Tuesday, August 16, 2022
முகப்பு வாழ்க்கை பெண் தமிழகத்தின் மகளிர் தினக் கூட்டங்களில் இதற்கு முதலிடம் கொடுக்கலாமா ?

தமிழகத்தின் மகளிர் தினக் கூட்டங்களில் இதற்கு முதலிடம் கொடுக்கலாமா ?

-

மிழகத்தின் மகளிர் தினக்கூட்டங்களில் சிறப்புற நடந்த நிகழ்வாக இதைக் குறிப்பிடலாம். நேர்த்தியான நிகழ்ச்சிகள், காட்சிகள், பரிசுகள், உணர்ச்சிகரமான உரைகள், விமர்சனங்கள், தோழமை அனைத்திலும் பாராட்டத்தக்க விதத்தில் நடத்தியிருக்கிறார்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள். வாழ்த்துக்கள்!
– வினவு

மார்ச் 8 சர்வ தேச மகளிர் தினத்தை ஒட்டி வழக்குரைஞர்கள் மத்தியில் மார்ச் 7 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள  பார் கவுன்சில் அரங்கத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை கிளை சார்பாக  அரங்க கூட்டம் நடத்தப்பட்டது. விழாவில் மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் – லெனின் அரங்கம்!

மகளிர் தினத்தை ஒட்டிதான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எச். ராஜாவின் முட்டாள்தனமான திமிர் பேச்சால் பெண்களின் விடுதலைக்கு வித்திட்ட ஆசான் லெனினையும், தந்தை பெரியாரையும் நினைவு கூறும் வகையில் பார் கவுன்சில் அரங்கம் பெரியார் – லெனின் அரங்கமாக மாறியது. எச். ராஜாவின் திமிர் பேச்சால் ஆத்திரமுற்று அரங்கத்தில் நுழைந்த அனைவரையும் பெரியாரும், லெனினும் புகைப்படமாய் இருந்து ஆசுவாசப்படுத்தினர்.

நூல் அரங்கமும் காட்சி அரங்கமும்!

மானமும், அறிவும் மனிதற்கு அழகு என்று கூறிய பகுத்தறிவு பகலவனின் கூற்றுக்கேற்ப மகளிர் தினத்தில் பெண்கள் அறிவார்ந்தவர்களாக தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அரங்கத்தின் இடது புறத்தில் அமைந்திருந்தது நுால் அரங்கம். இது கொண்டாட்ட நாள் அல்ல. பறிக்கப்படும் உரிமைகளையும் தொடுக்கப்படும் ஒடுக்கு முறைகளையும் தகர்த்து எரிவதற்காக உறுதி ஏற்கும் நாள் என்பதனை பறைச்சாற்றும் வகையில் நுழைவாயிலுக்கு எதிரே அமைந்தது காட்சி அரங்கம்.

அரங்கு நிறைந்த கூட்டம்

துவக்கத்தில் அரங்கத்தில் ஆங்காங்கே ஒருசில தலைகள் மட்டும் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் அரங்கு நிறைந்தது.

வரவேற்புரையில் வழக்கறிஞர் மீனாட்சி சிறப்பு பேச்சாளர்கள் உட்பட முன்னிலையாளர்கள், பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்று, மகளிர் தினம் உருவான வரலாற்று சூழலை சுருக்கமாக  பகிர்ந்து அமர்ந்தார்.

உரிமைகளுக்கான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்கவேண்டும்!

தலைமை ஏற்று நடத்திய வழக்கறிஞர் பொற்கொடி, “மகளிர் தினம் உருவானதின் நோக்கத்தை நினைவு கூர்ந்து உறுதியேற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இங்கு பெண்கள் நிலவுக்கு போகலாம். வானில் பறக்கலாம். ஆனாலும் ஆண்டு அனுபவிக்கும் பொருளாகத்தான் பெண்களின் நிலை இருக்கிறது. பெண்கள் அடிமையாக இருப்பதனால் குடும்பத்தில் மட்டும் அல்ல, ஆலைகளிலும் உழைப்பு சுரண்டல் தொடர்கிறது.

