Saturday, May 8, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் !

கரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் !

-

ல்வி தனியார்மயம் ஆகிவரும் சூழ்நிலையில், ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும் என்பதே எட்டாக்கனி ஆகிவிட்ட நிலையில் இதெல்லாம் போதாது என்று, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சாதி அடிப்படையில் அவமானப்படுத்தப்படுவதும், அடையாளப்படுத்தப்படுவதும் தினம் தினம் நடந்துகொண்டுதான் உள்ளது.

புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

இந்த நிலையில் கரூர் பள்ளி மாணவன் சரவணனின் மரணம் இதனை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்த சிவக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் சரவணன். கரூர் ஆண்டாங்கோவிலில் அருகே இருக்கும் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரவணன் 12-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் அவன் 10 வகுப்பில் 470 மதிப்பெண் பெற்று முதல் மாணவனாக இருந்துள்ளான். படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, நீச்சல், யோகா, நடனம் போன்ற அனைத்து துறையிலும் அவனே முதல்நிலை வகித்துள்ளான். இதன்மூலம் அவன் பள்ளியில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்று வந்துள்ளான்.

11-ம் வகுப்பு படிக்கையில் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் தலைவனாக (School People leader) தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலையில் இதனை பொருத்துக்கொள்ள முடியாத அப்பள்ளியின் முதல்வர் P.ஜோசப் (எ) அனீஷ், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஜெயந்தி, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நூலக ஆசிரியை தேவி ஆகியோர்கள் இதனை ஏற்க மனமின்றி, சரவணன மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதே பள்ளியைச் சேர்ந்த வேறொரு மாணவியை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

சரவணன்

மேற்படி விபரம் தெரியவந்து, இதுபற்றி சரவணன் கேட்டபொழுது அம்மூவரும் ” நீயெல்லாம் வெட்டியான் வேலைசெய்யத்தான் லாயக்கு, நீ ரொம்ப அழகாவா இருக்க, பீப்பிள் லீடராக இருக்க உனக்கு தகுதி இல்லடா பறப்பயலே” என்று கேவலமாக அமானப்படுத்தி திட்டியுள்ளார்கள். பின்னிட்டு பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அந்த மூன்று ஆசிரியர்களும் வந்திருந்த பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளைகளை சரவணனுடன் சேர விடாதீர்கள் என்றும் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும் சரவணனுடன் சேர வேண்டாம் என்றும் மீறி அவனுடன் சேர்ந்தால் T.C.யை கிழித்து வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்றும் எச்சரிக்கை செய்து மிரட்டியுள்ளார்கள். இதனால் சக மாணவர்கள் மத்தியில் தனிமையாகவே இருந்து வந்துள்ளான். மற்ற சில மாணவர்களும் ஆசிரியர்களும் ஏன் இப்படி சொல்கிறார்கள் என தெரியாமல் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் 23.01.2018 அன்று சரவணன் நேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மூவரிடமும், ஏன் என் சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த மூன்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உள்ள பணியாளர்களும் சரவணனை விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து, சரவணனை பார்த்து ” கேள்வியாடா கேட்கிறே பறப்பயலே, நீ இந்த வருஷம் பாஸ் ஆக முடியாது, பெயில்தாண்டா ஆகப் போற” என்றும், ” உன் அப்பன் வெளிநாட்டில் இருந்தால் நீயெல்லாம் பெரிய ஆளா? உன்னை ஒழிச்சு கட்டாமல் விடமாட்டேன்” என்று மிரட்டியதுடன் பலவாறு சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த சரவணன் மாலை வீட்டிற்கு வந்து தன் தாயாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளான்.

