privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅன்று சென்னை, கடலூர் ! இன்று குமரி ! மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு !

அன்று சென்னை, கடலூர் ! இன்று குமரி ! மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு !

-

கனமழை பெருவெள்ளம்! – அன்று சென்னை, கடலூர்! இன்று குமரி! மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு! –  புதுவை பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம்!

டந்த நவ -30 அன்று குமரியைப் புரட்டிப் போட்ட ஒக்கி புயலைப் பற்றி அரசின் முன்னறிவிப்பு இல்லாததால், 3000 -த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலில் சிக்கி காணாமல் போயினர். குமரி மாவட்ட மீனவ மக்கள் காணாமல் போனவர்களை மீட்கக் கோரி தொடர்ந்து போராடியும் எருமைத் தோல் எடப்பாடி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இதனால் இன்று வரை கரை சேரா மீனவர்கள் 500 -க்கும் மேல். புயலின் நீரோட்டத்தால், பல இடங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் ஒருபுறம், மீனவன் செத்து கடலில் மிதக்கும் கோரம் மறுபுறம். செத்த மீனவனைக் கூட கரை சேர்க்காத டெட்பாடி அரசு ஆர்.கே. நகரிலும், ‘வளர்ச்சி நாயகன்’ மோடி குஜராத்திலும் கூத்தடிக்கின்றனர்.

மக்களின் தொடர் போராட்டங்கள் ஒரு புறமிருக்க, மீனவர்கள் செத்து மிதப்பது, தனது ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்திற்கு இடைஞ்சலாகி விடக்கூடாது என்பதற்காகவும், இதையே பயன்படுத்தி ஓட்டு பொறுக்கி விடலாம் என்ற எண்ணத்திலும், இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை எனவும் வெத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எடப்பாடி. குஜராத் கொலைகாரன் மோடியோ, கடலில் பறக்கும் விமானத்தில் ஏறி ‘வளர்ச்சி’ என்று குதூகலிக்கிறார்.

உண்மையில் மீனவர்களை புயலில் சிக்க வைத்தது மட்டுமல்லாமல், கடலிலேயே கொன்றது அரசு தான். ஏனெனில், தங்களது கார்ப்பரேட் கடல் வணிகத்திற்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் மீனவர்கள். இலங்கைக் கடற் படையைக் கொண்டு ரவுடித்தனம் செய்தும், இந்தியக் கடலோரக் காவல் படையை வைத்து சுட்டும் விரட்ட முடியாத மீனவர்களை கடலிலிருந்து அப்புறப்படுத்த ஒக்கி புயலைப் பயன்படுத்திக் கொண்டது கார்ப்பரேட் அடிமையான இந்திய அரசும், மோடியின் அடிமையான எடப்பாடி அரசும்.

எனவே, புயல் பற்றிய திசை வழி தெரியாததாலோ, எதிர்பார்க்காத கடல் சீற்றத்தாலோ மீனவர்கள் செத்து மிதக்கவில்லை. புயல் முன்னறிவிப்பு செய்யாதது, புயல் கரையைக் கடந்தவுடன் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவர்களைத் தேடாதது, இலங்கை மீனவனுக்கும், ஆந்திர மீனவனுக்கும் வழங்கப்பட்ட சாட்டிலைட் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்களுக்கு அனுமதி மறுத்தது போன்ற நடவடிக்கைகள் மூலம், திட்டமிட்டே அரசுதான் மீனவர்களைக் கொன்று கடலில் இருந்து அப்புறப்படுத்துகிறது.

காணாமல் போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் மறுவாழ்விற்கான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும். மீனவர்களின் அருகாமை நகரப் பகுதியான அரியாங்குப்பம் மார்க்கெட் அருகில் 13.12.2017 அன்று மாலை 05.30 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை, புதுச்சேரி புஜதொமு பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் பழனிச்சாமி, சேதராப்பட்டு தொழிலாளர் கூட்டமைப்புத் துணைத் தலைவர் தோழர் மாதேஷ்வரன், செயலாளர் தோழர் ரமேஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா மற்றும் புஜதொமு செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். உரைகளின் இடையே வட்டாரக் கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்களைப் பாடினர்.

தோழர் செல்லக்கண்ணு தனது தலைமையுரையில், “இந்த அரசு உழைக்கும் மக்களுக்கானது இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறது. டாடா முதலாளியின் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் நுழைந்த போது, அதில் தங்கியிருந்த மேல்தட்டு மக்களைக் காப்பது, டாடாவின் சொத்தைப் பாதுகாப்பது என மத்திய அரசும், மாநில அரசும் மாய்ந்து மாய்ந்து வேலை பார்த்தனர். உடனடியாக இராணுவத்தை அனுப்பினர். ஆனால், சாதாரண மீனவன் பாதிக்கும் போது, அவன் செத்து மிதக்கும் போது கூட கவலைப்படுவதில்லை” என அரசின் மக்கள் விரோதத் தன்மையை விளக்கிப் பேசினார்.

புமாஇமு தோழர் பழனிச்சாமி பேசும் போது, “இந்த அரசு மீனவனுக்கு மட்டுமல்ல, மாணவனுக்கும் எதிரி. நீட் என்ற பெயரில் அனிதாக்களை படுகொலை செய்தது இந்த அரசு தான். நவோதயா பள்ளிகள் திறந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் புகுத்துவது அதன் மூலம், தமிழ் மொழியை அழிப்பது என்ற தனது இந்தித் திணிப்பை கொள்கையை நடத்த முனைகிறது. மறுபுறம், காசுள்ளவனுக்குக் கல்வி, குலக்கல்வி என புதிய மனுதர்மத்தைத் திணிக்க முயல்கிறது. எனவே, மீனவனுக்கு மட்டுமல்ல மாணவனுக்கும் எதிரான இந்த அரசைத் தூக்கி எறிவது தான் நமது வேலையாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தோழர் ரமேஷ், “தொழிற்சங்கம் தொழிலாளர் பிரச்சினையை மட்டும் பார்க்காமல் சமூகத்தின் பிரச்சினைகளையும் பார்த்து அதற்காகவும் போராட வேண்டும். அப்படிப் போராடும் புரட்சிகர சங்கத்திற்கும், போராட்டங்களுக்கும் எப்போதும் துணையாக இருப்போம்” என்றார்.

