privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுதிருச்சி ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய் ! PRPC பத்திரிக்கை செய்தி !

திருச்சி ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய் ! PRPC பத்திரிக்கை செய்தி !

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்:09.03.2018

பத்திரிக்கை   செய்தி

  • திருச்சியில் இரட்டைக் கொலை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்!
  • தடியடி நடத்தி ரவுடித்தனம் செய்த திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய்!

மார்ச் 07,2018 அன்று திருச்சி கணேஷ் ரவுண்டனா பகுதியில் ஹெல்மெட் வசூலில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உஷா என்ற கர்ப்பிணியை, இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று உதைத்துக் கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். உஷாவின் கணவர் ராஜா காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹெல்மெட் தாக்குதல்கள், கொலைகள் தமிழக காவல்துறைக்குப் புதிதல்ல. கடந்த ஜூலை 1, 2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனால் மிகப்பெறும் பயனடைந்த ஒரே அரசுத்துறை  காவல்துறைதான். டாஸ்மாக் பார், மணல் கொள்ளை எப்படி கீழ்மட்ட ஆளுங்கட்சி ஊழியர்களுக்கு வசூல் வகையைத் திறந்து விட்டதோ, அதேபோல் ஹெல்மெட் உத்தரவு காவல்துறையின் அன்றாட வருமானத்திற்கான வழியானது. மணல் கொள்ளை, சேகர் ரெட்டி டைரி,குட்கா ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களில் ஆதாரத்துடன் பிடிபட்ட எடப்பாடி-பன்னீர் கூட்டம், மேல்மட்ட காவல்துறை அதிகாரிகள் இதனைத் தெரிந்தே அனுமதித்தனர்.

மக்களின் உயிரை காப்பாற்றத்தான் ஹெல்மெட் கட்டாயம் என்கிறோம் என்கிறது அரசு. உண்மையில் மக்கள் மேல் அக்கறை இருந்தால் டாஸ்மாக்கைத் திறந்து கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் தாலியை அறுப்பதேன்? உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மணல் கொள்ளையில் தமிழகத்தையே சூறையாடுவதேன்? அரசு, காவல்துறை, நீதிமன்றத்தின் மக்கள் மீதான அக்கறை என்பது ஏமாற்றே! கொலையை நேரில் பார்த்துப் பதபதைத்துப் போராடிய மக்களை கொடூரமாகத் தடியடி நடத்தி பொய்வழக்குப் போட்ட அயோக்கியக் கூட்டம்தான் திருச்சி காவல்துறை.

சென்ற வாரம் திருச்சி உய்ய கொண்டான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் கோபாலிடம், ரூ.500/- கொடுத்து, அபராதம் ரூ.100/- போக மீதம் கேட்டதற்கு, கேட்டவரை மட்டுமல்ல, உடன் இருந்தவர்கள் அனைவரையும் தாக்கியுள்ளார். இந்த அநீதியைப் பார்த்து சாலை மறியல் செய்த உய்யகொண்டான் பகுதி மக்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளார் கமிசினர் அமல்ராஜ்.

தேவேந்திரன் என்ற இளைஞரின் கால் முறிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு, காவல்துறையின் வசூல்வெறியைக் கண்டித்து மார்ச் 6, 2018 அன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

பாஜக ஹெச்.ராஜா  முதல் தொலைக்காட்சிகளில் கருத்து கூறும் முன்னாள் போலீசு அதிகாரிகள் வரையிலானவர்கள் ஹெல்மெட் போடாதது தவறில்லையா என்று மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். விரட்டிய ஆய்வாளர் காமராஜ் ஏன் ஹெல்மெட்  அணியவில்லை என இவர்கள் கேட்கவில்லை? 83 கோடி மக்கள் தினமும் ரூ.20/- வருமானத்தில் வாழும் நாடு, மோடியின் இந்தியா என்பது இந்த ஏ/சி அறைக் கணவான்களுக்குத் தெரியாதா?

பொதுவாக காவல்துறை என்றால் எதுவும் செய்யலாம் என்பதே இன்றைய நிலை. ஜல்லிக்கட்டில் ஆட்டோவுக்குத் தீவைத்து, கல்லெறிந்து கலவரம் செய்து; தடியடி, பொய் வழக்குப் போட்டது முதல் மதுரையில் சென்ற வாரம் வி.கே.குருசாமி குரூப்புக்கு ஆதரவாக, கூலிப்படை போல, எதிர் குரூப் ஆட்களை கட்டி வைத்துச் சுட்டதுவரை அனைத்துக் குற்றங்களையும் செய்துவிட்டு, காவல்துறை உங்கள் நண்பன் என்கிறார்கள். உண்மையில் திருச்சியில் நடந்த இரட்டைக் கொலை, ஆதாயத்திற்காக நிகழ்த்தப்பட்ட கொலை( MURDER FOR GAIN). செயின் அறுப்பில் கழுத்தை அறுத்துக் கொல்வது போன்றதுதான் இச்சம்பவம்.

ரூ.100/- பைன் கட்டாமல் சென்றதற்காக விரட்டி விரட்டித் தாக்கிக் கொலை செய்யும் காவல்துறை,  11,000 கோடி அடித்த நீரவ் மோடியை என்கவுண்டரில் சுடுமா? சேகர் ரெட்டியை எட்டி உதைக்குமா? மக்கள் போராடி விசயம் வெளியே வந்திருக்காவிட்டால் உஷாவின் கணவர் ராஜா கஞ்சா விற்றதாக பொய் வழக்கு போட்டிருப்பார்கள். காமராஜ் கடமை தவறாத காவல் அதிகாரியாக சித்தரிக்கப்பட்டிருப்பார். குற்ற கும்பலாக மாறியுள்ள காவல்துறைக்கு மாற்று என்ன? இனி தங்களைத் தாங்களே எப்படி பாதுகாத்துக் கொள்வது? என்பதை தமிழக மக்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணம் இது.

வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு:
அலுவலகம்: 150-இ, ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை – 9865348163,  vanchiadv@gmail.com