பெண்களை வேலைக்கு அமர்த்தினால் எதிர்ப்பு இல்லாமல் சுரண்டலாம் என்பது தானே முதலாளித்துவத்தின் லாபவெறியாக இருக்கிறது… எதையும் ஆண்டு அனுபவித்து தீர்த்துவிடு என்கிற நுகர்வு வெறியை அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலமாக ஆழமாக அனைவரின் மூளையிலும் கையடக்க செல்போன் வரை கொண்டு வந்து   திணிக்கின்றன கார்பரேட் கம்பனிகள்.

பொருள் விற்பனைக்கான  எல்லா விளம்பரங்களிலும் பெண்கள், பொருட்களின் வடிவமே பெண்ணாக சித்தரிக்கப்படும் கோரம். அதனால்தான் பயன்படுத்திய பொருட்களை கசக்கி எறிவது போல அனுபவித்தப் பெண்ணையும் கசக்கி எறி, சிதைத்து கொலை செய், என்ற புதிய பரிமாணத்தை அடைந்திருக்கின்றன பாலியல் வன்கொடுமைகள். ஆடைகளில் குறை, அடக்கமாக இருப்பதில் குறை என அடிமைத்தனத்திற்கு அங்கீகாரம் கேட்கிறது ஆணாதிக்கம். லாபவெறி, நுகர்வு வெறி, ஆணாதிக்கம் ஆகியவைகளை அங்கீகரித்து அதிகரிக்க அசுர வேகத்தில் வேலை செய்யும்  கார்ப்பரேட் அடிமை  மோடி அரசு.

இந்த விசச்சூழலில் அடிமைத்தனம் அகல வேண்டும் என்றால் ஜனநாயகம் மலர வேண்டும். வீட்டுக்குள்ளே ஜனநாயகம் இருக்க வேண்டும் என்றால் நாட்டிற்குள்ளே ஜனநாயகம் நிலவவேண்டும். ஆனால் நமது நாட்டில் ஜனநாயகத்தின் நிலைமை என்ன? ஜனநாயகத் தூண்களில் ஒன்றான உச்சநீதிமன்றத்திலேயே ஜனநாயகம் இல்லை என கதறுகின்றார்கள் அதன் தலைமையில் உள்ள மூத்த நீதிபதிகள்.

விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய ஜனநாயகம் இல்லை, கல்வி கற்கும் ஜனநாயகம் இல்லாததால்தானே அனிதா மரணம். இப்படி நாட்டில் ஜனநாயகமில்லாத சூழல் பெண்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களுக்கும் தான் உள்ளது. எனவே பெண்கள் சமுக நிலைமையை மாற்ற வீதிக்கு வரவேண்டும். ஆனால் பெண்களே அரசியல் என்பது ஆண்களுக்கானது, பெண்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று என அறியாமையில் உள்ளனர். அதனை மாற்றிக்கொண்டு உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதற்கு உறுதியேற்கும் நாள் தான் மகளிர்தினம் என்பதை எடுத்து சொல்லவே இந்த கூட்டம்” என்பதை பல்வேறு நடைமுறை விசயங்களுடன் எடுத்து சொல்லி தனது தலைமை உரையை  முடித்தார்.

பெண்களின் நிலை, போராட வேண்டியதின் அவசியத்தை கவிதை பாடினார் சட்ட கல்லூரி மாணவி இனியா.

பேச்சாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பரிசாக, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்? ” புத்தகம்!

பேச்சோடு மட்டும் அல்லாமல் எழுத்து வடிவிலும் பெண் விடுதலையை கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி ஏற்பாடு செய்யப்பட்டது,  பெண் ஏன் அடிமையானாள்? என்ற பெரியாரின் வெளியீடு பங்கேற்கும் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என பரிசீலித்த பொழுது, பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது சவாலாக இருந்தது. அந்த சுமையை தான் ஏற்றுக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் முன் வந்தார் மூத்த வழக்கறிஞர் ச. துரைசாமி. கடைசி நேர அழைப்பானாலும் நிகழ்ச்சியின் முக்கியம் கருதி பங்கேற்று தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். சிறப்பு பேச்சாளர்களுக்கு இவர் மூலம் சிறப்பு செய்வது பொருத்தமாக அமையும் என்பதால் புத்தகங்களை அளிக்க வேண்டுகோள் விடுத்தோம். ஏற்றுக்கொண்ட அவர் அகமகிழ்ச்சியோடு செய்து முடித்தார்.

ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்ற அகிலா அவர்களுக்கு மரியாதை!

யார் இந்த அகிலா? பெண்களுக்கு ஜனநாயகம் இல்லை என்பது ஜனநாயகத்தின் தூணாண பத்திரிக்கையிலும் தானே! அப்படி ஊடகத்திற்குள் ஒளிந்திருந்த ஆணாதிக்க பாலியல் சீண்டலை துணிவாக எதிர்த்து நின்று,  எதிரியின் பலம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பயமில்லை மானமே பெரிது என்று சன் டி.வி குழுமத்தை சந்திக்கு இழுத்த வீரமங்கை தான் அகிலா. இவரின் போராட்ட குணத்தை அங்கீகரிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கினார்  மூத்த வழக்கறிஞர் வைகை.

பெண் விடுதலை என்பது சமூக விடுதலையின் ஓர் அங்கம்!

எப்போதும் வெற்று திரையை பார்த்து பேசி வெறுத்து போன ஊடகவியலாளர் ரகுமானுக்கு மக்கள் வெள்ளத்தில்  மூழ்கிய திளைப்பு. சரிபாதிக்கும் பெண்கள் இருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு தன் உரையை துவங்கினார் பெண் விடுதலை என்பது சமூக விடுதலையின் ஒரு அங்கம் என விவரங்களை அடுக்கி கட்டி கருத்து சித்திரத்தை எழுப்பினார்

அநீதிகளுக்கு எதிராக அணிதிரள்வதே மகளிர் தினம்!

எல்லாம் மாறிவிட்டது. முன்னேற்றத்தில் தானே பெண்கள். எதற்கு இந்த கூட்டம்? என்பவர்களின் வாதங்களை அன்றும் இன்றும் என்ற வகையில்  அடுக்கினார். முன்னேற்றம் தான் கல்வி, வேலை, விஞ்ஞானம், தொழில் நுட்பம் என எல்லாவற்றிலும் முன்னேறி தான் உள்ளார்கள் பெண்கள். அத்தனை முன்னேற்றமும் உழைப்பு சுரண்டலுக்காய். ஊர் குருவி உயர உயரவே பரந்தாலும் பருந்தாக முடியுமா? விமானிகளாக வானத்தில் பரந்தாலும், ஹாசினிகளாக அரும்பிலேயே அழிக்கப்படுவது தானே இன்றைய நிலை. தொடரும் ஆணாதிக்கம், ஒடுக்குமுறை. அலங்காரப் பேச்சுகளுக்கு மதிமயங்காமல் அநீதிகளுக்கு எதிராக அணி திரள்வதே மகளிர் தினம் என்பதை அழகு கவிதையாய் அளித்து சென்றார் வழக்கறிஞர் கலைச்செல்வி.

“நமக்கு கண்ணகிகள் வேண்டாம்! அநீதியை சுட்டெரிக்கும் குண்டலகேசிகள் வேண்டும்– பேராசிரியர் கருணாநந்தம்

ஏட்டில் உள்ளவை எல்லாம் ஆண்டவர்களின் வரலாறே. மக்களின் வரலாறு எப்போதும் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறே என்பதை துணிவாக சமூகத்தில் வெளிபடுத்துபவர் ஓய்வு பெற்ற வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் அ.கருணாநந்தம். இதிகாச புராண காலம் தொட்டே பெண்ணடிமைத்தனம் நியாயப்படுத்தப்படும் வரலாற்றை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். என்ன தான் பிற்போக்காளர்களின் ஆதிக்கத்தில் பிற்போக்கு கருத்துக்கள் ஆளுமையில் இருந்தாலும், அதற்கெதிரான முற்போக்கு கருத்துக்களின் உறுதி மிக்க போராட்டங்கள் வரலாற்று நெடுகிலும் பயணித்து வருவதை பல்வேறு சான்றுகளுடன் பகிர்ந்தார். பெண் விடுதலையை பெரியார் இல்லாமல் பேச முடியாது என்பதை பெண்களுக்கு பெரியார் முன்வைத்த வழிகாட்டுதல்களை, வழிமொழிந்து அமைந்தார்.

