Thursday, January 16, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !

ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !

யார் வளர்ச்சியின் நாயகர்கள் என்பது குறித்து பாஜகவும் காங்கிரசும் நடத்தும் அக்கப்போர்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் ஜிடிபி. இந்த ஜிடிபி வளர்ச்சி என்பது எப்படி ஒரு மாயை என்பதையும்,தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் லாபம் பெறப்படுவதை ஐஃபோன் உற்பத்தி மூலம் விளக்குகிறது இத்தொடர்.

-

ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

*****

முன்னுரை

“ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாயை” என்பது பயன்பாட்டில் உள்ள பொருளாதாரத் தரவுகள் திரட்டப்படுவதிலும், பொருள் கொள்ளப்படுவதிலும் உள்ள குறைபாடுகளின் காரணமாக ஏற்படும் தவறான புரிதலே. மூன்றாம் உலக நாடுகளின் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்கள் உலக வருமானத்துக்கு அளிக்கும் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதும், அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை மிகைப்படுத்துவதும் இதன் முக்கிய விளைவு ஆகும்.

இந்தக் குறைபாடுகளும், உருக்குலைக்கப்பட்ட புரிதல்களும் ஜி.டி.பி, வர்த்தகம், உற்பத்தித் திறன் போன்றவை தொடர்பான புள்ளிவிபரங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன, எவ்வாறு விளக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கும், விலை, மதிப்பு, மதிப்புக் கூடுதல் ஆகியவை குறித்த புதிய தாராளவாத கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக ஜி.டி.பி, உற்பத்தித் திறன், வர்த்தகம் ஆகியவை தொடர்பான அடிப்படை தரவுகள் பருண்மையானதாகவோ குறைகளற்றதாகவோ இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.

இந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான பொருளாதாரவியல் விளக்கங்கள், உலகப் பொருளாதாரத்தில் மதிப்பும் லாபமும் எங்கிருந்து தோன்றுகின்றன என்பதைப் பற்றி தெளிவுபடுத்துவதை விட அதிகமாக மறைக்கவே செய்கின்றன.

“சர்வதேச விற்பனை பண்டங்களுக்கான” மூன்று பொருத்தமான உதாரணங்களாக ஐஃபோன், சட்டை, ஒரு கப் காஃபி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பொருட்கள் மேலே சொன்ன வாதத்தை விளக்குவதாகவும், உறுதி செய்வதாகவும் உள்ளன. இந்தப் பொருட்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவையாக இருப்பது அவற்றுக்கும், சர்வதேச உற்பத்தி நடைமுறையில் உள்ள மற்ற அனைத்து பொருட்களுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களை தெளிவுபடுத்த உதவுகின்றது.

பொருளாதாரவியல் தரவுகள் அல்லாது நமக்குக் கிடைக்கும் பிற தரவுகளும், நமது சொந்த அனுபவங்களும் குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் கடுமையாக உழைத்து பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் ஆப்பிள் போன்ற மேற்கத்திய நிறுவனங்களின் லாபத்துக்கு கணிசமான பங்களிப்பு செய்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும், பொருளாதாரவியல் தரவுகள் அத்தகைய பங்களிப்புக்கான எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை.

மாறாக, இந்தப் பொருட்களின் விற்பனையில் பெறப்படும் மதிப்பில் பெரும்பகுதியும், ஆப்பிள், ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்கள் அவற்றிலிருந்து அறுவடை செய்யும் லாபங்களும் அந்தப் பொருட்கள் நுகரப்படும் நாட்டில் உருவானது போன்ற தோற்றத்தை அவை ஏற்படுத்துகின்றன. இந்த மூன்று சர்வதேச விற்பனை பண்டங்களும் முதலாளித்துவ உற்பத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ள உருமாற்றத்தின் உண்மையான பிரதிநிதிகளாக உள்ளன.

