Friday, February 7, 2025
முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைமலர்களே ... மலர்களே ... இது என்ன கனவா - ஒரு விவசாயி பாட முடியுமா...

மலர்களே … மலர்களே … இது என்ன கனவா – ஒரு விவசாயி பாட முடியுமா ?

திருமணம் முதல் திவசம் வரை அனைத்திலும் வைக்கப்படும் பூக்களை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை எப்படி உள்ளது..? கோயம்பேட்டில் பார்ப்போம், வாருங்கள்!

-

கோயம்பேடு : பூ விவசாயியின் வாழ்க்கையில் நறுமணம் வீசாத பூ சந்தை!

சென்னை கோயம்பேடு, வணிக உலகின் ஒரு சிறுநகரம். 295 ஏக்கரில் 2,800 காய்கறி கடைகள், 1,500 பழக்கடைகள், 446 பூக்கடைகள், சில்லரை வியாபரிகள் உள்ளிட்டு மொத்தம் 15 ஆயிரம் வணிகர்கள், ஐம்பதாயிரம் கூலித்தொழிலாளிகள் என்று அனைவரையும் உள்ளடக்கி சுழன்று கொண்டிருக்கிறது அந்த நகரம்.

சென்னை முழுவதும் வாழக்கூடிய சுமார் எண்பது லட்சம் மக்களின் அன்றாடத் தேவைகளை சில்லரை வியாபரிகள், அண்ணாச்சி கடைகள் மூலம் பூர்த்தி செய்வதற்காகவே இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

கோயம்பேட்டின் மேற்கு பகுதி தொடங்கி கிழக்கு பகுதி வரை காய்கறிகள், பழங்கள், பூ மார்க்கெட் என தனிதனியாக பிரிக்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வருகின்றது. காய், பழங்களை ஒரு வாரம் வரை வைத்து விற்பனை செய்யலாம். ஆனால் பூ எப்படி சாத்தியமாகும்?  ஒருநாள் தாக்குப் பிடிப்பதே கடினம். அதிகபட்சம் இரண்டு நாள். அதற்குள் விற்றாக வேண்டும். இல்லையெனில் அடுத்த நாள் குப்பைக்குத்தான் செல்ல வேண்டும்.

அதனால்தான் என்னவோ, பூ மார்க்கெட்டில் உள்ளே நுழைந்ததும் நம்மிடம் விற்று விட துடிக்கிறார்கள் வியாபரிகள். ஆளுக்கொரு திசையில் இருந்து அழைக்கிறது பல குரல்கள். “வாங்கண்ணா..வாங்க.. இப்ப கட்ன மாலைதான்” என்று அவசரமாக அழைக்கும் சிறு வணிகர்கள் ஒருபக்கம்…

“வாங்கய்யா..வாங்க…மொழம் முப்பது ரூபா தான்” என்று கட்டி முடிக்கப்பட்ட பூக்களை கையில் வைத்துகொண்டு அழைக்கும் தாய்மார்களின் குரல்கள் மறுபக்கத்திலிருந்து நம்மை நோக்கி அழைக்கின்றன. அதிகாலை காற்றில் கலந்து வரும் மரிக்கொழுந்து, செண்டுப் பூக்களின் வாசத்தை விட இந்தக் குரல்களின் கவன ஈர்ப்பு அதிகம்.

சந்தையின் நீரூற்று ஒன்றின் அருகே நின்று பார்த்தால் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து பூக்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கூடையை கையில் வைத்துக் கொண்டு “இந்த பன்னீர்ரோஸ் எவ்ளோ, அரளி, சம்மங்கி எவ்ளோ” என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள் பூ வாங்க வந்த பெண்கள். அவர்களுக்கு பதிலளித்துகொண்டே எடைபேடும் தொழிலாளிகள்.

அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் பூ மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பூவை கொண்டு வரும் விவசாயிகள், விற்பனை செய்யும் கமிஷன் ஏஜெண்டுகள், பாதையோர பூ வியாபரிகள், நிமிரக்கூட நேரமின்றி பம்பரமாய் சுழலும் தொழிலாளிகள் என்று “கிளைகள் தெரியாத மரங்களாக” பூத்துக்கிடக்கின்றன இந்த பூ மார்க்கெட்.

அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த  “கட் பிளவர்ஸ்” (வெட்டு மலர்கள்) கடையை  அணுகியதும்.. “சார்.. இது வியாபார நேரம் கொஞ்ச நேரம் கழிச்சி வாங்களேன்..ப்ளீஸ்” என்று நம்மை நாகரீகமாக திருப்பியனுப்பினார்.

“கட் பிளவர்ஸ்” (வெட்டு மலர்கள்)

சற்று தொலைவில் மலைபோல் கொட்டிக்கிடந்த சாமந்திப் பூவின் அருகே அமர்ந்திருந்த பூ வியாபாரி பெருமாளிடம் பேசினோம். ஆர்வமாக பேசத்தொடங்கினார்.

“சென்னைக்கு 1989-ல வந்தேன். முப்பது வருஷம் ஆகப்போவுது.  இந்த தொழில்தான் எனக்கு சோறு போடுது..

பூ வியாபாரி பெருமாள்

பூ மார்க்கெட்ல மட்டும் ஆயிரத்துக்கும் மேல வியாபரிங்க இருக்காங்க. அதுல ஐநூரு வியாபரிங்களுக்கு மார்கெட்டுல கடை இருக்கு. ஒவ்வொரு கடையும் இருநூறு சதுர அடிக்கு கீழதான்.. ஆனா வாடகை நாற்பதாயிரத்துக்கு குறைவில்ல. அட்வான்ஸ் பல லட்சம்.

இதுல ஒரே கடைய இரண்டு பேரும் பங்கிட்டுக்குவோம். எவ்ளோ இட நெருக்கடியா இருந்தாலும் அதுக்குள்ளேதான் லோடு எல்லாத்தையும் எறக்கி வக்கனும். இல்லனா ரெய்டு வரும்போது புடிச்சிடுவாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரெய்டு வருவதாக வந்த செய்தியை கேட்டு மார்க்கெட்டே சிறிது நேரம் பரபரப்பானது. எல்லோரும் பூக்களை எடுத்துக் கொண்டு மறைவான இடத்தை நோக்கி ஓடினார்கள். அந்த பரபரப்பு ஓய்ந்த பின்பு…மீண்டும் தொடங்கினார்…பெருமாள்.

“தோ..இப்ப பார்த்திங்கள்ல.. இப்படித்தான் அப்பபப்ப நடக்கும்..”என்று சொல்லிவிட்டு…..  “இந்த மார்க்கெட்டுல செண்டு மல்லி, கொய்மலர் ரோஜா சாதா, இதர ரோஜா, மல்லி, முல்லை, ஜாதிப் பூ, அரளி, சம்மங்கி, பட்டுப் பூ, மேரி கோல்ட், துளசி, மருகு, மரிக்கொழுந்துன்னு எல்லாம் வருது. கட் ஃபிளவர்ஸ்னு சொல்லக்கூடிய அழகு பூக்களும் வருது. இது எல்லாத்துக்கும் ஒரு சீசன் இருக்கு.

தமிழ்நாடு மட்டுமில்ல ஆந்திரா, கர்நாடகான்னு அண்டை மாநிலத்துல இருந்தும் வரும். மார்க்கெட்ல இருக்க ஒவ்வொரு வியாபாரிக்கும் பூ வந்து கொடுக்கிற விவசாயிங்க முப்பதுல இருந்து ஐம்பது பேர்கள நிரந்தரமா வச்சிருப்போம். ஒவ்வொருத்தருக்கும் குறைந்தது ஐந்து லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்துட்டு அவங்க பூ மகசூலை வாங்கிக்குவோம். விளஞ்ச பிறகு லாரி, வேன், கவர்ன்மெண்ட் பஸ்ஸு மூலமா தினமும் மார்க்கெட்டுக்கு கொண்டுவந்திடுவாங்க. இது வருஷம் ஃபுல்லா நடக்கும்.

