Saturday, August 8, 2020
முகப்பு செய்தி தேன்மொழியின் கடன் ரூ 27,000 - திருவண்ணாமலை HDFC வங்கியின் தண்டனை தூக்கு !

தேன்மொழியின் கடன் ரூ 27,000 – திருவண்ணாமலை HDFC வங்கியின் தண்டனை தூக்கு !

-

திருவண்ணாமலை நகரத்தில் ரயில் நிலையத்தை ஒட்டி கிழக்குப்புறமாக அமைந்துள்ள பகுதி பல்லவன் நகர் ஆகும். இங்குள்ள ரயில் நிலைய குட்ஷெட்டில், மூட்டை தூக்கும் தொழில் செய்து வரும் நபர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களில் சேகர் மற்றும் அவரது அண்ணன் செல்வராஜ் ஆகியோர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டை துாக்கும் தொழில் செய்து வந்தனர்.

இதில் செல்வராஜ் இத்தொழிலின் கடுமையான உழைப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். கடந்த 6 மாதங்களாக அவரது தம்பியான சேகரும் இரு சிறுநீரகங்கள் பழுதடைந்து வேலை ஏதும் செய்ய முடியாமல் (Dialysis) சிகிச்சை செய்து கொண்டு உயிருக்கு போராடி வருகிறார்.

சேகரின் மனைவி பக்கத்து பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்துகொண்டு, தனது இரட்டை பிறவி மகள்களான ரம்யா மற்றும் சுமித்ரா ஆகியோரை 12 -ம் வகுப்பு படிக்க வைத்து கொண்டு தன் உடல்நலம் குன்றிய கணவரையும் பராமரித்து வந்தார். தன் கணவரின் மருத்துவ செலவிற்காக தேன்மொழி திருவண்ணாமலை நகரத்தில் உள்ள H.D.F.C எனும் கார்ப்பரேட் வங்கியில் தன் பகுதியில் இயங்கும் மகளிர் சுய உதவி குழு மூலமாக ரூபாய் 27,000/- த்தை கடனாக பெற்று, அக்கடனை மாத தவணைகளாக செலுத்தி வந்தார்.

இதற்கிடையில் தன் குடும்ப வறுமை காரணமாகவும், தன் கணவரின் மருத்துவச் செலவின் காரணமாகவும், தேன்மொழி கடந்த 3 மாத காலமாக தவணையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். அதனால் கடந்த டிசம்பர் 15 அன்று விட்டிற்கு வந்த ராஜா எனும் H.D.F.C வங்கி ஊழியர் தேன்மொழி இல்லாததால், அவர் மகள் சுமித்ராவிடம் அநாகரீகமாகவும் சாதிபெயரில் இழவுபடுத்தி ஆத்திரத்துடன் பேசியுள்ளார். பின்னர் கடந்த 08.01.2018 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் H.D.F.C வங்கி கிளையின் ஊழியர்களான ராஜா மற்றும் இருவர் வங்கி மேலாளரின் உத்தரவுப்படி தேன்மொழி வீட்டிற்கு வந்து தவணை செலுத்த வற்புறுத்தினர்.

அப்போது தேன்மொழி, வங்கி முகவர்களிடம் தன் குடும்ப வறுமையை குறிப்பிட்டு தவணை கட்ட மேலும் அவகாசம் கோரியபோது அந்த முகவர்கள் “உங்க ஜாதியில் யாருமே கடனை கட்ட மாட்டார்களா, நீ எப்படி கொடுப்பியோ, எங்கயாவது போயி எவங்கிட்டயாவது போயி கொடுப்பியோ தெரியாது” இன்று பணம் கட்டாமல் நாங்கள் உங்க வீட்டை விட்டு போகமாட்டோம் என வீட்டின் எதிரிலேயே நின்று கொண்டார்கள்.

ஐயா, இந்த மாதிரியேல்லாம் அசிங்கப்படுத்தி பேசாதீங்க, எனக்கு நாண்டுகிட்டு செத்திடலாம் போல இருக்கு என்று சொன்னவுடன், இந்த மாதிரி நீ இழுத்தடிக்கிறதுக்கு செத்துதான் போயேன் என வங்கி ஊழியர் ஒருவர் கத்தியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த தேன்மொழி தன் வீட்டினுள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். இதை கவனித்த அக்கம் பக்கத்தார்கள் ஒடிவந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே செல்வதற்குள் தேன்மொழி துாக்கிட்டு கொண்டு குற்றுயிரும் குலையிருமாக; உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார்.

உடனே அவரை பகுதிவாழ் மக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு தேன்மொழி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சவகிடங்கிற்கு தேன்மொழியின் உடல் அனுப்பப்பட்டது. அன்று இரவே வங்கி மேலாளர் மற்றும் சம்பவத்தில் ஈடுப்பட்டஊழியர்கள் மீது தற்கொலைக்கு துாண்டியது மற்றும் தாழ்த்தபட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்ட பிரிவுகளில் புகார் கொடுக்கப்பட்டது.

