privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழ்நாடுநீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது, தமிழ்நாடு. பார்ர்பனியத்தின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் களப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோமா ?

-

டந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதாவைக் காவு வாங்கிய நீட் தேர்வு, இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரதீபா கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். சிறு வயது முதலே மருத்துவராகவேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த பிரதீபா, பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் சேரவில்லை.

வறுமையான வாழ்நிலையையும் தாண்டி எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுவிடவேண்டும் என்ற குறிக்கோளில் ஒரு ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்குத் தயாரான பிரதீபாவை ஒட்டுமொத்தமாக முடக்கியது நீட். பிரதீபாவை மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் திட்டமிட்டு முடக்கியது நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசு நிறுவனமான சி.பி.எஸ்.ஈ.

நீட் தேர்வின் முதல் பலி அனிதா !

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தேர்வு மையம் குறித்த குழப்படியில் தொடங்கி, தேர்வுக்கான வினாத்தாளில் சுமார் 49 கேள்விகள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது வரை, திட்டமிட்டு கழுத்தறுப்பு வேலைகளில் இறங்கி, தமிழக மாணவர்களை வஞ்சித்தது சி.பி.எஸ்.ஈ.

மொழிபெயர்ப்பில் தவறான பொருள்படும்படியான கேள்விகள், மற்றும் பதிலுக்கான தெரிவுகள் கொடுத்த்தால், மாணவர்களுக்கு ஏற்பட்ட மதிப்பெண் இழப்பிற்கு இழப்பீட்டு மதிப்பெண் அளிக்க வேண்டும் என தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் பிரதீபா.

இந்நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மனமுடைந்த பிரதீபா, எலி மருந்து விசத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ’நீட்’டின் கொடுங்கரம் வெறுமனே பிரதீபாவோடு மட்டும் நிற்கவில்லை. கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்த அருண்பிரசாத் என்ற மாணவரையும் பலி கொண்டுள்ளது நீட்.

கடந்த 2016-17ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 1150 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த அருண்பிரசாத், இந்த முறை மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் இம்முறையும், கேள்வித்தாள் குளறுபடி காரணமாக அவரால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அருண்பிரசாத், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி சமயநல்லூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியும் , நீட் தேர்வு தோல்வியால் கடந்த 06-06-2018 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  ‘நீட் ’ தற்கொலைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

கூடுதலாக, செஞ்சியை அடுத்த மேல்சேவூரைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா நீட் தேர்வு குளறுபடியின் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அவரை மீட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று முடிவுகளைப் பார்க்கச் சென்ற சென்னை  மாணவி கோடீஸ்வரி என்பவர், தாம் தேர்வாகவில்லை என்பதைக் கண்டு மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறுவதாக குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு இரயிலேறி பீகார் சென்றிருக்கிறார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றனர் அவரது பெற்றோர்.

நீட்-ன் கொலைக்கரம் சில மாணவ மாணவிகளின் உயிர்களைப் பறித்துள்ளது எனக் கடந்து  போக முடியாது. ஏனெனில் தங்களது பெற்றோரையும் உறவினர்களையும் ஆசிரியர்களையும் எதிர்கொள்ள முடியாமல், மன அழுத்தத்தில் புழுங்கி முடங்கியிருக்கும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகம். அதற்கு வீட்டை விட்டு வெளியேறிய மாணவி கோடீஸ்வரியே சாட்சி

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சில மாணவர்களால், தவறான 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்களை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கைவிரித்து விட்டது மதுரை உயர்நீதிமன்ற அமர்வு.

நீட் தேர்வு பலியான பிரதீபா

இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,602 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 45,336  பேர். இந்திய அளவில் நீட் தேர்வில், மொத்த தேர்ச்சி விகிதம் 56%. ஆனால், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: 39.55 % தான்.

