privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்அதிகாரத்தை கையில் எடுப்போம் ! பிரதீப் - லோகநாதன் உரை !

அதிகாரத்தை கையில் எடுப்போம் ! பிரதீப் – லோகநாதன் உரை !

-

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !! – கருத்தரங்கம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF), இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  ( IFTU ),  புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ), அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (All ECLC W & E U ) ஆகிய 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது என்ற அடிப்படையில் கடந்த 28.1.2018 அன்று  சென்னையில் கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது

தோழர் லோகனாதன்

இக்கருத்தரங்கில் புதுவை புஜதொமு-வின் தோழர் லோகநாதன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் “ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம் கிடையாது. பணியிடங்களில் அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய ரூ. 2 மதிப்புள்ள பாதுகாப்பு முகமூடியைக் கூட முறையாக வழங்காமல், வாரம் ஒருமுறை வழங்குகிறார்கள்.

சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தின் தூசுகளுக்கு மத்தியில்தான் உணவு உட்கொள்கின்றனர். அதே புழுதியில் தான் பணிபுரிகின்றனர். இந்நிலை இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்துத் தொழில்களிலும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசே தமது பொதுத்துறை நிறுவனங்களில் சட்டத்தை மீறி அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்திருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை பெருவாரியாக குறைத்துக் கணக்குக் காட்டுகிறது.

விவசாயத்துக்கான மானியத்தை ரத்து செய்வது, தண்ணீர் தர மறுப்பது ஆகிய நடவடிக்கைகளால் மத்திய மாநில அரசுகளால் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அதன் விளைவாக, விவசாயிகள் விவசாயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அத்துக்கூலிகளாக  நகரத்தை நோக்கி தள்ளப்படுகின்றனர். இவர்கள்தான் இங்கு ஒப்பந்தத் தொழிலாளியாக, ரிசர்வ் பட்டாளமாக வருகின்றனர்.

விவசாயிகள் கிராமத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும், பார்ப்பனிய ஒடுக்குமுறையின் காரணமாக அவர்கள் தங்களின் மீதான சுரண்டலுக்கு எதிராக கிளர்ந்தெழுவது இல்லை. அவர்கள் நகரத்தில் தொழிலாளர்களாக மாறினாலும் அவர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

தொழிலாளர்கள் சங்கமாகத் திரள்வதற்குத் தயங்குவதற்குக் கூறும் முதல் முக்கியக் காரணம், அவர்களின் குடும்பச் சூழல் மற்றும் பொருளாதார நிலைமைதான். வர்க்கச் சுரண்டலை அவர்கள் சூழல் எனக் கருதுகிறார்கள். வர்க்கச் சுரண்டலை வெறுமனே சூழல் என்று பார்க்க முடியுமா ? டீசல் விலை, பெட்ரோல் விலை உயர்வு, பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவைதான் மோடி அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சூழல். இது இயற்கையான விசயம் அல்ல. கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும்.

நமது பிரச்சினைகள் அனைத்தும், அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் விளைவே ஆகும். ஆகவே அதனை வெறுமனே தனிப்பட்ட சூழலாக நாம் கருத முடியாது.

மற்றொரு பக்கத்தில் கருத்துச் சுதந்திரத்தை முடக்குகிறது மோடி அரசு. பாசிசத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதனை முன்னின்று சங்க பரிவார அமைப்புகள் செய்து வருகின்றன. இதனையே முதலாளிகளின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் பணியிடங்களில் செய்கின்றனர். எதிர்மறை கருத்துக்களை கைவிடவேண்டும் என்று கூறுகின்றனர். பார்ப்பனியம் இங்கு முதலாளித்துவத்துக்குச் சேவை செய்கிறது.

பலரும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். குறைந்தபட்ச கூலி சட்டத்தை, அரசு நிறுவனமான நெய்வேலி சுரங்க நிறுவனமே பின்பற்றுவதில்லை. பின்னர் எப்படி தனியார் முதலாளிகள் பின்பற்றுவார்கள்?  ஒரு வேளை நீதிமன்றம் சொன்னாலும், அந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு தனியார் நிறுவனங்கள் தயார் இல்லை. நீதிமன்றமும் சொன்ன பிறகும் நடைமுறைப்படுத்தமாட்டேன் எனச் சொல்பவர்களுக்கு என்ன பதில்? அதற்கு சங்கமாக திரண்டால் மட்டும் போதாது. அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.

