பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 8

பால்மிரோ டோக்ளியாட்டி
டோக்ளியாட்டி

விரிவுரை 2

பூர்ஷுவாக்களின் “புது மாதிரியான கட்சி”

பாசிசம் என்றால் என்ன என்பதற்கு நமது பாடத்தின் முதல் பகுதியில் பொருள் வரையறை செய்தோம். சர்வதேச ஆவணங்களையும் இத்தாலிய அனுபவத்தையும் கொண்டு இந்த நிர்ணயிப்பைச் செய்தோம். பாசிச சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்களை விளக்கிக் கூறினோம், அதன் வர்க்க இயல்பைச் சுட்டிக் காட்டினோம். இதுதான் பூர்ஷுவாக்களின் மிகப் பிற்போக்கான அம்சத்தின் பட்டவர்த்தனமான வெளிப்பாடாகும். குட்டி பூர்ஷுவா வெகுஜன இயக்கத்தை இந்தப் பாசிச சர்வாதிகாரத்தால் எவ்வாறு கவர்ந்து ஈர்க்க முடிகிறது என்பதையும் பார்த்தோம்.

பாசிசத்தை எடைபோடுவதில் நாம் பல தவறுகள் செய்திருக்கிறோம். பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கையும் அதன் பல்வேறு அம்சங்களையும், அவற்றிடையே உள்ள பரஸ்பரத் தொடர்பையும் நாம் காணத் தவறியிருக்கிறோம். இந்தத் தவறுகளை எல்லாம் எடுத்துக்காட்டி அவற்றைக் களைவதில் முழுக் கவனம் செலுத்தியிருக்கிறோம். இப்பாடம் முழுவதும் இப்பணிக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பாடத்தின் இன்னொரு பகுதி பாசிச சித்தாந்தத்தின் செயல்பாட்டை எடுத்துரைக்கிறது. இந்தச் சித்தாந்தம் பாசிச இயக்கத்தைச் சேர்ந்த குட்டி பூர்ஷுவாப் பகுதிகளை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு குழப்பமான, கதம்ப சித்தாந்தம் என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறோம்.

திட்டமிடுதல் சம்பந்தப்பட்ட தவறுகளைப் பற்றி எச்சரித்தோம். அவ்வாறே, திட்டமிடுதல் தொடர்பான தவறுகள் குறித்து மீண்டும் எச்சரித்து, இன்று என் விரிவுரையைத் தொடங்க விரும்புகிறேன்; இத்தாலியில் பாசிச வரலாற்றுப் பிரச்சினைகளில் ஒன்றுடன் சம்பந்தப்பட்டவையே இந்தத் தவறுகள்.

நிர்ப்பந்தம் காரணமாகத்தான் பாசிசம் இந்தப் பாதையை மேற்கொள்ள நேர்ந்தது, பாசிசம் வேறு எந்தப் பாதையையும் மேற்கொண்டிருக்க முடியாது. அது தேர்ந்தெடுத்துள்ள பாதை தவிர்க்க முடியாதது என்ற … கண்ணோட்டத்தை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.

சர்வாதிகார ஆட்சியை நிறுவும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் 1920-ம் ஆண்டிலோ அல்லது ரோம் படையெடுப்பு காலத்திலிருந்தோ பாசிசம் பிறந்தது என்று நினைப்பது மிகப் பெரிய தவறாகும்; ஏனென்றால் இத்தகைய ஆட்சியை அமைக்க கடந்த பத்தாண்டுகளாகத்தான் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதை இன்று நாம் காண்கிறோம். எனவே, இது ஒரு பெரும் தவறு என்பதில் ஐயமில்லை.

பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கு சம்பந்தப்பட்ட எல்லா வரலாற்று உண்மைகளும் இந்தக் கருத்தை மறுதலிக்கின்றன. தவிரவும் இந்தக் கருத்தை ஆதரிப்பவர்கள் பாசிச சித்தாந்தம் விரிக்கும் வலையில் தவிர்க்க முடியாதபடி விழுகிறார்கள், அதாவது அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்கெனவே பாசிசத்தின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதையே இது குறிக்கிறது. தாங்கள் இதுவரை செய்திருப்பவை எல்லாம் முன்கூட்டியே வகுக்கப்பட்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையே என்று காட்டுவதற்குப் பாசிஸ்டுகள் முயன்று வருவதைப் பார்க்கிறோம்.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இது உண்மை அல்ல. இந்தத் தவறை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அரசியல் துறையில் நேரிடக்கூடிய பிறழ்வுகளை, பிழைபாடுகளை எதிர்த்துப் போராடுபவர்களாகிறோம். ஆதலால் இந்தத் தவறை எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக் கொள்ளும் பொருட்டு இப்பிரச்சினையை ஆழமாக ஆராய்வது அவசியம்.

இந்தத் தவறான கண்ணோட்டத்திற்கு எதிராகப் பாசிச சர்வாதிகாரம் குறித்த மெய்யான, சரியான கண்ணோட்டத்தை நாம் முன்வைக்க வேண்டும். பாசிச சர்வாதிகாரம் இன்றைய அதன் வடிவங்களை மேற்கொள்ள நேர்ந்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அகநிலை அம்சங்களையும், உள்ளார்ந்த அம்சங்களையும், பொருளாதார நிலைமையையும், அதனால் உண்டான வெகுஜன இயக்கங்களையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். இதை வைத்து, ஸ்தாபன ரீதியான பணிக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்று நாம் கூறுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. ஆனால் அதே சமயம் இந்த அம்சத்துடன் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எதார்த்த நிலைமையை புறக்கணித்தோமானால் நாம்தான் சிரமப்படுவோம். பூர்ஷுவா வர்க்கத்தைப் பொறுத்தவரையில் ஸ்தாபன ரீதியான அம்சம் என்ற முறையில் அது என்றுமே தலையிட்டு வந்திருக்கிறது.

நாம் இவ்வாறு செய்யவில்லை என்றால், அரசியல் சாத்தியக் கூறுகளை நாம் துல்லியமாகக் கணிக்க முடியாது. நாம் எத்தகைய செயற்பாட்டு வழியைப் பின்பற்ற விரும்புகிறோம் என்பதை வகுத்துக் கொள்ள இயலாது; மேலும் இந்த வழிதான் கட்சியின் செயற்பாட்டுக்கும் அடிப்படையாக இருக்கும். இதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும்: ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு வெகுஜன இயக்கம் எந்த முறையில் தலையிடுகிறது என்பதைப் பொருத்து சர்வாதிகாரம் வெவ்வேறு வடிவங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ரோம் நகர் அணிவகுப்பில் படையினருடன் முசோலினி.

மாட்டியோட்டி நெருக்கடியின் போது 1 வெகுஜனங்கள் தாங்கள் உண்மையில் செய்ததற்கு மாறாக வேறுவிதமாகத் தலையிட்டிருந்தார்களேயானால் நிலைமை வேறுபட்டதொரு திருப்பத்தை அடைந்திருக்கும். இந்த உண்மையை இன்றுங்கூட நாம் பார்க்கலாம். நாம் மிகவும் செயலூக்கத்துடன் தலையிடும்போது, சில குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கடுமையாக எதிர்கொள்ளும் நிர்ப்பந்தத்தை அது பாசிசத்துக்கு ஏற்படுத்துகிறது. தொழிற்சங்கக் கட்டமைப்பில் மாறுதல் செய்தல், பொது மன்னிப்பு, இளம் பாசிஸ்டுகள் பிரச்சினை, தேசிய பாசிஸ்டுக் கட்சியை மறுசீரமைத்தல், சமூக ஜனநாயகத்துடன் சமரசம் செய்துகொள்ள முயற்சித்தல் போன்றவை இப்பிரச்சினைகளில் அடங்கும்.

