Wednesday, November 6, 2024
முகப்புசெய்திஇந்தியாவிளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு !

விளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு !

கார்ப்பரேட் கும்பலுக்கு வால் பிடித்து விடும் மோடி அரசு விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை விட மக்கள் நலத்திட்டங்களுக்கு குறைவாகவே செலவிடுகிறது - ஆதாரங்கள்!

-

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, புதிய திட்டங்களுக்கான டிஜிட்டல், அச்சு மற்றும் ஏனைய விளம்பரங்களுக்காக ஏப்ரல்,2014 முதல் ஜூலை,2018 வரையிலான 52 மாதங்களில் 4,880 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக மைய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இராஜ்யவர்தன் இரத்தோர் பாராளுமன்ற மேலவையில் தெரிவித்துள்ளார்.

2014-15 நிதியாண்டில் ரூ. 979.78 கோடியும், 2014-15 நிதியாண்டில் ரூ. 1,160 கோடியும் 2015-16 நிதியாண்டில் ரூ. 1,264 கோடியும் 2016-17 நிதியாண்டில் ரூ. 1,313 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டில் இதுவரை ரூ. 162 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு அதன் கடைசி 37 மாதங்களில் செலவிட்டதை விட மோடி அரசு செலவிட்ட தொகை இரண்டு மடங்கு அதிகமாகும். அதாவது 2011, மார்ச் முதல்  2014, மார்ச் வரை ரூ. 2,048 கோடி காங்கிரசு அரசு செலவிட்டிருப்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக செயற்பாட்டாளர் அணில் கல்காலி வெளிப்படுத்தியுள்ளார்.

பயிர்க் காப்பீட்டுத்திட்டம், தூய்மை இந்தியா, திறன் நகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இலட்சிய கிராம திட்டம் போன்ற 4 அரசு திட்டங்களுக்கான விளம்பரங்களுக்கு மட்டுமே மூன்றாண்டுகளில் ரூ. 293 கோடியை செலவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.

மோடி அரசு தன்னுடைய சுயமோக விளம்பரத்திற்காக செய்த ரூ. 4,880 கோடியைக் கொண்டு நாடு முழுதும் சுமார் 4.57 கோடி குழந்தைகளுக்கு மதிய சத்துணவு வழங்கியிருக்கலாம். தேசிய ராஜீவ் காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் பணி புரியும் குறைந்தது 20 கோடி ஊழியர்களுக்கு ஒரு நாள் கூலி கொடுத்திருக்கலாம். தூய்மை இந்தியா திட்டத்திற்காக 60 இலட்சம் கழிவறைகள் கட்டியிருக்கலாம் அல்லது வல்லரசு கனவிற்காக குறைந்தது 10 முறை செவ்வாய் கிரகத்திற்கு இராக்கெட் கூட விட்டிருக்கலாம்.

தேசிய இடைநிலைக் கல்வி பிரச்சாரத்திற்காக கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கலாம். அனைத்திந்திய மருத்துவ நிறுவனங்களை உருவாக்க கூடுதல் தொகையை ஒதுக்கியிருக்கலாம். புதிய நிறுவனங்களை கட்டமைக்க 2014-15-லிருந்து ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 4,365 கோடி. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு இயங்குவது வெறுமனே ஆறு நிறுவனங்கள் மட்டுமே.

இவை எதையும் வளர்ச்சியின் நாயகன் என்று பம்மாத்து காட்டும் மோடி செய்யவில்லை. ஆனால் 2014-15  ஆண்டை ஒப்பிடும் போது சுயமோக விளம்பரத்திற்கு செலவிடுவது கிட்டத்தட்ட 34 % அதிகரித்திருக்கிறது.

விளம்பரங்களின் டாம்பீகம் ஒருபுறமிருக்க திட்டங்களின் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன?

பயிர்க்காப்பீடு என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து ரூ. 4,383 கோடி மற்றும் மைய மாநில அரசுகளிடமிருந்து ரூ. 17,796 கோடி என மொத்தமாக ரூ. 22,180 கோடியை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கறந்தன. பதிலுக்கு அவை ரூ. 12,949  கோடியை மட்டுமே, 1.2 கோடி விவசாயிகளுக்கு கொடுத்தன.

மேலும் திறன் நகரம் என்ற பெயரில் 2015-ல் தொடங்கப்பட்ட திட்டத்திற்காக 2018, ஏப்ரல் மாதம் வரை 1.8 % பணம் கூட ஒதுக்கப்படவில்லை. அதாவது இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 9,943 கோடியில் வெறும் ரூ. 182 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டதிற்காக ஒதுக்கப்பட்ட 700 கோடி ரூபாயில் வெறும் 4% மட்டுமே செலவிடப்பட்டது.

அதாவது நிறைவேறாத அரைவேக்காட்டுத் திட்டங்களின் விளம்பரத்திற்காக ஊதாரித்தனமாக செலவிட்ட தொகையை கூட திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 56 இஞ்ச் மார்புடையோன் செலவிடவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

-வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க

  1. மக்களைக்காக்க விளம்பரத்துக்காக செய்யும் செலவில் எட்டில் ஒருபங்கை மட்டும் செலவு செய்யும் மக்கள் விரோத அரசு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க