பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 2

டோக்ளியாட்டி

முன்னுரை ( தொடர்ச்சி…)

டோக்ளியாட்டி சொற்பொழிவாற்றிய வருடங்களில் அமெரிக்காவிலிருந்த சோசலிஸ்டுக் கட்சி, அக்கட்சியினுள் ஊடுருவி, பெருமளவில் தலைமையைக் கைப்பற்றியிருந்த டிராட்ஸ்கியவாதிகளின் செல்வாக்கு காரணமாக, எவ்வகையான பாசிச – எதிர்ப்பு இயக்கத்திலும் பங்கேற்க மறுத்தது.

இப்போது நமது கடமை பாசிசத்திற்கெதிராக ஒரு பரந்துபட்ட ஒற்றுமையைக் காட்டுவதல்ல, மாறாக “வர்க்கத்திற்கெதிராக வர்க்கம்” என்னும் போராட்டத்தை நடத்துவதே நமது பணி என்னும் இடதுசாரி வாய்ச்சவடால் மூலம் பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் தான் சேர மறுத்ததை மூடிமறைத்தது. எதிர்பார்க்கப்பட்டதுபோல், ஆளும் வர்க்கமானது இத்தகைய வார்த்தை ஜாலங்களைப் பற்றி கவலைப்படவில்லை; ஏனென்றால் ஏகபோக மூலதனம், தன்னுடைய அப்பட்டமான சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளிலிருந்து அதைத் தடுக்கக்கூடிய திறனைப் பெற்றிருக்கக் கூடிய சக்திகளைப் பிளவுபடுத்துவதில் இத்தகைய இடதுசாரி வார்த்தை ஜாலமும் ஒரு அம்சமாகும்.

“வர்க்கத்திற்கெதிராக வர்க்கம்” என்பதானது, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கான ஒரு கொள்கை அல்ல. அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்குத் தீங்கானதும் அல்ல. அது வெற்றுவேட்டு வார்த்தை ஜாலமே தவிர வேறன்று. ஆனால், அது சீர்குலைவுத்தன்மை வாய்ந்தது.

ஜார்ஜ் டிமிட்ரோவ், பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி.

பாசிசம் என்பது “ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதிகளின் அப்பட்டமான சர்வாதிகாரம்” என்ற சரியான கம்யூனிஸ்டு நிர்ணயிப்பும் விளக்கமும் பாசிச – எதிர்ப்புக் கூட்டணி அமைப்பதற்கான அடித்தளத்தை அளித்தன. தொடர்ச்சியான ஆய்வுகள். பிறகு கூட்டு விவாதங்கள் போன்றவை ஒரு சுற்று முழுமையடைந்ததன் விளைவாக ஒரு விஞ்ஞானப்பூர்வமான சரியான நிர்ணயிப்பு தோன்றியது. 1935-ம் ஆண்டில் நடைபெற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரசுக்கு அளித்த தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில் ஜார்ஜ் டிமிட்ரோவ், பாசிசம் என்பது “நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவிலுள்ள நமக்கு மிக முக்கியமான வரலாற்றுப் படிப்பினையாக இருக்கக் கூடியது எதுவென்றால் நம்மிடையே இன்று காணப்படுகின்ற சில அம்சங்கள் பாசிசத்தின் வளர்ச்சிக்குத் தளமாக மாறக்கூடிய அபாயம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதேயாகும்.

இங்குச் சில சிறிய பாசிச குழுக்கள் இருந்து வருவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதைவிட பாசிசத்திற்கு ஒரு வெகுஜன அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காக அரசியல் மற்றும் தத்துவார்த்த தயாரிப்பு தற்போது நடைபெற்று வருவதைப் பற்றிதான் நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். இத்தாலி மற்றும் ஜெர்மனியின் படிப்பினைகளிலிருந்து தெளிவாகத் தெரிவது எதுவென்றால் அங்கெல்லாம் தத்துவார்த்த அரசியல் சூழ்நிலைமை என்பது முதலாளித்துவத்தின் பொதுவான தத்துவார்த்த சக்திகளால்தான் உருவாக்கப்படுகிறது என்பதாகும். “பிற்போக்குத்தனம் நோக்கிய போக்கு” பாசிசத்திற்கான இத்தகைய தத்துவார்த்த தயாரிப்புகளில் பிரதிபலிக்கின்றது.

