Saturday, June 15, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுகுற்றங்களின் தலைநகரம் சென்னை !

குற்றங்களின் தலைநகரம் சென்னை !

-

மீபகாலமாக சென்னையில் கொலை, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பங்கள் அதிகரித்து வருவது பொது மக்களுக்கு மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான “மெட்ரோ” திரைப்படம் மாணவர்கள், இளைஞர்கள் எவ்வாறு இது போன்ற குற்ற சம்பவங்களை நோக்கி இழுக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துக் காட்டி இருந்தது. தற்போது அந்தப் படம் சென்னையின் வீதிகளில் வழிப்பறி,கொள்ளை சம்பவங்களாக நிஜமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  ஜெயலலிதா காலத்தில் இதே போன்று குற்றச் செயல்கள் அதிகரித்தபோது தனது ஆட்சியில் குற்றவாளிகள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டதாக தம்பமடித்தார். உண்மையில் அவர் காலத்திலும் சரி, தற்போதைய எடப்பாடி ஆட்சியிலும் சரி குற்றவாளிகளுக்கு குளிர் விட்டுப் போயிருக்கிறது.

சம்பவம் : 1

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் லாவண்யா, 30. மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனமான குளோபல் இன்ஃபோடெக்கில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சென்னையை நோக்கி தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில் அதிகாலை 3.30 மணி அளவில் இரவு பணி முடித்துவிட்டு நுக்கம்பாளையத்தில் வசித்துவரும் தனது சகோதரி வீட்டிற்கு தனியாக அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தப் பெண்ணின் பின் பக்க தலையில் அடித்ததில் சாலையின் நடுவில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த லாவண்யாவை சாலையோரம் உள்ள காலி இடத்தில் தூக்கிச் சென்று அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயின், விலை மதிப்புள்ள ஐ போன் ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.

தட்டுத்தடுமாறி சாலையோரம் வந்து மயங்கி விழுந்த லாவண்யா மயக்க நிலையில் நள்ளிரவு முதல் காலை வரை சாலையோரத்தில் கிடந்துள்ளார். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம்: 2

பூந்தமல்லி, குன்றத்தூரை அடுத்த ராகவேந்திரா நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. கடந்த சனிக்கிழமை கணவன்- மனைவி இருவரும் அருகில் உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பியவர்களை, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ஜெயஸ்ரீயின் பின் புறம் வந்து அவர் கழுத்திலிருந்த நகையை பறிக்க முயல இதனால் நிலைகுலைந்து போன ஜெயஸ்ரீ சாலையில் விழுந்தார்..

அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அசோக்குமார், கொள்ளையனை விரட்டிச் சென்றார். அவர்கள் அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட வண்டியில் தப்பி சென்றனர். கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் அசோக்குமாரும் கீழே விழுந்து காயமடைந்தார்..

சம்பவம்: 3

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மேனகா, ஞாயிற்றுக்கிழமை காலையில் உறவினர் இல்லத் திருமணத்திற்கான பந்தக்கால் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரும்பாக்கத்திற்கு சென்றிருந்தார்.

முகவரி சரியாக தெரியாத நிலையில் விசாரித்தவாறே வள்ளுவர்சாலையில் மேனகா நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த மர்மநபர்கள் மேனகாவின் கழுத்தில் இருந்த 15 சவரன் தங்க சங்கிலிகளை பறித்தனர். சங்கிலிகள் உடனே கையோடு வராததால் மேனகாவையும் தரதரவென சாலையில் அவர்கள் கொடூரமாக இழுத்துச்செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்கள் இழுத்துச் சென்றதில் மேனகா படுகாயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

***

மேற்கண்ட இந்த மூன்று சம்பவங்களில் இரண்டு சம்பவங்கள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சி பார்க்கும் அனைவரையும் நிலை குலைய செய்துள்ளது. சிசிடிவியில் பாதிவாகியிருக்கும் நபர்கள் அனைவரும் மாணவர்கள் அல்லது படித்து முடித்த வேலையில்லாத இளைஞர்கள் தான்.

