Monday, July 26, 2021
முகப்பு அரசியல் ஊடகம் ஒக்கி புயல்: தமிழ் இந்து நாளிதழின் கருத்து “ரேப்” !

ஒக்கி புயல்: தமிழ் இந்து நாளிதழின் கருத்து “ரேப்” !

-

“திசை திரும்புகிறதா குமரி மீனவர்கள் போராட்டம்?” – இது டிசம்பர் 15-ம் தேதி தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தியின் தலைப்பு. போராட்டம் திசை திரும்புவதை ஆராய்வது அல்ல… திசை திருப்ப வேண்டும் என்பதே இந்த செய்தியின் நோக்கம்.

குழித்துறை ரயில் மறியல் ஊர்வலத்தில் வந்த பாதிரியார்கள்! இதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை!

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தென்முனை கடலோரத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீனவர் போராட்டங்களை கத்தோலிக்க பாதிரியார்கள் கட்டுப்படுத்துகிறாரக்ள்; வழிநடத்துகிறார்கள் என்பது இந்த செய்தியின் சாரம்சம். ஆம்… பாதிரியார்களின் தலைமையில்தான் குழித்துறை ரயில் மறியல் நடந்தது. அவர்கள்தான் முன்னே நின்றார்கள். கடலோர மீனவ கிராமங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நிறைந்தவை. ஆகவே இந்த ஒக்கி புயல் பாதிப்புகளின்போதும் சர்ச் முன்னிற்கிறது. முன் நிற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியுமில்லை. இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவை இல்லை.

ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாத நிலையில், மீட்க வராத அரசுக்கு எதிராக பெரும் கொதிப்பு கடற்கரையோரம் முழுக்க பரவியுள்ளது. இது செயல்வடிவம் பெற்று பெரும் போராட்டங்களாக வெடிக்காமல் மெழுகுவர்த்தி ஊர்வலங்களாக அடங்குவதற்கு காரணம் பாதிரிமார்கள். இதன் பொருட்டு தமிழ் இந்துவும், அந்தக் கட்டுரையாளரின் மூளையில் இருக்கும் சமஸ்கிருத இந்துவும் நியாயமாக பாதிரிமார்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஆனால் தமிழ் இந்துவோ இந்த பாதிரியார்களின் மத அடையாளத்தை மட்டும் பூதாகரப்படுத்தி, ஒக்கி புயலின் பாதிப்புகள், மீனவர்களின் துன்பங்களை இரண்டாம்பட்சமாக்கி குளிர்காய பார்க்கிறது. ‘போராட்டத்தை பாதிரியார்கள் தூண்டிவிடுகிறார்கள்’ என்பது பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். குழுவினர் முதல் நாளில் இருந்து பரப்பி வரும் வதந்தி. அந்த வதந்தியை அப்படியே வாந்தி எடுத்து அதை ஒரு செய்தி என்று அரை பக்கத்துக்கு அனைத்துப் பதிப்புகளிலும் (ஆல் எடிசன்) எழுதுகிறது தமிழ் இந்து.

காவி ரவுடி அர்ஜுன் சம்பத்தின் அய்யர் ரவுடி வெர்சனான பால கவுதமனை சமூக ஆர்வலராக்கிய தமிழ் தி இந்து!

இது எதன் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பது முக்கியமானது. ‘புயல் நிவாரண மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு எந்திரத்தை முடக்கவும், மீனவ சமுதாயத்துக்குத் துரோகம் இழைக்கும் முயற்சியும் போராட்டத்தின் பின்னணியில் இருந்ததாக’ சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு வலம் வந்ததாம். என்னே ஒரு இதழியல் தர்மம்?

‘புயல் நிவாரண பணிகளில் அரசு எதையும் புடுங்கவில்லை. மக்களை அனாதைகளைப் போல கைவிட்டுவிட்டது. நடுக்கடலில் மீனவர்கள் சாகிறார்கள்’ என்பதுதான் குற்றச்சாட்டே. இவர்கள் அப்படியே மொத்தமாக திருப்பிப் போடுகிறார்கள். ’சமூக ஊடகங்களில் வலம் வரும் குற்றச்சாட்டு’ என்று கூறி, கிறிஸ்தவ பாதிரிகள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் பால கவுதமன் என்பவர். இப்படியொரு குற்றச்சாட்டை நாம் தமிழ் சமூக ஊடகங்களில் காணவில்லை. ஒருவேளை “ஸமூஹ” ஊடகங்களில் வந்திருக்கலாம்.

இந்த பால கவுதமனை, ’சென்னையில் வசிக்கும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று அறிமுகப்படுத்துகிறது தமிழ் இந்து.  பால கவுதமன் ஓர் அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர். நாகர்கோயிலை சொந்த ஊராக  கொண்ட இவரை தந்தி டி.வி.யும், இன்னபிற தொலைக்காட்சிகளும் அவ்வப்போது ‘சமூக ஆர்வலர்’ என்றும், சில நேரங்களில் பா.ஜ.க. ஆதரவாளர் என்றும் விவாதங்களில் பயன்படுத்துவார்கள். தமிழ் இந்து இவரை, ‘சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று கௌவரப்படுத்தி இருக்கிறது. இவர் செய்யும் ஆராய்ச்சிகளை தமிழ் ஆர்.எஸ்.எஸ். தளமானwww.tamilhindu.com -வில் கட்டுரைகளாக படிக்கலாம். அது மட்டுமல்ல… 2013-ம் ஆண்டு இவருக்கு ‘இந்து தர்ம சேவா ரத்னா’ என்று விருது வழங்கி கௌரவித்திருக்கிறார் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன்.