“நடுத்தரவர்க்கத்தினராகிய நாம் பெரிய அரசாங்கத்தாலும் பெரும் தொழிலாளர்களாலும் மற்றும் பெரும் முதலாளிகளாலும் வரி விதிக்கப்பட்டு கசக்கிப் பிழியப்படுகின்றோம்.” இனவெறி கொண்ட அலபாமா ஆளுநர் ஜார்ஜ் வாலஸ், அதிதீவிர பிற்போக்குவாதியும் அலபாமாவின் முன்னாள் ஆளுநருமான ரோனால்ட் ரீகன் மற்றும் இதரர்களால் முழங்கப்படும் இத்தகைய கோஷங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் செவிகளில் தேனாகப் பாய்கின்றன. “பெரும் முதலாளிகள்” என்ற வார்த்தைகள் வெறும் ஒப்புக்காகச் சொல்லப்பட்டவை, தூண்டில் இரை. அவை, தொழிலாளி வர்க்கம் மற்றும் தொழிற் சங்கங்களுக்கெதிராக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கு ஒரு மூடு திரை. “பெரிய அரசாங்கம்” என்று அவர்கள் குறிப்பிடுவது பொதுமக்கள் எந்தவொரு செல்வாக்கையும் பிரயோகிக்கக்கூடிய ஆட்சி அமைப்பையே ஆகும். இத்தாலியைப் போன்று அமெரிக்க பாசிசம் என்பதும் பெரும் முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரமாகத்தானிருக்கும்.

பாசிசம் என்பது “நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்”
– டிமிட்ரோவ்.

“பிரித்தாள்வது” என்பது ஒரு சிறுபான்மையினர், பெரும்பான்மையோரை அடக்கி ஆண்டு சுரண்டும் அதிகாரத்தின் மிகவும் அடிப்படையான அம்சமாகும். அது முதலாளித்துவ ஆட்சியின் துவக்கத்திலிருந்தே ஒரு அம்சமாக இருந்து வருகிறது. வரலாறு முழுவதிலும் திட்டவட்டமான சூழ்நிலைமைகளைப் பொருத்து அதனுடைய பயன்பாடும் வடிவங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. பெரும் முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிச எதிர்ப்பு, பேரரசு இனவாதம், வெள்ளை நிறத்தவர் மேலாதிக்கம் மற்றும் யூத-எதிர்ப்பு என்பவை “பிரித்தாளும்” பிரதான கருவிகளாக உள்ளன. அரசியல் மற்றும் சித்தாந்தத் துறைகளில் இந்தக் கருவியானது கம்யூனிஸ எதிர்ப்பு என்னும் வடிவத்தில் இருந்து வந்துள்ளது, இருந்தும் வருகின்றது.

பாசிசமானது, முதலாளித்துவத்தின் இத்தகைய தத்துவார்த்தக் கருவிகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கியுள்ளது. ஜெர்மனியில் இட்லரின் பாசிசம், கம்யூனிச எதிர்ப்பையும் யூத-எதிர்ப்பையும் தன்னுடைய பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டுள்ளது. இத்தாலிய பாசிசமானது கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் அதனுடைய பிரதான கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது. எத்தியோப்பிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இத்தாலிய விமானங்களின் மிருகத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதலோடு சேர்த்து மிகவும் வன்முறைப்பட்ட இழிவான இனவெறிப் பிரச்சாரமும் தொடர்ந்து வந்தது.

இன்று பெரும் முதலாளிகள் “பிரித்தாள்வதற்காக” இனவெறியைப் பயன்படுத்துவதால், அமெரிக்காவிலுள்ள நாம், அந்த இனவெறியைப் “பிரித்தாளும் தத்துவார்த்த விஷயமாகவே” காணவேண்டும். அதே சமயம் பாசிசம் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய மிகவும் ஆபத்தான சாதனமாகவும் அதைக் காண வேண்டும். அமெரிக்காவில் பாசிசத்திற்கான பாதையைத் தடுப்பதில் நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், இனவெறியை ஒழித்துக்கட்ட போராட வேண்டும் என்ற அடிப்படையான படிப்பினையை நாம் பெற வேண்டும்.

