Saturday, June 6, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் காஞ்சிபுரம் விபத்து : நமது மக்கள் இப்படித்தானா சாக வேண்டும் ?

காஞ்சிபுரம் விபத்து : நமது மக்கள் இப்படித்தானா சாக வேண்டும் ?

-

காஞ்சிபுரம் அருகே தாமலில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற டாடா ஏஸ் வாகனம் மீது தனியார் ஆலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியை சேர்ந்தவர் தேவன்மணி என்பவரின் மனைவி நளினி குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த சிறுணமல்லியைச் சேர்ந்த சுமார் 25 -க்கும் மேற்பட்டோர் டாடா ஏஸில் தாமல் கிராமத்துக்கு 18 -ம் தேதி மதியம் சென்றிருக்கிறார்கள்.

படம் : நன்றி தினகரன்

இவர்கள் வந்த டாடா ஏஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் இருந்து எதிர்புறம் செல்ல வழி இல்லாததால், சாலையில் உள்ள சென்டர் மீடியனை உடைத்து அந்த வழியை பொதுமக்கள் பைக், கார் போன்ற வாகனங்கள் செல்ல பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இவ்வழியாக சென்றால் விரைவில் தாமல் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதால் சாலையில் இருந்து சற்று உயரமாக இருந்த சென்டர் மீடியன் உடைக்கப்பட்ட பாதை வழியாக டாடா ஏஸ் கடக்க முயன்றது.

அதிக பாரம் மற்றும் மேடான பகுதியாக சென்டர் மீடியன் இருந்ததால், டாடா ஏஸ் வண்டி வேகமாக ஏற முயன்ற போது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி எதிர்திசையில் மற்றொரு வாகனம் வந்ததால், டாடா ஏசை பிரேக் போட்டு நிறுத்த டிரைவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், மேடான பகுதி என்பதால் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து அவ்வண்டி பின்னோக்கிச் வேகமாக கீழே இறங்கியுள்ளது.

அதே சமயம், பெங்களூரு மார்க்கத்தில் இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக ஒரகடம் சென்ற ஒரு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி வந்த டாடா ஏஸ் மீது உரசிவிட்டு சென்றது. இதனால் தடுமாறிய டாடா ஏஸ் நிற்காமல் பின்னோக்கி வந்து கொண்டே இருந்ததை டிரைவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், டாடா ஏஸ் மீது இரண்டாவதாக வேகமாக வந்த மற்றொரு தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் டாடா ஏஸ் தூக்கி வீசப்பட்டு, வேனில் இருந்தவர்கள் அலறித்துடித்தனர். இந்த கொடுரமான விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிரார்கள். படுகாயமடைந்த 4 பேர் நிலை கவலைக்கிடமாகவும், 3 பேரை மேல் சிசிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தை டாடா ஏஸ் டிரைவரின் அஜாக்கிரதையால் நேர்ந்த கோரம் என்கிறார்கள். முக்கியமாக, தேசிய நெடுஞ்சாலையில் வளைவே இல்லாத இடத்தில் விதியை மீறி வலதுபுறமாக திரும்பி கடக்க முயன்றது, பின்னால் பேருந்துகள் வருவது தெரிந்தும் கவனக் குறைவாக சாலையைக் கடக்க முயன்றது, அனைத்துக்கும் மேலாக சரக்குகள் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டிய டாடா ஏஸ் சரக்கு வண்டியில் விதிகளை மீறி ஆட்களை ஏற்றிச் சென்றது ஆகிய காரணிகளே 9 பேரின் உயிரைப் பறித்த கோர விபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது.

உண்மையில் எந்த ஓட்டுனர்களும் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வாகனத்தை இயக்குவது இல்லை. அப்படியிருந்தால் தினந்தோறும் லட்சக்கணக்கான விபத்துக்கள், மரணங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அதனையும் மீறி கன நேரத்தில் நிகழக்கூடும் விபத்தின் சமூகக் காரணிகளை நாம் பரிசிலீக்க வேண்டியது அவசியமாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு “எங்கேயும் எப்போதும்” என்ற திரைப்படம் விபத்து குறித்த ஓர் மாபெரும் அச்சத்தை நமக்கு ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அப்படத்தில் விபத்துக்கான காரணிகள் குறித்து சிறிதும் பேசாமல் கடந்து சென்றிருக்கும். அத்திரைப்படம் குறித்த விமர்சனம் வினவில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக கிராமப்புறங்களில் நல்லது கெட்டது, காரியங்களுக்கு மினி வேன்களை ஏற்பாடு செய்து அதில் சென்று வருவது என்பது அதிரித்திருக்கின்றது. நகரமயமாக்கலின் விளைவு மனித உறவுகளை பிரித்து பந்தாடி வருவதால் திருமண நிகழ்ச்சிக்கு கூட ஆட்களை கூப்பிட்டு செல்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. பேருந்தில் செல்லலாம் என்றால் அதிக கட்டணம். மேலும், எப்பொழுதாவது வரும் பேருந்து என்றால் ஆட்கள் வருவார்களா? மாட்டார்களா? என்ற கவலை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து துரத்துவதால் மினி வேன்களை ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