நீட் தேர்வுகளில் இராஜஸ்தான், ஹரியானா போன்ற கல்வியில் பின் தங்கிய  மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் கல்வியில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாடு 35-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மீது தொடர்ச்சியாக திட்டமிட்டு நட்த்தப்பட்டு வரும் தாக்குதல்களில் ஒன்று நீட் தேர்வு.  தமிழகத்தின் கல்வி வளத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கவும், கிராமப்புற ஏழை மக்களை, உயர்கல்வியிலிருந்து தள்ளி வைக்கவும் கொண்டுவரப்பட்ட தேர்வு முறைதான் நீட்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.14 இலட்சம் பேரில் வெறுமனே 9154 பேர் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். அதிலும் தேர்ச்சியடைந்த மாணவர்கள் 1,337 பேர்தான். சரியாக சொல்வதென்றால் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 3% பேர்தான் அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 97% பேர் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே.

நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் பின் தங்கியதைத் தொடர்ந்து, தமிழக பாடத்திட்ட்த்தின் மீது பழியைப் போடுகின்றனர் சில ’அறிவுஜீவிகள்’. சி.பி.எஸ்.ஈ. பாட்த்திட்ட்த்திற்கு இணையான பாட்த்திட்டம் இங்கு இல்லை என்று லாவணி பாடுகின்றனர். ”திராவிடக் கட்சிகள், பள்ளிக் கல்வியை சீரழித்த்தன் விளைவுதான் தமிழகம் பின் தங்கியதற்குக் காரணம்” என்கிறார் ராமதாஸ்.

நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் மாணவர்களைக் குழப்பும் பல்வகைப் பதில்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்ய மிகத் தீவிரமான பயிற்சி தேவை. அதே கேள்விக்கான விளக்கத்தை சாதாரண மாணவர்கள் சிறப்பாக பதிலளிப்பர். ஆனால் அத்தகைய பல் பதில்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்வது என்பது, அதற்கான் பிரத்யேகப் பயிற்சி பெறப்பட்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது.

கல்வியாளர் எஸ்.ராஜகோபாலன் தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்துக் கூறுகையில், “சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கானது. இதனை புரிந்து கொள்ளாது பேசுவது சரியல்ல. இதே போல மேனிலைத் தேர்வு வினாத்தாள்களையும் மதிப்பிட வேண்டும். விளக்கமாக விடை எழுத வேண்டும். நீட் தேர்வில் பல்விடைகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். மாணவரைக் குழப்பும் வகையில் மாற்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதே வினாவிற்கு விடை எழுதச் சொன்னால் சரியாக எழுதுவார்கள்” என்கிறார்.

மேலும் போட்டித் தேர்வுக்கான கேள்விகளையும், பாடத்திட்டத்தை அமைக்கும் ஆசிரியர்களின் சிந்தனை முறையையும் தோலுறித்திருக்கிறார். ”பாடத்திட்டக் குழுவில் என்னைத் தவிர இரண்டு பள்ளி ஆசிரியர்கள் இருந்தார்கள். ……… . பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள். இந்திய கிராமங்களை அறியாதவர்கள். ஒரு குறிப்பிட்ட பாடம் மாணவர்க்குக் கடினமாக இருக்கும் என்று நான் சொன்ன பொழுது ஒரு பேராசிரியர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது பெண் சுலபமாக விடை கூறுவார் என்று கூறினார். அனைவர்க்கும் உஙகளைப் போன்ற பெற்றோர் கிடையாது. யமுனையின் அக்கரையிலுள்ள காசியாபாத் பள்ளிக்குச் செல்வோம். மேற்சட்டையில்லாது கிழிந்த ட்ரவுசர் போட்ட மாணவர்களுக்குப் புரிய வைக்கத் தயாரா என்று வினாவெழுப்பினேன். சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கானது. இதனை புரிந்து கொள்ளாது பேசுவது சரியல்ல.” என்று கூறியிருக்கிறார்.

நீட் விவகாரத்தில் கீர்த்தனாவின் வெற்றியின் பின்னணியில் உள்ள மருத்துவர் பெற்றோரும், பிரதீபாவின் மரணத்தின் காரணமான ஏழ்மையான சூழலுமே சாட்சி.