வெகுஜன இயக்கங்கள் சம்பந்தமாகப் பாசிசம் கைக்கொள்ளும் போக்கைப் பொறுத்தே இந்தப் பிரச்சினைகளில் அது தனது அனைத்து நிலைப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த உண்மையைக் காணத் தவறுபவர்கள் தவிர்க்க முடியாதபடி பாசிசத்தின் செல்வாக்குப் பொறியில் இடறி விழுகிறார்கள். சோர்வுவாதத்துக்கு இரையாகிறார்கள். இத்தகைய சோர்வுவாதம் இத்தாலியில் குட்டி பூர்ஷுவாப் பகுதியினரிடையே மிகப் பரவலாகக் காணப்படுகிறது. நிர்ப்பந்தம் காரணமாகத்தான் பாசிசம் இந்தப் பாதையை மேற்கொள்ள நேர்ந்தது, பாசிசம் வேறு எந்தப் பாதையையும் மேற்கொண்டிருக்க முடியாது. அது தேர்ந்தெடுத்துள்ள பாதை தவிர்க்க முடியாதது என்ற கருத்தை இப்பகுதியினர் ஏற்று ஆதரிக்கின்றனர்.

இந்தக் கண்ணோட்டத்தை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். இதனை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் பாசிசத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பு, வளங்கள், பொருளாதார நிலைமையுடனும் வர்க்கப் போராட்டத்துடனும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நாம் காண முடியும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

கியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti)

1. கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.

ரோம் நகருக்கு வெளியே வீசப்பட்டிருந்த கியாசோமோ மாட்டியோட்டி உடலை சுமந்து வரும் போலீசார்.

எனினும், சீர்திருத்தவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட பொது தொழிலாளர் சம்மேளனத்தாலும், குழுவில் இருந்த சோஷலிஸ்டுகள் முதல் லிபரல் ஜனநாயகவாதிகள் வரை எல்லோராலும் இந்த அறைகூவல் எதிர்க்கப்பட்டது. இதன் விளைவு, குழுவிலிருந்து கம்யூனிஸ்டுக் கட்சி விலகியது. முசோலினி தகுந்த சமயத்திற்காகக் காத்திருந்தார். மாட்டியோட்டியின் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்படுத்தப்பட்ட பாசிஸ்டுகளை சர்க்காரில் நேரடியாகப் பங்கெடுப்பதை குறைத்தார். அதே சமயம் அவென்டின் கட்சிகளின் அடிப்படை பலவீனங்கள் தெளிவாகத் தெரிந்தன; வெகுஜனங்களைத் திரட்டுவதிலுள்ள அவர்கள் பயம், வறட்டுத்தனமான தார்மீகம் பற்றிப் பேசுதல், சட்டப் பூர்வமாக குற்றம் பாசிசம் குறித்த விரிவுரைகள் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை அல்லது முசோலினி பதவியிலிருந்து தள்ளப்படுவார் என்ற நம்பிக்கை, ஆக்கபூர்வமான நேரடி நடவடிக்கை எடுப்பதில் உள்ள தயக்கம்: இவையெல்லாமும் – ஸ்குவாட்ரிஸ்மோவின் ஒரு புதிய தாக்குதலால் உந்தப்பட்டும் –  நெருக்கடி தீவிரமாதலையும் முசோலினி தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள பயன்படுத்தினார்.

படிக்க:
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! மின்னிதழ்
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?

வாட்டிகனும், செல்வாக்குள்ள முதலாளித்துவ சக்திகளும் மன்னர் 3-வது விக்டர் எமானுவலும் அளித்த மறைமுகமான ஆதரவும் முசோலினிக்கு மிகவும் சாதகமானது. பிரதிநிதிகள் சபை 1925 ஜனவரி 3-ல் மீண்டும் கூடியபோது அவர் தாக்குதலைத் தொடுத்தார். பாசிசத்தின் எல்லா செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றார். லிபரல் அரசின் அமைப்புகளுக்கு பாசிஸ்டுகள் போலித்தனமான ஆதரவு தந்த இடைத்தட்டுக் காலத்தை அவரது உரை முடிவுக்குக் கொண்டுவந்தது; ஆட்சியை யதேச்சாதிகார அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் துவங்கின.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க