நீதிமன்றம், தொழிலாளர்துறை தீர்வு தராது. அதற்கு தொழிற்சங்கமாக திரண்டு, அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட முடியும் ” என்றார்.

*********

இக்கருத்தரங்கில் பேசிய அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் தோழர் பிரதீப் அவர்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆங்கிலத்தில் வாசித்தார். அதனை புஜதொமு-வைச் சேர்ந்த தோழர் விஜயகுமார் தமிழில் மொழிபெயர்த்தார்.

தோழர் பிரதீப் தனது உரையில் கூறியதாவது:

கடந்த 2017-ம் ஆண்டு இதே நேரத்தில் சர்வதேச சுரங்கத் தொழிலாளர்கள் மாநாட்டை இந்த நான்கு தொழிற்சங்கங்கள் மற்றும் வேறு நான்கு தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தியாவில் நடத்துவதற்கான வேலைகளில் மூழ்கி இருந்தன. அவ்வேலைகளில் மிகவும் துடிப்போடு பங்கெடுத்துக் கொண்ட தொழிற்சங்கமான, மஸ்தூர் சங்கதன் சமீதியை (MSS) கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் பல்வேறு பொய்யான காரணங்களைக் காட்டி ஜார்கண்ட் அரசால் தடை செய்துள்ளது .

இந்தக் கருத்தரங்கின் முதல் தீர்மானமாக மஸ்தூர் சங்கதன் சமீதியின் மீதான ஜார்கண்ட் அரசின் தடைக்கு நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

இந்தக் கருத்தரங்கம் இந்தியத் தொழிலாளிவர்க்கத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்த முறையின் மீது அக்கறை செலுத்துகிறது.

இந்தியாவில் இருக்கும் ஒப்பந்த முறையானது, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அடிமாட்டுக் கூலிக்கு எவ்வித அடிப்படை வசதியும் வழங்கப்படாமல் கொத்தடிமைகளைப் போல  தொழிலாளர்களை இடைத்தரகர்கள் மூலமாக வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்த முறை இருந்தது. இத்தகைய நிலையிலிருந்து தான் இந்தியாவின் தொழில்துறை வளர்ந்தது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க அரசாங்கம், தொழிலாளர்களின் வாழ் நிலைமையை அவ்வப்போது குழுக்களை அமைத்து பரிசீலித்தது. 1860-ம் ஆண்டு அமைக்கப்பட்ட வைட்லி கமிசன் குழு, தனது பரிந்துரையில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்கவேண்டும் எனக் கூறியது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட அனைத்துக் கமிட்டிகளும்  அதனை பரிந்துரைத்தன. இன்று வரை இதே நிலைமை தான் நீடிக்கிறது.

ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் குறைந்த கூலி, அதிக வேலை நேரம், சமூகப் பாதுகாப்பின்மை, வேலைப் பாதுகாப்பின்மை போன்றவற்றால் சுரண்டப்படுகின்றனர்.

தோழர் பிரதீப்

இத்தகைய ஒப்பந்த தொழிலாளர் முறையை முறைப்படுத்த 1970-ம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டம் இயற்றப்பட்டது. அன்றைய சூழலில் எழுந்த பல்வேறு போராட்டங்களின் பின்புலத்தில் இருந்துதான், இச்சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றுவரை இச்ச்ட்டத்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு பயனும் இல்லை. இச்ச்ட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசு இச்சட்டத்தை நிறுவனங்கள் மீறுவதற்கு உதவியிருக்கின்றது. நீதிமன்றங்களும் அதற்குத் துணை நின்றிருக்கின்றன.

