Saturday, June 10, 2023
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்தூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் !

தூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் !

-

குவித்து வைக்கப்பட்டிருக்கும் விறகு கட்டைகள்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாநில மாநாட்டின் இறுதி நாளான நேற்று (20.02.2018) அன்று மாலை அணிகளின் செங்கொடி அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது. அனுமதி பெற்று நடைபெற்ற இந்தப் பேரணியில் தூத்துக்குடி ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீசு, அமைதியாக சென்று கொண்டிருந்த பேரணியின் மீது தாக்குதல் நடத்தியது. திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 6 வயது குழந்தை உட்பட 4 பேர் கடுமையாகக் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சி.பி.எம். கட்சியினர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இப்பேரணி பொதுக்கூட்டத் திடலுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை சந்திப்பில் நின்று கொண்டிருந்த ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினம் மற்றும் அவரது போலீசுப் படையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பேரணியில் சென்று கொண்டிருந்த தோழர்களை கூட்ட நெரிசலை வாய்ப்பாகக் கொண்டு கைகளால் தாக்கியுள்ளனர். இதைப் பேரணியில் சென்ற தோழர்கள் கண்டித்துள்ளனர்.

திட்டமிட்டே குவித்து வைத்த விறகு கட்டைகளை  கொண்டு தோழர்களை தாக்கும் ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம்  மற்றும் போலீசு

பேரணியில் குழப்பத்தை உண்டாக்குவதையே நோக்கமாகக் கொண்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம், அந்த சாலை சந்திப்பில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளை எடுத்துப் பேரணியில் நிராயுதபாணியாகச் சென்று கொண்டிருந்த தோழர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். ஏனையப் போலீசும் விறகுக்கட்டையால் தோழர்களை தாக்கியது.

போலீசின் தாக்குதலைக் கைகளால் தடுத்து போலீசை அமைதிகாக்கும் படி சொன்னார்கள் சிபிஎம் தோழர்கள். எதையும் காதில் வாங்காமல், பேரணியைச் சீர்குலைப்பதிலேயே கவனமாக இருந்தது போலீசு. இதில் 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் காயமடைந்தனர். 5-க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுதது சி.பி.எம். தோழர்கள் சிலர் போலீசின் கைகளில் இருந்த விறகுக்கட்டையை பிடுங்க ஆரம்பித்தனர்.

தோழர்கள் திருப்பி தாக்கியதும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடும் ஏ.எஸ்.பி  செல்வநாகரத்தினம்

ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினமோ, தனது சீர்குலைக்கும் வேலையைச் செய்து முடித்த திருப்தியில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். திருப்பூரைச் சேர்ந்த நவநீதக் கிருஸ்ணன் என்பவரின் 6 வயதுக் குழந்தையான அகிலேஷைப் போலீசு தாக்கி அக்குழந்தைக்கு மண்டை உடைந்து இரத்தம் வந்ததைப் பார்த்த சி.பி.எம். தொண்டர்கள் போலீசு கும்பலை விரட்டினர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினமும், உடனிருந்த காக்கிச் சட்டைக் கும்பலும், பின்வாங்கினர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பேரணிக்குப் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கொடுக்கும் காவிப் போலீசு, சி.பி.எம். கட்சியினரின் பேரணியை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டிருக்கிறது. பதிவாகியிருக்கும் வீடியோக்கள் மற்றும் அங்கிருந்த தொண்டர்கள் கூறுவதைப் பார்க்கையில், ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஏதோ மத்திய அரசு சொல்லி அடித்தது போல நடந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் இவ்வளவு பெரிய ஊர்வலத்தில் எந்த ஊர் போலீசும் அடிப்பதை கனவு கூட காணாது. இவரோ ஏதோ தனிப்பட்ட அஜென்டாவில் செயல்பட்டிருப்பது போல தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் போல் செயல்பட்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம்

ஆளும் எடப்பாடி அரசும், அதன் போலீசும் பதில் சொல்லவேண்டிய பல கேள்விகள் இங்கு இந்தக் காணொளிகளில் தொக்கி நிற்கின்றன. ஒரு சாலையின் பெயர்ப்பலகை உள்ள இடத்தில், அப்பெயர்ப்பலகைக்கு கீழே விறகுக்கட்டை குவிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன ? அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் ஊர்வலத்தில் எதற்காக செல்வநாகரத்தினமும் அவரது ஏவல்படையும் தலையிடவேண்டும்?

போராட்டத்தைச் சீர்குலைக்க சட்டவிரோதமாக விறகுக்கட்டையை வைத்து தாக்கி விட்டு, பின்னர் தப்பிச் சென்ற ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினத்தையும், சிறு குழந்தையின் மீது கண்மூடித்தனமாக வெறித் தாக்குதல் நடத்திய கிரிமினல் போலீசின் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

 

  1. தோழர்ளை தாக்கிய போலிஸ் ASPஐ பாராட்டியிருக்கிறான் எச்ச ராஜா

  2. கலவரத்தைத் தடுக்க அல்ல. கலவரத்தைத் தூண்டவே காவல் துறை.காவிகளின் ஏவலில் காவல் கூலிகள்.ஆர்.எஸ்.எஸ். அடிப்பொடியாக ஏ.எஸ்.பி. செல்வ நாகரத்தினம்.செஞ்சட்டைத் தோழர்கள் சரியான பாடம் புகட்டினர். வாழ்த்துக்கள் தோழர்களே.அடித்தால் திருப்பி அடிப்பது ஒன்றே தீர்வு.

  3. போலீசுக்கு காக்கி உடைக்கு பதிலாக காவி உடையை சீறுடையக தமிழக அரசு மாற்றி அமைத்தாலும் ஆச்சிரியப்பட தேவை இல்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க