ற்போதைய மோடி ஆட்சியில், அரசியல் சீரழிவை இந்தியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. விலக்கி வைக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கிக் கொள்ளும் வகையிலான நீண்ட கால நடவடிக்கைகளை மக்கள் கைவிடும் ஆபத்துடன் இந்த சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது.

பிரிவினைக்குப் பிறகு, மேற்கொண்டு இரத்தக் களரி ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, இந்தியா என்கிற கருத்தாக்கம் பன்முகத்தன்மையை தழுவி நின்றது.  இந்திய அரசியலமைப்பை கட்டியெழுப்பியவர்கள், இதைக் கருத்தில் கொண்டு மாநிலங்களில் சிக்கலான நிதர்சனத்தை ஆவணத்தில் சேர்த்தார்கள். ஆனால், ‘இந்து ராஷ்டிரம்’ என்ற கற்பனாவாத கொள்கையைக் கொண்டவர்கள், இதை திசைதிருப்ப விரும்பி, அரசியலைப்பு கட்டுமானத்தை சிதைப்பதன் மூலம் தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப இந்தியாவை வளைக்க முயன்றார்கள். எந்தவொரு சமூகத்திலும் தவிர்க்க முடியாமல் இருக்கும் வேறுபாடுகளின் மீது சுரண்டலை நிகழ்த்த அது உதவியது.

ஒரு அரசின் முக்கியமான செயல்பாடு என்பது, அது தனது குடிமக்களுக்கு பாதுகாப்பு என்கிற உணர்வை அளிக்க வேண்டும் என்பதுதான்.  இது தற்போதைய இந்தியாவில் காண இயலவில்லை. தற்போது இந்திய அரசியலில் நடந்துகொண்டிருக்கும் கொதிப்பை கண்காணிக்கும் போது கலாச்சாரம், ஆன்மீகம், மதம், அரசியல் முன்னணிகள் ஆகியவற்றின் மீது போர் தொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். இதைச் செய்கிறவர்கள் ஆளும் அரசின் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

எளிமையாகச் சொல்லப்போனால், இந்தியா வேற்றுமைகள் மீதான போரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வார்த்தைகள், ஒரு குறிப்பிட்ட அரசியல் நம்பிக்கை மீதான கொள்கைகள் – கட்டுப்பாடுகள் ஆகியவைதான் ஆயுதங்களுக்குப் பதிலாக தவறா சரியான என்பதை தீர்மானிக்கின்றன. ‘கர்வாப்சி’, ‘லவ் ஜிகாத்’ குறித்த கட்டுக்கதைகள், கும்பல் கொலைகள் போன்றவற்றை நியாயப்படுத்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் சித்தாந்தம் பயன்படுத்தப்படுகிறது.

கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம், இந்த சித்தாந்தத்தை சட்ட கட்டமைப்புக்குள் கட்டாய திணிப்பு செய்கிற முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. நல்லவேளையாக, இந்த குறுகிய சிந்தனைகளுக்கு பல மட்டங்களிலிருந்து எழும் கடுமையான எதிர்ப்பு காரணமாக அரசியலமைப்பு மட்டத்தில் இந்த நிறுவனமயமாதல் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த சித்தாந்தத்தை கட்டமைத்தவர்களுள் ஒருவரான வி. டி. சாவர்க்கர், தனது நூல் முழுவதிலும், இந்துத்துவா என்பதை தீவிர இந்து அடையாளத்துக்கான களத்தை உருவாக்கும் கருவியாக்கி இருக்கிறார்.  அவரைப் பொறுத்தவரையில் கலாச்சாரம், மதம் மற்றும் இனம் ஆகியவை இந்து என்பதற்கான முக்கிய கூறுகளாகும்.  அக்காலகட்டத்திற்குப் பின் ஒரு நுற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், அவரை பின்பற்றுகிறவர்களால், இந்தியத்தன்மை என குறிப்பிடப்படுபவை இவைதான் . இந்த நம்பிக்கைகளை கொள்கையாக நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

தற்போதைய இந்தியாவில் இந்த நஞ்சும் விலக்கி வைக்கும் தத்துவமும் செல்வாக்குப் பெற்றுள்ளது.  இந்த விசயத்தில் உள்ள உண்மை என்னவென்றால் இந்தியா என்பது பன்முகப்பட்ட நாடு, இதை ஏற்றுக்கொண்டதில்தான் அதன் தனித்துவம் உள்ளது; அதை அழிப்பதில் அல்ல. தற்போதுள்ள அரசின் வெளிப்படையான ஆதரவுடன், ஒற்றைத்தன்மையாக்கும் முயற்சிகளும் விலக்கி வைத்தலுக்கான அரசியலை வலுப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. இதை ஆதரிப்பவர்கள் உண்மையான தேசபக்தர்கள் எனவும் ஆதரிக்காதவர்கள் தேசத் துரோகிகள் எனவும் கருத்தப்படுகிறார்கள்.

இந்தப் போக்கு உண்மையான ஆபத்தை கொண்டிருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது ஆபத்தாக முடிகிறது. இந்துத்துவத்தை பின்பற்றுகிறவர்களும் இந்துத்துவவாதிகளும் ஏன் சட்டமும்கூட இந்த ஆபத்தை விளைவிக்கக்கூடும். பல்வேறு பின்னணிகளையும் அடையாளங்களையும் உள்ளடக்கிய அடிபணியும் அரசியல் தனது முக்கியமான இடத்துக்கு வந்துள்ளதோடு, இந்தியா போன்ற நாட்டில் அது மோசமான ஆபத்தாகவும் இருக்கிறது. சட்டத்திற்குட்பட்ட வெளியில் பன்முகத்தன்மை மறுக்கப்படும்போது, இந்தியா என்கிற கருத்தாக்கம் புறம்தள்ளப்படும்போது,  அரசியலமைப்பின் கற்பனைக்கு முரணாக, இந்தியா ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஆளுகைக்குள் வந்துவிடுகிறது.

இந்து தேசியவாதம் முன்னெப்போதையும் விட, தீவிரமடைந்துள்ளது. இந்த கொள்கை காரணமாக பாகிஸ்தானிலிருந்து (மதச்சார்புடைய அரசாக அறிவித்துக்கொண்டநிலையில்) வேறுபடுத்திக் காட்டப்பட்ட இந்தியா தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியா தனக்குள்ளே ஆழ்ந்த வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் வைத்திருக்கிறதென்றால், அது ஜனநாயகத்துக்கும் பன்முகத்தன்மைக்கும் செய்திருக்கும் அர்ப்பணிப்பாகும்.

இந்த அர்ப்பணிப்பு மீதான அழிவு தற்போது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்தியா இப்போது என்னவாக விரும்புகிறது என்பதை முடிவெடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒற்றை தன்மையிலான ஏகபோக இந்து பெரும்பான்மை அரசா அல்லது அனைத்து அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றுக்கு போதிய வெளி அளித்திருக்கும் அரசா? இந்தியாவின் எதிர்காலமும், அதன் பிராந்திய எல்லைகளுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் ஆபத்தில் இருக்கிறார்கள். வரவிருக்கிற தேர்தல், இந்த கேள்விக்கு அறிந்தும் அறியாமலும் விடையளிக்கும்.

மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜகவின் கீழ் இந்தியாவின் மதச்சார்பின்மை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த அச்சுறுத்தலை பல்வேறு நிலைகளில் தடுக்காமல் இருந்தால், வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் பெருமைக்குரிய கருத்தாக்கம் விரைவில் சுக்குநூறாகிவிடும்.

இந்தியா என்கிற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மதவெறி சக்திகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், நீண்ட கால நடைமுறைகளை சீரழிக்கும் புதிய தத்துவங்களை குறிக்க ஜோசப் ஸ்கும்பீட்டர் பயன்படுத்திய ‘படைப்பு அழிப்பு’க்கு இரையாவோம்.  அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியா என்கிற கருத்தாக்கத்தை அழிப்பதில் எந்தவித படைப்புத் தன்மையும் இல்லை. எனினும் இது நடக்கலாம்.


கட்டுரையாளர்கள் : Anayat Ul Lah Mugloo,  Manzoor Ahmad Padder
தமிழாக்கம் : அனிதா
நன்றி : the wire