கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …

“விலை அல்லது கொலை” என்பதுதான் பனியாஜியின் அணுகுமுறை. எனவே, எதுவொன்றும் நடக்காது என்று நாம் இப்போது கூறவியலாது. சிக்கல் என்னவென்றால், பேக்கரி டீலிங்குகளில் கர்நாடக அரசியல்வாதிகளும் கில்லாடிகள் என்பதுதான்.

3

ர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதை ஆதரிப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. ஆளுநர் குஜராத்தின் முன்னாள் அமைச்சர், அவர் பா.ஜ.க. வை ஆட்சியமைக்க அழைப்பாரா, அல்லது பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட காங், குமாரசாமி கூட்டணியை அழைப்பாரா, அல்லது வித்யாசாகர் ராவைப் போல எஸ்கேப் ஆகிவிடுவாரா என்பது நமக்கு மட்டுமல்ல, எடியூரப்பாவுக்கும் தெரியாது.

அது அமித் ஷாவுக்கும் மோடிக்கும் மட்டுமே வெளிச்சம்.

மணிப்பூர், கோவா, மேகாலயாவில் ஹிந்து ராஷ்டிரம் அமைக்க பெரும்பான்மையை விலை கொடுத்து வாங்கியது போல, இங்கேயும் வாங்குவதற்கு பனியாஜி நிச்சயம் விரும்புவார். தம்மை விற்றுக் கொள்வதற்கு குமாரசாமி கட்சி எம்.எல்.ஏ க்களிலும் பலர் தயாராகவும் இருப்பார்கள். அவர்கள் ஏற்கனவே அவ்வாறு விலை போனவர்கள்தான். சிக்கல் என்னவென்றால், இந்த பேக்கரி டீலிங்குகளில் கர்நாடக அரசியல்வாதிகளும் கில்லாடிகள் என்பதுதான்.

இருந்த போதிலும், பா.ஜ.க.-வுக்குத் தேவைப்படுபவர்கள் வெகு சில எம்.எல்.ஏக்கள்தான் என்பதாலும், “விலை அல்லது கொலை” என்பதுதான் பனியாஜியின் அணுகுமுறை என்பதனாலும் எதுவொன்றும் நடக்காது என்று நாம் இப்போது உறுதியாக கூறவியலாது. சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் அவகாசம் கொடுத்துவிட்டால், குமாரசாமி, காங்கிரசு கூட்டணி உடனடியாக ஒரு கூவத்தூரைத் தேடி ஓடவேண்டி வரும். அந்த கூவத்தூர் ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, வங்காளத்திலோ இருக்கலாம். நிச்சயம் தமிழ்நாடல்ல.

பா.ஜ.க.-வும் காங்கிரசும் ஒன்றல்ல, பா.ஜ.க.-வும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஒன்றல்ல என்பது உண்மைதான். “இரு தரப்பினரும் ஒன்றல்ல” என்று சொல்வது வேறு, “பா.ஜ.க. விற்கு இவர்கள் அரசியல் மாற்று” என்று புரிந்து கொள்வது வேறு.

குமாரசாமி கூட்டணி ஆட்சியமைப்பதை அமித் ஷா அனுமதிக்கும் பட்சத்தில் அது ஒரு தொலைநோக்குத் திட்டமாக இருக்கும். கூட்டணிக்குள் பதவிச் முரண்பாடுகளைக் கிளப்பி, 2019 தேர்தலுக்கு முன் கூட்டணியை உடைக்கும் திட்டமாக அது இருக்கலாம்.

எதுவாக இருப்பினும், தொலைக்காட்சிகள் அனைவருக்கும் அடுத்து வரும் நாட்கள் தொடர் தீபாவாளிதான். இந்தப் பதவிச் சூதாட்டத்தை ருசிகரமான அரசியலாக மாற்றித்தரும் வேலையை அவர்கள் செய்வார்கள்.

***

நாம் விசயத்துக்கு வருவோம். இன்று காலையில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்றுவிடும் என்பது போல தேர்தல் முடிவுகள் வந்தபோது அதை யாரும் ரசித்திருக்க மாட்டார்கள் – தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட.
குமாரசாமி – காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு வருவது பலருக்கு ஆறுதலாக இருக்கக்கூடும். குமாரசாமி – காங்கிரசு கூட்டணி எவ்வளவு மோசமான நபர்களால் நிரம்பியதாக இருந்த போதிலும், பெருந்தீமையான பா.ஜ.க.வை ஒப்பிடும்போது இந்தக் கூட்டணி பரவாயில்லை என்பதுதான் மேற்சொன்ன ஆறுதலுக்கு உரிய நியாயம்.