பாஸ்டனில் கருப்பு இன மக்களது வீடுகள் மீது தாக்குதல் தொடுக்கும் கும்பல்கள் இனவெறி கழிசடைப் பேர்வழிகளே. ஆனால், அவர்கள் ஒரு பாசிச இயக்கத்தின் உட்கருவுமாக இருக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் கறுப்பு இன அமெரிக்கர்களின் வீடுகளைத் தாக்குவதை விடுத்து தொழிற்சங்கங்களைத் தாக்கி வருகின்றனர்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, யூத எதிர்ப்புச் சக்திகள் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை வைத்து நாம் தவறான முடிவுக்கு இட்டுச் செல்லப்படக்கூடாது. யூத எதிர்ப்பு என்பது அமெரிக்க அரங்கில் உயிரோடுள்ள விஷக்கிருமியாக இருந்து வருகிறது. பாசிச அபாயத்தை எதிர்த்துப் போராடுவதென்பது யூத எதிர்ப்பையும் எதிர்த்துப் போராடுவதாகும்.

பாசிச அபாயம் அதிகரிப்பதைத் தொடர்ந்து கம்யூனிச-எதிர்ப்பு, இனவெறி, பேரரசு இனவாதம் மற்றும் யூத எதிர்ப்பு போன்ற இயக்கங்களும் பிரச்சாரங்களும் அதிகரிக்கும்.

முதலாளித்துவமானது அது தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுவதால் மட்டுமே வாழ முடிகிறது என்ற உண்மையை மூடிமறைக்கவே எப்பொழுதும் முயற்சிக்கிறது. பாசிசம் இந்த மூடிமறைத்தலை ஒருபடி முன்னெடுத்துச் செல்கிறது. பாசிசத்திற்கு முன்னர் முதலாளித்துவத்தின் பாதுகாவலர்கள் “வர்க்கக் கூட்டு” பற்றி பேசி வந்தனர். பாசிசம் அதிகாரத்திலிருக்கும்பொழுது அவர்கள் “வர்க்க முரண்பாட்டை ஒழித்துக்கட்டி விடுவது” என்று பேசினர். ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு இதுதான் அடிப்படை. சொல்லப்போனால் இது வெறும் வார்த்தை ஜாலம் என்பதுடன் பொருளற்றதுமாகும். ஏனென்றால் முதலாளித்துவம் இருக்கும் வரை வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் இருந்தே தீரும். பாசிச அபாயத்தின் இந்தக் கட்டுக்கோப்பிற்குள் மீனி மற்றும் ஏ.எப்.எல் – சி.ஐ.ஓ தலைமையின் வர்க்கக் கூட்டுக் கொள்கைகள் ஒரு கூடுதல் பரிமாணத்தை எடுக்கின்றன.

இவ்வாறு, பாசிச அபாயத்திற்கெதிரான போராட்டமென்பது இன்று வர்க்கக் கூட்டு கொள்கைகளுக்கெதிரான போராட்டத்தையே குறிக்கிறது. வர்க்கக் கூட்டு வேண்டுமென்று கூறுகின்ற தொழிற்சங்கத் தலைவர்களுக்குக்கூட டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகளில் ஒரு மிகவும் அடிப்படையான படிப்பினை உள்ளது. பாசிசமானது ஒருமுறை வேரூன்றிவிட்டால் அது வர்க்கக்கூட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ள சங்கங்கள் உள்ளிட்டு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் நாசம் செய்துவிடும். அவைகளிருந்த இடத்தில் பாசிஸ்டுகள் தங்களுடைய சொந்த பாசிச தொழிலாளர் முன்னணி அமைப்புகளை உருவாக்குவார்கள்.

ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பாசிசத்திற்கெதிரான போராட்ட படிப்பினைகளைப் படிக்கும்பொழுதும் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் பிரச்சினைகள் சம்பந்தமாகத் தோன்றும் பல புதிய “தீர்வுகளின்” தொலைதூரத்திய தாத்பரியங்களைக் காண்பதும் அவசியமாகிறது. “திட்டமிடுதல்” என்பது ஒரு கோட்பாடு என்ற முறையில் தான்தோன்றித்தனமான தன்னிச்சைப் போக்கை தலைமுழுகிவிட்டது. இந்த நோக்கங்கள் யாவும் வர்க்கக் கூட்டு என்ற “திட்ட” அடிப்படையிலானதாகும். ”பொருளாதாரத் திட்டமிடுதல்” என்பது ஏகபோக மூலதனத்தின் சேவைக்காக உள்ளது. அது சுரண்டல் மற்றும் பெரும் ஆதாயங்களுக்கான “திட்டமிடல்” ஆகும். பாசிசமும் “திட்டமிடுதல்” குறித்துப் பெரிதாகப் பேசுகிறது என்பதுடன் பெரும் முதலாளிகளின் நலனுக்காக அது திட்டமிடுகிறது.

“பிரித்தாள்வது” என்பது ஒரு சிறுபான்மையினர், பெரும்பான்மையோரை அடக்கி ஆண்டு சுரண்டும் அதிகாரத்தின் மிகவும் அடிப்படையான அம்சமாகும். அது முதலாளித்துவ ஆட்சியின் துவக்கத்திலிருந்தே ஒரு அம்சமாக இருந்து வருகிறது.

போர்த்துக்கல், இந்தியா மற்றும் இதர பல நாடுகளில் சமூக ஜனநாயகம் எதிர்மறையான பங்காற்றியுள்ள நிலைமையில் பாசிசம் தோன்றுவதற்கு முன்னரும் தோன்றியிருந்த சமயத்திலும் சோசலிஸ்டு கட்சியினுடைய தலைமை கடைபிடித்த கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டியின் விவாதமானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இத்தாலியிலும் அதைப் போன்றே ஜெர்மனியிலும் பாசிசத்தை அதிகாரத்தில் ஏற்றுவதற்கான தயாரிப்பில் சமூக ஜனநாயகம் ஒரு காரணமாக இருந்துள்ளது. அதற்கான தயாரிப்புகளிலும் அது ஈடுபட்டிருந்தது. இதனால், டோக்ளியாட்டியினுடைய குறிப்புகளைப் படியெடுத்தவர் சமூக ஜனநாயகத்தின் பங்கைக் குறித்து அவர் விவாதித்த சில பகுதிகளை நீக்கியது துரதிருஷ்டவசமானதே.

பாசிசமானது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை வெற்றிகொள்ள முடியவில்லை. பல காலம் வரை அது அவற்றை மூடிமறைத்திருந்தது. ஆனால், ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலைதூக்க ஆரம்பித்தன. இவ்வாறு பாசிசத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புகள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டன. ஆனால் பாசிசத்தின் தோல்வியானது அணி திரட்டப்பட்ட வெகுஜன போராட்டத்தின் விளைவாக மட்டுமே வரமுடியும்.

“முடிவாக” டோக்ளியாட்டி கூறுகிறார் :

“பாசிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு அணி திரட்டப்பட்டு அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்கள் ஒருநாள் காலையில் தாங்களாகவே பாசிசத்திலிருந்து விலகி, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கலந்து கொள்ள நம்மிடம் வந்துவிடுவார்கள் என்று யாரும் நினைக்கக் கூடாது. அந்த மக்கள் வெளியே வருவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். நமது பக்கம் அவர்கள் வந்து சேருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.”

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦  காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல அடிப்படையான கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டி பல நிர்ணயிப்புகளை உருவாக்கியுள்ளார். “கோட்பாடு குறித்த சரியான நிலைப்பாட்டிற்கும்” சக்திகளின் உறவு குறித்த ஒரு சரியான மதிப்பீட்டிற்கும், “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளில் சரியான தீர்வுகளுக்கும்” அவர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினை”களுக்கான சரியான தீர்வுகளுக்கு அடிப்படையாக “சரியான கோட்பாட்டு நிலைப்பாட்டை” மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தமாகக் கூறுவதானது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளில் தவறி விழுவதற்கு எதிரான எச்சரிக்கையாகும்.