பின்பு சாப்பிடாமலே தன் அறைக்கு தூங்க சென்ற சரவணன், மறுநாள் காலை 7.00 மணிக்கு வழக்கம்போல் எழாமல் இருக்கவே அவரின் தாயார் அறைக்கு சென்று பார்த்தபொழுது, சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியுற்ற பெற்றோர்கள் உடனே மருத்துவமனைக்கு சரவணனை எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்த டாக்டர் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தன் மகனை சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தி தற்கொலைக்கு செய்துள்ளதை நினைத்து, அழுகையும், ஆத்திரமும் அடைந்த பெற்றோரும் உறவினரும், சரவணனின் மரணத்திற்கு நீதிகேட்டு மேற்படி பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

வழக்கம் போல வந்த கரூர் நகர போலீசார் கூட்டத்தை விரட்டிவிட்டு, பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் கண் துடைப்பிற்காக ஒரு புகாரை பெற்றுக்கொண்டு, குற்ற எண். 77/2018 சட்டப்பிரிவு 174ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நாடகம் நடத்தினார்கள். சரணவனின் மரணத்திற்கு என்ன காரணம் சொல்வது என்று திணறிப்போயிருந்த பள்ளி நிர்வாகத்தினர், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் காதல் தோல்வியால் மரணம், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை என்றெல்லாம் பொய்யாக தகவலை பரப்பிவிட்டனர்.

மேற்படி விபரத்தை கேள்விப்பட்டு களத்திற்கு சென்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பாதிக்கப்பட்ட சரவணனின் பெற்றோர்களிடம் விபரத்தை கேட்டறிந்து, இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டி அம்பலப்படுத்தினோம்.

பின்னர் போலீசாரும் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காக்கிறது. சரவணனின் மரணத்திற்கு நீதி கேட்டும், நியாயமான விசாரணை மேற்கொண்டும், மேற்படி பள்ளியின் முதல்வர் P.ஜோசப் (எ) அனீஷ், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஜெயந்தி, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நூலக ஆசிரியை தேவி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வழியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு நமது தோழர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இன்று தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக்கொள்ளைக்கும், சாதிய அடக்குமுறைக்கும் எத்தனை மாணவர்கள் பலியாகியுள்ளனர் என்பது பட்டியலிட்டு சொல்ல முடியாது. கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், மாணவர்களின் மீதான சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராகவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் அமைப்பாக அணிதிரள வேண்டும் என்பதையே சரவணனின் மரணம் சுட்டிக்காட்டுகிறது.

சாதி வெறியர்களுக்கு எதிராக களம் இறங்குவோம்!
சாதி வெறியூட்டும் பள்ளிகளை இழுத்து மூடுவோம் !

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர் – 98941 66350

***

தன் மகனை இழந்த தாய் சரஸ்வதி முதல் தகவலறிக்கை கூட பதியாமல் இருந்ததை தொடர்ந்து அனைத்து காவல்துறை மேலதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலருக்கும் எழுதிய புகார் மனு

பொருள்:- என் மகனை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி தற்கொலைக்கு தூண்டிய புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிரின்ஸ்பல், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு.

அய்யா/அம்மா,

மேற்கண்ட விலாசத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் நானும் என் குடும்பத்தினரும் இந்து பறையன் சாதியை சேர்ந்தவர்களாவோம். என் மகன்களில் ஒருவனான சரவணன் 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் பெற்றுள்ளான். தற்பொழுது அவன் புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயோ மேத்ஸ் குரூப்பில் படித்து வந்தான்.

அவன் படிப்பு மட்டுமில்லாமல் ஸ்போர்ட்ஸ், யோகா, நிச்சல், டான்ஸ் போன்ற அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருந்து வந்ததன் காரணமாக எல்லோரும் பாராட்டி வந்தார்கள். பள்ளி மாணவர் தலைவராக மாணவர்களால் என் மகன் சரவணன் 11ம் வகுப்பு படித்துவரும் போது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் மேற்படி பிரன்ஸ்பல், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி ஆகியோர் என் மகன் சரவணன் மாணவர் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்காமல் வேறு ஒரு பெண்ணை மாணவர் தலைவராக்கினார்கள்.