தற்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஸ்ணன், தனது முகநூல் பக்கத்தில் ” “நீட்” தேர்வில் நான் நிச்சயம் தோற்றிருப்பேன்; ஆனால் நான் தமிழில் ஐ.ஏ.எஸ் எழுதி வென்ற முதல் தமிழன்” என்று நீட் தேர்வு நடந்த கேவலமான முறையைச் சாடுகிறார்.

பணம் உள்ள மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில் இலட்சக்கணக்கில் செலவு செய்து, இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்று விடுகின்றனர். ஆனால், சாதாரண கிராமப்புற ஏழை மாணவர்கள், அத்தகைய உயர்தர பயிற்சிகள் ஏதும் கிடைக்கப்பெறாமல், இந்த போட்டித் தேர்வை சந்திக்கவியலாமல், தமது மருத்துவக் கனவை மாய்த்துக் கொண்டோ அல்லது உயிரை மாய்த்துக் கொண்டோ நீட் தேர்வை கடந்து செல்கின்றனர்.

இந்த ஆண்டு ‘நீட்’டிற்கு இரண்டு உயிர்கள் பலி கொடுக்கப்பட்ட பின்னரும், நீட் தொடரும் என தயக்கமின்றிச் சொல்கிறார் தமிழிசை. எத்தனை பேரைப் பலிகொண்டாலும், மனுநீதியின் புதிய வடிவத்தைக் கைவிட மாட்டோம் என்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் குரலைத்தான் எதிரொலிக்கிறார், தமிழிசை.

இது பார்ப்பன சதிக்கு சமாதி கட்டிய மண் என்பதை காவிக் கும்பலுக்கு நினைவு படுத்துவோம். அதுவே நீட் தேர்வின் கொடுங்கோன்மைக்கு களப்பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

  • வினவு செய்திப்பிரிவு.
  1. இப்படி ஒரு கட்டுரை இந்த தளத்தில் வெளிவரும் என முன்னரே எதிர்பார்த்தேன். இந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஆழ்ந்த வருத்தத்துக்குரியது. ஆனால் நீட் தேர்வால் தங்களுடைய வாழ்க்கை பறிபோனது என இவர்கள் நினைத்தது தவறானது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு மாநில அரசின் முதல் தர கல்லூரியில் பொறியியல் படிப்பு, கால்நடை மருத்துவம், வேளாண் படிப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கும். இந்த படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இந்த தளத்தில் நுழைவுத்தேர்வை குறை கூறியுள்ளார்கள். ஆனால் 2006 வரை தமிழ்நாட்டிலும் மாநில அரசால் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. அதை ரத்து செய்தது மிகப் பெரிய தவறு. இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வந்தபோது தரம் சரியில்லை என கல்வியாளர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஓரங்கட்டப் பட்டார்கள். பிரின்ஸ் கஜேந்திரபாபு, வினவு தளம் ஆகியோர் ஆகா ஓகோ என இந்தக் கல்விமுறையை புகழ்ந்தனர். கருணாநிதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்கிற தொனியில் பல கட்டுரைகள் எழுதப்பட்டன. பொதுக்கூட்டங்களில் பேசப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் மேட்டுக்குடியினரின் பாடத்திட்டம் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டன. அதுதான் இப்போது ஈ என பல்லை இளிக்கிறது. தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்கிறார்கள். பதினேழு அரசு மருத்துவக்கல்லூரிகளை கொண்ட மராட்டிய மாநிலம் ஏற்றுக்கொள்கிறது. கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டு அரசு பொறியியல், நர்சிங், கால்நடை மருத்துவப் படிப்பு,வேளாண் கல்வி ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கையை கூட நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த பரிசீலித்து வருகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் ஏழைப் பிள்ளைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லையா?

  2. அய்யா பெரிஸ்,

    எங்க தமிழ்நாட்டுல நிறைய அரசு மருத்துவக் கல்லூரி இருக்கு .. நாங்க என்ன ஹேருக்கு ஊரானுக்கு இடம் கொடுக்கனும் ?
    நீட்டு… வர்றதுக்கு முன்னாடியே இங்க மருத்துவம் சிறந்ததாகத் தான இருந்துச்சு. இந்தியாவின் மருத்துவத்தலைநகர் தமிழ்நாடுங்குறது மறந்து போச்சா ?

