Thursday, November 26, 2020
முகப்பு செய்தி ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் தற்காலிக உரிமம் இரத்து !

ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் தற்காலிக உரிமம் இரத்து !

-

ரியானாவில் உள்ள குர்காவ்னில் செயல்பட்டு வருகிறது ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை.  இங்கே உள்ள மருந்து விற்பனையகம் மற்றும் இரத்த வங்கிக்கான உரிமத்தை  அரசின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு அலுவலகம் தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஆத்யா

கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சலுக்காக இந்த மருத்துவனையில் சேர்க்கப்பட்ட ஆத்யா என்ற 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகஸ்ட் மாத இறுதியில் சேர்க்கப்பட்ட ஆத்யாவைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்து சிகிச்சையளிப்பதாகக் கூறி சுமார் ரூ.17 இலட்சத்தை அவரது தந்தையிடமிருந்து கறந்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

உதாரணத்திற்கு, 15 நாள் சிகிச்சைக்கு மொத்தம் 660 சிரிஞ்சுகளும், 2,700 கையுறைகளும் பயன்படுத்தியதாகக் கணக்குக் காட்டியுள்ளனர். அவற்றின் சந்தை விலையை விட 1200% அதிக விலையை வைத்து விற்பனை செய்துள்ளனர். மருந்துகளின் விலை அதிகபட்சமாக 1700% வரை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வளவு கொட்டிக் கொடுத்தும் சிறுமி ஆத்யா மரணமடைந்தார். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் சமூக வலைத்தளங்களில், ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் கட்டணக் கொள்ளையையும், உதாசீனத்தையும் அம்பலப்படுத்தினார். இவ்விவகாரம் பலரால் பேசப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்ட பின்னர்தான் இது குறித்து விசாரணையை மேற்கொண்டது ஹரியானாவின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு அலுவலகம்.

இந்நிறுவனத்தின் அதிகாரிகள், கடந்த 2017 -ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் சோதனைகளை நடத்தியுள்ளனர். அதில் ஃபோர்ட்டிஸில் செயல்பட்டு வரும் இரத்த வங்கியில் 32 விதமான விதிமீறல்களையும், மருந்துக் கடையில் 9 வகை விதிமீறல்களையும் கண்டறிந்துள்ளனர்.

தற்போதைய தற்காலிக உரிம இரத்து குறித்து உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “அங்கு நடைபெற்றிருக்கும் விதிமீறல்கள் குறித்து ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதற்கு திருப்திகரமான வகையில்அவர்கள் பதிலளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தான் இந்த தற்காலிக உரிம இரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.

வியப்பாக இருக்கிறதா? கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இந்த அரசு நடவடிக்கை எடுக்கிறதா என்று? இதற்கான பதிலையும் அந்த அதிகாரிகளே தங்கள் அறிக்கையில் தெளிவாகச் சொல்கிறார்கள்.

“இந்த தற்காலிக உரிமத் தடைக் காலத்தில் விதிமுறைகளின் படி செயல்படுவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் அவர்களுக்கு (ஃபோர்ட்டிஸ்) ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் நடந்து கொண்டால், நிரந்தர      உரிம ரத்திலிருந்து தப்பிக்கலாம்” என்று அந்த அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆகவே விதிமுறைப்படி ‘கவனிக்கப்பட’ வேண்டியவர்களுக்கு வலுவாக ‘கவனித்தால்’ தற்காலிக உரிம இரத்தும் இரத்தாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கண் துடைப்பு தற்காலிக உரிம இரத்து நடவடிக்கைகள் கூட சமூக வலைத்தளங்களில் ஃபோர்ட்டிஸ் மோசடி குறித்து மக்களின் கண்டனங்கள் அதிகரித்ததன் விளைவுதான். இதே சம்பவம் ஒரு தனிநபருக்கு நடந்து அவர் காவல்நிலையத்திலோ அல்லது உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அலுவலகத்திலோ புகாரளித்திருந்தால் – ஒன்று, புகாரளித்தவர் காணாமல் போயிருப்பார் அல்லது அதிகாரவர்க்கத்தின் துணையோடு மிரட்டப்பட்டு வாயடைக்கப்பட்டிருப்பார்.

அனைத்து கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளுக்கும், இலாபவெறிதான் அவர்களை இயக்கும் உந்துசக்தி. அந்த அடிப்படையில் கட்டணக் கொள்ளையும், விதிமுறை மீறலும் தனியார் மருத்துவமனைகளில் வெகு யதார்த்தமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் நிலவும் போலி ஜனநாயகம் இத்தகைய கார்ப்பரேட்டுகளுக்கு மக்களை வேட்டையாடும் உந்துதலை அளிக்கிறது.

மேலும் :


 

  1. இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நமக்கு இதன் மூலம் பிரபலபடுத்தி … இனி இது பாேல புகார்களை கிளப்பினால் “வேஸ்ட் ” என்று புரியவைக்கிறார்கள் … ! நாங்க எப்பவுமே இப்படித்தான் … இல்லையில்லை இப்படித்தான் எப்பவுமே … !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க