அதனால் என் மகன் சரவணன் மனம் உடைந்து போனான். அதைப் பற்றி பிரின்ஸ்பாலிடமும் ஆசிரியை ஜெயந்தி(பிராமீன்), நூலக ஆசிரியை தேவி(கவுண்டர்) ஆகியவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், “நீயெல்லாம் வெட்டியான் வேலை பார்க்கதாண்டா லாயக்கு. ஸ்கூல் பியூப்பில் லீடராக இருக்க உனக்கு தகுதியில்லடா. பறப்பயலே”, என்று கேவலமாக திட்டியுள்ளார்கள். அந்த விசயங்கள் அனைத்தையும் என்னிடம் என் மகன் சரவணன் சொன்னான். நான் படிக்கிறதுதான் உனக்கு முக்கியம். எதற்கும் வருத்தப்படாதே நன்றாக படி”, என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.

தொடர்ந்து மேற்படி நபர்கள் என் மகன் சரவணனை சாதியை சொல்லி டார்ச்சர் செய்துள்ளார்கள். அதனை என் மகன் சரவணன் என்னிடமும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி அழுதான். நான் என் மகன் சரவணனிடம், “இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் பரிட்சை நடந்துவிடும். அதுவரை பொருத்திரு. யாரிடமும் எதுவும் பேசினால் பிரச்சனையாகிவிடும்”, என்று சொன்னேன். என் மகன் சரவணனும் அமைதியாகிவிட்டான்.

ஒரு மாதம் முன்பாக நான் மேற்படி பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்ற போது மேற்படி பிரின்ஸ்பால், ஜெயந்தி, தேவி, மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்துகொண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம், “சரவணன்கூட யாரும் அவரவர் பிள்ளைகளை சேரவிடக்கூடாது” என்றும் மாணவர்களிடம், “யாரும் சரவணனிடம் சேரக்கூடாது”, என்றும் சொல்லி அவமானப்படுத்தினார்கள். நானும் என் மகன் சரவணனும் கதறி அழுதோம்.

அதன் பின்னர் பிரின்ஸ்பால், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி ஆகியோரிடம் என் மகன் சரவணன் 23.01.2018ம் தேதியன்று, ‘நான் என்ன தவறு செய்தேன். ஏன் என்னை இப்படி டார்ச்சர் செய்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளான். அதற்கு விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைத்து மேற்படி பிரின்ஸ்பால், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி மற்றும் சில பள்ளி பணியாளர்கள், “கேள்வியாடா கேக்குற. பறப்பயலே. நீ இந்த வருஷம் பாஸாக முடியாதுடா. பெயில்தாண்டா ஆகப்போற. உன்னை ஒழிச்சுகட்டுறோமா. இல்லையான்னு பாருடா”, என்று திட்டியுள்ளார்கள். அழுதுகொண்டே என்னிடம் வந்து என் மகன் சரவணன் சொல்லி அழுதான். இரவு தூங்க சென்ற சரவணன் 24.01.2018ம் தேதியன்று காலை 7 மணியளவில் தூக்கில் இறந்து தொங்கிகொண்டிருந்தான்.

தகவலறிந்து போலீசார் வந்து என்னை விசாரித்தார்கள். நடந்ததை சொன்னேன். வழக்கு பதிவு செய்ததாக கேள்விப்பட்டேன். கடந்த 31.01.2018ம் தேதியன்று கரூர் டவுன் காவல்நிலையத்திற்கு சென்று முதல் தகவல் அறிக்கையை வாங்கி பார்த்த போது நான் சொன்ன விசயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே உரிய விசாரணை நடத்தி மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மகன் சரவணன் மரணத்திற்கு நீதி பெற காவல்துறை தவிர வேறு புலனாய்வு முகமையை அமர்த்திடவும் மேலும் சூழ்நிலைக்கு உகந்த இன்னபிற நடவடிக்கை எடுக்க வழிவகை செய்திட வேண்டுமென்று மிகவும் பணிந்து வேண்டுகிறேன்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
(சி.சரஸ்வதி)