தோழர் மாதேஸ்வரன் தனது உரையில், “மீனவர் பிரச்சினை என்பது தனியான அந்த மக்களுக்கான பிரச்சினை அல்ல, மற்ற மக்கள் பிரச்சினைகளுடன் இணைந்தது தான். அந்த இணைப்பை சாத்தியமாக்குவது வர்க்க ஒற்றுமையே. எனவே, அந்த ஒற்றுமையை உருவாக்குவோம்” என்றார்.

பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தோழர் தீனா, “கடலில் தொழில் செய்யும் மீனவருக்கு மட்டும் பிரச்சினை இல்லை. கரையில் வேலை செய்பவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு பிரச்சினை என்று போராடினால் முதலில் வருவது போலிசு தான். ஏற்கனவே, இந்தப் பகுதியில் உள்ள வீராம்பட்டிணம் கடற்கரையில் கடலோரக் காவல்படை தளம் அமைக்கப்படுவதை எதிர்த்துப் போராடும் போது வந்து மிரட்டியது போலிசு தான். அதே போல் தான் குமரியில் தங்களது குடும்பத்தினர் காணாமல் போனதைக் கண்டுபிடிக்கச் சொல்லிப் போராடினால், அதற்கு நடவடிக்கை எடுக்காமல், மிரட்டுகிறது. அதையும் தாண்டிப் போராடினால் வழக்குப் போடுகிறது. இது தான் போலிசின் லட்சணம். எனவே, ஒவ்வொரு போராட்டத்திலும், மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் போது தான் வெற்றி பெற முடியும்” என்றார்.

இறுதியாகப் பேசிய தோழர் லோகநாதன், “ஒக்கி புயலில் சிக்கி மீனவர்கள் காணாமல் போனார்கள், செத்து கடலில் மிதக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது. ஆனால், ஒக்கி புயலில் சிக்க வைத்து மீனவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு கொன்றது அரசு தான். மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. பெரிய பெரிய கார்ப்பரேட் கப்பல்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க வேண்டும் என்பதும், மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும் தான் அரசின் கொள்கை. அதை சத்தமில்லாமல் செய்து வருகின்றன மத்திய, மாநில அரசுகள். இலங்கை கடற்படை தாக்குவதும், இந்திய கடலோரக் காவல்படை சுடுவதற்கும் இது தான் அடிப்படை காரணம்.

இப்படி கடலிலிருந்து துரத்தப்படும் மீனவர்கள் பிழைப்புத் தேடி நகரங்களுக்குத் தான் வர வேண்டும். ஏற்கனவே நகரத்தில் இருக்கும் சிறு குறு தொழில்கள் முதல் சில்லரை வணிகம் வரை அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் அபகரித்துக் கொண்டு விட்டனர். அதனால், தொழிற்சாலை களில் தான் வேலைக்கு வர வேண்டும்.

ஏற்கனவே ரிசர்வ் பட்டாளமாக தாங்கள் செய்து வந்த தொழிலிலிருந்து விரட்டப்பட்ட விவசாயிகள், நெசவாளர்கள், சிறு – குறு தொழிற்பட்டறைத் தொழிலாளர்கள் வேலை யின்றி இருப்பவர்களுடன் மீனவர்களும் சேருவார்கள். ஏற்கனவே வேலையின்றி இருப்பவர்களைக் காட்டி குறைந்த கூலிக்கு சுரண்டும் முதலாளிகள், மீனவர்களையும் காட்டி அதனினும் குறைந்த கூலிக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று மேலும் மேலும் சுரண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

ஒருபுறம் கடல் வணிகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, மீனவர்களை கடலிலிருந்து அகற்றுவதன் மூலம் கடலையே பட்டா போட்டுக் கொடுக்கும் அரசு, மறுபுறம் அவர்களை கரையில், உள்ள தொழிலாளர்களுக்கு வேலையில்லா நிலைமைகளைக் காட்டி இன்னும் குறைந்த கூலிக்கு சுரண்டுவதற்கான ஏற்பாடும் முதலாளிகளுக்கு செய்து தருகிறது அரசு.
எனவே, இந்த அரசை நம்பி பலனில்லை. இந்த அரசின் கொள்கைகள் தான் அன்றாடம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களைக் கொன்று வருகிறது. அந்தக் கொள்கைகளின் விளைவாகத் தான் மீனவர்களும் கடலில் செத்து மிதக்கிறார்கள். எனவே, நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனில் அரசைத் தூக்கி எறியும் போராட்டத்தைக் கட்டியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

நிகழ்ச்சியில், மீனவர்களின் துயரங்களைச் சித்தரிக்கும் வகையிலும், விவசாயிகளின் பாதிப்புக்களை விவரிக்கும் வகையிலும், அரசைத் தூக்கி எறிய வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர்களும், பகுதி மக்களும் இறுதிவரை நின்று கேட்டுச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம், மீனவர்களது துயரத்தை விவரிப்பது என்ற அடிப்படையில் அல்லாமல், அந்தத் துயரத்திற்கான காரணம் என்ன என்பதை அந்த மக்கள் மத்தியில் பதிவு செய்யும் வகையில் இருந்தது..

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 9597789801
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – 8124412013
புதுச்சேரி.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க