இச்சட்டத்தின் சில சரத்துகள் அதனை மீறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தன. 1990களில்  தனியார்மயக் கொள்கைகள், அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான இலகுவான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒப்பந்த தொழிலாளர்  (முறைப்படுத்துதல், ஒழித்தல்) சட்டத்தை மீறுவதற்கு ஏற்ப பல்வேறு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முதன்மையான சட்டமீறல் என்னவெனில், நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளிலும், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் புகுத்துவது, நிரந்தரத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை விடக் குறைவான சம்பளத்தை அவர்களுக்குக் கொடுப்பது என்பதுதான்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை பாதுகாக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை, தமது பணியில் இருந்து விலகிக் கொண்டது. குறிப்பாக உச்சநீதிமன்றமே, ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழித்தல்) சட்டம் (1970)-ஐ மீறியது. கடந்த 2001-ம் ஆண்டு இந்திய எங்கு ஆணையத்திற்கு (SAIL) எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதன் மூலம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்தத் தேவையில்லை என்ற நிலையை நிறுவனமயப்படுத்தியது.

ஒப்பந்த தொழிலாளர் நலச் சட்டங்களை மீறுவதற்கு ஏற்ப, அப்ரண்டீஸ் (தொழில் பழகுனர்) போன்ற பல பெயர்கள் உபயோகிக்கப்பட்டன. நாளாக நாளாக இச்சட்டம் வெறும் காகிதமாகவே இருக்கிறது.

தற்போது மோடி அரசு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்னர், இச்சட்டத்தை பாஜக திருத்தம் செய்ய முனைகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழிலாளர் நலப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு வெளியே துறத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்து வந்த சிறு சிறு உரிமைகளும் கூட தற்போது மறுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு தற்போது பரிந்துரைத்திருக்கும் சீர்திருத்த வரைவில்ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் சட்டம் பிரிவு 12இல் குறிப்பிடப்பட்டிருக்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஏற்பாடு செய்வதற்கான உரிமம் வாங்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்திக் கொடுக்கிறது. அச்சட்டத்தின் பிரிவு 10-ல் ஒப்பந்தமுறை தடை செய்யப்பட்ட தொழில்களிலும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது இச்சட்டத்திருத்த வரைவு.

இந்த கருத்தரங்கம், ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையெல்லாம் கவலையோடும், அக்கறையோடும், பரிசீலித்து விவாதிக்கிறது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்களின் அதே வேலையைச் செய்தாலும், அவர்களுக்கு குறைவான கூலியே கொடுக்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லும் சம வேலைக்கும் சம ஊதியம் என்ற சட்டப்பிரிவை மத்திய மாநில அரசுகள் மீறுகின்றன. அவை சட்டப் பிரிவு 25(5A)-வைக் கைவிட தயாராக இருக்கின்றன. இந்தக் கருத்தரங்கம் இதனைக் கண்டிக்கிறது.

இந்த கருத்தரங்கத்தின் கருத்துக்கள், அரசு மற்றும் ஆட்சியாளர்களின் கொள்கைகள், இதன் ஊடாக அரசியல் கட்சிகள் எடுக்கும் நிலைமைகளை பரிசீலிக்கின்றன.

அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கையின் காரணமாக,  தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிரிக்கிறது. இதன் மூலமாக பெருமுதலாளிகளுக்கு சேவை செய்து, அவர்களது செல்வத்தை உயர்த்துகிறது அரசு. குறிப்பாக ஒப்பந்தமயமாக்குதலை அதிகரிக்கிறது. அதன் மூலம் கூலியை குறைக்கிறது. இந்தக் கருத்தரங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது.

  • மஸ்தூர் சங்கதன் சமிதி (MSS) தொழிற்சங்கத்தை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் பல்வேறு பொய்யான காரணங்களைக் காட்டி ஜார்கண்ட் அரசு தடை செய்ததை இந்த கருத்தரங்கம் கண்டிக்கிறது.
  • ஒப்பந்தத் தொழிலாளர்களுடைய வேலையை நிரந்தரப்படுத்த வேண்டும்
  • சம வேலைக்கு சம ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்.
  • ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்.
  • நாடு தழுவிய அளவிலான எதிர்ப்பு இயக்கத்தை மார்ச் 5 அன்று எடுக்கவெண்டும் என இக்கருத்தரங்கம் தீர்மானத்தை முன் வைக்கிறது. நாடு முழுவதும் அன்றைய தினம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க