எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !

ஜிண்டால் உள்ளிட்ட சில பனியா முதலாளிகளின் இலாபத்திற்காக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அதிகாரத்தின் துணையோடு பறிக்கப்படுகிறது.

டக்குமுறைகளின் மூலமும் ஆசை வார்த்தைகளின் மூலமும் எதிர்ப்பின்றி சேலம் எட்டுவழிச் சாலைக்கு நிலங்களை அபகரித்துவிடத் துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கும் அவரது டெல்லி துரைமார்களுக்கும் தமிழகம் பணிய மறுக்கிறது. நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மூதாட்டி உண்ணாமலையையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்து அப்புறப்படுத்திய அடக்குமுறை ஒன்றே, விவசாயிகளின் துணிவையும் இந்தத் திட்டத்தை அவர்கள் எந்தளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

‘‘நிலத்தைத் தரும் விவசாயிகளுக்குக் கோடிகோடியாய் இழப்பீடு கிடைக்கும்” என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ஒரு தேன் தடவிய அறிவிப்பைச் செய்தாரே, அந்த பாச்சாவெல்லாம் உண்ணாமலையிடம் மட்டுமா செல்லுபடியாகவில்லை. ‘‘எங்களுக்கு இவங்க யாருங்க சலுகை காட்டுறது? எனச் செருப்பால் அடித்தாற்போலத் திருப்பியடிக்கிறார்கள் விவசாயிகள். (நக்கீரன், ஜூன் 27)

‘‘ஒரு சில விவசாயிகள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்கிறார் முதல்வர் எடப்பாடி. எதிர்ப்பே இல்லையென்றால், இத்துணை பெரிய போலீசு பட்டாளம் எதற்கு? போர்க்களத்திற்குப் போவது போல, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆள், அம்பு, படை, சேனையோடு கிராமத்திற்குள் நுழைய வேண்டிய அவசியம் என்ன?

‘‘விவசாயிகளை வெளியிலிருந்து யாரோ தூண்டிவிடுகிறார்கள்” என தினமலர் போன்ற ஆட்காட்டி அரசியல் மஞ்சள் ஏடுகள் எழுதுகின்றன. ஆனால், மாணவி வளர்மதி, இயற்கை ஆர்வலர் பியூஷ் மனுஸ், சி.பி.எம். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 19 பேர், இயக்குநர் கவுதமன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்ட பிறகும், நிலம் அளவிடும் கிராமங்களில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

சேலம் – அடிமலைபுதூரில் நிலத்திருடர்களை எதிர்த்து நிற்கும் மூதாட்டி உண்ணாமலை.

நிலம் அளவீடு செய்யப்படும் கிராமங்கள் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட பிறகும், நிலத்தின் உரிமையாளர்கள் தவிர மற்றவர்கள் யாரும் அண்டவிடாதபடி தடுக்கப்பட்ட பிறகும் எதிர்ப்புகள் ஓயவில்லை.

விவசாயிகள் தமக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்புகளைக் காட்டி வருகிறார்கள். நிலத்தில் படுத்தபடி அளவீடு செய்வதைத் தடுக்க முயலுகிறார்கள். ‘‘எங்க அனுமதியில்லாம எங்க நிலத்துல நீங்க எப்படி இறங்கலாம்? எனத் துணிந்து எதிர்க்கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்கிறார்கள். ஆதார், குடும்ப அட்டைகளைத் தூக்கியெறிந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறார்கள்.

செய்யாறு நகரையொட்டியுள்ள எருமைவெட்டி, கிராமவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி, தனது ஐந்து ஏக்கர் கரும்பு வயலுக்குள் அத்துமீறி நட்ட கல்லைப் பிடுங்கிப் போடவில்லையென்றால், தீக்குளித்து மாண்டு போவேன் எனக் கூறி மண்ணெண்ணெய் கேனைத் திறக்க, அதை அதிகாரிகள் பிடுங்கி எறிகிறார்கள். அடுத்த நொடியே மீனாட்சியின் மகள் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொள்கிறார். அதிகார வர்க்கமோ இரக்கமற்று அடுத்த நிலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது.

