங்கிப் பரிமாற்றத்திற்குள் கொண்டு வந்தார்கள். அடுத்து மோடியின் ‘பணமதிப்பிழப்பு’ நடவடிக்கையோ வங்கிப் பரிமாற்றத்திற்கு மாறுவதைக் கட்டாயமாக்கி விட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவ்வாறு படிப்படியாக திட்டமிட்டு, சுற்றி வளைத்து, தான் விரித்த வலைக்குள் இரையை வீழ்த்தும் திறமையான வேட்டைக்காரனைப் போல மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

வலையில் விழுந்த இரையை கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தாக்குவதுதான் மோடி அரசின் நோக்கம். வேலையிழந்த தொழிலாளர்களும், சிறு நிறுவனங்களும் பெரும் நிறுவனங்களின் அற்பக் கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாறி விடுங்கள் என்கிறார் மோடி.

ஏன் மாற வேண்டும்? ஆயத்த ஆடை தொழிலில் நமக்குப் போட்டியாக உள்ள பங்களாதேஷ் நம்மை விடக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வருகிறார்கள். நாம் பங்களாதேஷை விட மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்தால்தான் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அப்போதுதான் அவர்கள் இந்தியாவுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். நம் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிக்கும். நாடு வல்லரசாக முடியும், எனவே கொத்தடிமைகளாக மாறி நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள், என்கிறார் மோடி!

ஆயத்த ஆடைத் தொழில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து தொழில்களையும், இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நலனுக்காக தாரை வார்ப்பதையே மோடி அரசு தீவிரக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதற்கேற்ப ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளை, வரி விதிப்பு முறைகளை ஒழித்துக் கட்டிவிட்டு கார்ப்பரேட் நலனுக்கு சாதகமான வகையில் மறு கட்டமைப்பு செய்து வருகிறது மோடி அரசு! அதன் ஒரு கண்ணிதான் ஜி.எஸ்.டி. என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஜி.எஸ்.டி எதிர்ப்பு என ஒற்றைக் கோரிக்கையோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கு எதிராக மாறிவரும் அரசுக் கட்டமைப்புக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர். தொடர்புக்கு : 99658  86810.