நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

துப்பாக்கி சூட்டை, நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும், ஒரு கேள்வியின் சூட்டை, கூட என்னால் தாங்க முடியாது, செத்தால் கூட வராத கோபம், போராடினால் வருகிறது - நான்தாம்பா ரஜினிகாந்த்!

7
2115

நான்தாம்பா ரஜினிகாந்த்!

 

குடும்ப வறுமையில்
போராடி
கொஞ்ச வயிறு சாப்பிட்டு
நிறைய மதிப்பெண் எடுத்தும்
நீட்டால்
அனிதா கொலையான போது
மவுனம்.. மவுனம்..
இமயம் தொடும் மவுனம்.

அரியலூர் நந்தினியும்
காஷ்மீர் ஆசிபாவும்
குதறப்பட்ட போது
சமூக விரோதிகளை நோக்கி
புடைக்கவில்லை நரம்பு!

தெருவுக்கு தெரு
டாஸ்மாக்கால்
தமிழினமே
ஆசீட் வீசி
அழிக்கப்படும் போது,

கடையை
மூடச்சொன்ன மக்களை
தடிகள் குதறிய போது
காது அறுபட
பெண்களின் கன்னம்
அறையப்பட்ட போது
பதறாமல்.. துடிக்காமல்
தடித்திருந்தது தோல்.

மாடு புனிதம் என்று
மனிதன் வெட்டப்பட்ட போது,
நீதிமன்றம் அணுகியும்
காவிரியை தடுத்தபோது
விவசாயம், சிறுதொழில்
சில்லறை வணிகம்
அனைத்தையும் அழித்து
நாட்டையே சுடுகாடாக்கும் போது,
வாய் எனும்
ஒரு உறுப்பே
வந்ததில்லை என் நினைவுக்கு.

துப்பாக்கி சூட்டை
நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்
ஒரு கேள்வியின் சூட்டை கூட
என்னால் தாங்க முடியாது
செத்தால் கூட
வராத கோபம்
போராடினால் வருகிறது
இதை விட
நான் யார் என்பதை
எப்படிச் சொல்வது?
நான்தாம்பா ரஜினிகாந்த்!

  •  துரை. சண்முகம்

 

சந்தா