பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, சனாதன் சன்ஸ்தா என்ற காவி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பவே என்ற இருவரை கைது செய்துள்ளது. இதில் வழக்கறிஞரான சஞ்சீவ் புனலேகர், தபோல்கர் கொலைவழக்கில் கைதானவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் பவே, சனாதன் சன்ஸ்தா அமைப்பின் உறுப்பினர். இவர்கள் இருவரும் சாட்சியங்களை அழித்த குற்றச்சாட்டின் கீழ் கைதாகியிருக்கிறார்கள்.
மூடநம்பிக்கை ஒழிப்பு செயல்பாட்டாளரான தபோல்கர் 2013, ஆகஸ்டு 20-ம் தேதி, புனேயில் காலை நடைபயற்சி சென்றிருந்தபோது ‘சனாதன் சன்ஸ்தா’ காவி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

தபோல்கரைக் கொன்ற இருவருக்கு சாட்சியங்களை அழிக்க உதவியதாக சஞ்சீவ் புனலேகரும், விக்ரம் பவே-யும் இப்போது கைதாகியுள்ளனர். விக்ரம் பவே, 2008 கட்காரி ரங்கயாதன் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, பிணையில் உள்ளார். இவர்தான் தபோல்கரை கொலையாளிகளுக்கு காட்டிக்கொடுத்தவர் என சிபிஐ தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
தபோல்கர் கொலை வழக்கில் இதுவரை, சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் விரேந்திரசிங் தவ்டே, சச்சின் அந்துரே, சரத் கலாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
தபோல்கர் மற்றும் இடதுசாரி செயல்பாட்டாளரான கோவிந்த் பன்சாரே கொலையில் ‘மூளையாக’ விரேந்திரசிங் தவ்டே செயல்பட்டதாக சிபிஐ சொல்கிறது. அந்துரே மற்றும் கலாஸ்கர் இருவரும் சேர்ந்து பிப்ரவரி 2015-ம் ஆண்டு பன்சாரே-வை சுட்டுக்கொன்றனர்.
இந்த வழக்கில் ராஜேஷ் பங்கேர, அமோல் காலே, அமித் திக்வேகர் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாக கைதாகினர். இவர்கள் இருவரும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையிலும் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டப்பட்டது.
படிக்க:
♦ தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !
♦ கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை
தபோல்கர் வழக்கில் கைதான வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர், கவுரி லங்கேஷ் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட 7.65 எம்.எம். நாட்டு துப்பாக்கியை அழிக்க உத்தரவிட்டதாக லங்கேஷ் கொலையை விசாரிக்கும் கர்நாடகாவின் சிறப்பு புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது.
லங்கேஷ் மற்றும் தபோல்கர் கொலை வழக்கில் கைதான சரத் கலாஸ்கர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அழித்துவிடும்படி புனலேகர் கட்டளையிட்டதாக கூறியுள்ளார். சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பவே, தபோல்கர் கொலையாளிகளுக்கு உதவியதோடு, கொலைக்குப் பின் கொலை நடந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்ல இருசக்கர வாகனத்தையும் வழியையும் காட்டியுள்ளார்.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 9,235 பக்க குற்றப்பத்திரிகையில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த முரளி என்பவர் மும்பையில் புனலேகரை சந்திக்கும்படி கலாஸ்கரை அனுப்பியிருக்கிறார்.
“சஞ்சு புனலேகரை அவருடைய அலுவலகத்தில் தனியாக சந்தித்தேன். இந்த கொலைகளுக்குப் பயன்படுத்திய பிஸ்டல்களை அழித்துவிடும்படி அப்போது அவர் சொன்னார். அதோடு, புதிய துப்பாக்கிகளை உருவாக்க எத்தனை நாள் ஆகும் என்றும் கேட்டார். புதிய துப்பாக்கிகளை உருவாக்க தான் பணம் தருவதாகவும் சொன்னார்” என கலாஸ்கர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
இவர்களின் சந்திப்பின்போது, இந்தக் கொலைகளுக்கு மூளையாக செயல்பட்ட சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த அமோல் காலே மற்றும் விரேந்திர தவ்டே ஆகியோர் குறித்து வழக்கறிஞர் புனலேகர் அலுவலகத்தில் விவாதம் நடந்ததையும் கலாஸ்கர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கலாஸ்கரின் வாக்குமூலத்தில் கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் பாகங்கள் மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆற்றில் வீசப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே புனலேகர் மற்றும் விக்ரம் பவே கைது குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளது சனாதன் சன்ஸ்தா. “இந்துத்துவத்துக்கு சாதகமான அரசு அதிகாரத்தில் இருக்கும்போது நடந்திருக்கும் இந்த அதிரடி கைதுகளில் சதித்திட்டம் இருக்கிறது” என கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையின் மூலம், தங்களை ஆதரிக்கும் இந்துத்துவ அரசின் ஆசி இருப்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது சனாதன் சன்ஸ்தா என்னும் காவி பயங்கரவாத அமைப்பு.
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் மூவர் கொலையை திட்டம்போட்டு அரங்கேற்றிய இந்த அமைப்பு, இன்னும் பலரை குறிவைத்து சுதந்திரமாகவே இயங்கிவருகிறது; இதுவரை தடை செய்யப்படவில்லை. அதற்கான அறிகுறிகள் எதுவும் அண்மையில் தென்படவும் இல்லை.
கலைமதி
நன்றி: த வயர், இந்தியன் எக்ஸ்பிரஸ்