Friday, January 17, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !

குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !

-

கோவளம் கடற்கரையை அழிக்க  வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
சாதி-மத வேறுபாடின்றி
எதிர்த்துப் போராடும் மக்கள் !
சாதி-மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் பாஜக!

ன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம் கிராமத்தில் அமையவிருந்த சர்வதேச சரக்குப் பெட்டக முனையம்(துறைமுகம்) மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகத் தற்போது கன்னியாகுமரி  அருகே உள்ள கோவளம் பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கேயும் மக்கள் துறைமுகத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். மக்கள் எதிர்ப்பின் அடிப்படை, துறைமுகம் வந்தால் இப்பகுதி கிராமங்கள் அழிந்து விடும் என்பதும், சரக்கு உற்பத்தி ஏதும் இல்லாத குமரி மாவட்டத்தில் துறைமுகத்திற்கான தேவையே எழவில்லை என்பதுமாகும். இதுதவிர  இராணுவ நோக்கங்களுக்காக மோடி அரசு இத்துறைமுகத்தை அமைக்கிறது என்ற  சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள். ஏற்கனவே அணு உலை, தாது மணல், இயற்கைச் சீற்றங்கள் எனப் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும் குமரி மாவட்டத்தை, கடற்கரையை அரசு ஏன் குறி வைக்கிறது? எனக் கேட்கிறார்கள்.

மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லாத பாஜக அரசு, தனது கட்சியினர் மூலம் கிருத்தவ மீனவர்கள் – இந்து நாடார்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதற்காக துறைமுக ஆதரவுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஆர் எஸ் எஸ் – பாஜக ஆட்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை, போஸ்டர் என இவர்கள் சாதி – மதப் பிரச்சனையைத் தூண்டி வருகிறார்கள். இது தவிர 19,000 கோடியில் வெறும் 10% கமிசன் என வைத்துக் கொண்டாலும் கிடைக்கப்போகும் 1,900 கோடி ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டத்தையும், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனையும் உந்தித் தள்ளுகிறது.

உண்மையில் துறைமுகம் வந்தால் பாதிக்கப்படும் மக்களில், இந்து நாடார் விவசாயிகள் ஏராளமானோர்  உள்ளனர். இவர்களின் விவசாய நிலங்கள், தென்னந் தோப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே இந்த மக்களும் போராடுகிறார்கள். இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

கோவளம் துறைமுகத்திற்கு எதிராக, கடந்த 28.12.2017 அன்று மாலை 5.00 மணியளவில் கோவளம் புனித இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், இளைஞர்கள், கடலோடிகள், விவசாயிகள், அறிவுத்துறையினர் கலந்து கொண்டனர். இனயம் துறைமுகத் திட்ட எதிர்ப்புக் குழுவைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் சரவணன் என்பவர் தலைமையில், துறைமுகத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து அவர்கள் ஏற்கனவே தயாரித்து இணையம் பகுதி மக்களிடம் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய காணொளிக் காட்சிப் படங்களைக் கொண்டுவந்து திரையிட்டு விளக்கினர். கூடுதலாக பாதிரியார்களும் திட்டத்தினால் ஏற்படப்போகும் மோசமான விளைவுகளை எடுத்துச் சொல்லினர்.

வழக்கம் போல அரசு அதிகாரிகள் கோவளம் கடல் பகுதியில் விவசாயம், மீன் பிடிதொழில் எதுவும் இல்லை. தரிசு நிலமாகத்தான் உள்ளது என்று காட்டியுள்ளனர். துறைமுகம் வந்தால் இந்தப் பகுதி பொருளாதார ரீதியாக பெரிய முன்னேற்றம் அடையும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உள் நாட்டுப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகும், நாடு வல்லரசாகும் என்றெல்லாம் கூறியுள்ளனர். ஆனால் இதை நம்பாது சில இளைஞர்கள் எதிர்த்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்த இளைஞர்களை கைது செய்து காவல் துறை வழக்குப் போட்டுள்ளது.

துறைமுகத் திட்டம் பற்றிய வரைபடத்தைத் திரையிட்டு விளக்கிப் பேசியவர் அதன் பாதிப்புகளை நுணுக்கமாகச் சுட்டிக் காட்டினார். வர்த்தகத் துறைமுகம் அமைக்க 70 அடி கடல் ஆழம் வேண்டும். கரையிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரம் கடலில் தரை உருவாக்கப்படும். ஏராளமான பாறைகள் மண் கொட்டப்படும். கடலை ஆழப்படுத்த தோண்டும் போது கடற்கரை மணல் வெளியேற்றப்படும். அதன் மூலம் கடல் ஓரம் உருக்குலையும். கடல் நீர் ஊருக்குள் வரும். மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம்வரை வேறு எந்த நடவடிக்கையும் நடைபெறாது. உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி அதன் பாரம்பரியத்தையும். எழிலையும் இழந்து பாலைவனமாகும். சுற்றுச் சூழல், நிலத்தடி நீர், விவசாயம், மீன்பிடி தொழில் அனைத்தும் பாதிக்கப்படும். எனவே மக்களுக்கு எதிராக யாருக்காக இந்த திட்டத்தை அரசு கொண்டுவருகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

அண்டை கிராமங்களின் தலைவர்கள், ஊர்த் தலைவர்கள். அமெரிக்காவில் பணியாற்றும் விஞ்ஞானி, கத்தோலிக்கப் பாதிரியார்கள் பலர் இதன் பாதிப்புகளை விளக்கிப் பேசினர். முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த பார்த்தசாரதி என்பவர் பேசும்போது , “பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் என்னை அணுகி இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டனர். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். எனக்கு இங்கே அதிகமான நிலம் இருக்கிறது. எனக்கு நாகர்கோவிலில் வீடு உள்ளது. இருந்தாலும் எனது மண்ணுக்காக, மக்களின் நலனுக்காக நான் சாதி, மதம் கடந்து போராட விரும்புகிறேன். எதற்காகவும் விலைபோக மாட்டேன் என்று பலத்த கர ஒலிக்கு நடுவே கருத்தைப் பதிவு செய்தார்.