    சிபி.எஸ்.இ. பாடத்திட்டம் மேட்டுக்குடிக்கானதுதான்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

  3. இப்போது இந்த நீட் தேர்வை அடிப்படையாக வைத்து தமிழ் நாட்டின் கல்வித் தரம் மோசம், தமிழக மாணவர்கள் மனப்பாட முறைக்கு மட்டும் பழகியவர்கள் என்கிற பிம்பம் அகில இந்திய அளவில் கட்டமைக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் வேலைவாய்ப்புக்கும் உயர்கல்விக்கும் போகக்கூடிய தமிழக மக்களுடைய வாய்ப்புகளை பாதிக்கக்கூடும். ஏற்கெனவே அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்வாவது குறைவு. அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உயர்கல்வி பயிலும் இடங்களிலும் வேலை செய்யும் மத்திய அரசு நிறுவனத்திலும் மிக மோசமான ஒதுக்குதலையும் ஒடுக்குமுறையையும் சந்திக்க வேண்டியுள்ளது. இனி நிலைமை இன்னும் மோசமாகலாம்.

  4. சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகராக இருப்பதற்கு சமச்சீர் கல்வி காரணம் அல்ல. 1970களில் தமிழகத்தின் கல்வி சூழ்நிலை நன்றாக இருந்தது. நம்முடைய அரசுகள் ஹிந்தியை விட ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் தந்தனர். மேலும் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே மருத்துவ தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் அரசாங்கத்தாலும் தனியாராலும் முதலில் இங்குதான் ஏற்படுத்தப்பட்டன. சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகராக இருப்பதற்கு இங்கு இருக்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளும் ஒரு காரணம். சிபிஎஸ்இ பாடத்திட்டம் மேட்டுக்குடியினரின் பாடத்திட்டமாக உங்களுக்கு தெரிகிறது. ஆனால் அந்த பாடத்திட்டத்தை அடியொட்டி தான் மாநில அரசின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்பதுதான் விதிமுறை. சமச்சீர் கல்வி கூட சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தை அடியொட்டி தான் அமைக்கப்பட்டது. ஆனால் அரைகுறையாக செய்யப்பட்டது. அதுதான் பிரச்சினையே. கல்வி என்பது பொதுப் பட்டியலில் வருகிறது. அதுவும் மருத்துவ கல்வி என்பது நூறு சதவீதம் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. ஒரு மாநில அரசு எத்தனை மருத்துவ கல்லூரிகளை வேண்டுமானாலும் தொடங்கி நடத்தலாம். ஆனால் அவற்றில் யார் கற்பிக்க வேண்டும், என்ன கல்வித் தகுதி வேண்டும், எத்தனை பேர் கற்பிக்க வேண்டும், என்ன பாடம் கற்பிக்க வேண்டும், எத்தனை பேர் படிக்க வேண்டும், என்ன தேர்வு முறை, மாணவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்பதற்கான அடிப்படை விதிமுறைகளை எல்லாம் மத்திய அரசு தான் முடிவு செய்கிறது. இவையெல்லாம் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருபவை. ஆகவே நாங்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் எதற்கு அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது ஒரு வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். எனவே முன்னாடியே எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.

  5. In NEET-2018 out of 4 answers for each questions,
    Out of 180 questions,
    Answers 1 correct for 48/
    Answer 2 correct for 30/
    Answer 3 correct for 50 and Answer 4 correct for 52 questions.
    Suppose even an illiterate old lady just marks for all the 180 questions – 4 as the answer, still she will score 80 marks after deducting negative marks.
    The cut off mark for the passing NEET 86.
    This your NEET and CBSE

  6. கல்வி சூழ்நிலை நன்றாக இருந்தது என்பதை கல்வித்தரம் நன்றாக இருந்தது என திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்

  7. No illiterate lady will undertake any competitive exam like neet and consider it a game as you wish. your argument applies to all other entrance exams also including the ones conducted in advanced countries like United States, Great Britain et cetera and remember an American agency is also involved in this neet exam process. No exam system or pattern has been perfected to judge the capability of a student accurately but among the available ones, multiple choice questions based exam system is found to be with more objectivity universally. I also don’t have good opinion about exams like Neet, IIT entrance etc as they rely heavily on coaching centres and extra curricular syllabus. But they are little better considering the rote learning happening in State Board Education of Tamilnadu.