விருகம்பாக்கம் மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்த ஹரீஷ் 19. மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிப்பவர். சில தினங்களுக்கு முன்னர் மதுரவாயலில் சாலையோரம் நின்ற பைக் ஒன்றை திருடி உள்ளார். பின்னர் அங்கிருந்து தாம்பரம், மீனம்பாக்கம் வழியாக வரும் வழியில் சாலையோரம் செல்போனில் பேசிக் கொண்டு சென்றவர்களிடம் இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை 4 மணி நேரத்தில் 14 செல்போன்களை தொடர்ந்து பறித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஹரீஸ் கூறியது, “திருடிய செல்போன்களை விற்பனை செய்த பணத்தில் நண்பர்களுடன் ஆடம்பரமாக செலவு செய்வேன். ஹோட்டலில் விதவிதமான உணவருந்துவோம். விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவோம். என்னுடைய செலவுக்கு தாய், தந்தை பணம் தருவதில்லை என்றும், எனவே செல்போன்களைத் திருடி அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டோம். கல்லூரிக்கு செல்லும்போது, செல்போன் பறிப்பது குறித்து நண்பர்களுடன் ஆலோசிப்போம். பின்னர், நண்பர் வீட்டுக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு செல்போன் பறிக்கச் சென்று விடுவோம் என்று கூறியுள்ளார். அனேகமாக வழிப்பறி திருட்டில் ஈடுபடும் அனைவரின் நோக்கமும் ஆடம்பர உல்லாச வாழக்கை தான்.

குறுகிய காலத்தில் பணக்காரன் ஆக வேண்டும் விதவிதமான உல்லாசங்களை அனுபவிக்க வேண்டும் என்று நுகர்வுக் கலாச்சாரத்தின் வழி நின்று இன்றைய இளைஞர்கள் சிந்திக்கிறார்கள். திரைப்படங்களும் ஊடகங்களும் அத்தகைய மல்டிபிளக்ஸ் வாழ்க்கையைத்தான் காட்டியவாறே ஆசையைத் தூண்டுகிறது. இன்னொரு புறம் ஒயிட் காலர் குற்றங்கள் பெருகி வரும் போது அத்தகைய வாய்ப்பு அற்ற கீழ்மட்ட குற்றவாளிகளே  இத்தகைய வழிப்பறிகளை அதிகம் செய்கின்றனர்.

அதன் விளைவு கடந்த 2016 -ம் ஆண்டு பதிவாகியிருந்த 448 செயின்பறிப்பு சம்பவங்கள், 2017 -ம் ஆண்டில் 616 ஆக அதிகரித்துள்ளது. இதுவே செல்போன் பறிப்புவழக்குகள் 2016 -ம் ஆண்டில் 179 ஆகவும், கடந்தாண்டு 520 -ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் பதிவான வழக்குகளில் 2016 -ம்ஆண்டைவிட கடந்தாண்டு பதிவான வழக்குகள் தான் அதிகம். அதேபோல, சென்னை காவல்மாவட்டங்களில் 99 செயின் பறிப்பு வழக்குகளும், 60 செல்போன் பறிப்பு வழக்குகளும் பதிவாகி முதலிடத்தில் உள்ளது தியாகராய நகர். அதற்கடுத்தடுத்த இடங்களில் அம்பத்தூர், அண்ணாநகர், பரங்கிமலை காவல் மாவட்டங்கள் உள்ளன. மாதவரம், அடையாறு, மயிலாப்பூர் மற்றும் கீழ்பாக்கம் காவல் மாவட்டங்களிலும் செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளது.

இவற்றில் சுமார் 4 ஆயிரத்து 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள தியாகராயர்நகர் மாவட்டத்தில் தான் கொலை, கொள்ளை, வழிப்பறி என 350 குற்றவழக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது.

