ரவிருக்கும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பலவித திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசியல் கட்சிகளை வளைப்பது, இமேஜ் பில்டப் செய்வது, முக்கியமாக கலவரங்களை திட்டமிடுவது என பா.ஜ.க.வும் அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடுமையாக திட்டமிடுகின்றன. எந்தக் கட்சியை உடைக்கலாம், வளைக்கலாம் என்பதை நான்கைந்து மாநிலங்களில் செயல்படுத்திய அனுபவத்துடன் தமிழகத்திலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் என்ன ரிசல்ட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்து அறிவு தளத்தில் இவர்கள் செய்த சமீபத்திய பில்டப் ஒன்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் வால்டர் ஏ ஆண்டர்சன் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் ‘ஆர்.எஸ்.எஸ்-இன் உள்ளே ஒரு பார்வை (The RSS: A View to the Inside) என்பது நூலில் பெயர். இந்த நூல் குறித்து அனைத்து ஆங்கில ஊடகங்களிலும் கட்டுரைகளும் பேட்டிகளும் வெளியாகின. இடதுசாரி, லிபரல் ஊடகங்களும்கூட மதிப்பிற்குரிய பேராசிரியர் ஒருவருடைய நூல் என்கிற வகையில் நேர்காணல்களை வெளியிட்டிருந்தன. கேள்விகள் என்னவோ சூடாகத்தான் இருந்தன, ஆனால் ஆண்டர்சனின் பதிலோ ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பிரமோத் அதாவது ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளரைப் போல உள்ளன.

உதாரணத்துக்கு ஸ்க்ரால் இணையதளத்தில் வெளியான நேர்காணலில் ஆர்.எஸ்.எஸ். காரர்களின் உளவியல் எப்படிப்பட்டது என்கிற கேள்விக்கு ஆண்டர்சன் இப்படிச் சொல்கிறார்,  “நான் சந்தித்த அத்தனை பிரச்சாரக்குகளும் (ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியர்கள்) கல்லூரி படிப்பு முடித்தவர்கள். கல்வி மிக முக்கியமான தேவையாக உள்ள அவர்களுடைய திட்டங்களுக்கு அது பொருத்தமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் உயர்சாதியினர்; அனைவரும் அல்ல. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பிரச்சாரக்குகள் அதிக அளவில் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.

இவர்களுடைய ஆளுமை பற்றி சொல்வதென்றால், இளையவர்கள் தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஆர்.எஸ்.எஸ்.ஸை சாதியற்ற இந்து மடம் என்பார்கள். இவர்கள் குடும்பத்தை விட்டுக்கொடுத்தவர்கள், சொத்துக்களை துறந்தவர்கள், அமைப்புதான் இவர்களை ஆதரிக்கிறது. கொள்கை பற்று இருந்தால் மட்டுமே முழு வாழ்வையும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக அர்ப்பணிக்க முடியும். ஆர்.எஸ். எஸ். பிரச்சாரக்குகள்,  சமயத் தொண்டர்களைப் போல இந்த உலகத்துக்கு நல்லது செய்ய வந்தவர்கள். நான் நூலில் குறிப்பிட்டிருக்கும் வாக்கியத்தில் சொல்வதென்றால், அவர்கள் தர்மத்தின் தூதுவர்கள்” என்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு கிறித்துவர்களுடன், இஸ்லாமியர்களுடன், இந்துக்களில் சில பிரிவினருடன் இடதுசாரிகளுடன் பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு இந்தியாவின் கடந்தகாலம் குறித்து குறைகள் உள்ளன இல்லையா? என்ற மற்றுமொரு கேள்விக்கு,

“இல்லையில்லை. 50 பிரச்சாரக்குகளை சந்தித்த பின்பே இந்த கருத்தாக்கத்துக்கு வந்துள்ளேன். வெளியிலிருந்து பார்க்கும்போது ஆர்.எஸ். எஸ். அப்படியான தோற்றத்தைத் தரலாம். சாதாரண உறுப்பினர்களிடம் இத்தகைய பண்புகள் இருக்கலாம். பிரச்சாரக்குகளிடம் அப்படியில்லை” என்கிறார் ஆண்டர்சன். பசுவின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் கும்பல் கொலைகளுக்கும் முஸ்லீம்கள்கள் மீதான திட்டமிட்ட வெறுப்பு செயல்பாடுகளுக்கும் கலவரங்களுக்கும் ஆண்டர்சனின் பதில் ‘அவர்கள் அப்படியில்லை’ என்பதுதான்.

பைசாபாத்தில் முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறும் விழா ஒன்றில் எடுக்கப்பட்ட படம். (கோப்புப் படம்)

பெரும்பான்மையாக உள்ள இந்துக்களில் பெரும்பான்மையினர் தங்களை ‘இந்து’க்களாக உணருவதில்லை. அதாவது, இந்து தேசியத்துக்கு அடித்தளம் போட்ட சாவர்க்கரின் இந்துக்களாக அவர்கள் இல்லை. எனவே அவர்களை ஒருங்கிணைக்க ‘இந்து தேசியம்’ மிகத் தேவையாக உள்ளது. அறிவு தளத்தில் தாக்கம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தின் கருத்தை கவர, ஆண்டர்சன் போன்ற ‘அறிவுஜீவி’ பேராசிரியர்களின் துணை ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத் தேவைப்படுகிறது. அதை அவரும் ‘இந்துத்துவ’ அறிஞர் ஸ்ரீதர் டீ டம்ளே  இந்நூலில் சேர்ந்து செய்திருக்கிறார்கள்.

