Saturday, June 15, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !

ஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !

-

குமரியில் கடந்த 29-ம் தேதி வீசிய ஒக்கிப் புயல் அம்மாவட்டத்தையே உருக்குலைத்தது. தூத்தூர் மற்றும் முட்டம் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின. கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரை திரும்பவில்லை. இச்சொல்லொணாத் துயரம் அம்மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடல் விமானத்தில் வந்து இறங்கி பவுசு காட்டினார் மோடி. ஆனால் துயரில் ஆழ்ந்திருக்கும் மீனவர்களைப் பார்க்க எந்த வாகனத்திலும் வரமுடியாதாம்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் தீவிரமாக எடுக்கவில்லை. கடலோரக் காவற்படையோ கண்துடைப்பிற்கு வெறும் 50 கடல்மைல் தூரம் வரை சென்று விட்டு யாரையும் காணவில்லை என்று திரும்பி விட்டது. இந்நிலையில் மீனவர்களே கடலில் இறங்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஒக்கிப் புயல் தாக்கி 19 நாட்கள் முடிந்த நிலையில், இப்போது தான் பிரதமர் மோடிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றிப் பார்க்க ‘மனம்’ வந்திருக்கிறது. இன்று (19.12.2017) கன்னியாகுமரியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மோடி வருகிறார். மோடியின் இந்த வருகையை ஒட்டி கன்னியாகுமரி முழுவதும் போலீசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குமரி அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அமைச்சர் பொன்னார் தலைமையில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், எஸ்.பி. துரை மற்றும் வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்புபடை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் புயல் வரும் முன்னர் மக்களையும், மீனவர்களையும் காக்க எவ்வித ஆலோசனைக் கூட்டத்தையும் முன்கூட்டி நடத்தவில்லை.

இதற்கிடையில், கன்னியாகுமரி விடுதிகளில் தங்கியுள்ள மக்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், இன்றும் நாளையும் ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் வாடகைக்கு விடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒக்கி புயலின் முன்னெச்சரிக்கையாக “மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை” என்பதை மட்டும் இந்த அரசு செய்யவில்லை.

இதற்கு முன்னர் கன்னியாகுமரியின் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் “கடைசி மீனவனை மீட்கும் வரை ஓயமாட்டோம்” என்று பத்திரிக்கைக்களுக்கு பேட்டியளிப்பதோடு தனது கடமை நாடகத்தை முடித்துக் கொண்டார். துணை முதல்வர் ஓபிஎஸ் மீனவப் பகுதிகளுக்குச் செல்லாமல் கன்னியாகுமரி ஊர்ப் பகுதியில் மட்டும் பார்வையிட்டு விட்டுச் சென்றுவிட்டார்.

கவர்னர் புரோகித், பெயருக்கேற்றவாரு கன்னியாகுமரி கோவில்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தனது உல்லாசப் பயணத்தை முடித்துக் கொண்டார். பொன் ராதாகிருஷ்ணனோ அவ்வளவு துயர சூழலிலும், நாகர்கோவில் பார்த்தாஸ் டெக்ஸ்டைல் ஜவுளிக் கடையை திறந்து வைக்கச் சென்று விட்டார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்களைச் சந்திக்கிறேன் என்ற பெயரில் அவர்களது யதார்த்தமான கேள்விகளுக்கு திமிராக பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் என்ற வகையில் எடப்பாடி பழனிச்சாமி, கன்னியாகுமரிக்கு வந்து அருகில் இருந்து மீட்புப் பணிகளை முடுக்கி விடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக வேறு வழியின்றி எடப்பாடி குமரிக்குச் சென்றார். அவரும் எந்த மீனவ கிராமத்திற்கும் செல்லவில்லை.
சம்பிரதாயத்துக்கு புனித யூதா கல்லூரியில் சர்ச் பாதிரியார்கள் மற்றும் சில மீனவ மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சில அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என பறந்து விட்டார் எடப்பாடி.

மோடியின் வருகை குறித்து  பத்திரிக்கைகளுக்கு  பேட்டியளித்த பொன்னார், “மீனவ கிராமங்களுக்கு பிரதமர் நேரடியாக வந்து பார்வையிட வேண்டும் என்று மீனவர்கள்  விரும்புகின்றனர். பிரதமருக்கும் நேரடியாக மீனவர்களை சந்திக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் மீனவ கிராமங்களில் பிரதமர் வரும் ராணுவ ஹெலிகாப்டர் இறங்கும் அளவிற்கு எந்த கிராமமும்  இல்லை என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு மோடி, நேரடியாக செல்ல முடியாத  சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மீனவர்கள் மற்றும் விவசாயிகளை அவர்  கன்னியாகுமரியில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரதமர், 150 மீனவ பிரதிநிதிகள் மற்றும் 150 விவசாய பிரதிநிதிகளை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிவார்” என்றும் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட வர முடியாதாம்.
புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க போதுமான கடற்படையும் விமானப்படையும் உபயோகிக்கப்படாத நிலையில் குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடல் விமானத்தில் வந்து இறங்கி பவுசு காட்டினார் மோடி. ஆனால் துயரில் ஆழ்ந்திருக்கும் மீனவர்களைப் பார்க்க எந்த வாகனத்திலும் வரமுடியாதாம்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் அன்று A1 -ன் கார் டயர் முன்னால் வீழ்ந்து எழுந்த எடப்பாடி + அதிகாரவர்க்கக் கும்பல், நாளை மோடியை வரவேற்க ஹெலிபேட் முன்னால் வீழ்ந்து கும்பிடப் போகிறது. அது மட்டும் தான் வித்தியாசம்.

மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? டெல்டா விவசாயிகள் முதல் கன்னியாகுமரி மீனவர்கள் துயருற்று நின்ற தமிழர்களை முதுகில் குத்திய மோடியை வரவேற்க வரிசை கட்டி நிற்கப் போகிறோமா? அல்லது தமிழகத்தையே ஒழித்துக்கட்ட வரிந்து கட்டி நிற்கும் மோடி அரசை எதிர்த்து நிற்கப் போகிறோமா?

 

 

  1. ??????????????கோழைகளையும் , கோமாலிகளை யும், கிருமினல்களையும் வைத்து ஆட்சி நடத்தும் ஒரு நாட்டில் மக்க ள் எப்படி நிம்மதியாய் வாழமுடியும். ??????????????????????????????மக்கள் அதிகாரமெ தீர்வு ????????????????

  2. திருந்தாத மக்கள் இருக்கற வரைக்கும் நாம் அனைவரும் அடிமைகள் தான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க