ஆனால் மறுநாள் காலை சுமார் 11.00 மணியளவில் பல்லவன் நகர் பகுதி மக்களும், ஜனநாயக சக்திகளும் காவல்நிலையத்திற்கு வந்து போராடிய பின் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தார் சந்தேக மரணம் என்ற பிரிவில் Cr.P.C 174 -ன் படி வழக்கிட்டாலும் வங்கி ஊழியர்களை அழைத்து விசாரிக்கக்கூட இல்லை. அதனால் கடந்த 10 -ம் தேதி வங்கியின் முன் மறியல் செய்த பகுதி மக்களையும், ஜனநாயக அமைப்புக்களையும் காவல்துறையினர் நைச்சியமாக பேசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவிட்டு, வங்கி ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில் பகுதி வாழ்மக்கள், போராட்டத்தை தீவிரப்படுத்த முயற்சித்த வேளையில் வேறு வழியில்லாத நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையீட்டு வங்கி ஊழியர்கள் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் தாழ்த்தப்பட்டோர், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. சந்தேக மரண வழக்கு தற்கொலைக்கு துண்டிய வழக்காக மாற்றப்பட்டாலும், தவறிழைத்த வங்கி அதிகாரிகளை கைது செய்யாத காவல்துறை அவர்களை வங்கியில் பணி செய்ய வைத்து வெளியில் காவலர்களை நிறுத்தி பாதுக்காக்கிறது. தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தில் சேகர் மனமுடைந்து இறக்கும் தருவாயில் உள்ளார். பருவ வயதடைந்த அவரது இரு மகள்களும் அனாதைகளாக உள்ளனர்.

இவ்வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூடாரமான தனியார் வங்கிகள், தான் கொடுக்கும் கடன்களை சட்டபூர்வமாக வசூலிக்க வழியிருந்தும், அவர்கள் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி அவர்களுக்கு கடன் வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்து, ஏழை அப்பாவி மக்களை மிரட்டி, அவமானப்படுத்தி இது போன்ற கொலைகளிலும், தற்கொலைகளிலும் ஈடுபடுத்துகின்றனர்.

படித்து வேலையின்றி தவிக்கும் ஏழை இளைஞர்கள் தன் வாழ்க்கை நெருக்கடிக்காக இந்த வேலைகளில் சேர்ந்து தன்னை அறியாமல் தன்னையொத்த ஏழை மக்களை கார்ப்பரேட் வங்கிகளின் கூலி ஆட்களாக இருந்து ஒழித்துக் கட்டுகின்றனர். இது போல் இதே திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சாத்தனுார் கிராம பாரத ஸ்டேட் வங்கி கிளையில் டிராக்டர் கடனை பெற்ற விவசாயி ஞானசேகரனை கடன் வசூலிக்க சென்ற வங்கி முகவர்கள் அடித்து கொன்ற சம்பவம் நடந்தது.

அந்த சம்பவத்தில் பல அமைப்புகள் இணைந்து போராடியும் ஞானசேகரன் தரப்பினர் கொடுத்து புகாரின் பேரில் வங்கி அதிகாரிகள் பேரில் இன்றுவரை எந்த வழக்கும் காவல்துறை போடவிலை. அந்த வழக்கு சந்தேக மரணம் (174 rIPC) வழக்காகவே இன்றுவரை நிலுவையில் உள்ளது. ஆனால் ஞானசேகரன் அடித்ததாக அவரின் மீதும் அவர் மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் ஞானசேகரின் மகனை காவல்துறை கைது செய்ய முயற்சித்தது.

இவ்வகையில் காவல்துறையும், அரசும் பாதிக்கபடும் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு சட்டத்திற்கு புறம்பாக கடன்களை வசூலிக்கும் வங்கி அதிகாரிகளை வழக்கின்றி பாதுகாக்கின்றது. இந்த அநீதிகளை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளையும், பாதிக்கபட்டோரின் சார்பான பொதுமக்களையும் காவல்துறை போராட அனுமதிக்காமல் அவர்களை குற்றவாளிகளை போல் வீதிகளிலும், காவல்நிலையத்திலும் நடத்துகிறது.

தகவல் :
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
திருவண்ணாமலை கிளை.

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. வங்கி கடனை கட்டாதே அரசு கட்டமைப்பை அடித்து கொருக்குவதை தவிர வேறு வழியே இல்லை என்பதை யே தெளிவாக விளக்குகிறது.இந்தகட்டுரை மேலும் படிக்கும் போதே இதயம் கனக்கிறது கோபம் கொந்தளிக் கிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க