Thursday, June 20, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஐநூறு ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் !

ஐநூறு ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் !

-

ந்திய தனிச்சிறப்பான அடையாள அட்டை ஆணையம் (UIDAI) கடந்த நவம்பர் மாதத்தில் தான் ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவித்திருந்தது. யாராலும் உங்களது ஆதார் தகவல்களைத் திருட முடியாது என்றும் சூடம் ஏற்றி சத்தியம் செய்தது. ஆனால் இன்றும் உங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு உங்கள் புகைப்படம் முகவரி உள்ளிட்ட முழுத்தகவலையும் யாராலும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை ட்ரிபியூன் என்ற நாளிதழ் கடந்த 03-01-2018 அன்று அம்பலப்படுத்தியுள்ளது.

ட்ரிபியூனின் செய்தியாளர் ஒருவர், வாட்சப் மூலமாக ஒரு ஆதார் ஏஜெண்டைத் தொடர்பு கொண்டுள்ளார். அந்த ஏஜெண்டுக்கு பேடிஎம் வழியாக ரூ.500, செலுத்தி தனது கைப்பேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் அந்த ஏஜெண்டிற்கு கொடுத்துள்ளார். அந்த ஏஜெண்ட் அடுத்த பத்தே நிமிடத்தில், ஆதார் இணையதளத்தில் உள்நுழைவதற்கான பயனர் பெயரையும்  கடவுச் சொல்லையும் அச்செய்தியாளரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த உள்நுழையும் பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் வைத்துக் கொண்டு, அதற்கான தளத்தில் யாருடைய ஆதார் எண்ணையும் உள்ளிட்டு சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி என அனைத்தையும் எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் ஒரு ரூ.300 செலுத்தியவுடன், கொடுக்கப்படும் ஆதார் எண்ணைக் கொண்டு அதற்கான ஆதார் அட்டையை அச்சிடும் மென்பொருளையும் வழங்கியிருக்கிறார் அந்த ஏஜெண்ட். இதனை ஆதாரங்களோடு ஆதார் ஆணைய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டது ட்ரிபியூன் பத்திரிக்கை.

சண்டிகரில் உள்ள ஆதார் மண்டல மையத்தின் கூடுதல் இயக்குனர் சஞ்சய் ஜிண்டால் இதனை ஒரு பெரும் பாதுகாப்பு சீர்குலைவு என ஏற்றுக் கொண்டுள்ளார். இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்காக நுழைவுரிமை மற்றவர்களின் கைகளுக்குச் சென்றிருப்பது சட்டவிரோதமானது என்று கூறி அதிர்ந்துள்ளார். இது குறித்து தொழில்நுட்ப விசாரணை நடத்திய பிறகு தான் எங்கிருந்து இத்தவறு நடந்தது என்பதை உறுதியாகக் கூற முடியும் எனக் கூறியிருக்கிறார் சஞ்சய்.

ஆதார் என்பது நமது அந்தரங்கத் தெரிவுகள், நமது விருப்பு வெறுப்புகள் என அனைத்தையும் கார்ப்பரேட் இலாபவெறிக்கு உபயோகிப்பதற்காக உபயோகிக்கப்படும் பொறி. இதனை சமீபத்தில் நடந்து முடிந்த 11-வது உலக வர்த்தகக் கழகக் அமைச்சக மாநாடு நிருபித்துள்ளது.

குடிமைச் சமூகத்திற்கான குடிமக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த கோபால கிருஸ்ணன் ட்ரிபியூன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த மாநாட்டில் பங்கு பெற்ற அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அதில் குடிமக்கள் பற்றிய தனிப்பட்ட விவரங்களை இலவசமாக அணுகி எடுத்துக் கொள்ள தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன என்று கூறியிருக்கிறார்.

இந்திய அரசு அமெரிக்காவிற்கு இலவசமாகக் கொடுக்கிறதோ இல்லையோ, இங்கிருக்கும் சாதாரண நபர்களுக்கே இலவசமாகக் கொடுக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை. ஆதார் ஆணைய நுழைதளத்தில் இருக்கும் இத்தகைய பெரும்பிழைகள் காரணமாக யார் வேண்டுமானாலும் நமது ஆதார் அட்டையைக் கொண்டு நமது பெயரில் வங்கி கணக்குத் தொடங்கி, முறைகேடுகள் செய்யலாம். நம் பெயரில் சிம் கார்டுகள் வாங்கிக் கொண்டு முறைகேடுகள் செய்யலாம். அதற்குப் பொறுப்பானவர்கள் நாம் தான். ஆதார் ஆணையமோ இந்த அரசோ அல்ல.

இந்த ஆதார் அட்டை வழங்கல் ஆணையத்தின் (UIDAI) தொழில்நுட்ப ஓட்டாண்டித்தனம் வெறுமனே நமது தகவல்கள் மற்றும் அந்தரங்கங்களின்  பாதுகாப்பை மட்டுமே நட்டாற்றில் விடவில்லை. இந்த முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளால், ரேசனில் உணவு மறுக்கப்பட்டு வறுமையின் காரணமாக ஜார்கண்ட், கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர் மரணங்கள் ஏற்பட்டு வருவதைக் கண்கூடாக பார்க்கிறோம்.

மேலும் பல இடங்களில் தொழில்நுட்பக் குளறுபடியால், அரசின் மானியப் பணம் முறையாக வந்து சேராமல் பட்டினிக்குத் தள்ளப்படும் குடும்பங்கள் சிறிது சிறிதாக சாகடிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ஹரியானாவில் கார்கில் போரில் உயிர்விட்ட இராணுவ வீரரின் மனைவிக்கு கையில் ஆதார் இல்லாத காரணத்தால் ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சையளிக்க மறுத்தது. அதன் காரணமாக அந்த பெண்மணி இறந்துள்ளார். இப்படி தொடர்ச்சியாக அனைத்து தரப்பு மக்களையும் இம்சித்து வருகிறது ஆதார்.

பிறப்பிலிருந்து சுடுகாட்டுக்குச் செல்லும்வரை, நம்மை அந்தரங்க உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாகவும், அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்புக் காட்டத் துணியாத தற்குறிகளாகவும் உருவாக்கவே கொண்டு வரப்பட்ட ஆதாரை ஒழித்துக் கட்டாமல் நம்மை என்றும் ஒரு சுதந்திர மனிதனாக கருதிக் கொள்ள முடியாது.

மேலும் படிக்க:
Rs 500, 10 minutes, and you have access to billion Aadhaar details


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க