சென்னை சட்டக்கல்லூரியை மாற்றக்கூடாது என போராடும் மாணவர்களின்  போராட்டத்திற்கு ஆதரவு!

உரிமைகளுக்காக போராடும் சட்டக்கல்லூரியை சென்னையிலிருந்து அகற்றி, திருவள்ளூருக்கும், காஞ்சிபுரத்திற்கும் மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவிலேயே உயர்நீதிமன்ற வளாகத்திலேயே சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு படிப்பும், பயிற்சியும் இணைந்தே இருக்கின்றன.  இதை மாற்றக்கூடாது என பத்து நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டம் இருந்து வருகிறோம். வழக்கறிஞர்கள் தான் எங்களது அடைக்கலம். ஆகையால், ஆதரவு தாருங்கள் என மாணவர்களின் பிரதிநிதியாக சட்டக்கல்லூரி மாணவர் சரத்குமார் முன்வைத்தார். மாணவர்களின் நியாயமான இந்த கோரிக்கை நிறைவேறுவதற்கு அனைத்து வழக்கறிஞர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையை அனைவரின் சார்பாகவும் உறுதியளித்தார் கூட்ட  தலைவர்.

போராட்டத்தில் முன்நிற்கும், சட்ட கல்லூரி மாணவி ஸ்ரீஜாவின் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் பாரதிதாசனின் பாடலான “சோலை மலரே” பாடலை இனிமையாக பாடினார். ஆணாதிக்கத்தை கிண்டல் செய்யும்  மகஇக பாடலான “ஏன்னா நான் ஒரு ஆம்பளை” பாடலை சிறுவர்கள் தீபன், பாவெல் பாட, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டலுடன் அரங்கு அதிர்ந்தது.

நீதிமன்றங்கள், சட்டங்களை நம்பி பயனில்லை, மாறாக ஆண்களோடு கைகோர்த்து, சமூக விடுதலையை முன்னெடுப்பதே பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் – மூத்த வழக்கறிஞர் வைகை.

“எத்தனை சட்டங்கள் போட்டால் என்ன? அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எங்கே இருக்கின்றது உத்திரவாதம்? கடுமையான சட்டங்கள்,  தண்டனைகள்  பாலியல் வன்முறையை தடுத்துவிடும் என்கின்றார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நீதிமன்றங்களே ஆணாதிக்கம் கோலோச்சும் இடங்களாக உள்ளன. பெண்கள் பணிபுரியும் இடங்களில் இருக்க வேண்டிய விசாகா கமிட்டி, நீதிமன்றங்களிலேயே இல்லை.

இப்படி துறை சார்ந்தும், சமூக விசயங்களிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பற்றி விளக்கி பேசினார். ஆக நீதிமன்றங்கள், சட்டங்களை நம்பி பயனில்லை, மாறாக ஆண்களோடு கைகோர்த்து, சமூக விடுதலையை முன்னெடுப்பதே பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தீர்வை முன்வைத்து உரையை இறுதி செய்தார். கவிதை , பாடல் ஆகியவற்றை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இறுதியாக வழக்கறிஞர் ராதிகா நன்றியுரையாற்றினார், கூட்டம் நிறைவு பெற்று அனைவரும் களையும் நேரம் அப்படி களைய முனைந்தவர்களை தனது எதுகை மோனை பேச்சால் இருக்கையில் நிறுத்தினார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தொடங்கி, இறுதி வரை இருந்த அனைவரின் பங்களிப்புக்கும் நன்றி பாராட்டி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெரியார் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் உடன் செல்கிறார். இனி அவர் பார்த்துக்கொள்வார்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை, தொடர்புக்கு : 90946 66320.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க