பா.ஜ.க.-வும் காங்கிரசும் ஒன்றல்ல, பா.ஜ.க.-வும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஒன்றல்ல என்பது உண்மைதான். எனினும் இவர்கள் பா.ஜ.க.-வின் மதவெறியையும், பாசிசத் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தப் போகின்ற மாற்றல்ல. “இரு தரப்பினரும் ஒன்றல்ல” என்று சொல்வது வேறு, “பா.ஜ.க. விற்கு இவர்கள் அரசியல் மாற்று” என்று புரிந்து கொள்வது வேறு.

இருந்த போதிலும் இந்துத்துவ பாசிசம் நாடு முழுவதையும் ஆக்கிரமித்து வரும் சூழலில், மண் குதிரை என்று தெரிந்தாலும், “வேறென்ன செய்வது, நம்பிவைப்போம்” என்று பலர் எண்ணுகின்றனர். இது குறிப்பிட்ட கட்சிகள் மீதான நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, இந்த அரசமைப்பின் மீதான நம்பிக்கை தொடர்பான பிரச்சனை.

கட்சிகள் அதிகார வர்க்கம் நீதித்துறை உள்ளிட்ட இந்த ஜனநாயக அமைப்பு முற்றிலுமாகத் தோற்று விட்டது என்பதற்கு ஆயிரம் நிரூபணங்கள் வந்த போதிலும், இந்த அமைப்பின் இந்துத்துவ சார்பு, ஆதிக்க சாதிச் சாய்வு, கார்ப்பரேட் அடியாள்தனம் என்பவையெல்லாம் அன்றாடம் நிரூபிக்கப்பட்ட போதிலும், சாதி – மதச் சார்பு, ஊழல் ஆகியவற்றால் இந்தத் தேர்தல் முறையே சிரிப்பாய் சிரித்த போதிலும் – இந்த “ஜனநாயக அமைப்பின்” துணை கொண்டே, இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்று பலர் நம்புகின்றனர்.

“மோடி வெல்லப்படமுடியாதவர்” என்ற பிம்பம் தேர்தல் அரசியல் திருகுதாளங்களால் உருவாக்கப்பட்டதாகும். மோடிக்கு எதிராக நாடெங்கும் திரண்டிருக்கும் மக்களின்  கோபம் அதற்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு வடிவங்களை எடுக்கவில்லை என்பதுதான் மோடியின் வலிமை.

“ஒரு வரியில் சொல்வதென்றால், மாயாவதி – அகிலேஷ் – காங் கூட்டணி அமைத்திருந்தால் உ.பி. யில் பா.ஜ.க. வை வீழ்த்தியிருக்கலாம். கர்நாடகத்தில் காங் – குமாரசாமி கூட்டணி வைத்திருந்தால் பா.ஜ.க.வை முறியடித்திருக்கலாம். மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் இணைந்து ஒரு மெகா கூட்டணி அமைத்தால் 2019 இல் மோடியை தோற்கடித்து விடலாம்” என்ற கோணத்தில் மட்டுமே சிந்திக்கின்றனர்.

***

ப்படியானால், பா.ஜ.க. வின் தேர்தல் தோல்விதான் இந்துத்துவத்தின் தோல்வியா? குமாரசாமியின் வெற்றி மதச்சார்பின்மையின் வெற்றியா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது அபத்தம் என்று புரியும்.

தன்னுடைய மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடைய, “மதச்சார்பின்மை பற்று” குறித்து நம்மைக் காட்டிலும் குமாரசாமிக்கு தெளிவாகத் தெரியும். குமாரசாமியின் “மதச்சார்பின்மைப் பற்று” குறித்து தேவ கவுடாவுக்குத் தெரியும். தங்கள் மந்தையிலிருந்து எந்தெந்த ஆடுகளை அமித் ஷா திருடக்கூடும் என்பது தந்தைக்கும் மகனுக்கும் தெளிவாகத் தெரியும்.

இந்தக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இந்துத்துவ எதிர்ப்பு கொள்கையெல்லாம் இல்லை என்பது மட்டுமல்ல, குமாரசாமிக்கு வாக்களித்த வாக்காளர்களும் இந்துத்துவ எதிர்ப்புக்காக வாக்களிக்கவில்லை என்பதும் அவை சாதி வாக்குகள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. குமாரசாமி ஒருவேளை பா.ஜ.க. வுடன் கூட்டணி சேர்ந்தாலும் அவரது கட்சியினரும் சரி, வாக்காளர்களும் சரி அதிர்ச்சியடையப்போவதில்லை. இவையெல்லாம் ஏற்கெனவே நடந்த கதைகள்தான். குமாரசாமி மட்டுமல்ல, இன்றைய பா.ஜ.க. எதிர்ப்பு மாநிலக்கட்சிகள் பலரும் முன்னர் பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.-வுடன் கூட்டு சேர்ந்தவர்கள்தான்.