உலக அனுபவம் என்ற பெட்டகத்தில் இருந்து குவிக்கப்பட்டிருக்கும் ஏராளமான சான்றாதாரங்களின் அடிப்படையில் டோக்ளியாட்டி பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார் :

• பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாததொரு வளர்ச்சிக் கட்டமல்ல.

• பாசிசமானது, முதலாளித்துவத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.

• பாசிசம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே.

• பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால், அதை தோல்வியுறச் செய்ய அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 டோக்ளியாட்டி இந்தச் சொற்பொழிவுகளில் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்கள் 1934 -ம் ஆண்டுவரை பெறப்பட்ட முடிவுகளையும், அனுபவங்களையும் பிரதிபலித்தார். 1935-ம் ஆண்டில் கம்யூனிஸ்டு அகிலமானது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஏழாவது உலக மாநாட்டைக் கூட்டியது. கைதியாக இருந்து இட்லருடைய பாசிசத்திற்கு சவால்விட்ட வீரஞ்செறிந்த கம்யூனிஸ்டுத் தலைவரான ஜார்ஜ் டிமிட்ரோவ், காங்கிரசுக்கு சமர்ப்பித்த பிரதான அறிக்கையில் அந்நாள் வரையிலான அனைத்து அனுபவங்களையும் முடிவுகளையும் கொடுத்திருந்தார். “பாசிசத்திற்கெதிரான ஒற்றுமை” – என்ற அறைகூவல் அகிலத்தின் ஏழாவது காங்கிரசிலிருந்து வெளிப்பட்டது.

கஸ் ஹால், பொதுச் செயலாளர், அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி.

டோக்ளியாட்டியின் இந்தச் சொற்பொழிவுகள் ஏழாவது உலக காங்கிரசிற்கான கூட்டுத் தயாரிப்புகளில் ஒரு முக்கியமான அம்சமாக இருந்தன. உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டு இயக்கமானது தனது பணியின் காரணமாக பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் தன்னுடைய முன்னணிப் படைப் பாத்திரத்தைப் பூர்த்தி செய்ய முடிந்தது. கம்யூனிஸ்டுக் கட்சிகளும், பாசிச-எதிர்ப்பு ஒற்றுமை என்ற அதனுடைய கொள்கைகளும்தாம் பாசிச சவாலை முறியடித்து பாசிச-எதிர்ப்புக்கு வெகுஜன அடித்தளத்தை உருவாக்கித் தந்தன.

இத்தகைய சொற்பொழிவுகள் சோவியத் யூனியனில் நிகழ்த்தப்பட்டது வரலாற்று விபத்து அல்ல. ஒரு புரட்சிகர தொழிலாளி வர்க்க சோசலிச அரசான சோவியத் யூனியன்தான் பாசிசத்திற்கான பாதையைத் தடுத்து நிறுத்திய மைய சக்தியாகும். இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிச சக்திகளை இராணுவ ரீதியாக தோற்கடித்ததில் சோவியத் யூனியன் பிரதான சக்தியாக திகழ்ந்ததும் வரலாற்று விபத்து அல்ல. சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று உலக ஏகாதிபத்திய பாதைக்கு பிரதான தடைக்கல்லாகவும், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் பிரதான தளமாகவும் இருப்பதும் வரலாற்றின் விபத்து அல்ல.

இந்த நூலிலுள்ள சொற்பொழிவுகள் வரலாற்றுப் படிப்பினைகள் மட்டுமல்ல. அவை மார்க்சிய – லெனினியத்தைப் பயன்படுத்துவதற்கான படிப்பினைகளும் ஆகும். அவை, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான படிப்பினைகள் ஆகும்.

 22 ஆகஸ்டு 1975

கஸ் ஹால்,
பொதுச் செயலாளர்,
அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !