நான் பொஸ்டனுக்கு போனால் அவர் ரொறொன்ரோவுக்கு போனார். நான் ரொறொன்ரோவுக்கு போனால் அவர் பொஸ்டனுக்கு போனார். கடைசியில் ஒருவாறு சந்திப்பு நிகழ்ந்தது. பொஸ்டன் நண்பர் வேல்முருகன் என்னை வந்து காரில் அழைத்துப் போனார். பொஸ்டன் பாலாஜி அவரைக் கூட்டிவந்தார். வேல்முருகன் வீட்டில் சந்தித்துக் கொண்டோம். இப்படித்தான் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியை சந்தித்தேன். இதுவே முதல் தடவை.
ஒருமுறை அமெரிக்காவில் சு.ராவைச் சந்திக்க விரும்பி அவர் தங்கியிருந்த சாந்தகுரூஸ் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அது பத்து வருடங்களுக்கு மேலேயிருக்கும் என்று நினைக்கிறேன். பேச்சின்போது நடுவிலே திடீரென்று ‘நீங்கள் சலபதியை படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் ’இல்லை’ என்றேன். ’நீங்கள் படிக்கவேண்டிய முக்கியமான ஆய்வாளர் அத்துடன் எழுத்தாளர்’ என்றார். அதன் பின்னர்தான் அவரைத்தேடி படிக்க ஆரம்பித்தேன்.
சலபதி சொன்ன கதையும் சுவாரஸ்யமாக இருந்தது. ‘ஒருநாள் எழுத்தாளர் பெருமாள் முருகனை கம்புயூட்டரில் தேடிக்கொண்டு போனேன். அவருடைய பெயர் வந்ததும் கிளிக் பண்ணினேன். அது எப்படியோ தவறுதலாக உங்கள் பெயரை கிளிக் செய்துவிட்டது. கட்டுரையை படிக்க ஆரம்பித்ததுமே இது வேறு ஆரோவுடைய எழுத்து என்பது தெரிந்துவிட்டது. முடிவிலே அ.முத்துலிங்கம் என்று பெயர் போட்டிருந்தது. அதன் பின்னர்தான் உங்கள் எழுத்தை படித்தேன்’ என்றார். ஒருவரை ஒருவர் தற்செயலாக படிக்கத் தொடங்கிய நாங்கள் சந்தித்ததும் இப்படி தற்செயலாகத்தான்.
‘கடிதங்களை தொகுக்கும் ஆர்வம் எப்படி வந்தது?’ என்று அவரைக் கேட்டேன். அவருக்கு வ.உ.சியில் பெரும் பற்று இருந்தது. அவருடைய கடிதங்களை தேட ஆரம்பித்தபோது பாரதி, புதுமைப்பித்தனின் கடிதங்களும், வேறு பல அருமையான தகவல்களும் அகப்பட்டன. இவற்றை வகை வகையாக புறாக்கூண்டுகளுக்குள் வைத்து இருபது வருடங்களுக்குமேல் பாதுக்காக்கிறார். சில ஆராய்ச்சிகள் தொடருகின்றன. சில ஏற்கனவே புத்தகங்களாக வந்துவிட்டன. செம்பதிப்பில் புதுமைப்பித்தன் கதைகள், கட்டுரைகள், பாரதி கட்டுரைகள் எல்லாம் வெளிவந்தது இப்படித்தான் என்றார்.
அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் சமீபத்தில் செய்து முடித்த ஒரு மகத்தான காரியம் பற்றி அறிய முடிந்தது. ம.இலெ.தங்கப்பா, புதுவையில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிறைய தமிழ் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தார். ஆனால் அவை புத்தகமாக உருப்பெற்றதில்லை. பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியின் அருமையான முன்னுரையுடன் இந்த நூல் புது தில்லி பெங்குவின் பதிப்பாக, Love Stands Alone என்ற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்தது. இது வெளிவர முழுக்காரணமாக இருந்தவர் சலபதிதான்.
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக எப்படியும் புத்தகத்தை வாங்கிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் சிறிது ஏமாற்றம் இருந்தது. ஜி.யு.போப், ஏ.கே.ராமானுஜன், ஜோர்ஜ் எல். ஹார்ட் போன்றவர்கள் ஏற்கனவே சங்க இலக்கியங்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள். மீண்டும் ஒன்று தேவையா என்ற நினைவு எழுந்தது. ஓர் ஆராய்ச்சியாளரின் நேரம் எவ்வளவு முக்கியமானது. ஏதாவது சொந்தமாகச் செய்திருக்கலாமே என்ற எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை. எனினும் புத்தகத்தை தருவிக்கும் முயற்சியில் இறங்கினேன்.
