கர்நாடகாவில் இன்று மாலை என்ன நடக்கும் என்ற ஆர்வம், “இந்த வருசம் அழகர் என்ன கலர் பட்டு உடுத்திக்கொண்டு வருவார்” என்ற ஆர்வத்துக்கு சமமானது. “மழை பெய்யுமா பெய்யாதா” என்பதை காரண காரியங்களுடன் ஆயிரம் அறிவியல் ஆய்வுகள் விளக்கிச் சொல்கின்றன. இருந்தாலும் அழகர் உடுத்தி வரும் வஸ்திரத்தின் நிறம் அந்த அறிவியல் ஆய்வையெல்லாம் பொய்யாக்கிவிடும் என்று பக்தர்களுக்கு ஒரு நம்பிக்கை.
முந்தாநாள் இரவு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சிக்கலான தத்துவஞான விவாதத்தின் மையப்பொருள் இதுதான்.
“104 ஐ விட 117 தான் பெரியது என்பது கணிதம். அவ்வாறிருக்க ஆளுநர் 104 தான் பெரியது என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பை எடியூரப்பாவுக்கு எப்படி வழங்க முடியும்?” என்பதுதான் காங் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம்.
“104 பெரிதா 117 பெரிதா என்று நிரூபிக்க 15 நாள் அவகாசம் தரமுடியாது. சனிக்கிழமை 4 மணி வரை அவகாசம் எடுத்துக் கொண்டு நிரூபித்துக் காட்டுங்கள்” என்பது மாட்சிமை தங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பு.
“சரி நிரூபிக்கிறோம்” என்று சவாலை எற்றுக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா. ஒரு காங்கிரசு எம்.எல்.ஏ வை நூறு கோடி ரூபாய்க்கு விலை பேசுகிறார் பெல்லாரி ஜனார்த்தன் ரெட்டி. ஆடியோ டேப் வெளியாகியிருக்கிறது. “எங்க ஆட்கள் 2 பேரைக் காணவில்லை” என்கிறார் குமாரசாமி.
ஐதராபாத்திலிருந்து விமானத்தில் வருவது ஆபத்து என்று பேருந்தில் வருகிறார்கள் காங், குமாரசாமி கட்சி எம்.எல்.ஏக்கள். “வரும் வழியில் விபத்து எதுவும் நடக்காமல் இருக்கவேண்டும். பத்து கொலை செய்து கூட பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு போகிறார்கள்” என்று என்.டி.டிவி சானலில் புலம்புகிறார் காங் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி.
இன்று காலை தற்காலிக சபாநாயகர் போப்பையாவை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. “அவை நடவடிக்கைகளை லைவ் டெலிகாஸ்ட் செய்யச் சொல்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வெளிப்படைத்தன்மையை நாங்கள் வழங்க முடியும்?” என்று ஜோக் அடித்து சிரிக்கிறார்கள் நீதிபதிகள்.
“பலான இடத்தில் பலான டைமுக்கு உன்னை கொலை செய்கிறேன்” என்று சொல்லி போலீஸ் படையின் கண்ணில் மண்ணைத்தூவி, சொன்னபடி செய்து காட்டும் ஹீரோவை நாம் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். இன்று மாலை 4 மணிக்கு அந்த ஹீரோ பாத்திரம் போப்பையாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
“போப்பையா இந்தக் கொலையை எப்படி செய்யப்போகிறார்? என்ன விதமான புதிய கிரிமினல் உத்தியைக் கையாண்டு பாஜக வெற்றி பெறப்போகிறது? அதை குமாரசாமி காங்கிரசு கூட்டணி எப்படி எதிர் கொள்ளப்போகிறது?” என்பதைத்தான் மீடியாக்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன.
சபாநாயகர் எதை வேண்டுமானாலும் செய்து எடியூரப்பாவுக்கு வெற்றி என்று அறிவிக்கலாம். ஒருவேளை யாரையுமே விலை பேச முடியவில்லை என்றால், 104 பேரில் எட்டு பேரை இரண்டு கையையும் தூக்கச் சொல்லி மொத்தம் 112 பேர் கை உயர்த்தியதாக அறிவிக்கலாம். அல்லது சட்ட வல்லுநர்கள் முகுல் ரோத்கியும் கே.கே.வேணுகோபாலும் மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்ய வேறு ஏதேனும் வழி சொல்லிக் கொடுத்திருக்கலாம். எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றத் தெரிந்த மோடிக்கு எடியூரப்பாவை காப்பாற்றத் தெரியாதா என்ன?
