ருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்குவதாக மோடி அளித்திருந்த வாக்குறுதியில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டார். இரண்டு அம்சங்களில் நிறைவேறியுள்ள இந்த வாக்குறுதியின் முதல் கட்டமாக “அரசியல் விமர்சகர்” எனும் புதிய வேலை உருவாக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பயனடைந்துள்ளனர். தமிழ் செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் தலைகாட்டும் ராம சுப்பிரமணியன், சுமந்த் சி ராமன், பானு கோம்ஸ் போன்றவர்கள் இந்த புதிய வேலை வாய்ப்பின் மூலம் நேரடியாக பலனடைந்தவர்கள்.

அரசியல் விமர்சகர், நடுநிலையாளர் என்ற முகமுடியுடன் தொலைக்காட்சி விவாதங்களில் களமிறக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். காக்கி டவுசர்கள்

ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளில் அர்னாப் கோஸ்வாமியும் (ரிபப்ளிக்) அவரது மட்டமான நகல்களான ராகுல் சிவசங்கர், நாவிகா குமார் (டைம்ஸ் நௌ), பூபேந்தர் சௌபே (நியூஸ் 18), ராகுல் கன்வால் (ஹெட்லைன்ஸ் டுடே) போன்றவர்களின் கடமையையும் பாத்திரங்களையும் தமிழ் செய்தி ஊடகங்களில் மேற்படி ’அரசியல் விமர்சகர்கள்’ ஆற்றுகின்றனர். பூமிக்கு மேல் வானத்தின் கீழ் உள்ள சகலத்தைப் பற்றியும் தனக்கென்று ஒரு பார்வையையும் ஒரு கருத்தையும் பெற்றுள்ள இந்த டிப்டாப் ஆசாமிகளால் மண்டைக் குடைச்சல் மற்றும் காது இரைச்சல் பிரச்சினைகளால் தமிழர்கள் மட்டுமே அல்லலுறுவதாக இதுகாறும் நினைத்து வந்த நமக்கு, வடக்கத்தவர்களுக்கும் இதே ’இன்பம்’ கிட்டியிருப்பதை விளக்கியுள்ளார் நதீம் அஸ்ரார் (@_sufiyana_) எனும் டிவிட்டர் வாசி. நதீம் வெளியிட்டுள்ள டிவிட்டர் திரியின் தமிழாக்கம் கீழே.

”தொலைக்காட்சி விவாதங்கள் வழக்கமாக ஒரு விதமான வடிவத்தில் நடக்கும் : ஆளும் கட்சியின் குரலாக அதன் நெறியாளர், ஒரு சில எதிர்கட்சிக் குரல்கள் மற்றும் ஒரு ‘நடுநிலை’ விமர்சகர் அல்லது வல்லுநர். சமீபமாக, அதாவது கடந்த நான்கு ஆண்டுகளாக பெரும்பாலான தொலைக்காட்சிகளில் வரும் மேற்படி நடுநிலை வல்லுநர்கள் ஆர்.எஸ்.எஸ் ஆட்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பொதுவெளியில் அதிகம் அறியப்படாத, பிரபலம் அடையாத ஒரு ஆணாக இவர் இருப்பார்.

ஆர்.எஸ்.எஸ் என்றால் என்னவென்பதைப் பற்றியோ அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் கருத்து எப்படியிருக்கும் என்பதையோ  பார்வையாளர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள். நெறியாளரும் தான் விவாதத்தைக் கட்டமைக்கும் முறையிலேயே இந்த விசயங்களைப் புறக்கணித்து விடுவார். பெரும்பாலும் இந்த ஆர்.எஸ்.எஸ் நபரை ‘மூத்த வழக்கறிஞர்’ என்றோ, ‘பேராசிரியர்’ என்றோ அறிமுகப்படுத்துகிறார்கள். அவரது ஆர்.எஸ்.எஸ் அடையாளத்தை மறைக்க எல்லா தகிடுதத்தங்களையும் இந்த ஊடகங்கள் செய்கின்றன.

விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்து ‘நடுநிலையானது’ எனப் போற்றப்படுகிறது. அதை அந்த ஆர்.எஸ்.எஸ்-காரரே தனது வாதங்களின் ஊடாக திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்ளவும் செய்கிறார். இதை நெறியாளர்கள் தட்டிக் கேட்பதும் இல்லை. ’நடுநிலை’ முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் நபர் அந்த சபையில் தன்னை ஒழுக்கவாதியாகவும் அரசியல் தூய்மை கொண்டவராகவும் நிலைநாட்டிக் கொள்கிறார். இதன் மூலம் தானே மக்களின் குரலை பிரதிபலிப்பது போல நிறுவிக் கொள்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் குரல் வழக்கம் போல பாரதிய ஜனதாவுக்கோ மத்திய மாநிலங்களில் இருக்கும் அதன் அரசுக்கோ எதிராக பேசாது. என்றாலும், நெறியாளர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இந்த அவல நகைச்சுவை நாடகம் ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சித் திரைகளில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குரலை பொதுக் கருத்தாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்”

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தனது நோக்கத்தின் இரண்டாம் கட்டமாக பாரதிய ஜனதாவுக்கென புதிதாக “இணையப் போராளிகளை” உருவாக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய உத்திர பிரதேச மாநில பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.எஸ் ராத்தோர், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அம்மாநிலத்தில் மட்டும் சுமார் 2,00,000 பேரை பணிக்கமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“சைபர் சேனா”

இவ்வாறு பணிக்கமர்த்தப்படுகிறவர்கள் பாரதிய ஜனதாவின் “சைபர் சேனா” பிரிவில் செயல்படுவார்கள் என்றும், ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவில் ‘இணையப் போராளிகளை’ (Cyber yodhaa) உருவாக்கப் போவதாக ராத்தோர் தெரிவித்துள்ளார். கடந்த உத்திரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின் போது தாம் ஒரு ’திறன்பேசி யுத்தத்தை’ நடத்தி அதில் வெற்றி கண்டதாகத் தெரிவித்துள்ள ராத்தோர், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குள் இணையம், சமூக வலைத்தளம், வாட்சப் போன்ற செயலிகளை யார் பயன்படுத்தினாலும் அவர்கள் கண்களுக்கு பாரதிய ஜனதா மட்டுமே தெரிய வேண்டும் என்பதே திட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ’வேலை வாய்ப்பு’ பெறவுள்ளவர்களுக்கு சுமாராக நாளொன்றுக்கு 200ல் இருந்து 300 ரூபாய் வரை கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டுமே 2 லட்சம் பேர் என்றால், நாடெங்கும் எத்தனை பேரை இந்தக் கூலிப் படையில் இணைத்துக் கொள்ளவிருக்கிறார்கள் என்கிற தகவல் இல்லை. குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிட்டாலும் மாதந்தோறும் நூறு கோடிக்கு மேல் செலவிட வேண்டி வரும்.

இத்தனையும் எதற்கு?

இரண்டு கோடி வேலை வாய்ப்பு உள்ளிட்ட தனது தேர்தல் ‘ஜூம்லாக்களை’ மறைப்பதற்கு. இவ்வாறாக நியமிக்கப்படும் இணையக் கூலிகளால் பாரதிய ஜனதா தேர்தல் வெற்றியை அடையப் போகிறதா இல்லையா என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஆனால், நிச்சயமாக உலகிலேயே மிக அதிக செலவில் ஒப்பனை செய்த சாதனை பாரதிய ஜனதாவுக்கு கிடைத்தே தீரும்.

– வினவு செய்திப் பிரிவு

2 மறுமொழிகள்

Leave a Reply to K Shanmugam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க