“ஆந்திரா கடப்பாவுல இருந்து சாமந்தி பூ மே மாசம் கடைசியில வரும். அது முடிஞ்சா ஒசூர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில இருந்து சாமந்தி செப்டம்பர், அக்டோபர், நவம்பர்னு மூணு மாசம் தொடர்ச்சியா வரும்.

மல்லிப்பூ பிப்ரவரியில இருந்து கெடக்க ஆரம்பிச்சிடும். அது ஒரு ஆறு மாசத்துக்கு தடையில்லாம வந்துகிட்டே இருக்கும். சம்பங்கி கடலூர், திண்டிவனம், திருவண்ணாமலையில இருந்து வரும். முல்லை, ஜாதிப்பூ வேலூர்ல இருந்து வந்திடும்.

திண்டுக்கல், மணப்பாறையிலருந்து கனகாம்பரம், அரளி. எப்ரல் மாசத்துல இருந்து ஒரு ஆறு மாசம் வரும். மரிக்கொழுந்து வருஷம் முழுக்க வரும். சமயத்துல ஆந்திராவுல இருந்தும் வரும். ஓசூர், கர்நாடகாவுல இருந்து ரோஜா வரும்”

பூ வகையில பல நூறு இருந்தாலும் வருஷம் பூரா வியாபாரம் ஆவுறது ஒரு பத்து பூ தான். அதுக்கான மார்க்கெட் வருஷம் முழுக்க இருக்கும். அது கூட குறைய இருக்கும்.

பண்டிகை காலம், விசேச நேரத்துல  கணிசமா வியாபரம் ஆகும்.  ஒரு கூடை சாமந்தி இருபத்தி ஐந்து கிலோ இருக்கும். அது நூத்தி ஐம்பது ரூபாவுக்கும் போகும். அதைத் தாண்டியும் விக்கும். சமயத்துல வெறும் நாற்பது ரூபாவுக்கும் போகும். மழை , வெய்யிலு பூ தரத்தை பாதிக்கும். மார்க்கெட் ரேட்டு அதுக்கேத்த மாதிரி மாறும். இப்படி ஏத்த எறக்கமா இருக்கதால லாப-நஷ்டத்தை கணக்கு பாக்குறதுல சிரமம் இருக்கும்.

நாங்க அட்வான்ஸ் கொடுக்கிறதால எங்ககிட்ட வந்து கொடுக்கிறாங்க. நாங்க அவங்களோட மகசூலை வித்து தந்தா நூத்தி ஐம்பது ரூபா கமிஷன். ஒரு கூடைக்கு போக்குவரத்து செலவு, நூத்தி ஐம்பதுல இருந்து இருநூறு ஆகும். தூக்கு கூலி முப்பது, கூடைக்கான காசு இருபது… இது எல்லாத்தையும் கழிச்சிக்குனு தான் விவசாயிங்களுக்கு நாங்க கணக்கு கொடுப்போம்.

இதுல பெட்ரோல் விலை ஏறுனா போக்குவரத்து செலவு இருநூத்தி ஐம்பதா மாறும். அது அந்த சம்சாரிங்க தலையில தான் விடியும். எங்களுக்கு அது பாதிப்பு இல்ல. அதால மார்க்கெட் கூடகுறைய ஆவுறதும் எங்களால கணிக்க முடியாது. மார்கெட்டும் நிரந்தரமா இருக்க மாதிரி தான் தெரியுது.