ஒருவேளை 4 மணிக்கு பாஜக தோற்று விடுவதாகவே வைத்துக் கொள்வோம். கதை அப்படியே முடிந்துவிடுமா என்ன? ரெய்டு, கடத்தல், விலை, கொலை என்ற எல்லா ஆயுதங்களும் அடுத்தடுத்து ஏவப்படும்.
கொஞ்சம் வேறு விதமாக சிந்தித்து பாருங்கள்
சுமார் 65% மக்கள் பாஜக வுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். காங்கிரசு மட்டுமே பாஜக வை விட 2% வாக்கு அதிகம் பெற்றிருக்கிறது. அங்கே மீறப்படும் ஜனநாயகம் நேரடியாக வாக்காளர்களின் உரிமையைத்தான் கேலிப்பொருளாக்குகிறது.
எனினும், தங்கள் அதிகாரம் பறி போய்விட்டதாக குமாரசாமியும், காங்கிரசும்தான் கொதிக்கின்றனரேயன்றி, அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கொதிக்கவில்லை. தங்கள் அதிகாரம் பறி போய்விட்டதாகவும் மக்கள் பதறவில்லை.
இதற்குப் பொருள் மக்கள் கோபப்படவில்லை என்பதல்ல. மக்கள் மனம் கொதிக்கிறார்கள். என்ன சார் இது அக்கிரமம் என்கிறார் ஒரு டீ மாஸ்டர். ஹிட்லரை விட மோசம் சார் என்கிறார் ஒரு சிறு வணிகர். எனினும் இந்தக் கொதிப்பு எதுவும் வீதிக்கு வரவில்லை. அப்படி கொண்டு வருவதற்கான முயற்சியிலும் சம்மந்தப்பட்ட கட்சிகள் இறங்கவில்லை.
அவ்வாறு மக்கள் வீதியில் இறங்கி நீதியையும், தங்களது அதிகாரத்தையும் நிலைநாட்டிக்கொள்வது அராஜகமென்றும் நீதிமன்றத்தில் முறையிடுவதுதான் ஜனநாயக வழிமுறை என்றும் கட்சிகள் உபதேசிக்கிறார்கள். அதிகாரத்தை மக்கள் தமது சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்வதை மட்டும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, நீதிமன்றம், அதிகார வர்க்கம், போலீசு ஆகிய யாரும் விரும்புவதில்லை. அனுமதிப்பதுமில்லை.
நீதிமன்றமோ அராஜகத்தை அரங்கேற்ற பாசிஸ்டுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. பின்னர் அராஜகத்துக்கே சட்ட அங்கீகாரமும் வழங்குகிறது.
இந்த ஒப்பீட்டைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
1992 டிசம்பர் 6 ஆம் தேதியன்று இந்து மதவெறி பாசிஸ்டுகள், பாபர் மசூதிக்கு எதிரே, அமைதியான முறையில் பஜனை செய்வதற்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம். அந்த “பக்தர்கள்” கையில் கடப்பாரையுடன் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தேதான் அந்த அனுமதி வழங்கப்பட்டது.
காமெராக்கள், நீதிமன்றப் பார்வையாளர்கள் அனைவரும் பார்த்து நிற்க பாபர் மசூதி தரை மட்டமாக்கப்பட்டது. இன்றும் உச்ச நீதிமன்றத்தின் காமெராக்கள் தயாராக இருக்கின்றன. பாஜக வின் கடப்பாரைகளும் தயாராக இருக்கின்றன.
பெங்களூரு விதான் சவுதாவை உள்ளிருந்தே தகர்க்கப் போகிறார்கள் கரசேவகர்கள். மாலை 4 மணிக்கு தொடங்குகிறது கரசேவை.
– மருதையன்
(மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர்.)
புழுத்து நாறும் ஒட்டு கட்சிகளின் பேரம் தான் ஜனநாயகம் என்று மக்களுக்கு புகுத்திருக்கிறது, இந்த சட்டமன்றமும், பாரளுமன்றமும் இதன் வாழ்வு முடியும் தருவாயில் கொழந்து விட்டு எரிகிறது கர்நாநாடக தேர்தல்.
Why whatsapp link is disabled?
அப்போ கம்யூனிசம்தான் ஜனநாயகமா
அதுல உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருக்கா ஷான் ?