***

சேலம் பசுமை (அழிப்பு) சாலைத் திட்டம் குறித்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் சாத்தியப்பாடு அறிக்கை (feasibility report) 2,791 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இதன் விளைவாக ஏறத்தாழ 7,237 குறு, சிறு, நடுத்தர விவசாயிகள் தமது நிலங்களை இழந்து வெளியேற வேண்டியிருக்குமென்றும், 20,000 கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுமென்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் எருமவெட்டி கிராமத்தில் 18 வயதேயான தேவதர்ஷினி கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டபோதும், அடுத்த வயலைத் தேடிபோனது அதிகார கும்பல்.

கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள், காவிரி டெல்டா விளைநிலங்களைப் போல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பண்படுத்தப்பட்டவையல்ல. இந்த விளைநிலங்கள் ஒரு நூறு ஆண்டுக்குள்ளாகத்தான் கழனியாக  நெல்லும், தென்னையும், பாக்கும் விளையும் பசுஞ்சோலையாக மாற்றமடைந்திருக்கின்றன. அதனால், நிலத்தை இழக்கவுள்ள ஒவ்வொரு விவசாயியிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது.

69 வயதான கைலாசம், சேலத்தைச் சேர்ந்தவர். 40 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் மத்திய அரசு சார்பில் இரும்பாலை அமைக்கப்பட்டபோது, தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை அரசுக்குக் கொடுத்துவிட்டு வெள்ளியம்பட்டிக்குக் குடிபெயர்ந்தார். கைலாசமும் அவரது மனைவி அமராவதியும் பாடுபட, தரிசு நிலம் செழிப்பான விளைநிலமானது. இப்போது இருக்கும் நிலமும் வீடும் கிணறும் தென்னை மரங்களும் கைலாசமும் அவருடைய மனைவி அமராவதியும் மாடாய் உழைத்து உருவாக்கியவை. அப்படி உழைப்பால் உருவான நிலமும் இன்று சேலம்  சென்னை எட்டுவழிச் சாலைக்கு இரையாகவிருக்கிறது.

‘‘இந்த வயசுக்கு மேல இருக்கிற வீட்டையும் சோறு போடுற நிலத்தையும் விட்டுட்டு எங்க போறதுன்னே தெரியலே” எனக் கண்கலங்கி நிற்கிறார், அமராவதி.

மாணவி வளர்மதியை வலுகட்டாயமாகக் கைது செய்யும் போலீசு.

‘‘தருமபுரிதான் எனது சொந்த ஊர். பல ஆண்டுகளுக்கு முன்பு பாப்பம்பட்டியில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கிக் குடியேறினோம். தரிசாகக் கிடந்த நிலத்தை எங்களது உழைப்பால் விளைச்சல் பூமியாக மாற்றி வைத்திருக்கிறோம். இந்த நிலத்தை அரசாங்கம் தட்டிப் பறித்துக் கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்கிறார், விவசாயி வேலு.

சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவருக்கு 2 ஏக்கர் நிலம்தான் மிஞ்சும். அந்த நிலமும் சாலைக்குக் கிழக்கே ஒரு ஏக்கர், மேற்கே ஒரு ஏக்கர் எனக் கூறுபோடப்பட்டிருக்கும். ஒரு நிலத்தில் இருந்து இன்னொரு நிலத்திற்குச் செல்ல அவரது குடும்பம் 20 கி.மீ. தூரம் சுற்றி அலைய வேண்டும்.

‘‘8 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்வோம். இப்போது பசுமை வழிச் சாலையால் எனது விவசாய நிலம் இரண்டாக பிளக்கப்பட்டு, 4 ஏக்கர் மற்றும் 2 கிணறு பறிபோகிறது. இரண்டு கிணறும் பறிக்கப்பட்டால், மீதம் உள்ள நிலத்தில் தண்ணீர் இல்லாமல் பயிரிட முடியாது. மேலும், நிலம் பிளக்கப்பட்டு நடுப்பகுதியில் சாலை செல்லும்போது இரண்டுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்” என்கிறார் திருவண்ணாமலையை அடுத்துள்ள காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த அனந்தசயனம்.