டெல்லியில் நிர்பயா வல்லுறவிற்கு பிறகு கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கணிசமாக அதிகரித்தது. அதன் மூலம் குற்ற சம்பவங்கள் குறையும் என்றும் வாதிட்டார்கள். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவாளிகள் கைது செய்வது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் குற்றச்செயல்களை குறைக்க முடியாமல் தோற்றுப்போய் திணறுகிறது அரசு.

இரவுப்பணிகள் அதிகரித்து வரும் வேளையில் அதற்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் தனியார் நிறுவனங்கள் பொறுப்பைக் கை கழுவிக் கொள்கின்றன. ஐ.டி நிறுவனங்களின் செலவுக் குறைப்பில் பெண்களுக்கு தனிவாகன ஏற்பாடுகள் இல்லாமல் ஆகிவருகிறது. போலீசோ அதிகார வர்க்கத்தின் மையங்களை சுற்றி வருகிறதே அன்றி பொது மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு பணியாற்றுவதில்லை.

இனி மக்கள் ஆங்காங்கே தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் குழுக்களை நிறுவினால்தான் இத்தகை வன்முறைகளை தவிர்க்க முடியும் என்று தோன்றுகிறது.

 

 1. இத்தகைய குற்ற செயலுக்கு சமுக ,பொருளாதார பின்புலங்கள் இருக்கும் நிலையில் ,சமுகத்தை மாற்றி அமைக்காமல் போலிஸ் மட்டும் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியாது என்ற எதார்த்த நிலையில் , பெண்கள் இன்னும் சற்று கூரிய சிந்தனையுடனும், விழிப்புடனும் இருக்க வேணும்…

  15பவுன் 15*25,000 =3,75,000 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கழுத்தில் அணிந்து செல்வது என்பது எத்தகைய முட்டாள் தனம் என்று பெண்கள் உணரவேண்டும்… ஒரு கிராம் தங்கத்துக்கே கொலைகள் விழும் நம் சமுகத்தில் 3,75,000 ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பொதுவெளியில் பாதுகாப்பும் இன்றி அதுவும் அதிகாலையில் அணிந்து செல்வது என்பது விழிபுணர்வு அற்ற செயல் தான்… சமுகம் எப்படி இருக்கு நாம நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்ளனும் என்ற சிந்தனை பெண்களுக்கு கண்டிப்பாக வேண்டும்…

  அருத்தி ராய் அவர்களின் புகைபடத்தில் பார்த்த நினைவு , டாகடர் ஷாலினி அவர்களையும் புகைபடத்தில் பார்த்த நினைவு…… அவிங்கள போல மிக எளிய அணிகலன்களுடன் பெண்கள் பொதுவெளியில் தம்மின் அறிவை முதன்மை படுத்திகொண்டு அணிகலன்களை குறைந்தது கொள்ளவேண்டும்…

  சென்னை மற்றும் அதன் புறநகர்களில் நடக்கும் சமுக குற்றங்களை காணும் தருணத்தில் மேல் உள்ள அறிவுரையை தான் என் மனைவிக்கும் , சகோதரிகளுக்கும் தொடர்ந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்…

  “என்னாது அருத்தி ராய் மாதிரியா, ஷாலினி மாதிரியா” என்று கூறி எள்ளி நகையாடல் தொடந்துகிட்டு இருக்கும் பெண்கள் சார்ந்த சமுகத்தில் இந்த சமுக குற்றங்கள் தொடர தத்தான் செய்யும்…

  //ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த லாவண்யாவை சாலையோரம் உள்ள காலி இடத்தில் தூக்கிச் சென்று அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயின், விலை மதிப்புள்ள ஐ போன் ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.//

  • “அருத்தி ராய் அவர்களின் புகைபடத்தில் பார்த்த நினைவு , டாகடர் ஷாலினி அவர்களையும் புகைபடத்தில் பார்த்த நினைவு…… அவிங்கள போல மிக எளிய அணிகலன்களுடன் பெண்கள் பொதுவெளியில் தம்மின் அறிவை முதன்மை படுத்திகொண்டு அணிகலன்களை குறைந்தது கொள்ளவேண்டும்…”

   மிக மிக சரியான அரிவுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க