Sunday, August 14, 2022
முகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் சிவந்தது சென்னை ஆவடி - திருச்சி | மே தின நிகழ்வுகள்

சிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்

புஜதொமு, மகஇக, புமாஇமு, பெவிமு ஆகிய அமைப்புகளின் சார்பாக சென்னை ஆவடி காமராஜ் நகர் மற்றும் திருச்சியில் நடந்த மேதின பேரணி ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்

-

சென்னை ஆவடி.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

“கட்சிகளை மாற்றுவதால் தீர்வல்ல! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!” என்ற முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் சென்னைப் புறநகரான ஆவடியில் நடைபெற்றது. இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கிளை – இணைப்பு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் என 450-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பேரணியில் கலந்து கொண்டனர்.

பு.ஜ.தொ.மு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் பேரணியை துவங்கி வைத்தார். தனது தலைமையுரையில் 1886-ல் மேதின தியாகிகளுடைய போராட்டத்தையும், சிகாகோ தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நினைவு கூர்ந்து பேசினார். சிறுநகர் பறையிசை குழுவினரின் பறையிசை முழங்க காமராஜர் நகர் மற்றும் TNHB குடியிருப்பு பகுதி வழியாக ஆவடி நகராட்சி அலுவலகம் வரை விண்ணதிரும் முழக்கங்களுடன் சென்ற பேரணியை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பேரணியின் முடிவில் நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமை தாங்கி நடத்தினார். பு.ஜ.தொ.மு-வின், மாநில பொருளாளர் தோழர் பா. விஜயகுமார் உரையாற்றினார்.

கார்ப்பரேட் அதிகார அமைப்பு முறையின் மீது நம்பிக்கை இழந்த மக்கள் தங்களுடைய வாழ்வாதார பிரச்சனைகளுக்கான போராட்டங்களை தமிழகம் எங்கும் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடத்தி வருகிறார்கள். இந்த கார்ப்பரேட் கட்டமைப்பை அப்படியே பாதுகாக்க ஆளும் வர்க்கம் ரஜினி, கமல், போன்ற நடிகர்களையும் சகாயம் போன்ற அதிகாரிகளையும் களமிறக்குகின்றனர். கட்சிகளை மாற்றுவதால் தீர்வு இல்லை என்றும், தோற்றுப் போய், திவாலான, ஆளத்தகுதி இழந்த இந்த கார்ப்பரேட் கட்டமைப்பை தூக்கியெறிந்து, தொழிலாளர், விவசாயி, மாணவர், இளைஞர், சிறுவணிகர், சிறு – குறு தொழில் முனைவோரின் கூட்டு அதிகாரத்தை கட்டியமைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என உரையாற்றினார்.

ஆர்ப்பாட்ட பகுதியை சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்து ஆர்ப்பரித்தனர். இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

இவன்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

*****************************************

திருச்சியில் மே தினம்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மே தினத்தை முன்னிட்டு திருச்சி காந்திபுரத்தில் காலை 9 மணியளவில் ம.க.இ.க சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. ம.க.இ.க-வின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன் கொடியை ஏற்றி பேசுகையில் “கார்ப்பரேட் முதலாளிகளின் பெட்ரோலிய மண்டல கொள்ளைக்காக, காவிரியை தடுத்ததுடன், டெல்டா விவசாய தொழிலாளர்களை இராணுவத்தில் பிடியில் அச்சுறுத்தி சிறை வைத்து விட்டு தமிழக முதல்வர் எடப்பாடியும், பிரதமர் மோடியும் மே நாள் வாழ்த்தை கூறுவது எவ்வளவு பெரிய துரோகம் என உரையாற்றினார். தோழர் லதா நன்றி கூறி முடித்து வைத்தார்.

பின்னர் மாலை 6 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மரக்கடை ராமகிருஸ்ணா பாலம் அருகே மே தின ஆர்ப்பாட்டம் விண்ணதிரும் முழக்கத்துடன் தொடங்கியது.

பு.ஜ.தொ.மு வின் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமைதாங்கி பேசினார். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க செயலாளர். தோழர்:மணலிதாசன் கண்டன உரையாற்றி பேசினார். இன்று மே தினம், பேரணி, ஊர்வலம், பொதுகூட்டம் எல்லாம் முடக்கப்பட்டு சாதாரண ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதி கேட்டு போலீசிடம் போராட வேண்டியிருக்கிறது. இது முதலாளிகளின் ஆட்சி. OPS,EPS மோடி ஆளவில்லை. மென்னு போட்ட முருங்ககாய திரும்ப குழம்பு சட்டில போட்டு கொதிக்கவுட்டு தரமாதிரி கமலும், ரஜினியும் இந்த கட்டமைப்புக்குள்ளயே நம்மள சுத்த வக்கிராங்க. இது கெட்டுப்போச்சு இழப்பதற்கு ஏதுமில்லை பெறுவதற்கு பொன்னுலகம் உண்டு அதை படைக்கப் போராடுவோம். இரவு பகலாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளின் வாழ்வாதாரம் பாதிப்பதற்கு காரணமான  OLA வை தடை செய்ய வேண்டும் அப்போதுதான் ஆட்டோ தொழிலை பாதுகாக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டார்.

அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க செயலாளர், தோழர் பழனிச்சாமி பேசுகையில், மாநகராட்சி தரைக்கடைகளை எடுக்க புதுசு புதுசா திட்டம் போடுரான். ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தாம காச வாங்கிக்கிட்டு மாநகராட்சி அதிகாரிகள் தரைக்கடைகளை அப்புறப்படுத்துறான். வியாபாரிகளை போட்டோ எடுக்குறான். அவனே 2 பேர தேர்ந்தெடுப்போம் வியாபரிகளுடைய பிரச்சனையை அவங்க கிட்டதான் இனி பேசுவோம் என தொழிற்சங்கங்களை புறக்கணிக்கிறான். கக்கூசுக்கு கூட சாதாரண மக்கள் அழைந்து திரிவதை கண்டுக்காத மாநகராட்சி மலைக்கோட்டையை சுத்தி 60 இலட்சம் செலவு பண்ணி சாரதாசுக்காக (கடை) பாறைகளை வெட்டி பாதை அமைச்சு கொடுத்தான். எல்லை கல்லுக்கெல்லாம் கோயில் சொத்துன்னு சொந்தம் கொண்டாடுர இந்து முன்னணி BJP கும்பல்களெல்லாம் சாரதாஸ்கடை முதலாளி கால்ல விழுந்து கிடக்கிறீங்களா? என என்று கேள்வி எழுப்பினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர், தோழர் பிரிதீவ் பேசுகையில், நகர்புறத்துல “ஓவர் டைம்” வேல செஞ்சாத்தான் பொழப்பு நடத்த முடியும் என்ற நிலைமையில் இளைஞர்களுக்கு ‘கட்டமைப்பு’ என்றால் என்னன்னு தெரியுமா? தெரியக்கூடாதுன்னுதான் அரசு விரும்புது. அதுக்கு தகுந்த மாதிரி தல(ஆஜீத்) பர்த்துடே தான் ஸ்டூடண்டுக்கு தெரியும். அரசு கல்லூரியெல்லாம் தனியாருக்கு போகப்போது அரசாங்க வேலையே இனி கிடைக்க போறதில்லை. ஆளெடுப்பான் அரசாங்கம், எதுக்குன்னா அடையாள் படை போலீசுக்கு மட்டும், ஏன்னா போராட்டக்களை ஒடுக்கனும்ல. புரோக்கர் வேலை பார்த்து மாணவிகளை சீரழிக்க துணிந்த நிர்மலா தேவிக்காக 6 மணி நேரம் கை கட்டி வேடிக்கை பார்த்த போலீசு மக்கள் பாடகர் கோவன் தோழரை வழக்கு போட்ட மறுகனமே கதவ ஒடச்சு தரதரன்னு ‘குற்றவாளி’ போல இழுத்துச் சென்றதை மறக்க முடியுமா? இந்த அரசுக் கெதிராக மாணவர்கள் மக்களோடு இணைந்து ஜல்லிக்கட்டு போல மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா பேசுகையில், ஆலைகளில் சூரியன் உதிக்கும் முன்னே செல்ல வேண்டும், சூரியன் மறைந்த பின்னே வர வேண்டும் என்ற நிலையை மாற்றி 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர பொழுது போக்கு 8 மணி நேரம் நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் சிந்திப்பதற்கும் பெறப்பட்ட உரிமை. இன்று மவுனமாக இருந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சுடுகாடுதான். நெய்வேலி அழிந்தது போல் டெல்டா மாவட்டங்கள் நிலக்கரி, மீத்தேனுக்காக அழியப் போகிறது. தமிழகத்தை காப்பாற்ற BJP,RSS ன் நாசகர திட்டங்களுக்கு எதிராக உறுதியான போரை துவங்குவோம் என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் சத்யா சிறப்புரையாற்றுகையில், 1886 ல் தனது இரத்தத்தால் இந்த தினத்தை பெற்று கொடுத்தது தொழிலாளி வர்க்கம். தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை மார்க்சும், ஏங்கல்சும் 8 மணி நேர வேலை என்ற தீர்மானத்தை கொண்டு வந்ததை நடைமுறையாக்கியது தொழிலாளி வர்க்கம். தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் ஏன்? 70% பேருந்துகள் ஓட்டுவதற்கு தகுதியற்றவை. இதோடுதான் நமது தொழிலாளர்கள் மல்லுகட்டுகின்றனர். அது மட்டுமல்ல செவிலியர் போராட்டத்தில் நீதிமன்றம் பேசிய திமிரை மறக்க முடியுமா? மக்களை வதைக்காதீர்கள் என உத்தரவு போடும் நீதிபதிகள் மருத்துவர்களே இல்லாமல் GH மருத்துவமனையில் நடக்கும் அவலத்திற்கு வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எத்தனை வழக்குகள் போட்டும் நீதி கிடைக்கவில்லையே ஏன்?

காவிரிக்காக திருச்சியில் போராடிய  மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க பொதுச்சொத்தை சேதம் விளைவித்ததாக பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அதே போல் ம.க.இ.க ரதயாத்திரை பாடலைக் கண்டு மிரண்டு போன BJP காவி கும்பல்களை திருப்தி படுத்த தோழர் கோவனை கைது செய்ய அவர் வீடு புகுந்து காலித்தனம் செய்ததை மக்கள் மறக்க முடியுமா? மக்களை ஒடுக்கும் இந்த நீதி மன்றங்கள், காவல் நிலையங்கள் அனைத்தையும் அதே மக்கள் எழுச்சியின் மூலம் அருங்காட்சியகத்தில் வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கரூர் மாவட்ட தோழர் சுரேந்தர் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர்.கோவன் மற்றும் திருச்சி ம.க.இ.க கலைக்குழுவினர் புரட்சிகர பாடல்களை பாடினர்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க