“இந்தமாதிரி பெட்ரோல்-டீசல் திடீர் விலை உயர்வால பாதிக்கிறது விவசாயிங்க மட்டும்தான். அவங்களுக்கு தான் எல்லா விலையேற்றமும் தலையில விழுது. அதனால கடனை அவங்க ஏத்திகிட்டே போவாங்க. மகசூல்லயும் அவங்க பணம் பார்க்க முடியாது. அவங்களுக்கு எப்பவும் விடிவே கிடையாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பூ வாங்க வந்த பெண்மனி ஒருவர் குறுக்கிட அவரை கவனிக்க கடை ஊழியர் ஒருவரை நியமித்துவிட்டு தொடர்ந்தார். அவரிடம் கேட்டோம்.

பெட்ரோல்டீசல் விலையுயர்வு, மழையினால ஏற்படுற அழிவு இதெல்லாம் விவிசாயி தலையில விழுந்திடுதுஅதையும் மீறி ஒரு விவசாயியால லாபம் பார்க்க முடியுமா? சில பத்திரிக்கைகள் மகசூல் அமோகம்விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சின்னு எழுதுறாங்களேஅது?

சரிதான். வாழ்ந்தவங்களும் இருக்காங்க… அது ரொம்ப கம்மிதான். மழையின்னா அழிவு. வெய்யிலுன்னா விளைச்சல் அதிகம். அதேசமயம் வரத்து அதிகமாகும் போது விலை குறையத்தானே செய்யும். அட்வான்ஸ் பணம் பல லட்சம் வாங்கிப்பாங்க. அதுமட்டுமில்லாத இவங்களோட குடும்ப செலவு, காது குத்தி, கல்யாணம் எல்லாத்துக்கும் குறுக்குல ஏராளமா எங்க கிட்ட கடன் வாங்கிடுவாங்க.

மகசூல் தவறிட்டா கொடுத்த கடன் இரண்டு வருஷத்துக்கு மேலயும் இழுக்கும். இப்ப சமீபத்துல நெறைய விவசாயிங்க நொடிஞ்சி போயிட்டாங்க. பல பேர் கடனை கொடுக்க முடியாம வீடு வாசல் இழந்து காணாம போயிட்டாங்க… சிலபேர் தொழிலையே மாத்திக்கிறாங்க.

படிக்க :
♦ பூக்காரம்மா….!
♦ பூக்காயம்…

கம்பனி வேலைக்கு, வீட்டோட ஆடு மாடு வளக்கிறதுன்னு போயிடுறாங்க.… சிலபேர் எப்படி பொழக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறாங்க. நாங்களும் கொடுத்த கடன வாங்க முடியாமலே போயிடும். இதுதான் விவசாயிங்களோட நெலம..  இதுல பெட்ரோல்-டீசல் விலையேற்றம் எதுவானாலும் விவசாயிக்குதான் பெரிய பாதிப்பு” என்றார்.

மார்கெட்டுக்கு சாமந்திப் பூ கொண்டு வந்திருந்த கிருஷ்ணகிரி-ஓசூர் விவசாயிகள் ராமப்பா, பி.ஆர்.எஸ். செல்வம் சோகம் தட்டிய முகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் கேட்டபோது…..

கிருஷ்ணகிரி-ஓசூர் விவசாயிகள் ராமப்பா, பி.ஆர்.எஸ். செல்வம்

“நாங்க இன்னா சொல்லுறது… காலையில நாலு மணிக்கு வூட்டுல இருந்து கிளம்பினேன். தோ.. இன்னும் உக்காந்துனு இருக்கேன். இன்னிக்கு சாயங்காலம் முழுக்க இங்கயே தான் கெடக்கனும். இதெல்லாம் வித்தா தான் காசு கையில கெடக்கும். இதுதான் எங்க பொழப்பு…” என்று விரக்தியாவே பேசினார்கள்.

விவசாயி ராமப்பாவிற்கு ஐந்து ஏக்கர் நிலம். “அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்கிறார் அவர்.