அமெரிக்காவிலோ கனடாவின் புத்தகக் கடைகளிலோ புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அமேஸன்.கொமிலும் தேடி கிடைக்கவில்லை. ஒரு நண்பருக்கு இந்தியாவுக்கு எழுதி அதிவேக தபாலில் ஒரு பிரதியை எடுப்பித்தேன். புத்தகத்தின் விலையிலும் இரண்டு மடங்கு கூடிய தபால் செலவு வைத்த புத்தகம் மூன்று நாளில் ஓர் இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தது. அன்று இரவு படிக்கத் தொடங்கி அடுத்தநாள் காலைதான் முடித்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன் சலபதி தன் நேரத்தை சரியான ஒரு காரியத்துக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்று. சமீபத்தில் என்னை வேறு ஒரு புத்தகமும் இப்படி கவரவில்லை.
இந்தப் புத்தகம் பல கேள்விகளை என் மனதில் எழுப்பின. ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கும்போது அதன் கவித்துவம் முழுக்க புதுமொழியில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. எண்பது சதவீதம் வந்தால் அது வெற்றி. நூறு சதவீதம் வந்தால் மாபெரும் வெற்றி. ஆனால் மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை தாண்டக்கூடுமா? அப்படி தாண்டினால் அது சரியாக இருக்குமா? சங்க இலக்கியங்களில் ஓர் ஐம்பது பாடல்கள் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டப்படும். மேடைகளில் பேசப்படும். ஒருவர் பின் ஒருவராக அவற்றை பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவற்றை விட்டுவிட்டு அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத பாடல்களை நான் மொழிபெயர்ப்பு நூலில் தேடினேன்.
அவை ஏதாவது புதிய திறப்புகள் கொண்டுள்ளனவா என்று பார்ப்பதுதான் என் எண்ணம். தமிழில் படித்தபோது சாதாரணமாகத் தோன்றிய சில பாடல்கள் ஆங்கிலத்தில் புதிய ஜொலிப்புடன் கண்ணில் பட்டன. பதினாறு மூலையாக வெட்டப்பட்ட ரத்தினக் கல்லை யன்னல் பக்கம் கொஞ்சம் திருப்பி வைத்ததும் புதிய ஒளியை வீசுவது போல.
படிக்க:
♦ தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !
♦ அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் ! தாமதம் வேண்டாம் !
முதலில் ஆச்சரியப் படுத்திய விசயம் நூலின் தலைப்பு. Love Stands Alone. இது குறுந்தொகையில் வரும் பாடலின் ஒரு வரி. தமிழில் இந்தக் குறுந்தொகை கவிதையை பலமுறை தாண்டிப் போயிருக்கிறேன் ஆனாலும் ஆங்கிலத் தலைப்பில் கிடைத்த அர்த்தம் எனக்கு கிடைக்கவே இல்லை. ஆங்கிலத்தில் கவிதையை படித்தபோதோ அந்தக் கருத்து பட்டென எழுந்து நின்றது.
குறுந்தொகை 174 – பாடியவர் வெண்பூதி
தலைவி தோழிக்கு சொன்னது
பெயல்மழை துறந்த புலம்புஉறு கடத்தக்
கலை முட்கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின்இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.
இதன் பொருளை சுருக்கமாக இப்படிக் கூறலாம். ‘மழை பெய்யாத பாலை நிலத்தில் கிளைவிடும் கள்ளிச் செடியின் காய்கள் வெடிக்கும் சத்தம் மென்மையான சிறகுகள் கொண்ட ஆண், பெண் புறாக்கள் சேருவதற்கு தடையாக அச்சமூட்டுகின்றன. என்னை தவிக்க விட்டுவிட்டு அப்படியான காட்டுப் பாதையில் அவன் பொருள் தேடி புறப்பட்டு போய்விட்டான். இந்த உலகத்தில் பொருள் ஒன்றே உறுதியான பொருள். அருள் என்பது தன்னை ஏற்றுக் கொள்வதற்கு ஆரும் இல்லாமல் நிற்கிறது.’
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படி வருகிறது.
In the desolate, rain-forsaken land
the twisted kalli’s pods
open with a crackle
frightening the mating pigeons
with their close-knit downy feathers.
He has left me languishing.
‘In search of wealth’ he said.
He did not mind the risk on the way.
If it comes to that,
then in this world
wealth has all support
and love must stand alone.
அந்தக் கடைசி வரியில் ஒரு சிறு மாற்றம், அது கவிதையை என்ன மாதிரி உயர்த்தி விடுகிறது. காதலுக்கு ஒருவிதத்திலும் துணை கிடையாது என்று தமிழில் வருவது ஆங்கிலத்தில் ‘காதல் தனித்து நிற்கிறது’ (Love Stands Alone) என்று வரும். இதிலே மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஏறக்குறைய 2000 வருடங்களுக்கு முற்பட்ட சங்கப் பாடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு நவீன கவிதைபோலவே தோற்றமளிக்கிறது என்பதுதான்.
இன்னொரு பாடல். புறநானூறு 112. பாடியவர் பாரி மகளிர். நூறு கட்டுரைகளிலும், இருநூறு மேடைகளிலும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல். சினிமாவும் இந்தப் பாடலை விடவில்லை.
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
பொருள் மிக எளிது. ‘அன்றைய திங்கள் தந்தை இருந்தார், குன்றும் இருந்தது. இன்றைய திங்களில் வெற்றிகொண்ட அரசர் குன்றை கைப்பற்றிக்கொண்டனர். தந்தையும் இல்லை.’ இதை மொழி பெயர்ப்பதும் எளிது. வெண்நிலவு என்பதை full moon என்று மொழிபெயர்ப்பதே வழக்கம். ஆனால் அந்த வரி இப்படி வருகிறது.
But tonight
the moon is full again,
the triumphant kings
marching with their battle drums
have our hill,
and we are fatherless.
Full moon என்பதற்கு பதிலாக the moon is full again என்ற சொற்தொடர் பயன்படுத்தப் படுகிறது.
சந்திரன் மறுபடியும் நிறைந்துவிட்டான். தேய்ந்த சந்திரன் மீண்டும் வளர்ந்து ஒருமாத காலம் ஓடிவிட்டது சொல்லப்படுகிறது. ஒரு சிறிய சொல் வித்தை கவித்துவ அழகை உயர்த்திவிடுகிறது.
இப்படி ஒரு மாயத் தருணம் ஹோமருடைய இலியட்டிலும் வருகிறது. அச்சில் கிரேக்க வீரன். அவன் திரோஜனான ஹெக்டரை பழிவாங்கும் வெறியிலிருக்கிறான். அச்சில் துரத்த ஹெக்டர் திரோய் நகரத்து சுவர்களை மூன்றுதரம் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். அச்சில் ஹெக்டரை வெட்டி வீழ்த்தி அவனுடைய குதிக்காலில் கயிற்றைக் கட்டி தேரிலே இழுத்துச் செல்கிறான். பன்னிரெண்டு நாட்களின் பின்னர் கோபம் அடங்கி பிணத்தை ஹெக்டரின் மனைவியிடம் ஒப்படைத்ததும் அவர்கள் மரணச் சடங்குகளை செய்துமுடிக்கிறார்கள்.
So they tended the burial of Hector, tamer of horses என்று ஹோமர் முடிக்கிறார். குதிரைகளை பழக்கும் ஹெக்டர் கொல்லப்பட்ட பிறகும் குதிரைகளால் இழுக்கப்பட்டு கேவலமான முடிவை அடைகிறான். ‘குதிரைகளைப் பயிற்றுவிக்கும் ஹெக்டர்’ என்று கவி சொல்லவில்லை. ‘ஹெக்டர் ஆகிய குதிரைப் பயிற்சிக்காரன்’ என்று சொல்கிறார். மிகச் சாதாரணக் கவிதையாக அதுவரைக்கும் இருந்தது சட்டென்று திறந்து உயிர் கொள்கிறது.
இப்படி உயிர் பெறும் கவிதைகளை இந்த மொழிபெயர்ப்பில் பல இடங்களில் காணலாம். இன்னொரு கவிதை. புறநானூறு 196. ஆவூர் மூலங்கிழார் பாண்டியனை நோக்கிப் பாடியது. நீண்டநாட்கள் அரசன் வாயிலில் நின்றும் புலவருக்கு பொருள் கிடைக்கவில்லை. தருகிறேன் என்று சொன்ன அரசன் தரவில்லை. வயிறெரிந்து புலவர் பாடுகிறார்.