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர் – 98941 66350

 

 1. பார்ப்பனியத்தை வெறிகொண்டு செயல்படுத்தும் பள்ளி முதல்வர் ஜோசப் ,பார்ப்பன ஜெயந்தி ,கவுண்ட தேவி மூன்று குற்றவாளிகளும் மேலும் திரைமறவாகவுள்ள பள்ளி நிர்வாகம்…
  போலீஸ் நாய்கள்,ஆனைத்துக்கும் மேலாக அரசு…. கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
  புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணியின் (பு.மா.இ.மு) செயல் மிகவும் பாராட்டத்தக்கது??

 2. என்ன சாதி என்று எனக்கே தெரியாத நிலையிலும், ஒரு பள்ளியில் குறித்த ‘உயர் சாதி’ ஆசிரியர் ஒருவரின் மகனை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற காரணத்துக்காக, போடும் அப்பியாசங்களை பள்ளி பூந்தோட்ட பராமரிப்பு தொழிலாளியிடம் காட்டி சரி பார்க்குமாறு தொழிலாளியோடு சேர்த்து அவமான படுத்த பட்டவன். படிப்படியாக குறித்த சாதியை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் என ஒட்டுமொத்த விரோத பார்வையை சந்தித்த அதிர்ச்சிக்கு உள்ளானவன். என் நல்லகாலம் பெற்றோரிடம் அழுது புலம்பி பள்ளி மாற்றிவிட்டார்கள்.

  சாதி என்னவென்றே தெரியாமல் இந்தளவு சந்தித்த நான் சரவணன் என்னவெல்லாம் பட்டிருப்பார் என எண்ணி வருந்துகிறேன். இப்படியான அநீதிகளை கண்டு தம்மை மாய்காமல் பு.மா.இ.மு தோழர்களை தொடர்புகொள்ள பரவலாக அறிவுறுத்த வேண்டும், மாணவர்களிடம் தோழர்களின் reach போதவில்லை என்றே எண்ணுகிறேன். அப்படியே மாய்வது என முடிவெடுத்தாலும் தொல்லை கொடுத்த ஒருவனையாச்சும் செஞ்சிட்டு மாயணும். வெறும் சுயபச்சதாபம் அவமானம் மாணவர்களே, ரௌத்திரம் பழகுங்கள்.

 3. மக்கள் அதிகாரம் போன்ற சாதி நம்பிக்கை அற்ற முற்போக்கு அமைப்புகளின் வேர் இன்னும் பரவலாக நன்றாக பரவவில்லை என்பதையே இது காட்டுகிறது.
  உங்களை போன்ற முற்போக்கு இயக்கங்களின் வேர் இன்னும் நன்றாக பரவ வேண்டும். உங்களை போன்றவர்களின் தொடர்பு அந்த மாணவணுக்கு அரம்பத்திலேயே கிடைத்திருந்தால் அந்த பிஞ்சு உயிர் போய் இருக்காது.

 4. மாணவர் சரவணன் மரணம் வேதனையளிக்கிறது. அவரின் மரணத்திற்கு காரணமான சாதி வெறியர்களை தண்டிக்க வேண்டும். சாதி வெறியர்களை அம்பலப்படுத்திய பு.மா.இ.மு தோழர்களுக்கு நன்றி.

 5. இன்னுமொரு ஏகலைவன் என்பது மன வருத்தத்தை தருகிறது

  கிருத்துவர்கள் ஜெப கோபுரம் அமைப்பது போல , மன உளைச்சலில் உள்ள ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு , அவர்கள் உரிமையை கூறி பக்க பலமாக இருக்க ஒரு அமைப்பு தேவை .

  பின்டெரெஸ்ட் ,மீட்டப் , பேஸேபுக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி இதுபோன்ற மாணவர்களை சென்றடைய வேண்டும் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க