“இப்ப இரண்டு ஏக்கர் மட்டும் தான் பயிரு வக்கிற மாதிரி இருக்குது. அதுவும் முழுசா  எந்த பயிரும் வக்க முடியாது. தானியம் எதுவும் வெளச்சல் இல்ல. பணப்பயிர் போட்டா எதாவது கிடைக்குமேன்னு பூ போடுறோம். எங்க ஊர் பக்கம் எல்லாம் பூமியில தண்ணியே இல்ல. மழையும் இல்ல. கிணறும் வறண்டு கிடக்கு… பிறகு எப்படி பயிர் வக்க முடியும்….

கடன வாங்கி ஆயிரம் அடி போர் போட்டாலும் தண்ணி கிடைக்கிறது இல்ல. அதுக்கு ஒன்னரை லட்சம் தண்டமா செலவு பன்றதா இருக்கு. எதையும் நம்ப முடியல. ஏதோ இத்தன நாள் கஷ்டப்பட்டு பசங்கள படிக்க வச்சேன். அவனுங்களுக்கும் வேலை கிடைக்காம வீட்டுலதான் இருக்காங்க. நிரந்தரமா ஒரு வருமானம் வரும்னு பார்த்தா ஒன்னும் இல்ல.

சரி வேற எங்கயாவது வேலைக்கு போகலாம்னாலும் ஒரு வேலையும் இல்ல. வாட்ச்மேன் வேலையத்த தவிர… இந்த காலத்துல படிச்சவங்களுக்கே நிரந்தமா வேலை இல்ல. எப்ப வேலைய விட்டு அனுப்புறானுங்கன்னே தெரியல. எப்படி வாழறது சொல்லுங்க…” என்று இறுகிய முகத்துடன் கேள்வியெழுப்புகிறார்.

“எல்லாம் விதியேன்னு நொந்து காலையில நானு லாரியில இந்த பூவ ஏத்திகிட்டு வண்டியிலயே வந்துட்டேன். இதை எல்லாம் பஸ்சுல போட்டு வந்தா கை செலவு கூட மிஞ்சாது. சாப்பட்டுக்கே இருநூறு ரூபா போயிடும்.  நாலு கூடை தான் வெளஞ்சது, ஒரு கூடை இருபத்தி அஞ்சி கிலோ வரும்.   120 ரூபா ரேட்டு போறதா சொன்னங்க.  இன்னும் ரெண்டு நாள் கழிச்சி கொண்டு வந்தா இந்த வெலயும் போகாது. இல்ல கூடவும் போவும்.

“எங்களுக்கு பக்கமா பெங்களுரு மார்கெட்டு இருக்கு.. அங்க போனா சுத்தமா அழிய வேண்டியதுதான். ஒரு நாளைக்கு ஒரு ரேட்டு போடுவான். அதை நம்பி கொண்டு போக முடியல.

அதே மாதிரி நம்ம பூவுன்னா மதிக்க மாட்றானுங்க. கர்நாடகா மண்ணுல வெளையிற பூ நல்லா இருக்கும். அருமையான மண்ணு. ரோஸ் நல்ல விளைச்சல்.  அதனால நம்ம பூவ மதிக்கிறதே இல்ல.

அதனால தான் எப்பேற்பட்டாவது இந்த மார்கெட்டுக்கு வந்துடுறேன்… இதுவும் இல்லனா என்னமாதிரி விவசாயிங்க எல்லாம் தூக்கு மாட்டிக்கினு தான் சாவனும்…” என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேச முடியாமல் முகத்தை திருப்பி கொண்டார் விவசாயி ராமப்பா.

பூ வியாபரத்தை “அழியும் பொருள்; அழியா தொழில்” என்பார்கள்… அது பொய்யாகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது விவசாயிகளின் அழிவில்!

-வினவு புகைப்படச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க