பொருளாதாரவியல் புள்ளிவிவரங்களும் அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் விளக்கங்களும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளின் ஆலை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான சுரண்டல் அடிப்படையிலான உறவுகளை குழப்பி மறைக்கின்றன. இருப்பினும் இந்தச் சுரண்டல் உறவு முற்றிலும் நம் கவனத்திலிருந்து தப்பி விடுவதில்லை.

மாறாக, சர்வதேச அரசியல் பொருளியலின் பயன்பாட்டில் உள்ள கணக்கீடுகளை பீடித்திருக்கும் சுயமுரண்களிலும், விதிவிலக்குகளிலும் அவை வெளிப்படுகின்றன. இத்தகைய சுயமுரண்களும், விதிவிலக்குகளும் உருவத்தை திரித்துக் காட்டும் கண்ணாடியில் உள்ள குறைபாடுகளை போலவே தமது இருப்பை அறிவித்துக் கொண்டிருக்கின்றன; இது இந்த உருமாற்றத்தை அடையாளம் கண்டு வகைப்படுத்த வேண்டியதை அவசியமாக்குகின்றது. மதிப்பு கைப்பற்றலையும், மதிப்பு கூட்டலையும் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உருமாற்றத்தை சரியாகப் புரிந்து கொண்டால்தான் உள்ளது உள்ளபடியே உலகை புரிந்து கொள்வது சாத்தியமாகும்.

பகுதி ஒன்று : ஆப்பிள், டெல் போன்ற நிறுவனங்களின் லாபத்துக்கு ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் என்ன பங்களிப்பு செய்கிறார்கள்?

சீனாவின் ஷென்செனில் பாக்ஸ்கான் இன்டர்நேஷனல் வேலைக்கு அமர்த்தியுள்ள மூன்று லட்சம் தொழிலாளர்கள் டெல் மடிக் கணினிகளையும், ஆப்பிள் ஐஃபோன்களையும் உற்பத்தி செய்கின்றனர். அவர்களைப் போலவே மூன்றாம் உலக நாடுகளின் கோடிக்கணக்கான குறைகூலி தொழிலாளர்கள் மேற்கத்திய சந்தைகளுக்காக இடைநிலை பொருட்களையும் நுகர்வுப் பொருட்களையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்கின்றனர்.

இந்தத் தொழிலாளர்கள் டெல், ஆப்பிள் மற்றும் பிற முன்னணி மேற்கத்திய நிறுவனங்களுக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கும் லாபத்திலும், வருமானத்திலும் என்ன பங்களிக்கின்றனர்? ஜி.டி.பி, வர்த்தகம் மற்றும் நிதி பாய்ச்சல்கள் தொடர்பான புள்ளிவிபரங்களின் படியும், பயன்பாட்டில் உள்ள பொருளாதாரவியல் கோட்பாட்டின்படியும் அவர்கள் எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை.

அதன் பொருட்களை உற்பத்தி செய்து பொருத்தி தயாரிக்கும் சீன, மலேசிய மற்றும் பிற உற்பத்தி நிலையங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமானவை அல்ல. முன்பு வழக்கமாக பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலான, அன்னிய நேரடி முதலீட்டின் அடிப்படையிலான சர்வதேச உறவுக்கு மாறாக இப்போது ஆப்பிள் தனது பொருட்களை செய்து வாங்கும் ‘கைக்கு எட்டிய உறவிலான’ உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து லாபம் நாடு கடந்து எடுத்துச் செல்வதாக புள்ளிவிபரங்கள் பதிவு செய்வதில்லை.

சந்தை பரிமாற்றங்களின் விளைவுகளை மட்டும் பதிவு செய்யும் பொருளாதாரவியல் புள்ளி விவரங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் ஐஃபோனின் இறுதி விற்பனை விலையில் ஒவ்வொரு அமெரிக்க அல்லது சீன நிறுவனம் கைப்பற்றும் பங்கு, அவை ஒவ்வொன்றும் பங்களிக்கும் மதிப்பு கூடுதலுக்கு சமமானது என்று கருதுகின்றன. ஆப்பிள் மற்றும் அதன் பொருட்களை உற்பத்தி செய்து தரும் பல்வேறு உற்பத்தியாளர்களின் லாபங்கள் மீது அந்தப் பரிவர்த்தனைகள் செலுத்தும் தாக்கம் பற்றி எந்த தடயத்தையும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதில்லை. ஆப்பிளின் லாபத்தில் சீனாவிலிருந்து கிடைக்கும் ஒரே பகுதி ஆப்பிள் பொருட்கள் சீனாவில் விற்கப்படுவதன் மூலம் கிடைப்பது மட்டுமே என்று தோன்றுகிறது.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள்