இது நீண்ட பாடல். இதன் பொருள் சுருக்கம் இது. ‘தருவதும் தராமல் விடுவதும் உன் விருப்பம். தருவதாகச் சொல்லி தராமல் இருப்பது நல்லதல்ல. உன் புதல்வர் நோயில்லாமல் வாழட்டும். கல்போலக் கரையாத வறுமையுடன், நாணத்தை தவிர வேறு எதையும் அணியாமல், வாழும் என் மனைவியிடம் நான் திரும்பிச் செல்கிறேன். நீ வாழ்க’ என்கிறார் புலவர். ஆங்கில மொழிபெயர்ப்பில் கடைசிப் பகுதியில் ஒரு சின்ன மாற்றம் நிகழ்கிறது.
While I go away from here
braving the sun and the cold winds,
thinking of my delicate young wife
whose virtue is her loyalty
and who lives in my home
which is but a wind shelter
where my poverty
as if made of stone
sitting tight.
அரசன் பரிசில் தராமல் ஒவ்வொரு நாளாக கடத்தி ஏமாற்றியதில் கொதிக்கும் புலவரின் நெஞ்சம் தமிழ் கவிதையில் மையமாகத் தெரிகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில், வறுமையின் உக்கிரம்தான் முதலிடம் பெறுகிறது. என் குடிசையில் வறுமையோ கல்போலக் கரையாமல் நிற்கிறது என்று ஆங்கிலக் கவிதை முடிகிறது. நுட்பமான ஒரு பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது.
குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு பாடல்களை நான் அவ்வப்போது படிப்பதுண்டு. எத்தனைதரம் படித்தாலும் அவை அலுப்பதில்லை. எந்த ஒரு நல்ல கவிதையும் வாசகரின் பொறிபட்டுத்தான் சுடர்விடும். இந்த நூலைப் படித்தபோது பல இடங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பாடல்கள் இன்னொரு தளத்தில் இயங்குவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிட்டியது. ஒரு மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை தாண்டி மேலே போகலாமா? போகலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
படிக்க :
♦ கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்
♦ இரண்டு டாலர் கிடைத்தது | அ.முத்துலிங்கம்
உலக இலக்கியங்களை தொடர்ந்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் David Damrosch உத்தமமான மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை மிஞ்சலாம் என்றும் அது வாசகர்களை இரண்டு கலாச்சாரங்களுக்குள்ளும் சமமாக அழைத்துச்செல்லும் தன்மையுடையதாக இருக்கும் என்றும் சொல்கிறார்.
இந்த நூல் கொடுத்த அனுபவத்தை எப்படி வர்ணிப்பது என்பதில் பெரும் தயக்கமிருக்கிறது. ஒரு நல்ல கவிதையில் வார்த்தைகள் முன்னே போகும், கவி பின்னே செல்வார் என்று சொல்வார்கள். இங்கே வார்த்தைகளே தெரிகின்றன. இந்த நூலில் ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிதைகளைப் படித்துவிட்டு பிரபல கவி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கவிதைப் பேராசிரியர் அரவிந் கிருஷ்ண மெஹ்ரோத்ரா கூறியதை நான் என்னுடைய மொழியில் சொல்கிறேன்.
‘நாட்டுப்புற நடனத்தில் பெண்கள் தலைக்குமேல் பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நடனமாடுவார்கள். அதை மூச்சைப் பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு பார்த்து ரசிப்போம். ஒரு தவறான அடி பானைகளைச் சிதற அடித்துவிடும். ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் கவிதைகள் மீண்டும் மீண்டும் ஒரு நர்த்தனம் செய்து வெற்றியை எட்டிவிடுகின்றன.’ பானையும் தப்பிவிடுகிறது, கவிதையும் தப்பி விடுகிறது. இந்த வர்ணனைகூட நூலுக்கு பற்றாது என்றே எனக்கு தோன்றுகிறது.
குறுந்தொகையில் ஒரு பாடல் உண்டு. ‘காட்டிலே வேட்டுவன் கிழங்கு கிண்டியபோது ரத்தினக் கல் அகப்பட்டது’ என்று வரும். அதை உவமையாகச் சொல்லலாம். அதுவும் போதாது. இந்த நூலைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வை இப்படித்தான் சொல்லமுடியும். ஏடிஎம் மெசினில் 1000 டொலர் கேட்டபோது அது 2000 டொலர் தந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. மூலப் பிரதியை மீறிய மொழிபெயர்ப்பு.
நூலை மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.
நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
***
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)