
இந்துக்களின் புனிதத்தலமாகிய வாரணாசியில் 2018, மே மாதம் 15-ஆம் தேதி மேம்பாலம் கீழே விழுந்ததில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் மரணமடைந்தனர். வழக்கம் போல மாண்டவர்களுக்கு சில இலட்சங்கள் என யோகி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த பச்சைப்படுகொலைகளுக்கு யார் பொறுப்பேற்பது? உத்திரப்பிரதேச மேம்பால கட்டுமான நிறுவனம் (UP State Bridge Corporation), காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் என சம்மந்தப்பட்ட அனைத்து அரசு உறுப்புகளும் பொறுப்பேற்காமல் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி தட்டிக்கழிக்கின்றன.
“மேம்பால நிறுவனத்திற்கு 2017, நவம்பர் முதல் தொடர்ச்சியாக ஐந்து முறைக்கு மேலாக எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை” என்று ஐ.ஜி தீபக் ரத்தன் கூறினார். சொந்தப்பொறுப்பில் ஊழியர்களை வைத்து போக்குவரத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் உதவித் தேவைப்பட்டால் காவல்துறையை அணுகலாம் என்றும் அவர்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருந்ததாக மேலும் அவர் கூறினார்.
உபி மேம்பால கட்டுமான நிறுவனத்தின் அதிகாரியான பரியோஜனா பிரபாந்தக்கின் மீது பிப்ரவரி, 19-ஆம் தேதி சிக்ரா காவல் நிலையத்தில் முதல் தகவலறிக்கை பதிந்ததாக காவல்துறை கூறியது. சௌகா காட்டிலிருந்து லெகர்தாரா வரைக்குமான மேம்பால பணிகள் பொதுமக்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
மேம்பாலம் விழுந்து பல அப்பாவி உயிர்களைப் பலிக்கொண்ட பிறகு மீண்டும் ஒரு முதல் தகவல் அறிக்கை சிக்ரா காவல்நிலையத்தில் பதியப்பட்டிருகிறது. கூடுதலாக தலைமை திட்ட மேலாளர் எச்.சி திவாரி, திட்ட மேலாளர் கே.ஆர் சுதன், துணைப் பொறியாளர் ராஜேஷ் சிங் மற்றும் பொறியாளர் லால் சந்த் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக உ.பி. துணை முதமைச்சர் கூறியிருக்கிறார்.
“மேம்பாலம் கட்டுவதால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகளை சரி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையுடன் தொடர்ந்து நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்” என்று உத்திரப்பிரதேச மாநில மேம்பால கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான இராஜன் மிட்டல் கூறினார். “மேம்பால பணிகளை விரைவில் முடிக்கச்சொல்லி எங்களுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதால் 24 மணிநேரமும் வேலை நடந்ததாக அவர் கூறினார். போக்குவரத்தைப் பொருத்தமட்டில் எங்களுக்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை. இதுக்குறித்து மாவட்ட ஆட்சியருடனும் போக்குவரத்துக்காவல்துறை ஆணையருடனும் நடந்த சந்திப்பில் கூட நாங்கள் கூறியிருந்தோம்” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் மேம்பாலம் கீழே விழுந்ததற்கு இடியுடன் பெய்த மழை காரணமாக இருக்கக்கூடும் என்றும் எனவே இது ஒரு இயற்கைப் பேரிடராக கூட இருக்கலாம் என்று இராஜன் மிட்டல் கூச்சநாச்சமில்லாமல் கூறியிருக்கிறார்.
மேம்பால கட்டுமான நிறுவனம் கூறியதை மாவட்ட ஆட்சியர் ஏற்கவில்லை. “இது தவறு. போக்குவரத்து இடர்பாடுகளை சரி செய்ய சொல்லியும், வேலை நடக்கும் இடங்களை சுற்றி பாதுகாப்பு அரண்களை எழுப்ப சொல்லியும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அவர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியிருக்கிறோம். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் தான் அவர்கள் மீது முதல் தகவலறிக்கையே பதியப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் யோகேச்வர் இராம் மிஸ்ரா கூறினார்.
படுகொலைகளு.க்கு பிறகு அந்நிறுவனத்தின் கீழ் நடக்கும் 118 மேம்பாலங்கள் மற்றும் 68 தொடர்வண்டி பாதைகளுக்கான பணிகளை நிறுத்தி அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்று உ.பி. துணை முதலைமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
உண்மையில் உ.பி. அரசு நிர்வாகம் சொல்லிக்கொண்டபடி இயங்காததன் விளைவே இப்பச்சை படுகொலைகள். உ.பி. மட்டுமல்ல இந்தியா முழுவதும் இது நடந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் எந்த திட்டங்களும் அவை பாதுகாப்பானவையா என்பது குறித்த ஆய்வுகள் எதுவும் நடப்பதில்லை. படுகொலைகளுக்குப் பிறகு எழும் எதிர்ப்பை சமாளிக்கவே ஆய்வுகள், பணியிடை நீக்கங்கள், மாண்டவர்களுக்கு சில இலட்சங்கள் என நாடகங்கள் அரங்கேறுகின்றன.
- வினவுச் செய்திப் பிரிவு
மேலும்
Varanasi bridge collapse: Five warning letters were sent to flyover firm but no one read