இந்தக் கதைகளைக் காது கொடுத்துக் கேட்க விரும்பாத அரசாங்கமும், அவர்களது விசுவாசிகளும் ‘‘வளர்ச்சி தேவையில்லையா?” என வன்மத்தோடு எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அதிவிரைவுச் சாலைகளும், கார்களும், மால்களும், அடுக்குமாடிக் கட்டிடங்களும், ஒருசில அதிநவீனமான தொழிற்சாலைகளும், பங்குச்சந்தை ஏற்றமும்தான் வளர்ச்சியின் அறிகுறிகள் என்றால், இந்த விவசாயிகளின் உழைப்பை, அதனால் சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் பலன்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பொய்களும் வதந்திகளும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாக ‘வளர்ச்சியின் ஆதரவாளர்கள்‘ குற்றஞ்சுமத்துகிறார்கள். இது அழுகுணித்தனமும் கயமைத்தனமும் நிறைந்த குற்றச்சாட்டு.  இதற்குப் பதில் அளிப்பதைவிட, வளர்ச்சி, வளர்ச்சி என கீறல் விழுந்த ரிகார்டு போல ஆளுங்கும்பல் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறதே, அந்த வளர்ச்சி குறித்துக் கட்டப்பட்டிருக்கும் பொய்களையும் கட்டுக்கதைகளையும்தான் முதன்மையாக நாம் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.

***

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தின் நன்மைகள் குறித்து ஆளும் அ.தி.மு.க. அரசும் பா.ஜ.க. அவிழ்த்து விட்டுவரும் பொய்களிலேயே பிரம்மாண்டமான பொய், நிலத்தை இழக்கவுள்ள விவசாயிகளுக்கு, மிக அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்பதாகும்.

கையகப்படுத்தப்படும் நிலம் மற்றும் அதிலுள்ள மாட்டுக் கொட்டகைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்திற்கும் இழப்பீடாக 2,605 கோடி ரூபாய் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கிறது, சாத்தியப்பாடு அறிக்கை. இந்த ஒதுக்கீட்டின்படி கணக்குப் போட்டால், முன்னூறு ஹெக்டேருக்கும் குறைவான விளைநிலங்களுக்குத்தான் ஒன்பது கோடி ரூபாயை இழப்பீடாகத் தர முடியும். அப்படியென்றால், மீதி நிலங்களுக்கு…? கலெக்டர் ரோகிணியின் அறிவிப்பு தேன் தடவிய நஞ்சு. பணத்திற்கு விவசாயிகளை மயங்கச் செய்யும் கீழ்த்தரமான தந்திரம்.

சாத்தியப்பாடு அறிக்கையில் நிலம், அதிலுள்ள வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மட்டும்தான் இழப்பீடு தொகை குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, பயிர்களுக்குத் தனியாக இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அரசோ ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் அதிகபட்சமாக ரூ.50,000/ இழப்பீடு வழங்கப்படும் எனத் துணிந்து அடித்துவிட்டிருக்கிறார்.

இந்த உடான்ஸ் பேர்வழியின் யோக்கியதை என்னவென்பதை இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்பட்ட வறட்சி, தமிழக விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத் தென்னை விவசாயிகள், பட்டுப்போன ஒவ்வொரு மரத்திற்கும் குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.3,000/ அளிக்க வேண்டுமெனத் தமிழக அரசிடம் கோரிவந்தனர். பத்து மாதமாக இந்தக் கோரிக்கை குறித்து முடிவெடுக்காமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு, இறுதியாக ஒரு மரத்திற்கு ரூ.103/ அளிக்க முன்வந்தது எனக் கூறுகிறர், பா.ம.க. நிறுவனர் ராமதாசு. (தமிழ் இந்து, 24.06.2018)

எனவே, தென்னை, பாக்கு போன்ற பணப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இழப்பீடு, காகித அறிவிப்பின் யோக்கியதையைக்கூடப் பெறும் தகுதியற்றவை.

சென்னை வண்டலூரை அடுத்துள்ள சுற்றுச்சாலை அருகே தொடங்கி, சேலத்தை ஒட்டியுள்ள அரியானூர் அருகே முடிவடையும் இந்த எட்டுவழிச் சாலையை 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், இந்தச் சாலையில் 60 கி.மீ. வேகத்தைத் தாண்டவே திணறும் அரசுப் பேருந்துகள் செல்ல வாய்ப்பில்லை.

ஜிண்டால் நிறுவனம் சூறையாடத் துடிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கவுத்தி வேடியப்பன் மலைத்தொடர்.