அமெரிக்காவில் பணியாற்றும் விஞ்ஞானி பேசும் போது, சுற்றுச் சூழல் அறிஞர் லால் மோகன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசாகாயம் போன்றவர்கள் நமக்காகப் போராட முன்வந்துள்ளனர், துறைமுகத்திற்காக அனல் மின் நிலையங்கள் வந்தால்  நாம் இங்கு வாழ முடியாது, தூத்துக்குடி சென்று பார்த்தால் பாதிப்புகள் தெளிவாக புலப்படும், மேலும் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கான இடங்களுக்கு, கண்டெய்னர் லாரிகள் நிற்பதற்கு கூடுதல் இடங்களை கையகப்படுத்துவார்கள்,  நாம் இங்கு வாழ முடியாது  என்று தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய பச்சைத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், “கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினால் என் மீது 300 -க்கும் மேற்பட்ட வழக்குகளை அரசு போட்டது. அமெரிக்காவிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு நாட்டுக்கு எதிராக சதி செய்வதாக பிரச்சாரம் செய்தார்கள். சாதி ரீதியாக என்னை நாடார் என்றும் மீனவர்கள் என்றும் பிரித்தார்கள். எனக்கு எந்த சாதியும் இல்லை. மதமும் இல்லை. இது என்னுடைய சொந்த மண். என்னுடைய ரத்த உறவுகள் இங்கே இருக்கின்றனர். உங்களோடு நான் எப்போதும் இருப்பேன். கிராமக் கமிட்டிகளை அமைத்து, நிதி ஆதாரங்களை உருவாக்கி விடாப்பிடியாகப் போராடுங்கள்.

இந்த திட்டம் ஒரு நாசகாரத் திட்டம். கடல் தொழில், விவசாயம், சுற்றுச் சூழல், நிலத்தடி நீர் அனைத்தும் பாழாகிவிடும். இந்த சரக்கு வர்த்தகத் துறைமுகத்திற்கு 2000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றால் அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். அதற்காக அனல் மின் நிலையத்தையும் அருகிலேயே அமைக்கப் போகிறார்கள். நிலக்கரி தூசியினால் இந்தப் பிரதேசமே சுடுகாடாகும். யாருக்கான திட்டம் இது?அம்பானி, அதானிகளை வாழவைப்பதற்காக எங்கள் மக்கள் சாக வேண்டுமா ? கிறிஸ்தவன், மீனவன், நாடார், இந்து, ஏழை, பணக்காரன் என்று சொல்லி மக்களைப் பிரிக்கப் பார்க்கிறது பி.ஜே.பி. இதற்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது”என்றார்.

மீன்வளத்துறை போர்டு உறுப்பினர் சகாயம் என்பவர் கூறும் போது, கோவளத்தில் துறைமுகம் அமைப்பதை மக்கள் எதிர்த்தவுடன் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் “கடற்கரை  மீனவ மக்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. கோவளத்தில் துறைமுகம் வந்தே தீரும்” என்று கூறினார். சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று கருதி பாஜகவுக்கு ஆதரவாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது. பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்” இங்கு அனைத்து மக்களும் இணைந்துதான் போராடிகிறோம். இன்றைய கூட்டத்தில் பேசியவர்களில் அதிகமானோர் இந்துநாடார் விவசாயிகளே” என்றார்.

இதன்பின் 30.12.2017 அன்று கோவளம் பகுதியைப் பார்வையிட வந்த குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் மற்றும் அதிகாரிகளை மீனவர்கள் உள்ளிட்ட மக்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்ததாகவும், துறைமுகம் வராது என்று எழுதிக்கொடுக்க வேண்டும் என்று கோரியதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர், “அரசு எனக்கு அளித்த பணியைச் செய்ய வந்துள்ளேன். எழுதிக் கொடுக்க முடியாது” என்று சொன்னதாகவும், பின்னர் போராடிய மக்கள் மீது வழக்குப் பதியப்பட்டதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

சாகர் மாலா திட்டத்தின்படி தமிழ் நாட்டின் கடற்கரை முழுவதையும் ஆக்கிரமித்து கார்பரேட் முதலாளிகளுக்கு கையளித்துவிடுவதே மோடியின் திட்டம்.அதை நிறைவேற்றவும், கமிசனுக்காகவும் சாதி-மதப் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளனர் பிஜேபியும், பொன்னாரும். மீண்டும் ஒரு மண்டைக் காடு கலவரத்தை நாங்கள் விரும்பவில்லை என வெளிப்படையாகப்  பேட்டி கொடுக்கின்றனர். அரசு இயந்திரம் முழுக்க இவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடிகள் அந்நியச் செலவாணி ஈட்டிக் கொடுத்து, இந்தியாவின் தென்மேற்குப் பகுதியைக் காத்து நிற்கும் சிறுபான்மை கிருத்துவ மீனவ மக்கள் மீதான பாஜக-வின் வெறுப்பும் பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.

மேற்கண்ட சூழலில் கோவளம் பகுதி மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அப்பகுதி மக்களை அழிவிலிருந்து காப்பதும், ஆர் எஸ் எஸ் – பாஜகவின் மதக்கலவரத் திட்டத்தை  முறியடிப்பதும் தமிழகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தமிழ்நாடு.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க