Thursday, June 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்காண்டிராக்ட் முறைக்கு எதிராக திரண்ட தொழிலாளிகள் ! சென்னை பொதுக்கூட்டம்

காண்டிராக்ட் முறைக்கு எதிராக திரண்ட தொழிலாளிகள் ! சென்னை பொதுக்கூட்டம்

-

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !
கருத்தரங்கம் – சென்னை பொதுக்கூட்டம்

காலை 10 மணிக்குத் துவங்கிய கருத்தரங்கம் பிற்பகல் 4.30 மணிக்கு முடிந்தவுடன், சென்னையின் புறநகரான ஆவடியில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு பு.ஜ.தொ.மு-வின் மாநிலத்தலைவர் தோழர் அ.முகுந்தன் தலைமை தாங்கினார். காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் சரவணன், மணலி தொழிற்சங்கங்களது கூட்டமைப்பின் ( FMTU ) பொதுச்செயலாளர் திரு. செங்கை எஸ்.தாமஸ், AICCTU  சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் கு.பாரதி ஆகியோர் தங்களது உரையில் காண்டிராக்ட் முறையை ஒழிப்பதற்கு எடுக்கப்படுகின்ற எந்த முயற்சிக்கும் ஆதரவையும், கூட்டான செயற்பாட்டையும் உத்தரவாதம் செய்தனர்.

காண்டிராக்ட் முறைக்கு எதிராக ஒருங்கிணைந்த செயற்பாட்டுக்கு அடித்தளமிட்டுள்ள 3 சங்கங்களின் சார்பில் உரையாற்றப்பட்டது.  இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு ( IFTU ) சார்பில் அதன் தேசியக்குழு உறுப்பினரும், தெலுங்கானா மாநில செயலாளருமான தோழர் சூர்யம், புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ) சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் வாசுதேவன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். தோழர் விஜயகுமார் தனது சிறப்புரையில்

தோழர் முகுந்தன்

“ காண்டிராக்ட் முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பிற உழைக்கும் மக்கள் கருதுகின்றனர். இது காண்டிராக்ட் தொழிலாளியின் பிரச்சினை என்று நிரந்தரத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களால் தான் உள்ளூர்காரர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது என்கிற கருத்து அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக காணப்படுகிறது. 1991 முதல் அமலாக்கப்பட்டு வருகின்ற தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையை உள்ளடக்கிய மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் காரணமாக விவசாயத்திலிருந்து விரட்டப்பட்ட விவசாயியும்,  நெசவிலிருந்து விரட்டப்பட்ட நெசவாளர்களும், சிறு வணிகத்திலிருந்து துரத்தப்பட்ட வணிகர்களும், கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழிலிலிருந்து விரட்டப்பட்ட கோடிக்கணக்கான மக்களும் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக நடுத்தெருவுக்கு வந்தனர். வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட இந்த மக்கள் எந்த வேலைக்கும், எத்தகைய ஆபத்தான நிலையிலும் வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். அற்பக் கூலிக்கு எவ்வளவு மணிநேரம் உழைக்கவும் சொந்த நாட்டிலேயே அகதியாக ஊர், ஊராக வேலை தேடி அலைகின்றனர். இவர்கள் தான் காண்டிராக்ட் என்கிற கொத்தடிமை முறைக்கு அடித்தளமாக இருக்கின்றனர்.

தோழர் விஜயகுமார்

இந்த ரிசர்வ் பட்டாளத்தை வைத்துக் கொண்டு, நிரந்தர வேலைகளை ஒழித்தும், சம வேலைக்கு சம ஊதியம் என்பதை மறுத்தும், இயந்திரம் மற்றும் பணியிடத்தில் சாதாரண பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட செய்யாமலும் தன்னுடைய இலாபவேட்டையை நடத்தி வருகின்ற கார்ப்பரேட்டுகளுக்கு காண்டிராக்ட் முறையானது மேலும், மேலும் கொழுப்பதற்கு உதவியாக இருக்கிறது. இதன் பொருட்டு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து, அரசு என்பது முதலாளிகளது அடியாள்படை தான் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது, மோடி கும்பல்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்ற இனவாதிகள், அந்த தொழிலாளர்கள் எத்தகைய வாழ்நிலையில் இருக்கின்றனர் என்பதைப்பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நள்ளிரவு தூக்கத்தில்கூட,கால்நடைகளைப் போல வேலைக்கு இழுத்துச் செல்லப்படுவதும்,  சிறு முணுமுணுப்பு எழுந்தால்கூட அடியாட்களை வைத்து அடித்து நொறுக்கி  அவர்களை எப்போதுமே பீதியில் வைத்திருப்பதும் சகஜமான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு போட்டியல்ல. மாறாக, கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு சுலபமான இலக்கு. 

தோழர் கோவன் குழுவினர்

எல்லா துறைகளிலும், எல்லா வேலையிலும்  காண்டிராக்ட் முறையே பிரதான வேலையளிப்பு முறையாக மாறியுள்ள இந்த சூழலில் காண்டிராக்ட் முறை பற்றி கவலைப்படாமலோ, அதனை எதிர்த்து முறியடிக்காமலோ நமது சொந்த வேலையைக்கூட பாதுகாத்துக் கொள்ள முடியாது என்கிற நிலையில் நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை  எல்லா தரப்பு உழைக்கும் மக்களும் சிந்திக்க வேண்டும் என்பதே இந்த முழக்கங்கள் அரங்கிலிருந்து பொதுவெளிக்கு வந்திருக்கிறது. காண்டிராக்ட் முறையை ஒழிப்பது நமது சொந்த வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதன் ஒரு பகுதியே “

என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

அருணோதயா குழுவினரது கலைநிகழ்ச்சி

பொதுக்கூட்டத்தின் இடையே அருணோதயா குழுவினரது கலைநிகழச்சி நடைபெற்றது. இறுதியில் தோழர் கோவன் தலைமையில் ம.க.இ.க கலைக் குழுவினரது புரட்சிகர கலைநிகழச்சி நடைபெற்றது. பு.ஜ.தொ.மு-வின் திருவள்ளூர் (மேற்கு) மாவட்டச் செயலாளர் தோழர் முகிலனது நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது.

காண்டிராக்ட் முறை ஏன் ஒழிக்க வேண்டும் என்பதை ஆலை வளாகத்திலிருந்து வெகுமக்கள் மத்தியில் கொண்டு சென்றது, இந்த பொதுக்கூட்டம்.

 

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி
தொடர்புக்கு : 9444442374

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க