பொருளாதாரத் தரவுகள் பற்றிய நடப்பில் உள்ள விளக்கத்தின்படி, பொருட்களின் மதிப்பு “சுற்றோட்டத்தில் பெறப்படுவது போல மட்டுமின்றி, அதிலிருந்து உருவாவது போல தோன்றுகிறது”1 (காரல் மார்க்ஸ்). எனவே சீன மற்றும் பிற குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கடத்தப்படும் மதிப்பு, பொருளாதாரத் தரவுகளிலும், பொருளியலாளர்களின் மூளைகளிலும் மாயமாக மறைந்து விடுகிறது.

ஆப்பிள், டெல், மோட்டரோலா, பிற அமெரிக்க, ஐரோப்பிய, தென் கொரிய, ஜப்பானிய நிறுவனங்களின் பொருட்கள் தாய்வானைச் சேர்ந்த ஹோன் ஹாய் பிரிசிசன் இண்டஸ்ட்ரீசின் பிரதான துணை நிறுவனமான ஃபாக்ஸ் கானால் பொருத்தி தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கானின் 10 லட்சம் ஊழியர்கள், “உலகின் நுகர்வு மின்னணு பொருட்களில் 40%-ஐ” உற்பத்தி செய்வதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது2.

தென் சீனாவின் ஷென்செனில் (Shenzhen) உள்ள பதினான்கு தொழிற்சாலைகள் கொண்ட அதன் கட்டமைப்பு 2010-ம் ஆண்டு அதன் பிரம்மாண்டத்திற்காகவும், தொழிலாளர்கள் மத்தியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகளுக்காகவும் உலக அளவில் பேசப்பட்டது. அந்த ஆண்டு ஃபாக்ஸ்கான் ஷென்செனில் அமர்த்தியிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.3 லட்சத்தை எட்டியது. தற்போது சீனாவின் பிற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி நகர்த்தப்படுவதன் மூலமாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 2012-ல் ஹோன் ஹாயின் சேர்மன் டெரி கோவ், தாய்பே உயிரியல் பூங்காவுக்கு சென்றிருந்த போது “மனிதர்களும் விலங்குகள்தான் என்பதால் 10 லட்சம் விலங்குகளை நிர்வகிப்பது எனக்கு தலைவலியை தருகிறது” என்று கூறினார். தொடர்ந்து இந்த “விலங்குகளை” எப்படி நிர்வகிப்பது என்று அறிவுரை சொல்லுமாறு உயிரியல் பூங்கா காப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்தக் கருத்து கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. ”வான்ட் சைனா டைம்ஸ்” பத்திரிகை, “கோவ் வார்த்தைகளை கொஞ்சம் கவனமாக பயன்படுத்தியிருக்கலாம். [ஃபாக்ஸ்கானின் பிரம்மாண்டமான சீன ஆலைகளில்] வேலைச் சூழலும், தங்குமிட சூழலும் பராமரிக்கப்படும் நிலைமையில், அதன் சீன ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தாம் விலங்குகள் போல நடத்தப்படுவதாக ஒத்துக் கொள்வார்கள்” என்று எழுதியது3 .

  1. Karl Marx, Capital, vol. 3 (London: Penguin, 1991), 966.
  2. Charles Duhigg and Keith Bradsher, “How U.S. Lost Out on iPhone Work,” New York Times, January 21, 2012, http://nytimes.com.
  3. Foxconn Chairman Likens His Workforce to Animals,” Want China Times, January 21, 2012, http://wantchinatimes.com.

(தொடரும்)

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க