சிய விளையாட்டுப் போட்டிகள் துவங்கி விட்டன. இந்திய வீரர்கள் அந்தப் போட்டியில் வென்றார்கள், இந்தப் போட்டியில் பதக்கம் வாங்கினார்கள் என்ற செய்திகளை அரைமணிக்கு ஒருமுறை தொலைக்காட்சி செய்திகளில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தாங்கள் தினந்தோறும் விளையாடிக் கொண்டிருக்கும், தங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்ட மைதானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே நாட்கணக்கில் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பற்றிக் கவலைப்படவோ, கவனிக்கவோ யாரும் இல்லை. ஓசூர் நகரத்தில் இருக்கும் RV அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் இப்படிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

R.V. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மைதானம் காமராஜர் காலனியில் அமைந்துள்ளது. இதை ஓசூர் நகராட்சி பராமரித்து வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களில் பலரும் கைப்பந்து போட்டியில் மாநில, தேசிய அளவில் விளையாடி வருபவர்கள். முறையான பயிற்சி பெற்ற, வசதியான பள்ளிகளின் அணிகளையும் கூட வீழ்த்தும் சிங்கக்குட்டிகளாக இருக்கிறார்கள் இம்மாணவர்கள். ஆனால் முறையான எந்த வசதியும் கிடையாது, காலில் ஷூ இல்லாத மாணவர்களையும், காலையில் வெறும் வயிற்றோடு வருபவர்களையும் கொண்டது இந்த மாணவர் கூட்டம்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்.

ஓசூர் முழுவதுமே பல மைதானங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் காலை, மாலை இருவேளையும் மாணவர்கள் சீருடையோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும். ஆனால், அவர்களுக்கு உதவி செய்யவோ, போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ அரசு முன்வருவதில்லை. இம்மாணவர்களுக்கு, ஓசூர் ஈகிள்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தாயுமானவன் மற்றும் மாணிக்கவாசகம் ஆகியோருடன், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைந்து பயிற்சியளித்து வருகிறார்கள். சர்வதேச போட்டியில் பங்கெடுக்க சென்றாலும், தேசியப் போட்டிகளில் கலந்து கொள்ள சென்றாலும் முழுமையான உதவிகளைச் செய்வதில்லை என்ற ஆதங்கம் இப்பகுதி மாணவர்களிடம் இருக்கிறது. திறமைமிக்க மாணவர்கள் இருந்தும் சாதிக்க வழிவகை செய்யாத அரசு இருக்கும் நாட்டில் இருந்து எப்படி ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் வர முடியும்? இதைக் கேள்வி கேட்காமல், கொரியா, ஜப்பான் மாதிரி நாடுகள் எல்லாம் மெடல் வாங்குறான், 130 கோடி பேர் இருக்குற நாட்டுல ஒரு திறமைசாலி கூடவா இல்லை என அங்கலாய்த்துக் கொள்வதில் அர்த்தமென்ன இருக்க முடியும்?

ஓசூரில் இயங்கி வரும் லுக் இந்தியா என்னும் தனியார் நிறுவனம் தனது CSR நிதியில் இருந்து 25 இலட்சத்தை ஒதுக்கி, தரம் வாய்ந்த கைப்பந்து திடல் அமைத்துத் தர முன்வந்துள்ளது. இதற்கான இடத்தை ஒதுக்கித் தருமாறு பள்ளியின் தலைமையாசிரியர் நகராட்சி நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதி, முறையான அனுமதியும் வாங்கியுள்ளார். அதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.

பத்திரிகை செய்தி.

இந்த நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவருமான பாலகிருஷ்ணா ரெட்டி, தனது பரிவாரங்களுடன் மைதானத்தைப் பார்வையிட வந்துள்ளார். காலியிடத்தைப் பார்த்தாலே அவர்களுக்கு காசாகத்தானே தெரியும். அதே போல மைதானத்தின் ஒரு மூலையில் நடந்து வந்த கைப்பந்து திடலுக்கான கட்டுமான வேலைகள் மந்திரியின் கண்ணை உறுத்தியுள்ளது. இதை யார் கட்டுவது? யார் அனுமதி கொடுத்தது? ஏற்கனவே அரசு விழாக்கள் நடத்த இடம் போதாமல் இருக்கும் போது இப்படி எல்லாம் கட்டிக் கொண்டிருந்தால் தொந்தரவாக இருக்காதா? உடனே இடித்துத் தள்ளுங்கள் என வாய்மொழி உத்தரவு போட்டுவிட்டு போனார். மந்திரி காலால் இட்டதை தலையால் செய்யும் வேகத்தில் பொக்லைன் எந்திரத்தோடும், போலீஸ் பாதுகாப்போடும் வந்து இறங்கியது நகராட்சி நிர்வாகம். தான் கொடுத்த அனுமதியை தானே மீறி சுவரை இடிக்க ஆரம்பித்த உடனேயே வண்டியின் முன்னால் சென்று தடுத்த மாணவர்கள், எங்கள் மீது ஏறி சென்று இடித்துக் கொள்ளுங்கள் என உட்கார்ந்து முழக்கமிட ஆரம்பித்ததும் வேறு வழியின்றி பின்வாங்கினர். பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தும் பயனில்லை, எல்லாரும் மாணவர்கள், தகுந்த ஆதாரமும் வைத்திருக்கிறார்கள்

சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என அ.தி.மு.க., பி.ஜே.பி.யின் சில ஆட்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, நகராட்சி நிர்வாகம் கொடுத்த தடையில்லா சான்றிதழின் நகலைக் காட்டியும், ஏற்கனவே 2006-ஆம் ஆண்டில், விளையாட்டு தவிர்த்து வேறு செயல்பாடுகளுக்குத் தடைவிதித்து போடப்பட்ட அரசாணை பற்றியும் பேட்டி கொடுத்து உண்மை நிலைமையை எடுத்துக்கூறி அவதூறு செய்தவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்கள் மாணவர்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எப்படியாவது மந்திரியின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம் என 5 கி.மீ தூரத்தில் உள்ள அந்திவாடி பகுதிக்கு விரட்ட முயற்சி செய்தனர். காலுக்கு ஷூ வாங்கக்கூட காசில்லாமல் வெறுங்காலுடன் விளையாட வரும் மாணவர்கள் அவ்வளவு தூரம் தினமும் பஸ் ஏறிப் போக முடியுமா? விளையாடுவதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பது யார்? எனக் கேள்வி எழுப்பிய மாணவர்கள், தங்களது மைதானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற இலக்கோடு, இரவு பகலாக கொட்டகை அமைத்து, தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரவு பகலாக கொட்டகை அமைத்து, தங்கி போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதே மைதானத்தில்  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 15 இலட்ச ரூபாய் செலவில் உள் விளையாட்டரங்கம் ஒன்றும் கட்டப்பட்டு, நகராட்சியே பராமரித்து வருகிறது. அதற்கென கிளப் கமிட்டி உருவாக்கப்பட்டு, உறுப்பினர் கட்டணம் 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைக் கட்டும் தகுதியுள்ள பணக்காரக் கூட்டம் தினந்தோறும் கொழுப்பைக் கரைப்பதற்காக உள்ளே சென்று விளையாடி வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களோ உள்ளே நுழையக் கூட வழியில்லாமல் நிற்கிறார்கள். தங்களது விளையாட்டு சாமான்களைக் கூட உள்ளே வைப்பதற்கும் அனுமதி மறுப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள். மாணவர்களுக்கான விளையாட்டுக் கூடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கே விளையாட செல்லும் கூட்டத்தின் ஒரு பகுதியினர்தான் மாணவர்களையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

தங்களது போராட்டத்தையும், அதன் நியாயத்தையும் விளக்கி சமூக வளைதளங்கள் மூலமும், ஆதரவு தரும் ஊடகங்கள் மூலமும் பரப்புகிறார்கள் மாணவர்கள். அதன் மூலம் இப்பள்ளியில் படித்து, இம்மைதானத்தில் விளையாடி, அதனாலேயே வேலைக்கும் சென்றவர்கள், விளையாட்டை உயிராய் நேசிப்பவர்கள் என முன்னாள் மாணவர்கள் பலரும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்து ஆதரவு தருகின்றனர். கட்சிக்காரர்களும் தங்களது பங்குக்கு வந்து ஆதரித்து செல்கின்றனர். ஆக்கிரமிப்புக் குற்றம் சாட்டியவர்களின் கட்சிகளும் இப்படி வந்து ஆதரித்து செல்லும் வேடிக்கையும் நடக்கத்தான் செய்கிறது.

கலெக்டரிடம் மனு கொடுப்பது, சட்ட ரீதியாக வழக்கு தொடுப்பது என்ற வகையில் மாணவர்களுக்கு ஆதரவாக சிலர் உதவி வருகின்றனர். ஆனால், அரசாணை, தார்மீக நியாயம், தனது கடமை என அனைத்தையும் மீறி,   விளையாட்டுத்துறையை மேம்படுத்த வேண்டிய மந்திரியே மைதானத்தைப் பறித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பது அரசு, அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே கட்டப்பட்ட உள்விளையாட்டரங்கம் பணம்படைத்த சிலரின் கட்டுப்பாட்டுக்கு சென்றது போல ஒட்டுமொத்த மைதானமும், தனியார் சிலருக்கு கைமாறும் அபாயமும் இருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஓசூர் சுற்றுவட்டார ஏரிகள், விளையாட்டு மைதானங்களில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நடந்து வருவதையும் மக்களும் மாணவர்களும் கவனித்து வருவதன் விளைவாகவே இந்தத் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எனினும், தங்களை அமைப்பாக்கிக் கொண்டு, விளையாட்டினை நேசிப்பவர்கள், விளையாடும் மாணவர்கள், ஓசூர் நகரத்தின் உழைக்கும் மக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் திரட்டிக் கொண்டு, குன்றில் இட்ட விளக்காக எல்லாருக்கும் தெரியும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தும் போதே வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டியுள்ளது. இதுவரை வெற்றிபெற்ற போராட்டங்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடமாகவும் இதுதான் உள்ளது. போரட்டக்களத்தில் நிற்கும் மாணவர்கள் இந்த திசை நோக்கி நகரவும், அவர்களின் நியாயமான கோரிக்கை வெற்றிபெறவும் துணை நிற்போம்! தோள் கொடுப்போம்!

  • வினவு களச்செய்தியாளர்கள், ஓசூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க