கொலை கார சங்கராச்சாரியின் கையால் விருது வாங்கும் பால கவுதமன்!

பால.கௌதமனுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கும்போது எதற்கு அவரை ‘சமூகவியல் ஆராய்ச்சியாளர்’ என்று அறிமுகப்படுத்துகிறது தமிழ் இந்து? அப்போதுதானே… இதை பொதுவான கருத்தாக கட்டமைக்க முடியும்? அப்படி இந்த ஆய்வாளர் என்ன அரிய கருத்தை சொல்லியிருக்கிறார்?

’’மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வந்து, மீனவப் பிரதிநிதிகளை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். கேரள கடல் பகுதியில் இருந்து இந்திய கடற்படையினர் மீனவர்களை வேகமாக மீட்கத் தொடங்கினர். ஆனால், 5 நாட்களுக்குப் பின்னர் மீனவர் பிரச்சினையை திசைதிருப்ப சூழ்ச்சி நடந்தது. இதில் சின்னத்துறை பாதிரியார் ஷபின், பூத்துறை பாதிரியார் ஆன்றோ ஜோரிஷ் ஆகியோர் தீவிரம் காட்டினர்.’’ என்று போகிறது பால கவுதமனின் ‘கருத்து’.

இந்திய கடற்படையினர் எவ்வளவு வேகமாக மீட்டனர், எத்தனை பேரை மீட்டனர் என்று தமிழ் இந்து நிருபரும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. நிர்மலா சீத்தாராமன் எவ்வளவு தெனாவட்டாக பேசினார் என்பது குறித்து தமிழ் இந்துவுக்கு கவலையும் இல்லை.

’’முதல்வர் பழனிசாமி குமரி மாவட்டம் வந்தார். மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.’’ என்று பால.கௌதமன் சொல்வதாக எழுதியுள்ளது தமிழ் இந்து. ஆனால் எடப்பாடி பாதிக்கப்பட்ட ஒரு மீனவ கிராமத்துக்குக் கூட வரவில்லை; மீனவர்களை சந்திக்கவில்லை. அது மட்டுமல்ல… எடப்பாடி வந்து சென்ற பிறகும் போராட்டங்கள் வெகு தீவிரமாக அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றன.

வெளிநாட்டு இந்துமதவெறி என்ஆர்ஐக்களிடம் பணம் சுருட்ட பால கவுதமன் நடத்தும் வேத ஆராய்ச்சி மையம்

உண்மைக்கு முற்றிலும் மாறான, வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை பொய்களையும் அவதூறுகளையும் உள்ளடக்கிய ஒரு ஆர்.எஸ்.எஸ். வெறியனை சமூகவியல் ஆராய்ச்சியாளன் என்று அறிமுகப்படுத்தும் உள்நோக்கம் கொண்ட இந்த செய்தியை தமிழ் இந்து ஆசிரியர் குழு தற்செயலாக வெளியிட்டது என்றோ, ‘சிக்கலின் மறுபக்கம்’ என்ற அளவில் இதுவும் ஒரு செய்தியாக வெளியிடப்பட்டது என்றோ சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. இது பத்திரிகை அறத்துக்கு புறம்பானது மட்டுமல்ல…  பொய் செய்தியை வெளியிட்டு பகையுணர்ச்சியை வளர்க்கும் அபாயகரமான நடவடிக்கை.

Vedic science research centre என்பது பால கௌதமன் இயக்குனராக உள்ள, இந்து மதவெறியை பரப்பும் ஒரு நிறுவனம். இதன் இணையதளத்தில் தமிழ் இந்துவில் வெளியான செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் முகப்புப் படமாக வைத்துள்ளனர். இன்னும் பல இந்துத்துவ குழுமங்களில் மிகுந்த உற்சாகத்துடன் இந்த செய்தி பகிரப்பட்டு வருகிறது. ஆகவே தமிழ் இந்துவின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

‘நாங்க தினத்தந்தி போல ‘கற்பழிப்பு’ செய்திகளை வழங்குவதில்லை’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறது தமிழ் இந்து. மூளைக்குள் நிகழ்த்தப்படும் இந்த ரேப் “கற்பழிப்பு” வகையில் வராதோ?

__________

பின்குறிப்பு:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தையும் திருச்சபை தூண்டிவிடும் கிறித்தவர்களின் போராட்டமாகவே சித்தரித்தனர் சங்கபரிவாரத்தினர். அப்போராட்டத்தில் இடிந்தகரை மீனவர்கள் மட்டுமல்ல, கூடங்குளம் இந்து நாடார்களும் பங்கேற்றார்கள். இந்த ஹிந்துக்களுக்கு ஆதரவாகப் போராடுவதற்கு சங்கராச்சாரி  போயிருக்கலாமே. அல்லது கிறித்தவ பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படும் ஹிந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தர்ம சன்சாத் பார்ட்டிகளையோ பாபா ராம்தேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி போன்ற ஜி க்களையோ அனுப்பி வைக்கலாமே!

  • கீரன்

செய்தி ஆதாரம் :


 

  1. இந்து பத்திரிக்கை இந்துக்(வெறியர்)களுக்குத் தான் சேவை செய்யும்.இதை இந்து என்று சொல்லிக்கொள்கிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க