அரசுப் பேருந்துகள் பயணிக்க முடியாத சாலையால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பலன் கிட்டக்கூடும்? 60 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடிய அரசுப் பேருந்துகளின் கட்டணமே மலைக்க வைக்கும் அளவிற்கு இருக்கும்போது, 120 கி.மீ. வேகத்தில் அரசுப் பேருந்துகள் விடப்பட்டால், அதில் நாம் கால்வைக்க முடியுமா? சென்னைவாசிகள் மெட்ரோ ரயிலைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதைப் போல, எட்டுவழிச் சாலை தமிழகத்தின் தலையில் கட்டப்படும் இன்னொரு தங்க முள்கிரீடம்.

பெட்ரோல், டீசல் விலையில் சல்லிக்காசுகூடக் குறைக்க மறுத்துவரும் மத்திய, மாநில அரசுகள் எட்டுவழிச் சாலையால் பெட்ரோல் செலவு மிச்சமாகும் என நமக்குப் பொருளாதாரப் பாடம் நடத்துகிறார்கள். சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாகவுள்ள நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை மூட மறுக்கும் எடப்பாடி, சாலை விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில்தான் எட்டுவழிச் சாலையை அமைப்பதாகக் கூறுகிறார்.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய இமாலயப் பொய் இந்தச் சாலையால் எதிர்காலத்தில், மேற்குப் பகுதியிலுள்ள ஐந்து மாவட்டங்கள் அடையப் போவதாகக் காட்டப்படும் வளர்ச்சி குறித்த சித்திரம்தான். விவசாயிகள் தமது விளைபொருட்களை மிக விரைவாக ஏற்றுமதி செய்ய இந்தச் சாலை பயன்படும் எனத் தொடங்கி இராணுவத் தளவாட உற்பத்தி கேந்திரம் உருவாகும், சிறுதொழில்கள் பெருகும் என அடுக்கிக்கொண்டேபோகிறார்கள்.

இந்தச் சாலையை முழுமையாக அமைப்பதற்கே நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது. அதன் பின், மேற்சொன்ன பில்டப்புகளெல்லாம் உருவாக வேண்டுமென்றால் இன்னுமொரு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அடுத்த காலாண்டிலேயே இந்தியப் பொருளாதாரம் குப்புறக் கவிழ்ந்துவிடலாம் என ஆளும் வர்க்கப் பொருளாதார நிபுணர்களே அஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில், எட்டுவழிச் சாலை குறித்த பில்டப்புகளெல்லாம் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதைதான்!

2015 ஏற்பட்ட பெருவெள்ளம், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகிய சுமைகளால் தமிழகத்தில் ஏறத்தாழ 50,000 சிறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன என்றும், அ.தி.மு.க. கும்பலின் இலஞ்சப் பசி காரணமாகப் புதிய தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வருவதில்லை என்றும் முதலாளித்துவப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், ஒரு அதிவிரைவுச் சாலை தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிப் போட்டுவிடும் என்ற விளம்பரத்தை நம்புவதற்குக் காதில் பூ சுற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.

10,000 கோடி ரூபாய் பெறுமான இந்தத் திட்டத்தில் 4,000 கோடி ரூபாய் அளவிற்கு இலஞ்சம் பெற முடியும் என்ற ஒரே காரணத்திற்காகவேதான், சென்னையிலிருந்து சேலத்திற்குச் செல்ல ஏற்கெனவே மூன்று சாலை வழிகளும், இரண்டு இருப்புப்பாதை வழிகளும், விமான சேவையும் இருந்துவரும் நிலையிலும், இத்திட்டம் தமிழகத்தின் மீது வலிந்து திணிக்கப்படுகிறது. அதற்கு வளர்ச்சி என்ற சல்லாத்துணி போர்த்தப்படுகிறது.

***

தையும் எதிர்மறையாகவே பார்க்கும் வக்கிரப் பார்வை இது என நம்மீது சிலர் பாயலாம். அந்த நேர்முறை சிந்தனையாளர்களிடம் நாம் கேட்போம், கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியால் பலன் அடைந்தவர்கள் யார்?

மோடியின் ஆட்சியில் பங்குச் சந்தை குறியீடு 30,000 புள்ளிகளைத் தொட்டிருக்கலாம். கோடீசுவர இந்தியர்களின் எண்ணிக்கை ஒருசில நூறுகளைத் தொட்டிருக்கலாம். முகேஷ் அம்பானி உள்ளிட்ட ஒரு சில தரகு முதலாளிகள் உலகப் பணக்காரர்களாக ஆகியிருக்கலாம். அதேசமயம், பல பத்து கோடிக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களின், விவசாயிகளின், நடுத்தர வர்க்கத்தினரின் வேலை நிலைமையிலும் வாழ்க்கைத் தரத்திலும் என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது?