ஆண்டர்சன் என்ற அமெரிக்க அறிவுஜீவி ஆர்.எஸ்.எஸ். உள்ளிருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரலை ஒலித்தார் அல்லவா, அதுபோல் ஆர்.எஸ்.எஸ்ஸின் உள்ளிருந்து அதன் உண்மையான குரலை ஒலிக்க வைத்திருக்கிறார் மேற்குவங்க சமூக செயல்பாட்டாளர் ஒருவர். சய்பால் தாஸ்குப்தா என்ற அவர், ஆர்.எஸ்.எஸ். கூடாரத்துக்குள் சென்று, ஆர்.எஸ். எஸ்.ஸின் பிரபலமான முகமான ‘கலவர’ முகத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார். சய்பால் வெளியிட்ட இந்தத் தகவல்கள் ஆண்டர்சனின் ‘தர்மத்தின் தூதுவர்கள்’ முகத்திரையை கிழிக்கப் போதுமானவை.

செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கவிருக்கிற கிருஷ்ண ஜெயந்தி (ஜென்மாஷ்டமி) விழாவில் ஊர்வலம் என்ற பெயரில் பெரும் கலவரம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டிருப்பதாக ஆதாரத்துடன் சொல்கிறார் சய்பால். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக இணைந்து அதன் இணைய பிரிவில் பணியாற்றிய சய்பால், மேற்குவங்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பெரும்தலைகள், ஆண்டர்சன் எழுதியிருக்கும் படித்த பட்டதாரி பெரும்தலைகள் கலவரத்துக்காக திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்.

கடந்த மார்ச் 25-ஆம் தேதி ராமநவமி ஊர்வலத்தின்போது மேற்குவங்கத்தின் அன்சோல், ராணிகன்ஞ், துர்காபூர் போன்ற இடங்களில் திட்டமிட்ட கலவரத்தை உண்டாக்கியது இந்த கும்பல். இதில் மூவர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். கலவரங்களை முன்வைத்து மட்டுமே தனது செல்வாக்கை பெருக்கிக் கொள்வது ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் ‘இந்து தேசிய’ திட்டத்தின் ஒரு பகுதி. எனவேதான்,  வரவிருக்கும் ஜென்மாஷ்டமியில் ஹவுரா மாவட்டத்தின் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருக்கிறது  இந்தக் கும்பல்.

ஹவுரா மாவட்டத்தின் பா.ஜ.க. செயலாளர் நித்தீஷ் குமார் சிங் என்பவர் செப்டம்பர் 2-ஆம் தேதி நடக்கிவிருக்கிற ஊர்வலத்தின் திட்டங்களை இமெயில் வழியாக ஆர்.எஸ்.எஸ்.காரராக நடித்துக் கொண்டிருக்கும் சய்பாலிடன் விவரிக்கிறார். ஊர்வலம் கிருஷ்ண மந்திரில் தொடங்கிய ஹவுரா நிலையத்தில் முடிவதாகவும் இடையே முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று கோஷங்கள் போடுவதன் மூலமாக அவர்களைத் தூண்டி கலவரத்தை உண்டாக்குவதே திட்டம் எனவும் விவரிக்கிறார் நித்தீஷ் குமார்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்த மனோஜ் திவாரி . (வாள் ஏந்தியபடி உள்ளவர்)

ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்த மனோஜ் திவாரி (படத்தில் கையில் வாள் ஏந்தியபடி உள்ளவர்) என்பவர் ஊர்வலம் எப்படி எந்த வழியாக செல்ல வேண்டும் என மிக விரிவாக சாய்பாலுக்கு விவரிக்கிறார். கண்டிப்பாக ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக செல்ல வேண்டும் என சொல்லும் அவர்,  “அவர்கள்(முஸ்லீம்கள்) எதுவும் செய்ய மாட்டார்கள். அப்படியும் எதிர்வினையாற்றினால் நாம் பலமாக திருப்பித் தாக்க வேண்டும். போலீஸ் மட்டும் அமைதியாக இருந்தால் இவர்களை காலி செய்துவிடலாம்” என அறைகூவல் விடுக்கிறார். இவர் கலவர கமிட்டியின் உறுப்பினர் என தன்னிடம் கூறியதாக சய்பால் தெரிவிக்கிறார். 50 மேற்பட்ட சங்கிகளிடம் ஒன்றரை மாதங்களாக ‘களப்பணி’ செய்து கலவர திட்டத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார் சய்பால்.

சங்பரிவாரத்தின் சூப்பர் ஹிட் திட்டமான ரத ராத்திரை ஊர்வலமும் பாபர் மசூதி இடிப்பும் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய நீண்ட நெடிய பலனைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.  எங்கெல்லாம் பிரிவினைக்கான சாத்தியங்கள் உண்டோ அங்கெல்லாம் இந்தத் திட்டத்தை மீள் உருவாக்கம் செய்து பலனடையப் பார்க்கிறது சங்பரிவார் கும்பல். மேற்கு வங்கம் அதன் சமீபத்திய களம். தர்மத்தின் தூதுவர்கள் இந்து தேசியத்தை அமைக்கும் பொருட்டு கைகளில் வால் ஏந்தி தலைகளை கொய்ய காத்திருக்கிறார்கள். ஆண்டர்சன் போன்ற அமெரிக்க கெட்டிக்காரன் சொன்ன புளுகு எட்டு நாள்கூட தாங்கவில்லை.

  • கலைமதி

உதவியவை:

1 மறுமொழி

  1. இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன சாய்வு கொள்கை. நீங்க ஏற்கனவே எடுத்திருக்கும் முன் முடிவுக்கு எதிரா 1000 ஆதாரம் வந்தாலும் அத ஒதுக்கி தள்ளீட்டு, ஆதரவா ஒரே ஒருத்தர் சொன்னத ஆதாரமா எடுத்து இவ்ளோ நீள கட்டுரை எழுதற அழகே அழகு.

Leave a Reply to shan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க