privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதேசிய முதலாளிகளை ஒழிக்கும் மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா !

தேசிய முதலாளிகளை ஒழிக்கும் மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா !

-

தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதாகக் கூறிக்கொண்டு 2016 -ம் ஆண்டு ஜனவரி மாதம் “ஸ்டார்ட்அப் இந்தியா” திட்டத்தை மோடி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

வரி விலக்குகள், காப்புரிமை சீர்திருத்தங்கள் மற்றும் காப்பீட்டுத்திட்டங்கள் என ஒருவகையில் புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக அதன் திட்டங்கள் பீற்றப்பட்டன. அதனால் தொடக்கத்தில் முதலீட்டாளர்களிடமிருந்தும் நிறுவனர்களிடமிருந்தும் மோடிக்கு பாராட்டுகள் செயற்கையாக வரவழைக்கப்பட்டு குவிந்தன. நடைமுறை பிரச்சினைகளைக் குறைக்க “ஸ்டார்ட்அப் இந்தியா மையம்” (Startup India Hub) ஒன்றும் ஆரவாரத்துடன் உருவாக்கப்பட்டது.

ஆயினும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய தொழில்முனைவோருக்கான சூழல் அமைப்பாக பெருங்கூச்சலுடன் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் ஆண்டுகள் இரண்டு முடிந்த பின்னரும் பெரும் தோல்விக்கு தான் சென்று கொண்டிருக்கிறது.

சான்றாக, இத்திட்டத்தினை தொடங்கிய கையோடு அதற்கு முதல் நான்காண்டுக்கான நிதியாதாரமாக 10,000 கோடி ரூபாயை(1.6 பில்லியன் டாலர்) மைய அரசு ஒதுக்கியது. இந்த பணமானது இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) மூலம் வழங்கப்படுகிறது.

திட்டத்தில் ஒருபாதி காலம் கடந்துவிட்ட பின்னரும் வெறும் 10 விழுக்காடு அளவே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு 605.7 கோடி ரூபாயும் மாற்று முதலீட்டு நிதியாக 90.62 கோடி ரூபாயும் மட்டுமே வழங்கப்பட்டிருகிறது. அதில் 337.02 கோடி ரூபாய் மட்டுமே வெறுமனே 75 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருப்பதாக டிசம்பர் 18 -ம் தேதி அன்று மக்களவையில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த மைய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சி.ஏ.சௌத்ரி கூறினார்.

இது ஒருபுறமிருக்க மைய அரசின் “தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத்துறை” யினால் இதுவரைக்கும் 5,350 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,079 நிறுவனங்களும், கர்நாடகாவில் 853 நிறுவனங்களும் டெல்லியில் 748 நிறுவனங்களும் அடங்கும்.

ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களில் வெறும் 74 நிறுவனங்கள் மட்டுமே வரித்தள்ளுபடி சலுகையைப் பெற்றுள்ளன. ஆனால் “ஸ்டார்ட்அப் இந்தியா மைய”த்தில் இதுவரைக்கும் 15,000 நிறுவனங்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 75,000 கேள்விகளுக்கு ஸ்டார்ட்அப் இந்தியா மையம் பதில் கூறியுள்ளது. இதுவரை 1,89,000 நபர்கள் தொழில் முனைவோர்களுக்கான படிப்புக்களைப் பயன்படுத்தியுள்ளதாக சௌத்ரி கூறினார்.

கிட்டத்தட்ட 33,000 -க்கும் அதிகமான தொழில்முனைவோர்களிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றும் அரசின் இத்திட்டத்தில் சொற்பமானவர்களே பயனடைந்துள்ளதாகக் கூறுகிறது.

“பெரிதாக சிந்தனை செய். விரைவாக சிந்தனை செய். முன்னோக்கி சிந்தனை செய். சிந்தனை தனிநபர்களின் ஏகபோகம் அல்ல” – இவை “ஸ்டார்ட்அப் இந்தியா” இணையத்தளத்தில் பொறிக்கப்பட்டுள்ள திருபாய் அம்பானி திருவாய் மலர்ந்த தத்துவம். அதன் முதன் பக்கத்தில் “ஸ்டார்ட்அப் நவ்” என்ற பொத்தானை அழுத்தினால் போதும். அப்புறம் நீங்களும் நானும் தொழில்முனைவோர் என்கிறது மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா.

கணக்கிலடங்கா தொழில்முனைவோர்களை அழித்தொழித்துவிட்டு தான் ஒரு அம்பானி பிறந்தார் என்றால் அந்த ஒரு தரகு முதலாளியை ஒழித்தால் தான் பல தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும். வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி, பண மதிப்பழிப்பு காரணமாக உற்பத்தி குறைந்து, நுகர்வு சுருங்கியிருக்கும் போது உற்பத்தி செய்யவோ, உற்பத்தி செய்ததை வாங்கவோ யார் வருவார்கள்?

இந்தியாவின் பொருளாதார அழிவை கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விரைவுபடுத்தும் வேலையை மோடி அரசு செவ்வனே செய்து வருகிறது.

செய்தி ஆதாரம் :

Two years on, Modi’s Startup India plan is still mostly just that—a plan