ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ? மு.வி.நந்தினி

ஹாலிவுட் முதல் நமது கல்லூரிகள் வரை பெண்களின் முக்கியமான அடையாளமாக திகழ்கிறது ஹை ஹீல்ஸ் செருப்பு. உயரத்தைக் கூட்டும் இச்செருப்பு உண்மையில் பெண்களை சிறுமைப்படுத்துகிறது என்கிறார் நந்தினி.

ஹை ஹீல்ஸ் – கண்ணுக்குத் தெரியாத ஆணாதிக்க சங்கிலி !

2018 – ஆம் ஆண்டு கேன்ஸ் பட விழா பாலியல் சமத்துவத்துக்கான ஆண்டாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. #meetoo என்ற ஹேஷ் டாக்குடன் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் சுரண்டல், பாலியல் அத்துமீறல், பாலியல் வன்கொடுமைகளை ஹாலிவுட் பெண்கள் ஊடகங்களில் பேசினார்கள். பல திடுக்கிடும் உண்மைகளை ஊடகங்கள் துப்பறிந்து எழுதின. பல முன்னணி நாயகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தில் மாட்டிக்கொண்டனர். அவர்களுடைய மரியாதை பறிபோனது. இதுவே இங்கே நடந்திருந்தால் தொடர்புடைய பெண்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, வீதிக்கு வந்திருப்பார்கள். இந்தியா போன்ற பிற்போக்கு சமூகத்தில் வன்முறையை எதிர்கொண்டவரே குற்றவாளி ஆக்கப்படுவார்.

வளர்ந்த நாடுகள் பெண்கள் மீதான பிற்போக்குத்தனத்தை கைவிட்டுவிடவில்லை என்ற போதும், பாலியல் குற்றம்சாட்ட ஆண்களை குற்றவாளிகளாக பார்க்கும் பார்வையை அங்கே காணமுடிகிறது. ஹாலிவுட்டில் தொடங்கிய #meetoo பிரச்சாரம் மற்ற துறைகளில் நடந்த பெண் மீதான சுரண்டல்களை வெளிக்கொண்டுவந்து கொண்டிருக்கிறது. இதை எதிரொலிக்கும் விதமாக கேன்ஸ் திரைப்பட விழா 2018-இல் திரைப்பட தேர்வு குழுவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாலியல் சமத்துவத்தை பேணும் நடவடிக்கையின் தொடக்கமாக இது அமையும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

கிறிஸ்டன் ஸ்டூவர்ட், சிவப்பு கம்பள வரவேற்பின் போது தனது குதிகால் உயர்த்தப்பட்ட இரண்டு காலணிகளை கழற்றினார்.

சற்று பின்நோக்கிப் போவோம்… 2015-ஆம் ஆண்டு கேன்ஸ் பட விழா திரையிடலுக்கு ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளை அணிந்து வராத பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹாலிவுட் நடிகர்கள் ஜூலியா ராபர்ட்ஸ், எமிலி பிளண்ட் போன்றோர் இதை எதிர்த்து குரல்கொடுத்தனர். கேன்ஸ் நிர்வாகிகள் அப்படியேதும் விதி இல்லை என சொன்னபோது, மருத்துவ காரணங்களுக்காக ஹை ஹீல்ஸ் அணிய முடியாத பல பெண்கள், திரையிடலுக்குச் சென்று அனுமதி மறுக்கப்பட்டதை ஊடகங்களில் பதிவு செய்தனர்.

இந்த ஆண்டு நடிகர் கிறிஸ்டன் ஸ்டூவர்ட், சிவப்பு கம்பள வரவேற்பின் போது தனது குதிகால் உயர்த்தப்பட்ட இரண்டு காலணிகளை கழற்றினார். நடிகர்கள் விதவிதமான உடைகளையும் அவர்கள் அணிந்திருக்கும் நகை, செருப்பு உள்ளிட்டவைகளை அலசி ஆராயும் பல முன்னணி ஊடகங்கள் கிறிஸ்டனின் இந்தச் செயலை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்குத் தேவை பெண் உடலின் ‘கவர்ச்சி’தானே தவிர, அதை எதிர்க்கும் செயல்பாட்டை எப்படி அவர்களால் பரப்ப முடியும்.

கிறிஸ்டனின் செயல்பாடு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா? நுகர்வை பெண்ணின் மீது ஏற்றி நுகரும் முதலாளித்துவ உலகில் ஹை ஹீல்ஸ் அணியாத பெண், ‘தகுதி’ குறைவானவரே. தகுதி என்பது அவரை பெண்ணாக ஏற்றுக் கொள்வதிலிருந்து ஆரம்பித்து, அவருடைய பொருளாதார சூழலைக்காட்டும் அளவுகோலாக உள்ளது. ஹை ஹீல்ஸ் ஏன் திணிக்கப்படுகிறது? ஏனெனில் அது பெண்களின் உருவத்தை வளைவு, நெளிவுகளுடன் காட்டுகிறது. நேரடியாகச் சொல்லப்போனால் ஆணின் இச்சையைத் தூண்டும் விதமாக நெளிந்து, வளைந்து செல்லும் நீரலைபோல காட்டுகிறது. (ஆண் கவிகளின் வர்ணனைப் போல் இல்லைதான், என்னால் அப்படி வர்ணிக்க முடியாது).

பல முன்னணி ஊடகங்கள் கிறிஸ்டனின் இந்தச் செயலை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

பிரெஞ்சு மன்னராட்சி காலத்தில் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் அணியும் விதி இருந்திருக்கிறது. அந்த காலத்தில் ஆண்கள் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை இன்ச் உயர்த்தப்பட்ட செருப்புகளையும் அரச மரபினர் இரண்டரை இன்ச் உயர்த்தப்பட்ட காலணிகளை அணிய வேண்டும் என விதிகள் போடப்பட்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் ‘பெண் தன்மை’ இருப்பதை கண்டுபிடித்த சிலர், அதை பெண்களுக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு, ஐரோப்பா முழுவதும் சுவீகரிக்கப்பட்டு, மேட்டுக்குடி சீமாட்டிகளின் அந்தஸ்தை காட்டும் ஒரு வஸ்துவாகிப் போனது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் கட்டவிழ்க்கப்பட்ட தாராளமய நுகர்வில் ‘ஹை ஹீல்ஸ்’ நடுத்தர பெண்களை சென்றடைந்தது. இன்று பணிபுரியும் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவது கட்டாய விதியாகிவிட்டது.

சீனாவில் பத்தாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையான மன்னராட்சியின்போது பாதங்களை மடிக்கும் (கொஞ்சம் கொஞ்சமாக ஊனமாக்குதல்) வழக்கம் மேட்டுக்குடி பெண்களிடையே இருந்தது. அழகுக்காகவும் அந்தஸ்தின் அடையாளமாகவும் முன்பாதங்களை தாமரை இதழ் போல சுருக்கிக் கொள்ளும் பழக்கம், பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்தது. கால்பாதங்களை சிறு வயது முதலே இறுக்கமாகக் கட்டி, பாதங்களின் இயல்பான தன்மையை மாற்றி விடும் கொடூர பழக்கம் அது. அந்தப் பெண்களின் கால்கள் இப்போதிருக்கும் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளைப் போல மாற்றப்பட்டிருக்கும். இரண்டுக்குமான ஒற்றுமையான குணாம்சம் ஒன்றே ஒன்றுதான், அது பெண்களை பாலியல் பண்டமாக பார்க்கும் ஆணாதிக்க பார்வையால் விளைந்தது.

கால்பாதங்களை சிறு வயது முதலே இறுக்கமாகக் கட்டி, பாதங்களின் இயல்பான தன்மையை மாற்றி விடும் கொடூர பழக்கம் அது.

குடும்பம் என்கிற சமூக சிறைக்குள் பெண்களை தள்ளி, அவர்களை அடக்கி ஆள்வதற்கு அழகு என்கிற கற்பிதம் தேவைப்பட்டது. அதன் மூலம் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட, வெற்று அதிகாரங்களை போதையாக்கி பெண்களை அடிமையாக்க வேண்டிய கட்டாயம் ஆண் அதிகார மையத்துக்கு இருந்தது. புனிதமாக்கப்பட்ட காதல், திருமணம், குழந்தைகள், குடும்பம் போன்றவற்றின் ஊடாக ஆண் அதிகார மையத்தின் கட்டளைகள் பெண்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்பட்டன.

“பெண்களை படுகொலைகளிலிருந்து தப்பித்து ஓட விடாமல் ஹை ஹீல்ஸ் செருப்புகள் தடுக்கின்றன” என்கிறார் பத்திரிகையாளரும் பெண்ணியவாதியுமான கெய்திலின் மோரன். சங்கிலியால் கட்டிப்போட முடியாது; ஆனால், அழகு என்கிற சங்கிலியால் கட்டிப்போடலாம் என்பதன் உள்ளர்த்தத்தை அதில் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டில், பணியிடத்தில், பொது சமூகத்தில் சம உரிமையைக் கோரும் பெண்களும் ஆணாதிக்க கூறுகளிலிருந்து மேற்குலக பெண்களால் விடுபடமுடியவில்லை. ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதை கட்டாயமாக்கியிருக்கும் சமூகத்துக்கு எதிராக அந்தப் பெண்கள் போராடத் தயாராகிவிட்டார்கள். பிரபலமாக உள்ள கிறிஸ்டனின் இந்தச் செயல்பாடு சிறு தாக்கத்தையாவது ஏற்படுத்தும்.

செருப்பு அணியும் உரிமையே அரை நூற்றாண்டுகளாகத்தான் இந்திய பொதுச் சமூகம் பெற்றிருக்கிறது. திறந்துவிடப்பட்ட நுகர்வின் தீவிர தாக்குதலால், பத்து வயது நிரம்பாத சிறுமிகள்கூட ஹை ஹீல்ஸ் அணிவதைக் காண முடிகிறது. கடை வீதிகளெங்கும் ஹை ஹீல்ஸ் செருப்புகள் நிறைந்து கிடக்கின்றன. பாலியல் பண்டமாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆணாதிக்க நுகர்வு கலாச்சாரத்துக்கு தம்மை அறியாமல் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் நமது பெண்கள்.

– மு. வி. நந்தினி

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார்.