அதேபோல, பா.ஜ.க.-வுக்கு போடப்பட்ட ஓட்டுகள் அனைத்தும் இந்துத்துவக் கொள்கைக்கு போடப்பட்ட ஓட்டுகள் அல்ல. காங் ஆட்சியின் மீதான அதிருப்தி, சாதி, அம்மாநிலத்தின் மடாதிபதிகள் வாக்காளர்கள் மீது செலுத்தும் செல்வாக்கு, அனைத்துக்கும் மேலாக, கர்நாடக மாநில அரசியல் இதுவரை காணாத அளவுக்கு, ஓட்டுக்கு 3000 ரூபாய் வரை பா.ஜ.க. வாரி இரைத்திருப்பது – போன்ற பல விசயங்கள் பா.ஜ.க.-வின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கின்றன.
எனவே, பா.ஜ.க. வின் வெற்றியாகட்டும், அல்லது எதிர்தரப்பின் வெற்றியாகட்டும் அவற்றை இந்துத்துவ ஆதரவு அல்லது இந்துத்துவ எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்து கொள்வது பிழையானது.

***

ன்று, இந்து மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளாகட்டும், தனியார்மய தாராளமயத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களாகட்டும், நாடெங்கும் இவற்றை முன்நின்று நடத்துபவர்களில் பெரும்பான்மையினர் தேர்தல் அரசியல் கட்சி சார்புக்கு அப்பாற்பட்ட மக்கள் மற்றும் அறிவுத்துறையினர்தான். இவற்றின் பயனை அறுவடை செய்து கொள்வதற்கான அடையாள நடவடிக்கைகளில் மட்டுமே தேர்தல் கட்சிகள் ஈடுபடுகின்றன.

“மோடி வெல்லப்படமுடியாதவர்” என்ற பிம்பம் தேர்தல் அரசியல் திருகுதாளங்களால் உருவாக்கப்பட்டிருப்பதாகும். உண்மையில் மோடிக்கு எதிராக நாடெங்கும் திரண்டிருக்கும் மக்களின் வெறுப்பும் கோபமும் அதற்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு வடிவங்களை எடுக்கவில்லை என்பதுதான் மோடியின் வலிமை. எனவே, சமூகத்தையும் அரசியலையும் ஜனநாயகப் படுத்துகின்ற வகையிலான போராட்டங்களை கீழிருந்து கட்டியமைப்பதுதான் இந்துத்துவத்துக்கும் சரி, புதிய தாராளவாத தாக்குதல்களுக்கும் சரி, உண்மையான சவாலாக இருக்கும்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழ்ச் சமூகத்தின் பொது மனநிலையாக இருக்கின்ற இந்து மதவெறியின் மீதான வெறுப்புதான் இந்துத்துவத்துக்கு எதிரான உண்மையான அரசியல் ஆற்றல். இதைக் கண்டுதான் பா.ஜ.க. அஞ்சுகிறது. இதைத்தான் நாடு முழுவதும் நாம் உருவாக்க வேண்டும்.

மக்களின் இந்துவெறி எதிர்ப்பு, தனியார்மய தாராளமய எதிர்ப்பு அரசியல் ஆற்றலுக்குரிய அமைப்பு வடிவம், மக்களுடைய அதிகாரமாகத்தான் இருக்க முடியுமேயன்றி, அதனை இன்றைய தேர்தல் அரசியலுக்குள் அடக்க முடியாது.
“இதெல்லாம் சரியானதாக இருப்பினும், இப்போதைக்கு சாத்தியமற்றது” என்று பலர் எண்ணலாம். இப்போதைக்கு சாத்தியம் எது? குமாரசாமி ஆட்சியா? அதை இந்துத்துவ எதிர்ப்பு ஆட்சி என்று நம்பி மனநிறைவு கொள்ளலாமா? அல்லது உண்மையை எதிர்கொண்டு “சாத்தியமற்றதற்காக” போராடலாமா?

என்ன செய்வது என்பதை நாமே யோசித்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது அமித் ஷா நமக்குப் புரிய வைப்பதற்கும் வாய்ப்புண்டு.

– மருதையன்
(மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர்.)