  8. Roughly available MBBS seats through out India including private institution around one lakhs.
    Why they should make eligibile of 50% of appeared candidates, that is more than SEVEN LAKHS students that is seven times of available seats.
    And the cut off marks as low as 86 ,that is 12%.Is it selection procedure.
    You have to test the pupil in a positive way.
    I do not think in the world any examination having qualifying marks as low as 12%,that to for a highly competed professional course.

  9. பள்ளிக்கல்வி ,மாணவரின் கல்லூரிக்கல்விக்கும் எதிர் காலத்திற்கும் அஸ்திவாரம்.

    நீட் என்று மட்டும் பார்க்காமல் , நம் நாட்டில் பள்ளிக்கல்வி எப்படி இருந்து வந்துள்ளது என்று பார்க்க வேண்டும். புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதி 90 % மார்க் மேல் வாங்கி விடலாம் என்ற நிலை. பிறகு எப்படியோ இன்ஜினியரிங் படித்து முடித்து விடலாம் . அதன் விளைவு என்ன? படித்து முடித்து விட்டு நம் இளைஞர்கள் தகுந்த வேலை கிடைக்க கஷ்டப்படுகிறார்கள்.

    படிக்கின்ற மாணவர்கள் சிந்தித்து படித்து திறனோடு , பள்ளிக்கல்வியை முடித்து வர வேண்டும். இனியாவது நம் கல்வித்துறையும் ஆசிரியர்களும் , இதை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும், கல்வித்துறை மற்றும் ஆசிரியர்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது.

    (CBSE பாடத்திட்டம் சிறந்ததாக இருந்தாலும் , ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதையும் தேர்வு முறையையும் பொறுத்துதான் பலன் கிடைக்கும்.எல்லா CBSE பள்ளிகளும், தரத்தில் ஒன்றல்ல )

  10. வெங்காயம், இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரி இடங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உள்ளது (அரசு கல்லூரி இடங்களிலும் மஹாராஷ்டிராவில் தான் அதிகம்) அதற்கு அடுத்து கர்நாடகாவிலும், பிறகு ஒன்றுபட்ட ஆந்திராவிலும் அதற்கு அடுத்து தான் தமிழக மருத்துவ கல்லூரி இடங்கள் வருகிறது.

    முன்பு ஹிந்தி ஒழிக என்று சொல்லி ஒரு கூட்டம் தமிழனை தமிழ் நாட்டை விட்டு வெளியே போக முடியாதபடி செய்தது, இப்போது இன்னொரு கூட்டம் தமிழனுக்கு மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை தடுக்கிறது.

    தமிழனுக்கு எதிரிகள் வெளியே இல்லை, தமிழன் தமிழன் என்று சொல்லி தமிழனின் தலையில் மண்ணை அள்ளி போடும் நாசகார கூட்டம் உள்ளேயே இருக்கிறது.

  11. தமிழ் நாட்டின் எதிரிகள் மாவோ நக்சல் நாம் தமிழர் மதிமுக மே 17 இயக்கங்கள் தான். இவர்கள் இந்தியாவை பலவீனப்படுத்த தமிழ் நாட்டை பயன்படுத்துகிறார்கள், இந்தியாவை பலவீனப்படுத்த சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இந்த மாதிரியான இயக்கங்களை தூண்டி வளர்த்து விட்டாலே போதும், இவர்களே இந்தியாவின் அழிவை கொண்டுவந்து விடுவார்கள். தூத்துக்குடியில் இவர்களால் 13 மக்கள் மடிந்தார்கள் அடுத்து நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் என்று மாணவர்களை கொலை செய்ய போகிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க