இன்னமும் இந்திய நாட்டு விவசாயிகள் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைத் தரக் கோரிப் போராடி வருகிறார்கள். அதனை உத்தரவாதப்படுத்த மறுக்கும் அரசுகளால், அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்டப்பட்ட ஐ.டி. துறை, அமெரிக்க  ஐரோப்பியப் பொருளாதாரம் குப்புறக் கவிழ்ந்தவுடனேயே தானும் படுத்துவிட்டது. ஐ.டி. துறையை நம்பித் தொடங்கப்பட்ட இன்ஜினியரிங் படிப்பு மோகமும் மட்டையாகிவிட்டது.

படித்து முடித்தவர்களுக்கு வேலையில்லை. வேலை கிடைத்தவர்களுக்கோ வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டக் கூடிய சம்பளம் கிடைப்பதில்லை. வேலை தேடி உள்நாட்டிலேயே அகதிகளாக அலையும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருத்துக்கொண்டே போகிறது.

எதையும் எதிர்மறையாகவே பார்க்கும் வக்கிரப் பார்வை
இது என நம்மீது சிலர் பாயலாம். அந்த நேர்முறை சிந்தனையாளர்களிடம் நாம் கேட்போம், கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியால்
பலன் அடைந்தவர்கள் யார்?

சாலை, விமான நிலையங்கள், தொலைதொடர்பு, மின்சாரம், கனிம வளச் சுரங்கங்கள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் துறையை வளர்த்து எடுத்தால்தான் இந்தியா வல்லரசாகும் எனக் கூறி, அந்தத் துறையில் இறங்கிய தரகு முதலாளிகளுக்குப் பொதுத்துறை வங்கிகளின் பணத்தைக் கடனாகக் கொட்டினார்கள்.  விளைவு, வங்கிகள் வாராக் கடனில் சிக்கித் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இப்பொழுது அந்த நட்டத்தை ஈடுகட்ட பொதுமக்களின் மீது வரிச் சுமையும், புதிது புதிதாகச் சேவைக் கட்டணங்களும் திணிக்கப்படுகின்றன.

பிரதமர் மோடி பாரத்மாலா திட்டத்தை  நாட்டின் 500 மாவட்டத் தலைநகரங்களைச் சாலை வழியாக இணைக்கக்கூடிய 5.35 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான திட்டம்  டாம்பீகமாக அறிவித்திருப்பதைப் போலவே, முந்தைய பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாயி தங்க நாற்கர சாலை திட்டத்தை அறிவித்து,  இந்தியா ஒளிரப் போவதாகப் படம் காட்டினார்.

____ பெட்டி செய்தி ___________________________________________________

மாமியார் உடைத்தால் மண்குடமாம்…
மருமகள் உடைத்தால் பொன்குடமாம் !

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் எனத் தொடங்கி தேசத் துரோகிகள் என்பது வரை பல வகையிலும் அவதூறு செய்ய பா.ஜ.க.  அ.தி.மு.க. கும்பல் தயங்குவதேயில்லை. இப்படிப்பட்ட தூய வளர்ச்சிவாதிகளின் உண்மை முகம் என்ன?

1,822 கோடி ரூபாய் பெறுமான சென்னை துறைமுகம்  மதுரவாயல் இணைப்புச் சாலை தி.மு.க.  காங்கிரசு கூட்டணி ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது தொடங்கிவைக்கப்பட்டது.

நட்டாற்றில் கைவிடப்பட்ட,
துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்.

2011 தி.மு.க. தோற்று ஜெயா முதல்வரானவுடனேயே, கட்டுமான வேலைகள் நடந்துவந்த நிலையிலேயே இத்திட்டத்தை அப்படியே முடக்கிப் போட்டார். தனது பரம வைரி கருணாநிதியால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற காழ்ப்புணர்ச்சியைத் தவிர, இந்தத் திட்டத்தை முடக்குவதற்கு ஜெயாவிற்கு வேறு காரணங்கள் தேவையாக இருக்கவில்லை.

ஜெயாவிற்கு மதுரவாயல் திட்டம் என்றால், இந்துத்துவ பா.ஜ.க. கும்பலுக்கு ராமர் பாலம் திட்டம். கிட்டதட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, கடற்பகுதியை ஆழப்படுத்தும் வேலைகளெல்லாம் நடந்துவந்த நிலையில், ராமர் பாலம் இந்துக்களுக்குப் புனிதமானது என்ற பார்ப்பன மூடநம்பிக்கையை முன்னிறுத்தி இந்தத் திட்டத்தை முடக்கிப் போட்டது, ஆர்.எஸ்.எஸ். பரிவாரம்.

ஜெயாவின் காழ்ப்புணர்ச்சியைவிட, பார்ப்பனக் கும்பலின் மூடநம்பிக்கையைவிட, மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமானதில்லையா?

___________________________________________________________________

இந்த தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதுதான் சென்னை  மதுரை நான்கு வழி விரைவுச் சாலை. இந்த சாலையால் தமிழகம் அடைந்த வளர்ச்சி என்ன? ஐந்து, பத்து கிலோமீட்டருக்கு ஒன்று என கும்பகோணம் டிகிரி காபி கடைகளையும், வசந்த பவன், ஆரிய பவன் ஹோட்டல்களையும் தாண்டி இந்தச் சாலை நெடுகிலும் தொழிற்சாலைகள் உருவாவதற்கான அறிகுறிகள் இப்பொழுதுகூடத் தென்படவில்லை. டோல்கேட், மோட்டல்களின் அடாவடித்தனமான கொள்ளைதான் நாம் கண்டுணர்ந்த ஒரே வளர்ச்சி.

இந்தியா எட்டு சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கொண்டுவரப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டமே தோற்றுப்போய்விட்ட நிலையில், இந்தியப் பொருளாதாரம் குப்புறவீழ்ந்து கிடக்கும் நிலையில் மோடியால் கொண்டுவரப்படும் பாரத்மாலா திட்டம் யாருக்குப் பலன் அளிக்கும்?

இரும்புக் கம்பிகள், சிமெண்ட் ஆலைகள், எல் அண்ட் டி, காமன் போன்ற சிவில் காண்டிராக்டு கம்பெனிகள், தமிழக நெடுஞ்சாலைத் துறையைக் குத்தகைக்கு எடுத்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியும் சம்பந்தியுமான ராமலிங்கத்தின் கம்பெனி, எடப்பாடியை நத்திப் பிழைக்கும் அ.தி.மு.க. மற்றும் பல்வேறு ஓட்டுக்கட்சிகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தால் உடனடிப் பலன் கிடைக்கும். சாலை அமைந்தால் டோல்கேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் பேருந்து முதலாளிகளின் கொள்ளைக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனைத் தாண்டி வேறெந்த அதிசயமும் மாயமும் நடந்துவிடாது.

  • ரஹீம்

________________________ துணைக் கட்டுரை _________________________

அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற செக்குமாட்டுப் பாதை!

மோடி ஷா கும்பல் வளர்ச்சியைக் கொண்டுவரப் போவதாகக் கூறி ஊதிவிட்ட அனைத்து நீர்க்குமிழிகளும்  மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா  கருவான வேகத்திலேயே ஊனமாகிப் படுத்துவிட்டன. எட்டு சதவீத வளர்ச்சியைக்கூட எட்டிப் பிடிக்க முடியாமல், சாண் ஏறினால் முழம் வழுக்கும் கதையாக இந்தியப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற பா.ஜ.க.வின் சவடால் வாக்குறுதி, அதற்கு நேர் எதிர்திசையில் பயணம் செய்து, ஏற்கெனவே இருந்துவரும் வேலைவாய்ப்புகளையும் காலி செய்துகொண்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் ஏதாவது செப்படி வித்தை செய்து, தன்னை வளர்ச்சியின் நாயகனாக முன்னிறுத்திக் கொள்ளவும், கேந்திரமான தொழில் துறைகளுக்கு அரசுப் பணத்தில் உயிர்த் தண்ணீர் ஊற்றவும்தான், புல்லட் ரயில் திட்டம், பாரத்மாலா திட்டம், சாகர்மாலா திட்டம் ஆகிய மெகா திட்டங்கள் அடுத்தடுத்து மோடி அரசால் அறிவிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டங்களின் சாத்தியப்பாடு என்ன, இந்தத் திட்டங்களைச் சுற்றிக் கூறப்படும் தொழில் வளர்ச்சி சாத்தியம்தானா என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இத்தகைய ஜிகினா திட்டங்களைத் தாண்டி ஆளுங்கும்பலிடம் மக்களின் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான திட்டங்கள் வேறு இல்லை என்பதுதான் உண்மை.

தனியார்மயம் தொடங்கிய காலத்திலிருந்தே அடிக்கட்டுமானத் துறையில் அரசு முதலீடு செய்தால்தான், தனியார் முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற கோட்பாட்டை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் திரும்பத்திரும்பக் கூறி வருகின்றனர். நரசிம்ம ராவ் தொடங்கி மோடி வரையிலான அனைத்துக் கட்சி பிரதமர்களும் இந்தச் செக்குமாட்டுப் பாதையில்தான் பயணம் செய்தனர், பயணம் செய்கின்றனர்.

வாஜ்பாயி தங்க நாற்கர சாலை திட்டத்தை அறிவித்தார். மன்மோகன் சிங் கனிம வளத் துறையைத் தனியாருக்குத் திறந்துவிட்டு, அதில் முதலீடு செய்ய வங்கி கஜானாவைத் திறந்துவைத்தார். இப்பொழுது, மோடி, தன் பங்குக்கு கிட்டதட்ட 15 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான மூன்று மெகா திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

இந்தச் செக்குமாட்டுப் பாதை இந்தியப் பொருளாதாரத்தில், சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அபகரித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்து, விவசாயிகளை நகர்ப்புறத்திற்கு வேலை தேடி அகதிகளாகத் துரத்தியடித்தது. இரும்பு, நிலக்கரி, அலைக்கற்றை உள்ளிட்ட தாது மற்றும் இயற்கை வளங்கள் அடிமாட்டு விலைக்கு இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்பட்டன. சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் துறைக்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் வாராக் கடனில் மூழ்கி, திவால் நிலைக்குத் தள்ளப்பட்டன. பெல்லாரி சகோதரர்களின் இரும்புத் தாது ஊழல், அம்பானியின் கிருஷ்ணா பெட்ரோலியப் படுகை ஊழல், நிலக்கரி ஊழல் என மெகா ஊழல்கள் பிறப்பதற்கு வழிவகுத்து, அம்பானி, அதானி போன்ற சில ஒட்டுண்ணி முதலாளிகளை உலகக் கோடீசுவரர்களாக ஆக்கியிருக்கிறது. 

இதைப் போன்றே சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டமும் ஒட்டுண்ணி முதலாளித்துவக் கும்பலுக்குக் கொழுத்த இலாபத்தை வாரி வழங்கப் போவதைத் தாண்டி வேறெந்த வளர்ச்சியையும் கொண்டுவந்துவிடாது.

இந்த எட்டுவழிச் சாலைத் திட்டமே, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கவுத்தி மலை  வேடியப்பன் மலைப் பகுதியில் புதைந்துள்ள இரும்புத் தாதுவை வெட்டியெடுத்து, அதனை சென்னை துறைமுகத்திற்கு விரைந்து எடுத்துவரும் நோக்கில் அமைக்கப்படுகிறதென்றும், ஜிண்டால் என்ற தனியார் முதலாளியின் நலனும் இலாபமும் இதன் பின்னே மறைந்துள்ளதென்றும் பலரும் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர்.

அ.தி.மு.க. அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும், சாலை வடிவமைப்பு இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலையை அடுத்த சாலையனூர், சேத்பட் ஆகிய இடங்களில் இணைப்புச் சாலைகளை அமைப்பதற்காக 239 ஹெக்டர் நிலங்களைக் கையகப்படுத்தவுள்ளனர்.   இவற்றுள்  சாலையனூர் இணைப்பு சாலையுடன் நாயுடுமங்கலம் வழியாக இனாம்காரியந்தல் வரை தனிச்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது. இனாம்காரியந்தல் கிராமம் எல்லையில்தான் இரும்புத் தாதுக்களை கொண்டுள்ள கவுத்தி மலை  வேடியப்பன் மலை இருக்கிறது.

ஜிண்டால் உள்ளிட்ட சில பனியா முதலாளிகளின் இலாபத்திற்காக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அதிகாரத்தின் துணையோடு பறிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைத் துடிதுடிக்கக் கொன்ற கும்பல், மேற்கு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைச் சிறுகச்சிறுகக் கொல்லத் துணிந்திருக்கிறது. இதன் பெயர் வளர்ச்சியா, வன்முறையா?

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com