மினி சரக்கு வேன் ஓட்டுனர்களின் பாடு என்பது பெரும்பாடு. நாள் ஒன்றுக்கு சவாரி கிடைப்பது என்பதே பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைவதற்கு சமமாக உள்ளது. இதுபோக அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள், டீசல் விலை உயர்வு , போலிசின் வழிப்பறி, மற்றும் குடும்ப பிரச்சனைகள் என்று ஏராளமாக உள்ளது. இதற்கு இடையில் தான் தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இருப்பினும் சாலை விதிகளை மீறுவது சரியா? என்று கேள்வி எழலாம். தவறு தான். ஆனால் இந்த இந்தத் தவறுகளின் பின்னே நிறுவனமயமான தவறுகள் பல அடிப்படையாக இருக்கின்றன. அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் தொழிலாளர்களது தவறு மட்டுமல்ல.

தேசிய நெடுஞ்சாலைகளைப் பொறுத்த வரையில் சாதாரண மக்கள் நடப்பதற்கு கூட இடமில்லை எனுமளவிற்கு கார்கள், தனியார் ஆம்னி பேருந்துகள், கார்ப்பரேட் முதலாளிகளின் சரக்கை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் என்று இடைவிடாமல் தாறுமாறாக தறிகெட்டு ஓடுகிறது. இந்த தனியார் வாகனங்களின் ஓட்டுநர்க் குறிப்பிட்ட நேரத்தில் டிரிப்பை முடித்தால்தான் ஊதியம் என்பதால் தங்களது உயிரையும் பணயம் வைத்து ஓட்டுகின்றனர். லாரி உரிமையாளர்களுக்கோ அன்றாடம் ஏறும் டீசல் விலையால் குறிப்பிட்ட நாளில் சரக்கை கொண்டு சேர்க்கவில்லை என்றால் முதலுக்கே மோசம். இந்த இக்கட்டான நிலைமைகளில் விபத்துக்கள் ஏன ஏற்பாடாது?

இந்த நெருக்கடியின் துன்பத்திலிருந்து தப்பிப்பதற்கு ஓட்டுநர்கள் மது அருந்துகிறர்கள். அந்த வகையில் இந்த விபத்துக்கள் து தமிழக அரசின் “டாஸ்மாக்” நிகழ்த்தி வரும் சாதனையாகும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு கட்டண வசூல் என்ற அடிப்படையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறது. அந்த ஒப்பந்தப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் சாலைகளைப் பராமரிப்பதில்லை. சாலைகளுக்கு இடையே முறையான தடுப்புச்சுவர் இருப்பதில்லை.

பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை பலகையோ,பாதுகாப்பு குறியீடுகளோ இருப்பதில்லை. மேலும், வளைவுகளிலும் மற்றும் தேசிய நெடுஞ்சாலையை பிரிக்கும் பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் இருப்பதில்லை; இரவு நேரங்களில் எச்சரிக்கை விளக்குகளும் இருப்பதில்லை. அத்துணை விதி முறைகளும் அலட்சியமாகக் காற்றில் வீசப்பட்டுள்ளது.

இதன் விளைவு கடந்த 2017 -ல் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 5,121 பேரும், மாநில சாலை விபத்துகளில் 4,922 பேரும், மாவட்ட சாலை விபத்துகளில் 2,471 பேரும், கிராம சாலை விபத்துகளில் 1,563 பேரும் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமோ, அரசு உயர் அதிகாரிகளோ எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு சாலை விபத்துக்களைத் தவிர்க்க சாலைகளை அகலப் படுத்துவதும் இல்லை; மேம்படுத்துவதும் இல்லை.

மக்களின் உயிர்களைக் காவு வாங்கும் நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பற்றி கவலைப் படாத அரசும், போலீசும் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கட்டணக் கொள்ளையில் மட்டும் கறாராக செயல்படுகிறார்கள். இவர்களை நம்பிய பொதுமக்களை காவு கொடுக்கிறார்கள்!

மேலும் :

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. இன்று ஒன்பது குழநதைகள்மீது வேகமாக ஒரு வாகனத்தை ஓட்டிவந்தவன் மோதிக் கொன்றிருக்கிறான். தமிழகக் குழநதைகள் இப்படித்தானா சாகவேண்டும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க